திங்கள், ஜூலை 06, 2015

Whatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா?



Whatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா?
               - மு.சிவகுருநாதன்
     மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும்  பயனுள்ள வகையில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகு சொற்பமாகவே உள்ளது. வதந்திகள் பரப்புதல், வக்கிர உணர்விற்கு வடிகாலாக மாற்றுதல், ஆபாசம், பெண்களைச் சீண்டுதல், கேலி செய்தல், அவதூறு பரப்புதல் போன்ற குற்றங்கள் மிக அதிகமாக நிகழ்த்தப்படுகின்றன. இதில் வாட்ஸ் அப்பிற்கு முதலிடம் போலும்!

    நான் அண்மையில்தான் வாட்ஸ் அப்பில் இணைந்தேன். புகைப்படங்களைப் பகிர்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்யமாட்டேன் என்று உறுதியளித்து, தகவல்கள் என்கிற போர்வையில் தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்த்து உங்களது கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் என வேண்டுகோளும் விடுத்திருந்தேன். ஆனால் நடப்பதென்னவோ நான் மேலே குறிப்பிட்ட அநாகரீகச் செயல்கள்தான்.

     அநாகரீகத்தின் உச்சமாக ஓர் உதாரணம்.  ஓர் பெண்ணின் படத்தைப் போட்டு அத்துடன் ஓர் ஆடியோ இணைக்கப்பட்டிருக்கும். அதில் பேசும் நபர் இந்தப் பெண்ணிற்கு இரு கண்களும் போய்விட்டது. சரி செய்ய எட்டு லட்சம் தேவைப்படுகிறது. இதை ஒருமுறை ஷேர் செய்தால் 10 பைசா வீதம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறுவார். இதே ஆடியோ போட்டோவை மற்றும் மாற்றிவிட்டு தொடர்ந்து பகிரப்படுகிறது.

    நான் இம்மாதிரி அனுப்பும் நபர்களைத் துண்டித்துக் கொள்வது என்று முடிவு செய்து குழுவிலிருந்து விலகுவது அல்லது விலக்கிக் கொள்வது என்கிற நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்தேன். தினமும் பலர் இவ்வாறு செய்வது முகம் சுளிக்க வைக்கிறது. 

    பயனுள்ள தகவல்கள் என்ற பெயரில் போலியான தவறான செய்திகள் அதிக எண்ணிக்கையில் பகிரப்படுகின்றன. இவற்றையெல்லாம் செய்வது மெத்தப் படித்த அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டந்தான். 

  ஆண்களுக்கு ஹெல்மட் கட்டாயம் என சட்டம் போடும் அரசு, பெண்களுக்குத் துப்பட்டா கட்டாயம் என சட்டம் கொண்டு வருமா? எனக் கேடு இரு பெண்களது படங்களைப் போட்டு வந்திருந்த ஓர் வாட்ஸ் அப் செய்திக்கு, நான் இவ்வாறு எதிர்வினையாற்றியிருந்தேன். 

Dear  ********.. I don't like this. Please avoid this types of message. ....mu.sivagurunathan.

    இதற்கு அக்குழுவில் இருந்த வேறொருவரிடமிருந்து உடனே வந்த பதில் வந்தது.

This is for sharing group. Anybody can share anything.

   நம்மவர்களுக்கு ஆபாசப் படங்களை மட்டுமே  மோசமானதாகக் கருதும் போக்கு இருக்கிறது. அதைவிட பலமடங்கு ஆபாசமானது இம்மாதிரியான செய்திகள், தகவல்கள் என்ற உண்மை உணரப்படுவதேயில்லை.

    இம்மாதிரியான வக்கிரங்களுக்கும் வதந்திகளுக்கும் இப்படி ஆதரவு பெருகிக் கொண்டு போவது சமூகத்திற்கு நல்லதல்ல. வாய்ப்பு கிடைத்தால் சமூகம் கெட்டுவிட்டது என விரியுரையாற்றத் தயங்காதவர்கள் இம்மாதிரியான அவலங்களைச் செய்வதும் கண்டுகொள்ளாமலிருப்பதும் பெரும் அவலம்.

   இணையத்திற்கு அரசுத் தணிக்கை இல்லை என்பதால் எதையும் செய்யலாம் என்று நினைப்பது அறிவீனம். ஆபாசம், வதந்திகளைப் பரப்புவது போன்றவை நமது நாட்டு சட்டப்படி குற்றச்செயல்கள்.

   சென்ற மாதத்தில் ஒரு நண்பர், பள்ளி நேரங்கள் மாற்றப்படுகின்றன என்று சொல்லி அதிர்ச்சியூட்டினார். உடனே அது தவறான செய்தி என்பது தெரியவந்தது.

    நேற்று (05.07.2015) பலரால் பகிரப்பட்ட ஓர் செய்தியைக் கீழே தருகிறேன்.

---- school bus accident in Kanchipuram bypass road. 30 LKG children serious. pls pray for them. And Pls forward this msg to friends, Don't avoid this sms, pls. Plz Plz Plz Plz Fwd this Msg urgently.. atleast to 10 Frns.. I am also forwarding.. A Baby Needs AB-ve Blood Immediately.Contact = +91**********.......­... Don't Delete.......... Ur Small SMS Will Sav a Child.

     நேற்று (05.07.2015) செய்தி ஊடகங்கள் எதிலும் இம்மாதிரியான விபத்து பற்றிய செய்தியே வெளியாகவில்லை. மேலும் ஞாயிறு விடுமுறை வேறு. ஆனால் இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து எவ்வித அறிவுமற்ற மூடர்கள் இந்த வதந்தியைப் பரப்புவதை மட்டும் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

    இந்தச் செய்திகள் மற்றும் தகவல்களைப் பார்த்த உடனே அவற்றைப் பகிர்வது ஓர் நோய்க்கூறாகவே பார்க்கப்பட வேண்டியது. இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள், ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெருகும் ஆதரவு போன்றவை இத்தகைய நோய்க்கூற்றின் வகையினமே. இது குறித்து தமிழிலும் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இன்னும் விரிந்த தளத்தில் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

      இப்போதைக்கு இந்த வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பும் வேலை தேவைதானா என்று சிந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக