சனி, ஜூன் 25, 2022

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா?

 

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா?

 

மு.சிவகுருநாதன்

 

          பள்ளி மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள், ஒழுங்கீனங்களை ஆசிரியர்-மாணவர் இரு துருவ மோதலாகச் சித்தரிக்கும் போக்குக் காணப்படுகிறது. இது மிகவும் தவறான முன்முடிவாகும். அரசு, பள்ளிக் கல்வித்துறை, சமூகம், பெற்றோர், சூழல் என அனைவரும் பொறுப்பெற்க வேண்டிய ஒன்று. இதை வழக்கம்போல தமிழ் சினிமா பாணியில் இரு துருவப் பிரச்சினையாகக் கட்டமைப்பதும் அணுகுவதும் பிரச்சினைகளின் வேர்களைத்தேடி அவற்றைக் களைய முற்படுவதை விடுத்து திசை திருப்பும் உத்தியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

         இது அரசுப்பள்ளிகளில் மட்டும் நடப்பதாகவோ தனியார் பள்ளிகளின் சூழ்ச்சி என்றெல்லாம் காரணங்களைத் தேடுவது உண்மைகளை ஒளிக்கும் முயற்சியாகும். அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளி அனைத்திலும் பரவலாக இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் இவை அடக்கி ஒடுக்கப்படுகின்றன. இப்பள்ளிகளிலிருந்து 9, 10 ஆம் வகுப்புகளில் எவ்வளவு பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்கிற புள்ளிவிவரங்கள் இவற்றைச் சுட்டும்.

          குழந்தைகளும் பள்ளிகளும் சமூகத்தைப் பிரதிபளிக்கும் கண்ணாடிகள் என்றால் மிகையில்லை. அவர்கள் சமூகநிலையை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்கள். கொரோனாவிடம் பழியைச் சுமத்திவிட்டு வெறுமனே இருப்பதும் தப்பித்துக்கொள்வதும் சரியாகாது. கொரோனாவிற்கு முன்பும் இத்தகைய நிகழ்வுகள் நடந்தது. இணைய ஊடகப் பெருக்கம், திறன்பேசிகள் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால் இதன் வீச்சு அதிகமாக உள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் இதுதான் நிலை என்று சொல்ல இயலாது. ஆங்காங்கே தென்படும் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க உரிய முயற்சி செய்யாவிட்டால் எதிர்கால கல்விச் சூழல் இருண்டுபோகும்.

        மது மற்றும் பிற போதைப் பழக்கங்கள், சமூகத்தில் கூர்மையடையும் சாதியுணர்வு, காட்சியூடக வன்முறைகள், பாலியல் பிறழ்வுகள், பெண்கள் குறித்தான சமூகப்பார்வை, ஆண் குழந்தைகள் வளர்ப்பு முறை, குழந்தைத் தொழிலாளராகும் மாணவர்கள், அதன்மூலம் கிடைக்கும் பணப்புழக்கம், ‘இல்லம் தேடிக் கல்வி’ போன்ற திட்டங்களால் பள்ளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அரசு மற்றும் கல்வித்துறையின் செயல்பாடுகள், தேர்வு மையக்கல்வி,  தனிப்பயிற்சிக் கொள்ளைகள் என காரணங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.  

      தமிழக அரசே டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்கிறது. சில பத்தாண்டுகளாக மதுக்கடைகளின் எண்ணிக்கைப் பெருகியுள்ளது. இன்று குக்கிராமங்களிலும் மதுக்கடைகள் உண்டு. தமிழகத்துப் பெருமைகள் பட்டியலில் மது நுகர்வு அதிகரிப்பு, சாலை விபத்துகளில் முதலிடம், கஞ்சா புழக்கம் போன்ற சிறுமைகளையும் நாம் எளிதில் கடந்துவிட இயலாது. சீருடையணிந்த பள்ளி மாணவர் அரசின் டாஸ்மாக்கில் மதுவாங்க நடைமுறையில் எவ்விதத் தடையுமில்லை. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனைச் செய்யக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இதுவும் அவர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கிறது. அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற கஞ்சா 2.0 வேட்டை போதைப்பொருள் வலைப்பின்னலை எடுத்துக்காட்டியது. சரக்குகள் பிடிபட்டதே தவிர இந்த வலைப்பின்னலின் கண்ணிகள் அறுபடவில்லை. இதனால் அந்தக் கும்பல்களுக்கு சிறு இழப்பு, அவ்வளவுதான்.

      ஆண்டுதோறும் குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருள்கள் தடை செய்யப்படுகின்றன. ஆனால் இவை எப்போதும் எங்கும் கிடைக்கின்றன. தமிழகத்தில் தனியார் மதுவிற்பனை செய்தபோது கள்ளச் சாராயம் மிக அதிகளவில் புழக்கத்தில் இருந்தது. அரசே மது விற்பனை செய்யத் தொடங்கியபிறகு கள்ளச் சாராயம் பெருமளவு ஒழிக்கப்பட்டுவிட்டது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது அரசின் கைகளில் உள்ளது. அதில் அவர்களுக்கு விருப்பார்வமும் செயலுறுதியும் வேண்டும். இன்றைய தலைமுறையை மட்டுமல்லாது வருங்காலத் தமிழகத்தை முடக்கிப்போடும் இந்த முயற்சிகளைத் தடுக்க ஏன் தயக்கம் என்றும் தெரியவில்லை. தமிழகத்தை வீழ்த்தும் இச்சூழ்ச்சியின் பின்னணியில் யாரிருக்கிறார்கள் என்பதை அறிவதும் அவசியம். பலமடங்கு வருவாய் தரும் கனிமங்கள், மணலைவிட ஒப்பீட்டளவில் குறைவான வருவாய் தரும் டாஸ்மாக்கை நம்பி எதிர்காலத் தமிழகத்தை அழிவில் தள்ளுவது நியாயமானதுதானா!

        பொதுப்பள்ளிகளான அரசுப்பள்ளிகள் பெரும்பாலும் பொதுச்சமூகத்தின் புறக்கணிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. மிகவும் வறிய நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்களின்  குழந்தைகளே அரசுப்பள்ளிகளுக்கு வருகின்றன. இவர்களது வாழ்விடச் சூழலில் மது, போதைப் பொருள்கள், பாலியல் நெறிபிறழ்வுகள் இயல்பாக நடக்கின்றன. மாணவர்கள் விடுமுறை மாற்றும் வாய்ப்புள்ள நாள்களில் விருந்துகளுக்கு உணவு பரிமாறுதல், புட்டிக் குடிநீர் விநியோகம், கட்டிட வேலைகள் போன்ற  பல்வேறு பணிகளுக்குச் செல்கின்றனர். இதன்மூலம் இந்தத் குழந்தைத் தொழிலாளர்களுக்கு சொற்ப வருமானம் கிடைக்கிறது. இப்பணம் அவர்களது உடை உள்ளிட்ட சொந்தத் தேவைகளுக்கோ, குடும்பத் தேவைகளுக்கோ பயன்படாமல் மது, போதைப் பொருள்களைப் பயன்படுத்தத் தூண்டுகிறது. மிக எளிதாகக் கிடைக்கும் இப்பொருள்கள் அவர்களை எளிதில் ஆக்ரமிக்கின்றன. மிக வறிய நிலையில் இருக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் சிறிய அளவிலான பணம் சீர்கேட்டிற்கு அடிப்படையாக அமைவது மிகக்கொடுமை.

        ஆசிரியர்களிலும் சாதிய உணர்வுகள் மற்றும் குடிநோய்க்கு அடிமையானவர்கள் உண்டு. இவர்களை தலைமையாசிரியர் கவுன்சிலிங் செய்து சரி செய்துவிட முடியுமா? போதைப் பழக்க அடிமைகளை ஆசிரியர்களால் ஒன்றும் செய்ய இயலாது. பொதுவாக போதை அடிமைகளை மருத்துவர்கள் கூட கையாள்வது சிரமமாக உள்ளது. ஆசிரியர்களுக்கு கையேடுகள், பயிற்சிகள் அளித்துவிட்டால் போதுமென அரசு நினைக்கிறது. மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்துறை போன்றவற்றுடன் இணைந்து செயல்திட்டம் வகுக்க வேண்டும். மது உள்ளிட்ட போதைகளுக்குச் சிறுவர்கள் ஆளாகாமலிருக்க  தொலைநோக்குத் திட்டங்கள் தேவை. இவை பள்ளிகளால் மட்டும் ஆகக்கூடியவை அல்ல.

     பொதுவாக ஆண் குழந்தைகளை சமூகம் அனைத்து சுதந்திரங்களைக் கொடுத்து வளர்க்கிறது. இதனூடாக பெண்களுக்கு மட்டும் அதிகக் கட்டுப்பாடுகள். பெண்கள் குறித்தான சமூகப்பார்வை மிக மோசமாக உள்ளது. இந்தப் பார்வையே ஆசிரியைகளை நோக்கியும் திரும்புகிறது. இணையவழி ஆபாசங்கள் இவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன. உயர்நிலை, மேனிலை வகுப்புகளில் ஆசிரியைகள் அச்சத்துடனும் ஒருவிதக் கூச்சத்துடனும் பணியாற்றுகின்றனர். இவர்கள் சில நேரங்களில் பாலியல் ரீதியான சீண்டல்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. தமிழக ஆசிரியைகள் புடவைதான் கட்டவேண்டும் என்கிற அறிவிக்கப்படாத விதி உள்ளது. இந்த உடை கூட வகுப்பறைகளில் அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது. இதைவிடக் கண்ணியமான மாற்று உடையைத் தேர்வு செய்யவேண்டிய தேவை உள்ளது. சுடிதார் அணிந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வால் இது குறித்துப் பேசவே ஆசிரியச் சமூகங்கள் அஞ்சும் நிலை  ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குபவை.

     ‘இல்லம் தேடிக் கல்வி’த் திட்டத்தின் அருமை பெருமைகளை பேசிப் பொழுதைப் போக்குவதல்ல கல்வியாளர்களின் பணி. ஒருவகையில் இத்திட்டம் இருக்கின்ற பள்ளிகளைச் சீரழிக்கவும் தனிப்பயிற்சியை ஊக்கப்படுத்தவும் செய்கிறது. ‘நீட்’ கோச்சிங்கை எதிர்க்கும் நாம் தமிழகத்தில் பரவலாக ஒழிந்துபோன தனிப்பயிற்சிக் கொள்ளையை மீட்டெடுக்க உதவுவதை எப்படி ஆதரிக்க முடியும்? இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இப்பணிக்காக முழுநேரம் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனக்குத் தெரிந்த சுமார் 140 மாணவர்கள் பயிலும் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருக்கும் ஒரே ஒரு பட்டதாரி ஆசிரியர் இப்பணிக்காக விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பள்ளியில் தலைமையாசிரியர், இரு இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 1-8 வகுப்புகளைக் கவனிக்கின்றனர்.

             வகுப்புக்கு ஓராசிரியர் என்கிற நிலை இல்லாதபோது தொடக்கக் கல்வியில் 6-8 வகுப்புகள் பெரும்சுமையே! எனவே நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றப்பட்டுப் பள்ளிக்கல்வித்துறைக் கட்டுப்பாட்டில் வரவேண்டும். தொடக்கப்பள்ளி 1-5 வகுப்புகளுடன் வெறும் அடிப்படைத் திறன்களை மட்டுமாவது பயிற்சி தரும் நிலை இருக்க வேண்டும். தேவையற்ற புள்ளிவிவரங்கள், இணைய வருகைப்பதிவு, எந்தப் பலனையும் அளிக்காத பயிற்சிகள், பல்முனை அதிகாரக் கட்டமைப்பின் இறுக்கம், பதிவேடுகளுக்கு மட்டும் அளிக்கும் முதன்மை போன்றவற்றிலிருந்து ஆசிரியர்களை  விடுவித்துக் கற்றல்-கற்பித்தல் ஓரளவாவது நிகழ வாய்ப்பளிக்க வேண்டும்.

        இல்லம் தேடிக் கல்வி என்பதெல்லாம் முறைசாராக் கல்வித்திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டியது. இதன் மூலம் செயல்படும் பள்ளிகளை முடக்குவது கடும் கண்டனத்திற்குரிய ஒன்று. தமிழகத்தில் இதற்குப் பெரிதான எதிர்வினையே இல்லை எனலாம். ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைக் குழந்தைகளுக்காக பழங்குடியினர், ஆதிதிராவிடர், சீர்மரபினர் நலப்பள்ளிகள் உருவாக்கப்பட்டன. ஊழலால் இவைகள் நலிந்து இலக்கை அடைவதில் பின்தங்கியுள்ளன. இவையும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படுதல் அவசியம்.  தொடர்புடைய துறைகள் நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யட்டும். இல்லம் தேடிக் கல்வி மூலம் இவர்களுக்குப் பயனென்றால் தொடர்புடைய துறைப்பள்ளிகள் என்ன செய்துகொண்டுள்ளன?

        விளையாட்டு, ஓவியம், சிற்பம், இசை உள்ளிட்ட நுண்கலைகள், நூலக வாசிப்பு, பிற படைப்புத்திறன் போட்டிகள் போன்றவற்றால் மாணவர்களை ஓரளவு மீட்டெடுக்க இயலும். இதற்கான வாய்ப்புகள் வெறும் ஏட்டளவிலேயே உள்ளன. பொதுத்தேர்வுகள் இவற்றைத் தின்று வளர்கின்றன! 10, +1,+2 ஆகிய பொதுத்தேர்வுகள் உள்ள வகுப்புகளுக்கு இவற்றை நினைத்துப் பார்க்கவும் நேரமிருப்பதில்லை. புதிய கல்விக்கொள்கை அமலானால் 3, 5, 8 வகுப்புகளும் இக்குடையின் கீழ் வந்துவிடும்! தேர்வு மையக் கல்வியின் உபவிளைவாகவும் மாணவர் பிறழ் நடத்தையைப்  பார்க்கலாம்.

       ஒன்றிய, மாநில அரசுகள் இரண்டுமே இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மட்டும் கல்வியை வழிநடத்த முடியும் என்று நம்புகின்றன. கல்வி பற்றிய அடிப்படை அறிவும் தொலைநோக்கும் ஆசிரியர்கள்-மாணவர்களைப் புரிந்துகொள்ளும் திறனும் கொண்ட அமைச்சரும் உயர் அதிகாரிகளும் பள்ளிக் கல்வித்துறைக்குத்  தேவைப்படுகின்றனர்.

       பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தேவைதான். அவற்றை அனைத்திற்கும் நிவாரணியாக ஏற்கமுடியாது. உள்ளூர் ஆதிக்கக் குழுக்கள் ஆதிக்கத்தைத் தவிர்க்க இயலாது. இதன் மூலம் பள்ளி மற்றும் கல்வியின் தரம் மேம்படுத்துவதைக் காட்டிலும் இக்குழுக்களை  ‘அவுட் சோர்சிங்’காக அரசுகள் அணுகுகின்றன. அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளிலிருந்து அரசுகள் விலகிக்கொள்ளவே விரும்புகின்றன.

          18 வயதிற்குட்பட்ட முன் – பின் வளரிளம் பருவக் குழந்தைகளின் பிரச்சினைகளும் ஒரு படித்தானவை அல்ல. அவர்களது நெறிபிறழ் நடத்தைகளுக்குச் சட்டரீதியான தண்டனைகள் வழங்கவும் இயலாது. நடத்தை சரியில்லை என மாற்றுச் சான்றிதழ் அளிப்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்றவை. பள்ளியும் ஆசிரியர்களும் இவர்களைச் சரிசெய்திட முடியும் என்பது மூட நம்பிக்கையாகவே இருக்கும். மாணவர்களிடம் மட்டுமல்லாது சமூகத்திடமும் உரையாட வேண்டும். இந்த உரையாடல் அதிகாரமற்ற சமத்துவ வெளியில் நிகழவேண்டும். கல்வியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் அத்திசையில் பயணிப்பதாக இல்லை என்பதை இங்கு வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக