ஞாயிறு, ஜூன் 26, 2022

தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?

 தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?

 

மு.சிவகுருநாதன்

 

         தமிழகத்தில் நிலவிவந்த மாநில வாரியக் கல்விமுறை, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், நர்சரிப்பள்ளிக் கல்வி என 5 வகையான கல்விமுறைகளுக்கு மாற்றாக சமச்சீர் கல்வி  தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட பேரா.ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு (2006) அளித்த பரிந்துரையில் சில மட்டுமே ஏற்புக்கு வந்தன.

 

        தாய்மொழி வழிக்கல்வி, மழலையர் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல், பாடச்சுமை நீக்கம், மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம், தேர்வு முறை போன்றவற்றை ஆசிரியர்கள் - பெற்றோர்கள் இணைந்து முடிவு செய்தல், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் குவிந்திருக்கும் அதிகாரங்களைப் பரவலாக்குதல் போன்ற பல்வேறு பரிந்துரைகளை அக்குழு செய்திருந்தது.

 

       உலக நடைமுறைப்படியும், தேசிய அளவில் அமைக்கப்பட்ட கல்விக் குழுக்களின் பரிந்துரைப்படியும் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முழுமையும் தமிழ் வழியாக அளிக்கப்பட வேண்டும்.  மேலும் தாய்மொழி வழிக் கற்பதுதான் சாலச்சிறந்து என்பதை பொதுமக்களும் பெற்றோரும் உணரச் செய்து தாய்மொழி/தமிழ் மொழிவழிக் கற்பதை ஊக்குவித்து ராமமூர்த்தி குழுப் பரிந்துரைகளைப் படிப்படியாகச் செயல்படுத்த அரசு முயலவேண்டும், என்ற பரிந்துரைகளும்  இருந்தன. ஆனால் இவை கண்டுகொள்ளப்படவில்லை.

 

       ராமமூர்த்தி குழு (1990) என்ன சொல்கிறது? தேசியக் கல்விக் கொள்கை 1986 ஐ மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இக்குழு பொதுப்பள்ளி, அருகாமைப்பள்ளி, மழலையர் கல்வி, கல்வி உரிமை, பெண்கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி போன்றவற்றை வலியுறுத்துகிறது. சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துதாக சொல்லும் தமிழக அரசு அவற்றை முழுவடிவில் செயல்படுத்த விரும்பவில்லை.

 

           தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் இல்லாத நிலையில் மழலையர் வகுப்புகள் தொடங்கி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து மிகக்குறைவான ஊதியத்தில் ஒருவரை பணியமர்த்தியது.  அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்த நிலையில் அதை அதிகப்படுத்தும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. அரசுக்கு இதில் உண்மையான அக்கறை இல்லை என்பதை அவர்களின் தொடர் நடவடிக்கைகள் உணர்த்தின. மழலையர் வகுப்பிற்கு உரிய பயிற்சி பெற்ற போதிய ஆசிரியர்களும் உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையிலும் தொடக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஓராசிரியர் இல்லாத நிலையில் பணிநிரவல் என்கிற பெயரில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பியது. அங்கன்வாடிகளையும் முறையாக நிர்வகிக்காமல் மழலையர் வகுப்புகளையும் பெயருக்குத் தொடங்கி குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடும் அவலம் தொடர்ந்தது.

 

         தற்போது அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் (LKG & UKG) மூடப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டு அடுத்த நாளே  திரும்பப்பெற்றுள்ளது. இதுவே கல்வித்துறையின் வழக்கமான நடைமுறையாக உள்ளது. மழலையர் வகுப்பு தொடங்கப்பட்ட பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளை நடத்த போதுமான மாணவர்கள், ஆசிரியர்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே தமிழ்வழி மூடுவிழா கண்டுள்ளது. தமிழைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் பலரும் இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

 

                 ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையிலுள்ள சாத்தியமான இடங்களில் குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு முடிய அல்லது வாய்ப்பு இருந்தால் 8 ஆம் வகுப்பு அதற்கு மேலும் தாய்மொழி/உள்ளூர் மொழியில் கல்வி என்பதனூடாக மும்மொழிக் கொள்கை, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மறைமுகச் செயல்திட்டங்கள் உள்ளன. இவை உண்மையாக பிராந்திய மொழிகள் குறித்த அக்கறையால் வந்ததல்ல.

 

       மேனிலை (+1, +2) வகுப்புகளில் செயல்பட்ட தொழிற்கல்விப் பிரிவுகளை ஆசிரியர்களை நியமிக்காமல், அவற்றைப் படிப்படியாக மூடிவிட்டு 9, 10 வகுப்புகளில் தொழிற்கல்வியைத் தொடங்குகின்றனர். இது ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையையும் குலக்கல்வித் திட்டத்தையும் பிரதிபளிக்கிறது. தற்போது 9 ஆம் வகுப்பிற்கு இல்லை; 10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி உண்டு என்கின்றனர்.

 

                  பொதுவாக எந்த முடிவும் மேலிருந்து எடுக்கப்படும் அதிகார, ஆதிக்க, 'குளிர்பதன அறைகளின் முடிவாக' உள்ளன. முடிவெடுக்கும் முன்னர் தொடர்புடைய எவரையும் கலந்தாலோசிப்பதில்லை. அதிகாரத்துவப் பாசிச நோக்கோடு முடிவுகள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இவ்வளவும் மக்களாட்சி என்று பெயரில் நடப்பது மிகக் கொடுமை.

 

        மழலையர் வகுப்பிற்குரிய அடிப்படை வசதிகளையும் முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும் நியமிக்காமல் வெறும் வகுப்புகளை மட்டும் தொடங்குவது எப்படிச் சரியாக இருக்க முடியும்?         பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கோடு மட்டுமே இத்திட்டம் செயல்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. ஆங்கில வழியும் தரமின்றி இயங்கி வருகிறது. அடித்தட்டு, கிராமப்புறக் குழந்தைகளின் கல்வியுடன் இவ்வாறு விளையாடக்கூடாது. இதன் மூலம் தாய்மொழிக் கல்வியை முற்றாக அகற்றும் வேலையை அரசு செய்துவருகிறது.  எல்லா அரசுகளுக்கும் இவ்வாறான மறைமுகச் செயல்திட்டங்கள் இருக்கின்றன. இவை பொதுக்கல்வியையும் சமூகத்தையும் பாழடிக்கின்றன.

 

          எங்கோ ஓரிடத்தில் விதிவிலக்காக சில பள்ளிகள் நன்றாக இயங்கலாம். பொதுவாக மொத்தத்தில் இப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஏதேனும் ஆய்வுகள் நடத்திருக்கின்றவா என்றால் அதுவும் இல்லை.

 

      தொடக்கப்பள்ளிகளில் ஈராசிரியர்கள்; நடுநிலைப்பள்ளிகளில் நான்கு அல்லது ஐந்தாசிரியர்கள் என்கிற நிலைதான் உள்ளது. இதனால் தமிழில் எழுதப்படிக்கவும் அடிப்படைத் திறன்கள் இல்லாமலும் 6 மற்றும் 9 வகுப்புகளை மாணவர்கள் எட்டும் நிலை இருக்கிறது. அதனால்தான் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு கரோனா மட்டும் காரணமல்ல; அதற்கு முன்பிலிருந்தே இதே நிலைதான். விழுக்காடு அளவில் சிறு மாற்றம் இருக்கலாம். நடுநிலைப்பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓராசிரியர் இல்லை. ஒரு பட்டதாரி ஆசிரியர்களுடன் செயல்படும் பள்ளிகள் ஏராளம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் பலருக்கு மாற்றுப்பணி வழங்கி இயங்கும் பள்ளிகளையும் முடக்கியுள்ளனர்.

 

        குறிப்பாக சமவெளிப்பகுதிகளில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் அருகருகே பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தற்போது குழந்தைகள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும் சில இடங்களில் வெகுவாகவும் குறைந்துபோனது. இப்பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைத்து அக்குழந்தைகளைக் காப்பாற்றலாம். அருகில் உயர்நிலை/மேனிலைப் பள்ளிகள் இருந்தும் இத்திட்டத்தின் கீழ் அதிகளவில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரமுயர்த்தி 6-8 வகுப்பு மாணவர்களை கல்வியைவிட்டு அகற்றும் வேலையை அரசுகள் செய்துள்ளன.

 

        6-8 வகுப்புகள் தொடக்கக்கல்வித் துறைக்குத் தேவையற்ற சுமை. போதுமான ஆசிரியர்கள் செயலூக்கமான நடவடிக்கைகளுஇம் இல்லையென்றால் ‘எண்ணும் எழுத்தும்’ உள்ளிட்ட எந்தத் திட்டமும் வெற்றி பெறாது. இப்பள்ளிகளை மாணவர் எண்ணிக்கை இருப்பின் உயர்நிலைப்பள்ளியாக தரமுயர்த்தலாம், எண்ணிக்கை குறைவாக இருப்பின் அருகிலுள்ள உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கலாம். தொடக்கக் கல்வியுடன் தாய்மொழிக் கல்வியும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

 

        தொலைவு அதிகமிருக்கின்ற சமவெளி அல்லாத மலைப்பகுதிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாது வகுப்பிற்கு ஓராசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் இந்திய அளவில் கல்வியில் இரண்டாமிடம் என்பது விரைவில் கானல் நீராக மாறும்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக