ஞாயிறு, ஜூன் 05, 2022

தமிழகக் கல்விக் கொள்கை:  சில குறிப்புகள்

 தமிழகக் கல்விக் கொள்கை:  சில குறிப்புகள்

மு.சிவகுருநாதன்


 

            பொதுப்பட்டியலிருக்கும் கல்விக்கு ஒன்றிய அரசு கல்விக்கொள்கையை உருவாக்கி நம்மீது திணிக்கிறது. மாநில அரசுகளின் கருத்துகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக ஆதிக்கப்போக்குடன் நடந்துகொள்வதை நாம் ஏன் ஏற்கவேண்டும்? நமக்கென்று ஒரு கல்விக்கொள்கையை ஏன் உருவாக்கக்கூடாது? என்கிற மிக நீண்டகாலமாக நம்மைத் துரத்திக் கொண்டிருக்கும் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. தமிழக அரசு கல்விக்கொள்கையை உருவாக்கும் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு ஓராண்டில் கல்விக்கொள்கையை தயாரிக்கும் என்று அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது. குழு அமைக்கவே சுமார் ஓராண்டு காலம் ஆகியிருக்கிறது. இக்குழுவின் வரம்பு பற்றித் தெரியவில்லை. ஓராண்டு கால வரையறை போதுமானதாக இருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது. அதுவரையில் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைவேறுவதை வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான்!

          ஒரு மாநில அரசு தனியாக ஒரு கல்விக்கொள்கையை உருவாக்கினாலும் அதைச் செயல்படுத்த முடியாது. அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும். நீட், எழுவர் விடுதலை போன்றவற்றில் நடக்கும் காலதாமத நாடகமே இதிலும் அரங்கேறும். இருப்பினும் தமிழக அரசின் தனித்த கொள்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதே உடனடிப்பலனாக இருக்கும்.  நீட்டுக்குப் பிறகும் ஏன் முன்பும் கூட NCERT பாடநூல்களை அடியொற்றி தமிழகத்தில் பாடநூல்களை எழுதும் கலை வளர்ந்தது. ஒன்றிய அரசின் கல்வித்திட்டங்களுக்கேற்பவும் (SSA, RMSA, சமக்ர சிக்க்ஷா - ஒருங்கிணைந்த கல்வி) அதன் கற்றல் விளைவுகளுக்கேற்பவும் பாடத்தைத் தயாரிக்கும் நிலையும் இருந்தது. ஒன்றிய அரசின் அடைவுச் சோதனைகளுக்குத் தக்கவாறு கற்பித்தல் செயல்முறைகளும் பின்பற்றப்பட்டன. எனவே கல்விக்கொள்கையும் ஒன்றிய அரசின் கொள்கையைப் பின்பற்றித் தயாரிக்காமல் இருந்தால் பாராட்டலாம்.

       தற்போது உருவாக்கப்பட்டுள்ள குழு கல்விக்கொள்கைக் குழுதானே தவிர சட்ட ஆணையம் அல்ல. நீட், 7.5% உள் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அமைக்கப்பட்ட ஆணையம் போன்றதல்ல. இந்நிலையில் புதுதில்லி உயர் நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதி த.முருகேசன்‌ இக்குழுவின் தலைவராக நியமித்த காரணம் விளங்கவில்லை. இதன்மூலம் சட்ட அங்கீகாரம் கிடைக்குமென்று கருதுகிறார்கள் போலும்! ஒன்றிய அரசு இஸ்ரோவில் பணியாற்றினால் கல்வியாளர் என்று நினைக்கிறது. அதைப்போலவே மாநில அரசும் செயல்படக்கூடாது. கல்விக்கொள்கையை உருவாக்கும் குழுவிற்கு ஏன் கல்வியாளர் ஒருவர் தலைவராக நியமிக்கப்படவில்லை என்பது இதன் அடிப்படை நோக்கத்தைச் சிதைப்பதாக இருக்குமோ என ஐயுறவேண்டியுள்ளது.

       சவீதா பல்கலைக்கழக ‌ முன்னாள் துணைவேந்தர் பேரா.‌ எல்‌. ஐவகர்நேசன்,‌ தேசிய கணித அறிவியல்‌ நிறுவனம்‌ ஓய்வு பெற்ற கணினி அறிவியல்‌ பேராசிரியர்‌ பேரா. இராமானுஜம்‌, யுனிசெப்‌ நிறுவனம்‌ முன்னாள்‌ சிறப்புக்‌ கல்வி அலுவலர்‌ முனைவர்‌ அருணா ரத்னம்‌, கல்வியாளர்‌ முனைவர்‌ ச.மாடசாமி  போன்ற சிலர் இக்குழுவில் பங்கு பெற்றிருப்பது சற்று ஆறுதலைத் தந்தாலும் தமிழகத்தின் முதன்மையான கல்விக்கொள்கை ஒன்றை வடிவமைக்க இது போதுமானதல்ல. குழு பரந்த அளவில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

       மாநிலத்‌ திட்டக்குழு உறுப்பினர்‌கள் பேரா.‌ சுல்தான்‌ இஸ்மாயில்‌, பேரா. இராம. சீனுவாசன்‌ ஆகியோர் இக்குழுவில் உள்ளனர். பொருளாதாரம் சார்ந்த இவர்கள் கல்விக்கொள்கை வகுப்பதில் எத்தகைய பங்களிப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. கல்விக் கொள்கை அமலாக்கத்தின் செலவீனங்களை இங்கே மதிப்பீடுவார்கள் போலும்!  கல்வியில் பொருளாதாரம் தவிர்த்த பிற துறைகளின் பங்கு என்ன?  கல்விக்கொள்கை உருவானபிறகு அதன் பொருளாதாரத் தேவைகளை தனியே ஆராய வேண்டும். கல்விக்கொள்கைக்குள் பொருளாதாரத்தின் ஆதிக்கம் அதன் நோக்கங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதாக அமையும்.

     எழுத்தாளர்‌ எஸ்‌.ராமகிருஷ்ணன்‌, உலக சதுரங்க சேம்பியன் விஸ்வநாதன்‌ ஆனந்த்‌, இசைக்‌ கலைஞர் ‌டி.எம்‌.கிருஷ்ணா போன்றோரும் இக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களனைவரும் அவர்களது துறைகளில் சிறப்பு பெற்றவர்கள் என்பதில் அய்யமில்லை. இவர்கள் பிரபலங்கள் என்பதைத் தவிர கல்விக்கு அளித்த காத்திரமான பங்களிப்புகள் என்ன, இவர்களால் கல்விக்கொள்கை அடையப்போகும் நன்மை என்ன? பல்வேறு பிரபலங்களை வெவ்வேறு குழுக்களில் நியமித்து விளம்பரம் தேடி உத்தியாகவே இது தோன்றுகிறது. இதுவரையில் கல்வி சார்ந்து இவர்கள் ஆற்றிய பணிகள் என்ன என்கிற கேள்வியும் நம்முன் நிற்கிறது.

     தனியார் பள்ளி மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்பு, நன்கொடைகள் மூலம் தனது பள்ளியை வளப்படுத்திய தலைமையாசிரியர் போன்றோர் மட்டுமே கல்விக்கொள்கை உருவாக்கத் தேர்வு செய்யும்போது அரசின் நிலைப்பாட்டை ஒருவாறு உணர முடிகிறது. இவர்களைக் கல்வியாளர் என்று சொல்லும் அரசின் செய்திக் குறிப்பு பேரா.ச.மாடசாமியை கல்வியியல் எழுத்தாளர் என்கிறது. இதுவும் அரசின் நிலைப்பாட்டை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. கல்வித்துறையை ஒரு அறக்கட்டளைபோல் அரசு நிர்வகிக்க விரும்புகிறது. அரசின் வருவாய் மிகக் குறைவாக இருந்த காலங்களில் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி பள்ளிக்குத் தேவையான பொருள்கள் நன்கொடையாகப் பெறப்பட்டன. அரசின் வருவாய் எவ்வளவோ உயர்ந்தும் கல்விக்கென தனி வரி வசூலிக்கும் இன்றைய நிலையிலும் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்றவற்றை மக்களின் கையேந்தும் அமைப்பாக செயல்பட ஒன்றிய அரசும் மாநில அரசும் விரும்புகிறது. ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை இதைத்தான் வலியுறுத்துகிறது. மேலும் தனியார் பள்ளி நலன் சார்ந்துதான் கல்வித்துறையின் முடிவுகள் அனைத்தும் எடுக்கப்படுகின்றன.  தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கல்வியாளராகும் ரசவாதமும் நிகழ்கிறது. அரசுப்பள்ளிகளை புரவலர்களிடம் கையளிக்கும் ‘தனியார்மய’த் திட்டம்  இருக்கின்றதோ என்னவோ!  இன்றைய உலகமயச் சூழலில்  பொருளாதாரம் சார்ந்தோர், தனியார் துறையினர், பெருமுதலாளிகள், பல்துறைப் பிரபலங்கள் போன்றோர் அரசின் கொள்கைகளை முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு எவ்விதப் பங்கோ தொடர்போ இல்லை. மக்களாட்சி என்பதெல்லாம் வெறும் முழக்கம்தானா? ‘திராவிட மாடல்’ என்று சொல்லப்படும் ஆட்சியிலும் இதுதான் என்றால் மாற்றம் எங்கிருந்து வரும்?

         இக்குழுவில் துறைசார் வல்லுநர்களைவிட பொருளாதாரம், திட்டக்குழு, தன்னார்வ அமைப்புகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கல்விச் செலவீனங்களைக் குறைக்க, அதிலிருந்து விலகவே ஒன்றிய அரசு விரும்புகிறது. அதைப் பின்பற்றுவதுதான் மாநில அரசின் நிலை என்பதை இதுவே வெளிப்படுத்துவதாக உள்ளது. இதில் என்ன தனித்துவம் இருக்கப்போகிறது? அறிக்கை வரட்டும், பார்க்கலாம். 1976 இல் 42 வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் பறிக்கப்பட்ட கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வருதலே தொலைநோக்கானத் தீர்வாக அமையும்.

       ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஆராய  பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்த இரண்டு குழுக்களிலும் கல்வி அலுவலர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் இஆப அலுவலர்கள், இந்நாள் துணைவேந்தர்கள், ஒரு தனியார் பல்கலை. வேந்தர், ஒரு முன்னாள் இயக்குநர், சாகித்ய அகாடமி (மொழிபெயர்ப்பு) விருதாளரான ஒரு ஆசிரியர்  போன்றோர் இணைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்தான் கல்வியாளர்கள் என்றால் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இந்த 'முன்னாள்'களை விட்டால் வேறு ஆள்கள் கிடையாதா? உயர்கல்விக் குழு போலவே பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி அதிகாரிகளும் துணைவேந்தர்களும் முடிவு செய்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?  இந்த நிலைதான் எந்தக் குழுவிலும் நீடிக்கிறது.

        ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும்   மிகுந்த திட்டமிடலுடன் உள்நுழைக்கப்படுகிறது. மாநில அரசு இவற்றைக் கண்டும் காணாதுபோல் ஓரக்கண்ணால் அனுமதிக்கிறது. இந்த இரண்டு துறைகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பள்ளிக் கல்வித் துறைக்கு ஆணையர் நியமனம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், கல்வியில் தன்னார்வலர்கள், பொதுமக்களிடம் கையேந்தும் கல்வித்துறை, ஆளுநர் நடத்தும் கல்லூரி முதல்வர்கள், பல்கலை. துணைவேந்தர்கள் கூட்டம், இந்திப் பிரச்சார சபாவாகிவிட்ட ஆளுநர் மாளிகை, ஒன்றியத்தின் தலையிட்டால் இந்த இரு துறை அலுவலர்கள் செய்யும் குளறுபடிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கொள்கைகளைத் திணிப்பதாகவே உள்ளன. ஒன்றிய அரசும் மாநில அரசும் இதுவரையிலான பல்வேறு கல்விக்குழுக்களின் நியாயமான பரிந்துரைகளை ஏற்கமறுத்து தங்களுக்கு வசதியானவற்றை மட்டுமே கணக்கில் கொள்கின்றன.

              1968 இல் கோத்தாரி கல்விக்குழு நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் (GDP) 6% ஐ கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதில் பாதியைக் கூட நாம் இதுவரை எட்டவில்லை. கல்விக்கான வரியையும் செலவிட மறுக்கும் அநீதியும் நடக்கின்றது. அரசின் கல்விசார் முதலீட்டை 6% ஆக உயர்த்த ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என கல்விக்கொள்கை 2020 கூறுகிறது. 50 ஆண்டுகள் கடந்தபிறகும் அதே ஒதுக்கீட்டைக் கோருவது எவ்வளவு அறிவீனம்? அதுவும் உயர்த்தவில்லை, ஒருங்கிணைந்து செயல்படுவார்களாம்!  இருக்கின்ற அமைப்புகளைச் சிதைத்து அல்லது பெயரை மாற்றி அவற்றின் அதிகாரங்களைக் குறைத்து தங்களது மறைமுகச் செயல்திட்டங்களை அமல்படுத்துவது பொதுக்கொள்கையாகிவிட்டன. மீண்டும் அதிகாரத்தைக் குவிப்பது சர்வாதிகாரப் பாசிசத்திற்கே இட்டுச் செல்லும்.  

         அன்று தமிழகத்தில் நிலவிய மாநில வாரியக் கல்விமுறை, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், நர்சரிப்பள்ளிக் கல்வி என 5 வகையான கல்விமுறைகளை ஒருங்கிணைத்துச் சமச்சீர் கல்வி உருவாக்க பேரா.ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு 2006 இல் அமைக்கப்பட்டது. தாய்மொழி வழிக்கல்வி, மழலையர் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல், பாடச்சுமை நீக்கம், மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம், தேர்வு முறை போன்றவற்றை ஆசிரியர்கள் - பெற்றோர்கள் இணைந்து முடிவு செய்தல், பள்ளிக் கல்வி இயக்குநகரத்தில் அதிகாரப் பரவல் போன்ற பல்வேறு பரிந்துரைகளை அக்குழு செய்திருந்தது. இக்குழுவின் பரிந்துரைகளில் ஒருசில மட்டுமே ஏற்கப்பட்டன.

       இந்த ஐந்து அமைப்புகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே வண்ணச் சீரூடை  என்பது முன்னிலைப்படுத்தப்பட்டது. இதையும் பின்னாள் வந்த அதிமுக அரசு (2011) நிறுத்தி வைத்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றச் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே இதுவும் மீண்டும் நடைமுறைமுறைக்கு வந்தது. பின்னர் பல்வேறு ஆணைகள் மூலம் இவை நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. CBSE, ICSE பள்ளிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்தது இதன் துணை விளைவாகும்.

          சமச்சீர்க் கல்வி நடைமுறையிலுள்ளதாகச் சொல்லப்படும் இன்றும் தனியார் சுயநிதிப்பள்ளிகள் 10, +1, +2 வகுப்புகளைத் தவிர்த்துப் பிறவற்றிற்கு தனியார் பாடத்திட்டங்களையும் பாடநூல்களையும்  பின்பற்றுகின்றன. அரசின் கொள்கை இருமொழியாக இருந்தபோதிலும் இவை இந்தியை ஒரு பாடமாகக் கற்றுத் தருகின்றன; தேர்வுகளும் நடத்துகின்றன. பிற பாடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பள்ளி நேரத்தில்தான் இவை நடக்கிறது. இவற்றை மாநில அரசும் பள்ளிக் கல்வித்துறையும் தெரிந்தே அனுமதிக்கின்றன. கல்விக் கட்டணம் போன்ற சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை; அவற்றை அரசு கண்காணிப்பதில்லை. மேலும் இவற்றிற்குச் சாதகமாகவே அரசின் ஒவ்வொரு நகர்வும் அமைகின்றது.

          பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. இவற்றில் பள்ளிக் கல்வித்துறை மட்டும் இஆப அலுவலரைக் கொண்டு ஆணையர் பணியிடமாக மாறியுள்ளது. இது உயர்கல்வியை அடுத்து பள்ளிக்கல்வியைக் கைப்பற்றும் முயற்சியாகும். தொடக்கக் கல்வியில் 1-8 வகுப்புகளைக் கொண்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், பள்ளிக் கல்வியில் 6-10 மற்றும் +1, +2 ஆகிய வகுப்புகளை உடைய உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளும் இயங்குகின்றன. மாணவர் எண்ணிக்கையின்படி பல்வேறு தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு ஈராசிரியர்களும்  நடுநிலைப்பள்ளிகளில் 8 வகுப்புகளுக்கு நான்கு ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றும் நிலை உள்ளது. வகுப்பிற்கு ஓராசிரியர் இல்லாமல் கற்றல்-கற்பித்தல் சாத்தியமில்லை. இது வெறும் எண்ணிக்கை சார்ந்த செய்தியல்ல. இதன்மூலம் அடிப்படைத் திறன்களின்றி மாணவர்கள் மேல்வகுப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்.

          பள்ளிகளுக்குத்  தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையடையவில்லை. ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு ஊழலில் கரைகிறது. தரமற்றக் கட்டுமானங்களை குழந்தைகள், ஆசிரியர்களின் எதிர்காலத்திற்குச் சவாலாக இருக்கின்றன. கல்வியை மக்களுக்கானதாகவும் உயிர்ப்புள்ள வருங்கால சமூகத்தைக் கட்டமைக்கவும் தொலைநோக்குத்  திட்டங்களும் சீர்திருத்தங்களும் தேவை. இதற்கு ஒன்றிய அரசின் கொள்கைகள் உதவாது. மாநில அரசு வெறுமனே கொள்கைகளை உருவாக்குவது மட்டும் போதாது. அதை முழுமையாகச் செயல்படுத்தும் ஆற்றல் வேண்டும். தனியார் பள்ளிகளுக்காக கல்வியில் சமரசம் செய்யும் போக்கு நீண்டகாலமாக உள்ளது. இதுவே கல்வியை அடித்தட்டு மக்களிடமிருந்து தூரப்படுத்திவிட்டது. சமூக நீதியைப் புறக்கணிப்பதும் அடித்தட்டு மக்களை அந்நியப்படுத்துவதும் தனியாரின் கொள்ளைகளுக்கு துணைபோவதும் ‘திராவிட மாடலாக’ இருக்க முடியாது.

நன்றி: பேசும் புதிய சக்தி – ஜூன் 2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக