வெள்ளி, அக்டோபர் 07, 2016

மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன?

மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: 

இனி செய்யவேண்டியது என்ன? 

 மு.சிவகுருநாதன்

          கடந்த 15 நாள்களுக்கு மேலாக தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பல்லோ மருத்துவமனை மட்டும் ஒரு சில வரி அறிக்கைகளை இதுவரை வெளியிட்டுவந்தது.
 
       அதனால் நாளுக்கு நாள் வதந்திகள் பெருகினவே தவிர உண்மைநிலை தெரிவிக்கப்படவில்லை.
 
        தமிழக ஆளுநர் (பொ) அவர்கள் வெளியிட்ட அறிக்கையும் வதந்திகளை அதிகரிக்கச் செய்ததே தவிர தமிழக மக்களின் உணர்வுகளை யாரும் மதிக்கவில்லை.
 
      அரசு சார்பில் விரிவான, உண்மைநிலையை வெளிப்படுத்தும் அறிக்கை எதையும் வெளியிடாமல் வதந்திகளை வேடிக்கைப் பார்க்கும் செயலில் ஈடுபடுவது மிகவும் பரிதாபகரமானது.
 
       மறுபுறம் வழக்கு தொடுத்தால் வதந்திகள் குறையும் என நினைப்பது நல்லதல்ல.
 
      அரசு எந்திரத்திற்கு பொறுப்புண்டு. தனியார் மருத்துவமனைதான் அறிக்கை வெளியிடுகிறதே என்று வாளாயிருக்கக் கூடாது. இது நமது சட்டங்களுக்கும் மக்களாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. பெரும்பான்மை மக்கள் தேர்வு செய்த ஒரு தலைவரின் உடல்நலத்தை அறிந்துகொள்ள மக்கள் விரும்புவது நியாயமானது. 
 
       இரண்டு நாள்களுக்கு முன்பு அப்பல்லோ வெளியிட்ட அறிக்கை உண்மையில் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. இதுவரையில் அவர்கள் சொன்னது அனைத்தும் பொய் என்பதாக மறைமுகமாக உணர்த்தியது. பொதுமக்களின் உணர்வுகள் மிகவும் புண்பட்டன.
 
        பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்ட் வருகை பற்றிய செய்தி மேலும் பல குழப்பங்களுக்கு வழிவகுத்தது. 
 
        அரசு சார்பில் தெளிவான விளக்கங்கள் இல்லாதது ஏன் என்று இதுவரையில் விளங்கவேயில்லை.
 
        சற்றுமுன்பு ( வியாழன் இரவு ) அப்பல்லோ வெளியிட்ட 2 பக்க விரிவான அறிக்கை உண்மையை ஓரளவிற்கு உணர்த்துகிறது. பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்ட் மற்றும் 3 பேரடங்கிய எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரின் வருகை மற்றும் நீண்ட நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய அவசியம் போன்றவை உள்ளீடாக உணர்த்தப்படுகிறது.
 
         தமிழக முதல்வர் முழு நலம் பெற்று மீதமிருக்கும் தனது பதவிக்காலத்தையும் மக்கள் தீர்ப்பின்படி ஆளவேண்டும். எனவே விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துவோம்.
 
       இனிமேலும் அரசு எந்திரம் வெறுமனே இருக்கக் கூடாது. மக்களுக்கு இப்போதாவது உரிய விளக்கமளிக்க வேண்டும்.
 
       முதல்வர் நலம் பெற்று அரசுப் பணிகளைக் கவனிக்கும் வரையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
 
       அமைச்சரவை கூடி உரிய முடிவு எடுக்க வேண்டும். முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக ஒருவர் ஏற்று மருதுவமனையில் இருக்கும் முதல்வருக்கு ஓய்வு அளித்திடவும் அவர் விரைந்து குணமடைய அனைத்து வகையான உயரிய மருத்துவ சிகிச்சைகளை தொடர்ந்திடவேண்டும்.
 
       கட்சி, கொள்கை வேறுபாடுகளின்றி மாநில மக்களின் ஒருமித்த குரல் இதுவாகவே இருக்க முடியும்.

3 கருத்துகள்:

Nat Chander சொன்னது…

the governor should convene ministers meetings... take a decision let CM be on medical leave... after treatment let her be back

Nat Chander சொன்னது…

the governor should convene ministers meetings... take a decision let CM be on medical leave... after treatment let her be back

Sampath Kalyan சொன்னது…

சரியான கருத்து. உடல் நலம் சரியில்லாமல் போவது என்பது எல்லோருக்கும் நடக்கக்கூடிய ஒன்றே. உண்மை நிலவரதை வெளியிட்டு, வதந்திகளை குறைத்து, அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வதே சிறந்தது.

கருத்துரையிடுக