திருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த
விகடன் இதழ்
- மு.சிவகுருநாதன்
ஆனந்த விகடன் 15.07.2015 இதழ் |
பல ஆண்டுகளாக
ஆனந்த விகடன் இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். வேறு எதைப் படிக்க மறந்தாலும் லூசுப்பையனை
மறப்பதில்லை. சமீப காலமாக இதழ் பெருத்த மாற்றம் பெற்று பலதரப்பட்ட கருத்துக்களுக்கு
ஓரளவிற்கு இடமளித்து வருகிறது. திருவாரூரில் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று கடைக்கு
வரும் ஆவி வாரம் முழுக்க விற்பனையில் இருக்கும். நேரம் கிடைக்கும்போது வாங்கிப் பார்ப்பேன்.
இந்த வாரம் வியாழன் மறந்துவிட்டேன். வெள்ளிக்கிழமை
கடைகளில் இல்லை. சில கடைகளில் முடிந்து விட்டது என்றார்கள். சிலர் மொத்தமாக வாங்கிச்
சென்றுவிட்டார்கள் என்றார்கள். யாரும் காரணம் சொல்லவில்லை. நண்பர் ஒருவர் காமராஜ் பற்றி
எழுதிருப்பதாகவும் அதனால் வாங்கிவிட்டார்கள் என்றும் சொன்னார்.
நான் பெருந்தலைவர் கு.காமராஜ் என்று நினைத்து
விட்டேன். வரும் ஜூலை 15 பிறந்த நாள் வருகிறதல்லவா? பாரதிதம்பி கல்வி வளர்ச்சி நாள்
பற்றிய அட்டைப்படக் கட்டுரை எழுதியிருக்கிறார் போலும் என்று எண்ணினேன்.
தற்போது இணையத்தில் ஆவி முகப்புப் படத்தைப் பார்த்தபோதுதான்
தெரிந்தது மந்திரி தந்திரி பகுதியில் ஆர்.காமராஜ் பற்றிய செய்தி வந்துள்ளது. இதனால்
ஆவி இதழ்கள் ஒட்டுமொத்தமாக வாங்கப்பட்டுள்ளது. இதுதான் கருத்துரிமையின் லட்சணமா?
இதனால் எது மறைக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
திருவாரூரில் இல்லாவிட்டாலும் வேறு ஊரில் கிடக்குமல்லவா? இதழுக்கு ஒன்றும் இழப்பில்லை.
இதழைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்குத்தான் பெரும் இழப்பு.
இவ்வாறு அதிகாரம் படைத்தவர்கள், பணம் இருப்பவர்கள்
தங்களுக்கு எதிரான கருத்துக்களை முடக்கிவிடலாம். ஆனால் சாமான்ய மனிதர்களைப் பற்றிய
செய்திகள் வரும்போது அவர்களால் அவற்றைத் தடுக்கமுடியுமா? தற்போது ஆம்பூர் சட்டவிரோதக்
காவல் மரணம், அதைத் தொடர்ந்த கலவரங்களுக்கு காரணம் என்று சொல்லப்பட்ட பவித்ரா குறித்து
என்னென்ன எழுதின?
குறிப்பாக ‘தினமலம்’ (தினமலர் பத்தரிக்கையை பலர் இவ்வாறு அழைப்பதுண்டு.)
நாளிதழ் மாய்ந்து மாய்ந்து எழுதியது. நீதிபதி
கூட இந்தப் பொதுப்புத்திக்குப் பலியானார். இம்மாதிரியான எத்தனை பவித்ராக்கள் உங்கள்
எழுத்துக்கு இரையாகிறார்கள்?
ஒரு பிரபல தமிழ் நடிகைக்கு எய்ட்ஸ் என ஓர் முன்னணி வாரமிருமுறை இதழ் ‘நக்கீரன்’
செய்தி வெளியிட்டது. இதைப்போல எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். பத்தரிக்கை
மற்றும் காட்சி ஊடக கனவான்களே இதுதான் ஊடக
தருமமா? என்று ஒரு கணம் யோசிங்கள்! சாமான்ய மக்களை இழிவு படுத்தாதீர்கள். அதிகார வர்க்கத்தை
அம்பலப்படுத்துபோது இம்மாதிரியான முடக்கங்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றிய படிப்பினைகளாவது
பெற்றுக்கொள்ளுங்கள்.
சம்மந்தப்பட்ட கட்டுரையை இணையத்திலும் பிற சமூக
வலைத்தளங்களிலும் அனைவரும் பார்க்கும் வண்ணம்
வெளியிடுவதே இதை எதிர்கொள்ளும் ஒரே வழியாக
நான் கருதுகிறேன்.
10 கருத்துகள்:
மந்திரி தந்திரி - 12 ! விகடன் டீம்படம்: கே.குணசீலன், ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா
சம்பவம் 1
கல்லூரிப் படிப்பை முடித்தும் முடிக்காமலும் வெளியேறும் காமராஜ், அ.தி.மு.க-வில் உறுப்பினராகிறார். கஷ்டஜீவனம். நண்பர்கள் வீட்டிலும் மன்னார்குடி பூர்ணா லாட்ஜிலும் தங்கித்தான் வாழ்க்கையை ஓட்டுகிறார். ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, வாடகை பாக்கி எனச் சொல்லி வீட்டின் உரிமையாளர் கதவைப் பூட்டிவிட்டார். ஜன்னலை உடைத்துக்கொண்டு பொருட்களை எடுத்துச் சென்று, பழைய பஸ் ஸ்டாண்டு அருகே கட்சிக்காரர்கள் அவரைக் குடிவைத்தார்கள்!
சம்பவம் 2
மன்னார்குடி பெரிய கடை வீதி ரேஷன் கடை. கையில் ரேஷன் கார்டு மற்றும் பைகளுடன் வரிசையில் நிற்கிறார் காமராஜ். ரேஷன் கடை விற்பனையாளர் மகேந்திரன், பொருட்களுக்கு ரசீது போட்டு காமராஜிடம் நீட்டுகிறார். 'அண்ணே... அடுத்த வாரம் தர்றேன்ணே’ என காமராஜ் இழுக்க, அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்டு 'ம்’ என்றபடி பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறார்.
சம்பவம் 3
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 'ஜா’, 'ஜெ’ என இரண்டு அணிகளாக உடைகிறது அ.தி.மு.க.. ஜானகி அணியில் சேர்கிறார் காமராஜ். பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிக்கிறார். 'ஜா’ அணியின் தளபதியான ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் கல்யாணம் செய்துகொள்கிறார். அப்போது குத்தாலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த பாப்பா சுப்பிரமணியன் வீட்டுத் திருமணத்தை நடத்திவைக்க ஜெயலலிதா திருவாரூர் வந்தபோது, அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து ஏரியாவில் பேனர் வைக்கிறார் காமராஜ். அது வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்குகிறது. கொதித்துக் கிளம்பிய 'ஜெ’ அணியினர், காமராஜை விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்.
வாடகை கொடுக்க முடியாத, ரேஷன் கடையில் கடன் சொல்லிய, ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய காமராஜ்தான், இன்று ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில், உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்!
வறுமைப் பின்னணியை விடுங்கள்... ஜெயலலிதாவையே விமர்சித்தவர் எப்படி இப்போது அமைச்சராகக் கோலோச்சுகிறார்? நாடி, நரம்பு, ரத்தம் என அனைத்திலும் 'பதவி போதை’ உச்சத்தில் இருக்கும் ஒருவரால் மட்டுமே அப்படி முடியும்.
மன்னார்குடி டு கோட்டை!
மன்னார்குடி அருகே உள்ள சோத்திரியம், காமராஜின் சொந்த ஊர். கல்லூரியில் சேர்வதற்கு முன்னரே காமராஜுக்கு அரசியல் ஆர்வம் அதிகம். கல்லூரி சேர்மன் ஆவதற்கு உதவிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் மூலம் கட்சியில் சேருகிறார். அப்போது மன்னார்குடி அ.தி.மு.க
எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஞானசுந்தரம். ஞானசேகரனும் ஞானசுந்தரமும் எதிர் எதிர் கோஷ்டிகள். இந்தச் சூழலில் மன்னார்குடி கடைவீதியில் பட்டுராஜ் என்பவர் வெட்டிக் கொல்லப்படுகிறார். அந்தக் கொலையைப் பார்த்த நேரடி சாட்சி காமராஜ். அந்தக் கொலை வழக்கில் ஞானசுந்தரம் உள்பட பலரை குற்றவாளிகளாகச் சேர்க்கிறது போலீஸ். ஆனால், கோர்ட்டில் காமராஜ் பல்டி அடிக்க, ஞானசுந்தரம் விடுதலையாகிறார். ஞானசேகரனிடம் இருந்து ஞானசுந்தரம் முகாமுக்கு மாறுகிறார் காமராஜ். அப்படித்தான் அரசியல் அரங்கில் கோட்டூர் யூனியன் அ.தி.மு.க செயலாளர் என்கிற, தன் முதல் பதவியைப் பிடிக்கிறார் காமராஜ்.
பாஸ் என்கிற திவாகரன்!
'ஜா’வும் 'ஜெ’வும் ஒன்றாகிவிட, காமராஜும் அமைதியாகக் கட்சியில் ஐக்கியமாகிறார். 1991-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்க, மன்னார்குடி எம்.எல்.ஏ சீனிவாசனிடம் ஜாகையை மாற்றிக்கொள்கிறார் காமராஜ். சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடி அருகில் வசிக்கிறார். மன்னார்குடி நடேசன் தெருவில் 'சிவானந்தம் பட்டறை’ கடை இருக்கிறது. அதன் அருகில் 'ஷட்டில்கார்க்’ ஆட வருவார் திவாகரன். மன்னார்குடி கட்சி அலுவலகத்துக்குச் செல்லாமல் 'சிவானந்தம் பட்டறை’யிலேயே பட்டறையைப் போட்டார் காமராஜ். காரணம், திவாகரனுடன் ஒட்டிக்கொள்வதற்காகச் சந்தர்ப்பம்தான். தமிழ்நாட்டில் எங்கெங்கோ இருக்கும் நிர்வாகிகளுக்கு மன்னார்குடி சேனல் மூலம் லிஃப்ட் கிடைத்தபோது, மன்னார்குடியிலேயே இருக்கும் காமராஜுக்குச் சொல்லவா வேண்டும். தாஜா முதல் கூஜா வரை சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து திவாகரனை நெருங்கினார். கார் கதவைத் திறந்துவிடுவது முதல், வீட்டின் குழாய் ரிப்பேருக்கு ஆள் அனுப்புவது வரை சகல வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தார். அப்படி மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அட்டகாசமாகச் செய்து, திவாகரனின் நம்பிக்கையைப் பெற்றார். கும்பாபிஷேகத்தை நல்லபடியாக நடத்தியதற்காக காமராஜுக்கு வாட்ச் பரிசளித்தார் திவாகரன். இன்னும் விசுவாசம் அதிகமாகி, திவாகரன் காலை எழும்போது காமராஜ் அவர் தலைமாட்டில் இருப்பார். திவாகரன் வீடே கதி எனக் கிடப்பார் காமராஜ். அவரைச் சந்திக்கும்போதெல்லாம் நெடுஞ்சாண்கிடையாக திவாகரன் காலில் விழுவார். ஒரே நாளில் நான்கைந்து முறை சந்தித்தாலும், ஒவ்வொரு முறையும் காலில் விழுவார். காமராஜுக்குத் தெரியாமல் திவாகரனை யாரும் அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது என்ற அளவுக்குச் செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். அ.தி.மு.க அமைச்சர்கள் முதல் உயர்நிலை நிர்வாகிகள் வரை, அனைவருமே காமராஜ் வழியாகத்தான் திவாகரனைச் சந்திக்க முடியும் என்ற நிலை உருவானது. அ.தி.மு.க-வினர் யாருமே திவாகரனின் பெயரைச் சொல்ல மாட்டார்கள். 'பாஸ்’ என்றுதான் அழைப்பார்கள். அந்த 'பாஸ்’ பட்டத்தை அவருக்குக் கொடுத்தது... காமராஜ்!
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.க-வில் செல்வாக்குமிக்கவராக வலம் வந்த சீனியர் அழகு திருநாவுக்கரசுவை, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதால், திவாகரனும் காமராஜை ஏகத்துக்கும் வளர்த்துவிட்டார். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் என அடுத்தடுத்து பதவிகளை வாங்கிக் கொடுத்தார். அப்போது தொகுதியில் பலம் பொருந்திய மாவட்டச் செயலாளராக இருந்தார் 'குடவாசல்’ ராஜேந்திரன். கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட ராஜேந்திரனை, சிறைக்கே சென்று சந்தித்தார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு ஜெயலலிதாவிடம் செல்வாக்கு நிறைந்தவராக இருந்த ராஜேந்திரனை மீறி காமராஜால் வளர முடியவில்லை. பொறுமையாகக் காத்திருந்தார்.
தாறுமாறான அதிர்ஷ்டம்!
மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா வடிவேலுவை, கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அடித்துவிடுகிறார் காமராஜ். கட்சியினரிடம் ஜெயலலிதா நடத்தும் நேர்காணலின்போது இந்த விவகாரம் வெடிக்கிறது. அதே நேர்காணலுக்குச் சென்றபோது 'குடவாசல்’ ராஜேந்திரனின் காரை, ஜெயலலிதாவின் வாகன அணிவகுப்பில் வந்த கார் ஒன்று லேசாக உரசிவிடுகிறது. ராஜேந்திரனுடன் வந்தவர் அந்த கார் டிரைவரை
அடித்துவிடுகிறார். தன் மீதான அடிதடி குற்றச்சாட்டைத் திசைதிருப்ப, ராஜேந்திரன் கார் விவகாரத்தைக் கையில் எடுக்கிறார் காமராஜ். 'அம்மா... என்கிட்ட உள்ள பொறுப்பைப் பறிக்கிறதுக்காக ராஜேந்திரன் பொய் புகார் கொடுக்கச் சொல்லித் தூண்டிவிடுறார். மல்லிகா வடிவேலுவை நான் அடிக்கவே இல்லை. அது உண்மைனு நிரூபிச்சா, இதோ இப்பவே இந்த கரன்ட் வொயரைப் பிடிச்சு தற்கொலை பண்ணிக்கிறேன்!’ எனக் குமுறிக் கொட்டிவிட்டு, சைடு கேப்பில் கார் உரசல் சம்பவத்தையும் பற்றவைக்கிறார். உடனே டிரைவரை அழைத்து விசாரித்தார் ஜெயலலிதா. அவ்வளவுதான்... 'குடவாசல்’ ராஜேந்திரன் கட்டம் கட்டப்படுகிறார். அவரிடம் இருந்த மா.செ போஸ்ட்டிங் காமராஜுக்கு வருகிறது. உபயம் திவாகரன். அன்று மா.செ-வான காமராஜை, 15 வருடங்களாக அடித்துக்கொள்ள ஆள் இல்லை. இப்படி அரசியல் குடும்பப் பாரம்பர்யமோ, பின்னணியோ இல்லாத காமராஜ், கட்சிக்காக சட்டை கசங்காமல் உச்சாணிக்குச் சென்றதற்குக் காரணம் திவாகரன்தான்!
வளர்த்த கிடா மார்பில் பாய்ந்ததே!
2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், எம்.எல்.ஏ ஆகிவிட வேண்டும் எனக் கணக்குப்போட்டு காய் நகர்த்தினார் காமராஜ். ஆனால், போட்டியிட டிக்கெட் கிடைக்கவில்லை. இருந்தாலும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த ஜோரில், காமராஜை ராஜ்யசபா எம்.பி ஆக்கி அழகு பார்த்தார் திவாகரன். அதுமட்டுமா? ராஜ்யசபா எம்.பி பதவிக் காலம் முடிவதற்கு முன்னரே, 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மன்னார்குடி தொகுதியில் போட்டியிட காமராஜுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்தார். தேர்தல் ஸீட் கிடைத்ததும் காரில் காமராஜை உட்காரவைத்து தானே ஓட்டிவந்தார் திவாகரன். ஆனால், அந்தத் தேர்தலில் காமராஜ் தோற்றுப்போனார். ஒருவழியாக 2011-ம் ஆண்டு தேர்தலில் நன்னிலம் தொகுதியில் வென்று, 'மக்கள் பிரதிநிதி’யானார். ஆனாலும், மந்திரி பதவி கிட்டவில்லை. காரணம், மன்னார்குடி, திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோற்றால்தான், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதால் உள்ளடி வேலை பார்த்தார் எனப் பஞ்சாயத்து.
ஆனாலும் காத்திருந்து காய் நகர்த்தி 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைச்சரவையில் சேர்ந்தார் காமராஜ். 'மந்திரி’யாக மன்னார்குடிக்கு வந்த காமராஜுக்கு தடபுடல் வரவேற்பு. மன்னார்குடி பேருந்து நிலையத்தில் திரண்டிருந்த மக்களிடம் அவர் ஆற்றிய உரையில் ஜெயலலிதாவுக்குக்கூட நன்றி சொல்லவில்லை. யாருக்கு சொன்னார் தெரியுமா?
'சிலருக்கு வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் வந்து போகும். ஆனால், சிலருக்கு சிலரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களே வாழ்க்கையாக மாறிவிடும். என்னைப் பொறுத்தவரை அருமைக்குரிய அண்ணன் திவாகரனைச் சந்தித்தேனே, அது சந்தர்ப்பமாக அல்ல... அதுவே என் வாழ்க்கையாக அமைந்துவிட்டது. என்னை ஏற்றிவைத்து அழகு பார்க்கிற அண்ணனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அண்ணன் திவாகரனுக்காக வாழ்நாள் எல்லாம் விசுவாசமாக இருப்பேன்’ என காமராஜ் மைக்கில் முழங்கியபோது, எகிறிய கைத்தட்டலின் டெசிபல் திவாகரன் வீடு வரை கேட்டது.
ஆனால், 'வாழ்நாளின் கடைசி நாள் வரை அண்ணன் திவாகரனின் விசுவாசியாக இருப்பேன்’ எனச் சொன்ன காமராஜின் இப்போதைய பரம எதிரி... அதே திவாகரன்! காமராஜ் மந்திரியாகப் பொறுப்பேற்ற 44-வது நாள்... அ.தி.மு.க-வில் பெரும் பிரளயம். சசிகலா உள்பட அவருடைய உறவினர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. திவாகரன் உள்பட பலரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். அந்தச் சமயம் 'திவாகரனின் விசுவாசி’ எனத் தன்னைச் சொல்லிக்கொள்வாரா காமராஜ்? அப்படியே 'அமைதிப்படை’ சத்யராஜாக பல்டி அடித்தார். 'திவாகரனின் தீவிர ஆதரவாளர்’ என்ற தன்னைப் பற்றிய தகவல் மற்றும் ஆதாரங்கள் கார்டனுக்குச் செல்லாமல் இருப்பதற்கான அனைத்து வேலைகளையும் திரைமறைவில் நிகழ்த்தினார். இப்படி ரதகஜதுரகபதாதிகளைப் பயன்படுத்தி, திவாகரனுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கினார். ஆனால், 'அதுமட்டும் போதாது’ என 'அம்மா’வின் நம்பிக்கையைப் பெற திவாகரனுடனே மல்லுக்கட்டத் தொடங்கினார். 'திவாகரன் ஆதரவாளர்கள்’ எனச் சொல்லி திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 பேரை கட்சியில் இருந்து நீக்கவைத்தார். அதுவும் தனது உள்கட்சியில் செல்வாக்குமிக்க எதிரிகளான முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசன், சிவா ராஜமாணிக்கம், 'குடவாசல்’ ராஜேந்திரன், 'மணல்மேடு’ கார்த்திகேயன், மன்னார்குடி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரான அசோகன் எனப் பலரையும் 'திவாகரன் ஆதரவாளர்’ ஸ்டாம்ப் குத்தி கட்சியில் இருந்து கட்டம்கட்ட வைத்தார். சரி... அத்தனை வருடங்கள் திவாகரன் ஆதரவாளராக இருந்த காமராஜ் மீது சின்ன நடவடிக்கைகூடப் பாயவில்லையா?
அதற்கும் ஒரு சித்து விளையாட்டு விளையாடினார். சசிகலாவோடு 12 பேர் வெளியேற்றப்பட்டபோது இளவரசி மட்டும் வெளியேற்றப்படவில்லை. இளவரசியின் மகன் விவேக்கும் காமராஜின் மகன் இனியனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இருவரும் திவாகரன் வீட்டில் ஒன்றாக விளையாடுவார்கள். அந்த நட்புப் பிணைப்பு காமராஜுக்குக் கை கொடுத்தது. இளவரசியின் நிழலில் ஒதுங்கி, தன் மீதான நடவடிக்கையில் இருந்து தப்பித்தார்.
தொடர்ந்து மாவட்டச் செயலாளர், இரண்டு முறை எம்.எல்.ஏ ஸீட், ஒரு முறை ராஜ்யசபா எம்.பி., மந்திரி பதவி, இரண்டு மகன்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இலவச ஸீட், மச்சானுக்கு மக்கள் தொடர்புத் துறையில் பதவி... என இத்தனையையும் வாங்கிக் கொடுத்த திவாகரனை, ஒரே நொடியில் தன் வாழ்க்கையில் இருந்து விலக்கினார் காமராஜ். ஒருவேளை காட்சி மாறி கட்சிக்குள் மீண்டும் திவாகரன் தலையெடுத்தால், காமராஜின் அரசியல் சாம்ராஜ்யம் என்னவாகும் என்பது... அவருக்கே தெரியாது!
துறையில் சாதித்தது என்ன?
அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேஷன் மூலம் விநியோகிக்கும் சென்சிட்டிவ் துறை காமராஜ் வசம். ஆனால், அங்கு நடக்கும் முறைகேடுகளும் ஊழல் புகார்களும் மாநிலத்தின் 'சென்சேஷனல் செய்தி’கள்!
நெல் கொள்முதல்:
ஏழை விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகமே நெல் கொள்முதல் செய்கிறது. ஆனால், கொள்முதல் நிலையச் சீர்கேடு மற்றும் முறைகேடு காரணமாக நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் விவசாயிகள். 'ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தரம் குறைந்த நெல்லை, ஒரு குவிண்டால் 750 முதல் 1,000 ரூபாய் வரை என மிகக் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் மூலம் வாங்கி, உள்ளூர் விவசாயிகளின் பெயரில் போலி ஆவணங்களைத் தயார்செய்து, அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதை ஒரு குவிண்டால் நெல்லை 1,470 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறார்கள். இதனால் குவிண்டால் ஒன்றுக்கு 450 முதல் 600 ரூபாய் வரை எனக் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுகிறது’ என விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகிறார்கள்.
பருப்பு கொள்முதல் ஊழல்
பருப்பு கொள்முதல் முறைகேடுதான் உணவுத் துறையில் நடக்கும் ஊழலுக்கு ஒரு சாம்பிள். ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பருப்பில், முறைகேடுகள் நடந்தாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ்தான் முதலில் திரி கொளுத்திப்போட்டார்.
ரேஷன் கடைகளில் பருப்பு வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13,461 டன் துவரம் பருப்பும் 9,000 டன் உளுத்தம் பருப்பும் கொள்முதல் செய்யப்படுகின்றன. மார்க்கெட்டில் பருப்பு வகைகளின் விலை அடிக்கடி மாறுவதால், மாதாந்திர அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதற்காக ஒவ்வொரு மாதமும் டெண்டர் கோரப்பட்டு வந்தன. இந்த வழக்கத்தை மாற்றி ஓர் ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் கிலோ உளுத்தம் பருப்பும், துவரம் பருப்பும் விநியோகிக்க டெண்டர் கோரினார்கள். அந்த டெண்டரில் பங்கேற்க பல நிறுவனங்கள் போட்டியிட்டபோதும், புதுப்புது நிபந்தனைகளைப் போட்டு அந்த நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். ஆனால், சில நிறுவனங்களுக்கு மட்டும் விசேஷ அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன.
'வெளிச்சந்தையில் குறைந்த விலையில் பருப்பு வகைகள் கிடைக்கும் நிலையில், உளுத்தம் பருப்பும், துவரம் பருப்பும் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டால், அரசுக்கு 730 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டுக்கான பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்வதால், சந்தையில் பருப்பு விலை குறையும்போது, அரசுக்குக் கூடுதல் இழப்பு ஏற்படும். பருப்பு கொள்முதலில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுக்கு 3,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். 'ஏதோ ஒரு நன்றிக்கடனுக்காக’ குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் ஆர்டர் வழங்கப்படுவது ஏன்?’ என்றெல்லாம் ராமதாஸ் எழுப்பிய சந்தேகங்களுக்கு இதுவரை விடை இல்லை. 'பருப்பு வழங்க அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டி ஃபிரைடு நிறுவனம் கர்நாடகத்தில் குழந்தைகள், கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, தரமற்ற, பூச்சிகள் நெளியும் உணவுப் பொருளை வழங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனம். இதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான குமாரசாமி, சுப்பிரமணி உள்ளிட்டோர் மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் இந்த நிறுவனம் அளித்த ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு அரசு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியிருக்கிறார் ராமதாஸ்.
ஆனால், 'வெளிப்படையான முறைப்படியே டெண்டர்கள் கோரப்பட்டு இறுதி செய்யப்படுவதால் எந்தவித முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை’ என்று மட்டும் பதில் சொல்லி முடித்துக்கொண்டார் காமராஜ்.
ரேஷன் கார்டுகள்
தற்போது புழக்கத்தில் இருக்கும் ரேஷன் கார்டுகள், 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. 2009-ம் ஆண்டு வரை செல்லுபடியான அந்த கார்டை மாற்றிவிட்டு, புதிய கார்டை வழங்காமல் அதே கார்டில் உள்தாள்கள் ஒட்டிக்கொண்டே போகிறார்கள். இதனால் கிழிந்து தொங்கும் ரேஷன் கார்டுகளை ஒட்டுப்போட்டுப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். என்னதான் சாக்குபோக்குச் சொன்னாலும், புதிய ரேஷன் கார்டுகளை வழங்க, நான்கு ஆண்டு காலம் பத்தாதா அரசு இயந்திரத்துக்கு?
இதற்கிடையில் இந்து சமய அறநிலையத் துறையும் காமராஜ் வசம்.
' 'தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டென்போன். சின்னதொரு கடுகுபோல் உள்ளம்கொண்டோன். தெருவோர்க்குப் பயனற்ற சிறிய வீணன்’ என பாரதிதாசன் பாடியதுபோல், தான், தன் பிள்ளைகள், பேரன்கள் என வாழ்வோர் மத்தியில், மக்களுக்காக வாழும் மாசற்றத் தலைவி எங்கள் அம்மா!’ என ,தன் தலைவியைப் புகழ்ந்து பாடினார் காமராஜ். உண்மைதான்.
தன் குடும்பம், தன் பிள்ளைகள், சம்பாத்தியம் என வாழும் மக்கள் பிரதிநிதிகளை என்ன சொல்லலாம்?
க்ரைம் ரெக்கார்டு!
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது காமராஜ் மீது மூன்று க்ரிமினல் வழக்குகள் இருந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2011-ம் ஆண்டு தேர்தலில் வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. கொலை முயற்சி, கடத்தல், கொடிய ஆயுதங்கள் வைத்திருத்தல், ஏமாற்றுதல், மோசடி, கலவரம் ஏற்படுத்துதல்... என பத்து வழக்குகளில் ஐ.பி.சி-யின் 67 பிரிவுகளில் காமராஜ் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. அம்மா கேபினெட்டிலேயே க்ரிமினல் பின்னணி கொண்ட அமைச்சர்களில் சாருக்குத்தான் முதலிடம்!
அக்கா மகன் மர்மம்!
அக்கா மகன் செந்திலுக்கு, திவாகரன் சிபாரிசில் மெடிக்கல் காலேஜில் இடம் வாங்கிக் கொடுத்தார் காமராஜ். ஆனால், படிக்கப் போன இடத்தில் செந்தில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். குடும்ப விவகாரம்தான் காரணம் என முணுமுணுத்தார்கள். செந்திலின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்த காமராஜை, அவருடைய அக்கா கோபத்தில் திட்டித் தீர்த்தாராம்!
சிக்கலில் எம்.ஜி.ஆர் சிலை!
மன்னார்குடி கீழ வீதியில் கட்சி அலுவலகம் அருகே எம்.ஜி.ஆர்-ருக்குச் சிலை அமைக்கும் முயற்சிக்கு, காமராஜ் ஆர்வம் காட்டவே இல்லையாம். தொண்டர்களின் ஆர்வத்தில் அமைக்கப்பட்ட சிலையை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மூடியே வைத்திருக்கிறார்கள். 'சிலையைத் திறந்தால் மந்திரி பதவிக்கு ஆபத்து’ என சோதிடர்கள் சொன்னதால்தான், சிலையை சிறை வைத்துவிட்டார் அமைச்சர் என்கிறார்கள்!
தீயா வேலை செய்றோம்ல!
மன்னார்குடியில் இருக்கும் கட்சி அலுவலகம் வாங்கப்பட்டதில் காமராஜின் தலை உருட்டப்படுகிறது. பணம் ஒழுங்காக செட்டில் செய்யவில்லை எனப் புகார் கிளம்புகிறது. அதன் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் உரிமையாளருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. அலுவலகத்தை உடனே காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கட்சி அலுவலகம் திடீரெனத் தீப்பிடித்திருக்கிறது!
ரயில் டு விமானம்!
முன்னர் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு வாரம்தோறும் ரயிலில் வந்து செல்வார். ஆனால், அது பொன்னான இரண்டு இரவுகளை வீணாக்குவதால், இப்போது விமானத்தில் திருச்சி வந்து ஊருக்கு வருகிறார். மன்னார்குடியில் அமைச்சரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அதிகாரி ஒருவர் திடீரென அங்கே விசிட் அடித்தபோது பாரா புக்கில் டியூட்டி விவரங்கள் எதுவும் எழுதப்படாமல் இருந்தது. போலீஸ்காரர்கள் ஆப்செண்ட் வேறு. 'அமைச்சரின் பாதுகாப்பு நடவடிக்கையில் இவ்வளவு மெத்தனமா?’ எனச் சொல்லி பாதுகாப்பு போலீஸாரை மாற்றிவிட்டார் அந்த அதிகாரி. ஆனால், அவர்களை மீண்டும் அந்த இடத்துக்கே கொண்டுவந்துவிட்டார் காமராஜ். காரணம்..? அமைச்சரின் டீலிங்க்குகள் அந்த போலீஸ்காரர்களுக்கு மட்டுமே பரிச்சயமாம்!
ஓரம் போ... ஓரம் போ..!
மன்னார்குடி ஏரியாவில் சீனியர் அ.தி.மு.க பிரமுகர் கலியபெருமாள். கான்ட்ராக்டர். கட்சிக்குள் படித்த இளைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார். காமராஜின் திருமணத்துக்குத் தாலி வாங்கிக் கொடுத்தது கலியபெருமாள்தான். 1996-ம் ஆண்டு தேர்தலில் மன்னார்குடி தொகுதியை கலியபெருமாளுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. தனக்கு ஸீட் கிடைக்காத கோபத்தில் தேர்தல் வேலைகளைச் செய்யாமல் ஒதுங்கிகொண்ட காமராஜ், தனது வீட்டுச் சுவரில் அ.தி.மு.க தேர்தல் விளம்பரம் எழுதக்கூட அனுமதிக்கவில்லையாம். நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட்களை எடுக்க உதவுமாறு அமைச்சர் காமராஜிடம் கேட்டிருக்கிறார் கலியபெருமாள். 'எதுக்குண்ணே உங்களுக்கு இந்த வேலை... மத்தவங்க செய்யட்டும்!’ என வாய்ப்பு தராமல் ஓரம் கட்டிவிட்டாராம் காமராஜ்!
மனைவிக்கு மரியாதை!
காமராஜின் நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் உறுதுணையாக இருக்கிறார் அவர் மனைவி லதா மகேஸ்வரி. மந்திரி பதவி நிலைப்பதற்காக யாகம், சிறப்புப் பூஜைகளை முன்நின்று நடத்துவது லதாவே. கட்சிக்காரர்கள் திருமணங்களில், 'அண்ணி பெயரை மறக்காம பத்திரிகையில போடுங்க’ எனச் சொல்வார் காமராஜ். உள்ளூரில் கட்சிப் புள்ளிகளிடையே 'அண்ணி’ என லதாவுக்கு ஏக செல்வாக்கு. ராமகிருஷ்ணன், காமராஜின் மச்சான். தலைமைச் செயலகம் செய்தித் துறையில் ஏ.பி.ஆர்.ஓ!
தகவல் அளித்த
பெயர் தெரியாத தோழருக்கு நன்றி.
பெயரை மறைக்காமல் இருந்திருக்கலாம். நன்றி...நன்றி...நன்றி..
தோழமையுடன்.....
மு.சிவகுருநாதன்
ஆயிரம் அமாவாசைகள் தேர்ந்தாலும் இந்த அற்பனுக்கு ஈடாக முடியாது.பின்னூட்டம் படித்தது ஒரு முழு தெலுங்கு அரசியல் மசாலா சினிமா பார்த்த உணர்வை தந்தது.
என்ன ஒரு கேவலமான இழிபிறவி?
கருத்துரையிடுக