தமிழகக் கல்வி அவலங்கள்
மு.சிவகுருநாதன்
தனியார் பள்ளிகளுக்காகச் செயல்படும் கல்வித்துறை
9 ஆம் வகுப்பில் தேர்வு எழுத மாணவர்களுக்குத் தேர்ச்சியும் எழுதாதவர்களுக்கு மறுதேர்விற்கும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் சரியானது என்பதால் வரவேற்போம்.
இந்த முடிவை தேர்வுகள் முடிந்தவுடன் அறிவித்திருந்தால் மாணவர்களின் பதற்றம், மன உளைச்சல் பெருமளவு குறைந்திருக்கும். இனியாவது கல்வித்துறை உரிய முடிவுகளை உரிய காலத்துடன் எடுக்க முன்வரவேண்டும்.
இது மட்டும் போதாது. அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 9 மற்றும் +1 வகுப்பு முடித்து எவ்வளவு பேர் மாற்றுச் சான்றிதழ் பெற்று அரசுப்பள்ளிகளுக்கு வருகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
இவர்கள் புதிய பள்ளிகளில் 10, +2 வகுப்புகளில் சேர்வது விருப்பத்தால் அல்ல; கட்டாயமாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் இவர்களை வெளியேற்றுகின்றன.
தனியார் பள்ளிகளின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் அரசும் பள்ளிக் கல்வித்துறையும் இந்த மாணவர்கள் தொடர்ந்து அப்பள்ளிகளில் பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும்.
லேட்டஸ்ட் ஏற்பு:
(பள்ளித் திறப்பைத் தள்ளிவைக்கக் கூடாது என்கிற தனியார் பள்ளிகளின் கோரிக்கை உடனே ஏற்கப்பட்டது.)
07/06/2022
மழலையர் கல்வியின் நிலை
அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் (LKG & UKG) மூடப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. வேறுவழியில்லை; வரவேற்றுத்தான் ஆகவேண்டும்!
தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் இல்லாத நிலையில் மழலைகள் வகுப்புகள் தொடங்கி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து மிகக்குறைவான ஊதியத்தில் ஒருவரை பணியமர்த்தி குழந்தைகளின் கல்வியுடன் விளையாடுவதை நிறுத்திக் கொண்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
அங்கன்வாடிகளையும் முறையாக நடத்தாமல் மழலையர் வகுப்புகளையும் இவ்வாறு சீரழிப்பதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக சமவெளிப்பகுதிகளில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் அருகருகே பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தற்போது குழந்தைகள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும் சில இடங்களில் வெகுவாகவும் குறைந்துபோனது. இப்பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைத்து அக்குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
அருகில் உயர்நிலை/மேனிலைப் பள்ளிகள் இருந்தும் இத்திட்டத்தின் கீழ் அதிகளவில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரமுயர்த்தி 6-8 வகுப்பு மாணவர்களை கல்வியைவிட்டு அகற்றும் வேலையை அரசு செய்யலாமா?
நடுநிலைப்பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓராசிரியர் இல்லை. ஒரு பட்டதாரி ஆசிரியர்களுடன் செயல்படும் பள்ளிகள் ஏராளம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் பலருக்கு மாற்றுப்பணி வழங்கி இயங்கும் பள்ளிகளையும் முடக்கியுள்ளனர்.
6-8 வகுப்புகள் தொடக்கக்கல்வித் துறைக்குத் தேவையற்ற சுமை. இப்பள்ளிகளை மாணவர் எண்ணிக்கை இருப்பின் உயர்நிலைப்பள்ளியாக தரமுயர்த்தலாம், எண்ணிக்கை குறைவாக இருப்பின் அருகிலுள்ள உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கலாம்.
தொலைவு அதிகமிருக்கின்ற சமவெளி அல்லாத மலைப்பகுதிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாது வகுப்பிற்கு ஓராசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் கல்வியில் இரண்டாமிடம் என்பதிலிருந்து மிகவும் பின்தள்ளப்படுவோம்.
07/06/2022
தமிழகப் பள்(ல்டி)ளிக் கல்வித்துறை!
அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடரும் என மீண்டும் 'பல்டி' அடித்திருக்கிறார்கள். இதுவே கல்வித்துறையின் வழக்கமான நடைமுறையாக உள்ளது.
பொதுவாக எந்த முடிவும் மேலிருந்து எடுக்கப்படும் அதிகார, ஆதிக்க, 'குளிர்பதன அறைகளின் முடிவாக' உள்ளன. முடிவெடுக்கும் முன்னர் தொடர்புடைய எவரையும் கலந்தாலோசிப்பதில்லை. அதிகாரத்துவப் பாசிச நோக்கோடு முடிவுகள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இவ்வளவும் மக்களாட்சி என்று பெயரில் நடப்பது மிகக்கொடுமை.
மழலையர் வகுப்பிற்குரிய அடிப்படை வசதிகளையும் முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும் நியமிக்காமல் வெறும் வகுப்புகளை மட்டும் தொடங்குவது நியாயமா?
அடித்தட்டு, கிராமப்புறக் குழந்தைகளின் கல்வியுடன் இவ்வாறு விளையாடலாமா?
எங்கோ ஓரிடத்தில் விதிவிலக்காக சில பள்ளிகள் நன்றாக இயங்கலாம். பொதுவாக மொத்தத்தில் இப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஏதேனும் ஆய்வுகள் நடத்திருக்கின்றவா என்றால் அதுவும் இல்லை.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கோடு மட்டுமே இத்திட்டம் செயல்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. ஆங்கில வழியும் தரமின்றி இயங்கி வருகிறது.
தமிழக அரசு தாய்மொழிக் கல்வியை கைவிடுகிறதா?
10/06/2022
(தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் பற்றிய மூன்று சிறிய முகநூல் பதிவுகளின் தொகுப்பு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக