திங்கள், பிப்ரவரி 07, 2011

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது?

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது?

                                                                   - மு. சிவகுருநாதன்




            தகவல் உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களின் வரிசையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர மத்திய அரசு முனைந்து அதற்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

            குடிமக்கள் மீதான கரிசனத்தின் வெளிப்பாடாக இத்தகைய சட்டங்களைக் கருத வேண்டியதில்லை.   ஏற்கனவே இருக்கின்ற சட்டங்களைச் செயல்படுத்தாமலும் உரிமைகளைப் பறிக்கும் வேலைகளில் ஈடுபடும் நமது அரசு கேலிக்கூத்தான வகையில் புதிய புதிய சட்டங்களை இயற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.  தகவல்களைப் பெறுபவரே அதற்கான செலவு முழுவதையும் ஏற்க வேண்டுமென தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முனைந்துள்ளது.

 

            ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயத் துறை அறிக்கை உலகம் முழுக்க பட்டினியால் வாடும் மக்களில் கால் பங்கு இந்தியர்கள் என்று கூறுகிறது.   பட்டினிச் சாவு, விவசாயிகள் தற்கொலை இந்தியாவெங்கும் தொடர்கதையாக இருந்தாலும் அரசுகள் இதை ஏற்பதில்லை.

 

            2001-இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய முன்னணி (NDA) அரசில் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டினிச் சாவு விவகாரத்தில் பிரதமர் உள்பட அனைவரும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.  அம்மாநில சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) மாநில பொறுப்பாளர் ஸ்ரீவத்சவா தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் உணவுக் கிடங்குகளில் ஒரு புறம் உணவு தானியங்கள் வீணாவதையும் மறுபுறம் பட்டினிச் சாவு நிகழ்வதையும் கண்டு அரசுக்குப் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

 

            உலக வங்கியின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கேற்ப பல மாநிலங்களில் மூடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நியாய விலைக் கடைகளைத் திறந்து பொது விநியோக முறையை (PDS) சீரமைக்க அரசுக்கு உத்தரவிட்டது.   மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் அதை உடனே செயல்படுத்துமாறும் கிராமப்புற எழை மக்களை பொது வேலைகளில் ஈடுபடுத்தி அதன்மூலம் அவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஆணையிட்டது.  இதனடிப்படையில் தான் தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம்  (NREGA - National Rural Employment Guarantee Act) கொண்டு வரப்பட்டது.   மனித உரிமை இயக்கங்கள், உச்சநீதி மன்றம் ஆகியன கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இவ்விதமான சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

            இவ்வழக்கில் அரசு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை வளர்ச்சித் திட்டங்கள் (ICDS) , மதிய உணவுத் திட்டம் (MMDS), பொது விநியோகத் திட்டம் (PDS) அந்தோதயா உணவுத் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டம் (OAP), தேசிய கர்ப்பிணிப் பெண்கள் நலத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகப் பட்டியலிடப்பட்டது.  இவையனைத்தையும் உச்சநீதி மன்றம் சட்டப்பூர்வமான உரிமைகளாக அறிவித்ததுடன் சில திட்டங்களை விரிவுபடுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

 

            சத்தான உணவு, உடை, இருப்பிடம், கருத்துரிமை போன்றவற்றுடன் கண்ணியமாக வாழும் உரிமையை வாழ்வுரிமை என உச்சநீதி மன்றம் ஏற்கனவே வரையறை செய்துள்ளது.  நமது அரசியல் சாசனமும், உச்சநீதி மன்றமும் நிர்ணயம் செய்த அடிப்படை உரிமைகள் பலவற்றை தற்போது அரசுகள் இயற்றுகின்ற ‘உரிமைச் சட்டங்கள்’ பறித்துக் கொள்கின்றன. 

 

            உணவுப் பொருளை உற்பத்தி செய்யக்கூடியவர்கள் அதை தங்களுக்க பயன்படுத்த முடியாமலும் சந்தையில் வாங்க முடியாமலும் இருப்பது அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களினால் ஏற்பட்ட விளைவுகளின்றி வேறில்லை.  நமது அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் பிரிவுகள் 45, 47 ஆகிய கல்வி, உணவு தொடர்பான உரிமைகளைச் சொல்லுகின்றன.   இவற்றை அடிப்படை உரிமையாக்கி நான்கிலிருந்து மூன்றாம் பகுதிக்கு கொண்டு வருவதை விட்டுவிட்டு தனித்தனி உரிமைச் சட்டங்களை கொண்டு வருவது வெறும் காகிதப் புலியாகத் தான் இருக்கும்.   மேலும் இச்சட்டங்களின் வாயிலாக ஏற்கனவே இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகள் கூட காணாமலடிக்கப்படுகின்றன.

 

            உச்சநீதி மன்றம் சட்டப்பூர்வ உரிமையாக்கியுள்ள இலக்கு நோக்கிய பொது விநியோக அமைப்பு, அந்தோதயா உணவுத் திட்டம், தேசிய முதியோர் உதவித் தொகைத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு வறுமைக் கோடு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

            வறுமைக் கோடு என்பதற்கான அரசின் வரையறை மிகவும் கேலிக்குரியது.  கிராமங்களில் தினக் கூலி ரூ.12-ம் நகரங்களில் தினக் கூலி ரூ. 17-ம் ஒருவர் பெறுவாரானால் அக்குடும்பம் வறுமைக் கோட்டை கடந்து விட்டதாக அரசு சொல்கிறது.   எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அரசு இவ்வாறு செய்கிறது.  இந்தியாவில் 6.75 கோடி மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக அரசு கணக்கு காட்டுகிறது.

 

            தற்போது இந்தியாவில் 10.5 கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக மாநிலங்கள் கணக்கு காட்டுகின்றன.  வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் மத்தியக் குழுவிடம் உள்ளது.   திட்டக்குழு மாநிலக் கணக்கு தவறானது என்றும் குடும்ப அட்டைகள் போலியானவை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.   மாண்டேக் சிங் அனுவாலியாவால் வழி நடத்தப்படும் திட்டக்குழு எது எப்படியிருப்பினும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியைத் தாண்டக் கூடாது என வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

 

            பசிக்கு உணவளித்தல் மட்டும் வறுமையை அகற்றி விடாது.  உலக சுகாதார நிறுவனம், உச்சநீதி மன்றம் போன்றவற்றின் கருத்துக்களின் படி சத்துக்கள் நிறைந்த உணவு, தூய்மையான குடிநீர், நலமான சுற்றுப்புறம், மருத்துவ வசதிகள் அனைத்தையும் அளிக்கும் போதுதான் நாட்டில் வறுமை அகலும்.  இந்நிலை எண்ணிக்கையை குறைத்துக் காட்டி உலக வங்கியின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவே திட்டக் குழு நினைக்கிறது.

 

            பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.   இது தொடர்பாக ஆய்வு செய்ய வாத்வா குழு உச்சநீதி மன்றத்தால் அமைக்கப்பட்டது.   அக்குழு நாளொன்றுக்கு ரூ.100-க்கு குறைவான ஊதியம் பெறும் குடும்பங்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாக கணக்கிட வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.   ஆனால் அரசின் கணக்கீட்டின்படி இதை விட பத்து மடங்கு ஊதியம் குறைவாக இருப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

 

            வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு தற்போது 35 கி.கி. அரிசி / கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.  அதை இச்சட்டம் 25 கி.கி. ஆக குறைக்கிறது.   10 கி.கி. அரிசி / கோதுமையை வெளிச்சந்தையில் வாங்கும்போது ஏற்படும் கூடுதல் சுமை இச்சட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை மக்கள் மீது சுமத்தப்படுகிறது.   மேலும் இத்திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை மட்டுமல்லாது பருப்பு வகைள், சர்க்கரை உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சரவைக் குழு ஏற்க மறுத்துவிட்டது.  திட்டக்குழுவும் இதற்கு செவி சாய்க்கப் போவதில்லை.

 

            வருமான அடிப்படையிலும் மிக மோசமான கணக்கீட்டைக் கொண்டு வறுமைக் கோட்டைக் குறைத்துக் காட்டிய மத்திய அரசு சரிவிகித உணவு என்ற அடிப்படையிலும் நாளொன்றுக்கு 1700 கலோரிகளுக்குக் குறைவாக உட்கொள்பவர்கள் என்ற வரையறை செய்திருப்பதன் மூலம் மீண்டுமொரு முறை இந்த அரசு ஏழை மக்களின் வயிற்றிலடிக்கிறது.

 

            நாடெங்கும் உள்ள பொது விநியோக அமைப்பைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது.  அரசு அந்தத் திசையில் பயணிக்காமல் பொது விநியோகத் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு என்ன நடவடிக்கை தேவையோ அதைச் செய்து வருகிறது.

 

            அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 300 கலோரிகளாவது அளிக்கப்பட வேண்டும்.  இத்திட்டம் பல மாநிலங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.  தமிழகம் போன்ற மாநிலங்களில் தினமும் முட்டை வழங்கப்பட்டாலும் 300 கலோரி சத்துள்ள உணவு கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியே.  பருப்பு, காய்கறி ஆகியன சேர்ந்த சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய எந்த அரசாங்கமும் விரும்புவதில்லை. 

 

                        வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற ஆண் - பெண்கள், விதவைகள், வருமானமில்லாத 60 வயதுக்கு மேற்பட்டோர், நிலையான வருமானம் இல்லாத குடும்பங்கள், மனநலம் மற்றும் செயலிழந்தவர்களால் பொருளீட்ட முடியாத குடும்பங்கள், ஆதிகால இனக் குழுக்கள் போன்றவை அந்தோதயா திட்டத்தின் கீழ் 35 கி.கி. அரிசி அல்லது கோதுமை பெறத் தகுதியானவர்கள்.  இவர்கள் அனைவரும் இச்சட்டத்தின் கீழ் 25 கி.கி. மட்டுமே உணவு தானியத்தைப் பெற முடியும் என்றால் இச்சட்டம் எதற்காகக் கொண்டு வரப்படுகிறது?

 

            தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (OAP) மூலம் 65 வயது முதிர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள முதியோருக்கு ரூ. 400/-ஐ ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.   இதை அவர்கள் வீடுகளுக்கு நேரில் வழங்குவதற்காக அரசு பணவிடை (Money Order) மூலமாக அனுப்புகிறது.  இதில் ரூ. 20லிருந்து ரூ. 50 வரை அஞ்சலக ஊழியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு மீதித் தொகையே அவர்களுக்க அளிக்கப்படுகிறது.   இவற்றை அரசு முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை.  அஞ்சலகப் புறநிலை ஊழியர்களுக்கு வெகு சொற்ப ஊதியத்தையே அரசு வழங்குகிறது.  அதனால்தான் என்னவோ இந்த முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

 

            இத்தகைய திட்டங்களை நீதிமன்ற அனுமதியின்றி எதையும் இடையில் நிறுத்தவோ அல்லது குறைக்கவோ கூடாது என உச்சநீதி மன்றம் தெளிவாக ஆணையிட்டுள்ளது.   ஆனால் இச்சட்ட முன்வரைவு நக்சலைட் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் இச்சட்டம் நடைமுறைக்கு வராது எனச் சொல்கிறது.  அரசுக்கெதிராக யாரும் போராடினாலோ நக்சல் ஆதிக்கம் இருப்பதாகச் சொல்லப்படும் பழங்குடிப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதார உரிமைப் பறிப்பை ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் செய்து வரும் அரசு அவர்களது உயிர் வாழ்க்கையையும் பறிக்க இச்சட்டம் மூலம் வழி வகை செய்கிறது.

 

            அங்கன்வாடிகள் ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை வளர்ச்சிப் பணிகளின் (ICDS) கீழ் அமைக்கப்பட்டுள்ளது.  இவற்றின் மூலம் குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு உரிய சத்துணவு அளிக்கப்பட வேண்டும்.  இத்திட்டமும் முறையான கண்காணிப்பின்றி ஏனோதானோவென்று செயல்படுவதால் பல கோடி குழந்தைகள் ஊட்டச் சத்துப் பற்றாக்குறை, போதிய வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இப்படி வளரும் இளைய சமுதாயத்தைக் கண்டு கொள்ளாமல் பலர் ‘வல்லரசு’ கனவு காண்கிறார்கள்.

 

            நமது அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிற, உச்சநீதி மன்றத்தின் மூலம் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பலவற்றை தனிச் சட்டம் கொண்டு வருவதன் மூலம் அரசு கொல்லைப்புறம் வழியாக நமது உரிமைகளை களவாடுகிறது.   இருக்கின்ற சட்டங்களையும் அதன் மூலம் நியாயமாக கிடைக்கக் கூடிய உரிமைகளுக்கு உத்திரவாதப்படுத்த இயலாத அரசு ஏன் இந்த மாதிரியான ‘பறிப்பு’ வேலைகளில் ஈடுபடுகிறது?

 

          

 

            மக்கள் நல அரசு என்று சொல்லிக் கொண்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வரும் நமது அரசு உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களை மட்டும் பாதுகாக்கத் தவறுவதில்லை.   வேதாந்தா, டாடா போன்ற நிறுவனங்களுக்கு நாட்டையும், இயற்கை வளங்களையும் ஒப்படைக்க ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் உள்ள நாட்டு மக்களுக்கெதிராகவே போர் தொடங்கியிருக்கும் அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

 

            அரசு இந்த மாதிரியான உரிமைச் சட்டங்களின் மூலம் தனது கடமைகள் முழுவதையும் கைவிட்டு விட்டு முற்றிலும் தனியமார் மயமாக்கவும் போலீஸ், ராணுவம் போன்றவற்றை மட்டும் தான் வைத்துக் கொண்டு முதலாளிகளுக்கு அடியாள் வேலை பார்க்கவே முயல்கிறது என்பதும் தெளிவாகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக