ஞாயிறு, செப்டம்பர் 11, 2022

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு  காரணம்  அந்நியப் படையெடுப்புகளா?  

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு  காரணம்  அந்நியப் படையெடுப்புகளா?  

 (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 06)

மு.சிவகுருநாதன்



             எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் 'காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை' என்ற பாடத்தில் பெண்களின் நிலைக்கான சமூக, அரசியல், பண்பாட்டுக் காரணங்கள் விண்டுரைக்கப்படுகின்றன!  கொஞ்சம் அதையும் பார்த்து விடுவோம்.

        “பண்டைய இந்தியாவில்  அதிலும் குறிப்பாக முந்தைய வேதகாலத்தில்  பெண்கள் சமமான உரிமைகளை பெற்று  மதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான  வெளிநாட்டு படையெடுப்புகளின் விளைவாக  சமூகத்தில் அவர்களின் நிலை மோசமடைந்தது.  அவர்கள் அடக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குத்  தள்ளப்பட்டனர். புதிய சமூக நடைமுறைகள்,  பழக்கவழக்கங்கள் சமூகத்திற்குள் நுழைந்து  பெண்களின் சுதந்திரத்திற்கு சில வரம்புகள்  மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தன”. (பக்.88)

    தொல்குடித் தாய்வழிச் சமூகத்தில் பெண்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. ஆனால் முன், பின் வேதகாலம் என்பது முற்றிலும் தந்தைவழி ஆணாதிக்கச் சமூகம். இங்கு சமஉரிமை என்ற பேச்சிற்கே இடமில்லை. தொடந்து முன் வேதகாலத்தில் பெண்களின் நிலை சிறந்திருந்தது என்கிற அபத்தக் கதையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. வேதகாலத்திற்குப் பிந்தைய படையெடுப்புகளால் பெண்களின் நிலை மோசமடைந்ததாகக் கூறுவது பாசிசமன்றி வேறில்லை. ஆரியர்கள் படையெடுப்பால் / வருகையால் பெண்களின் நிலை தாழ்த்தப்பட்டது என்பதே வரலாற்று உண்மை. இடைக்கால இஸ்லாமியப் படையெடுப்புகள் வழியே பெண்களின் நிலை மோசமானதாக எழுதுவது இந்துத்துவப் பாசிச வெறியாகும்.  

          இவர்கள் எழுதியபடியே வைத்துக் கொண்டாலும் பின் வேதகாலத்தில் பெண்களின் நிலை மோசமானது என்றுதானே கூறவேண்டும். படையெடுப்புகளால் பெண்களின் நிலை மோசமடைந்தது என்று சொல்வதன் வாயிலாக வேதங்கள், ஸ்மிருதிகள் ஆகிய வைதீக இந்து புனிதச் சட்டத்தொகுப்புகளும் இந்து மதமும் காப்பாற்றப்படுகின்றன. இதைத்தான் இந்துத்துவம் பாசிசம் என்று அடையாளம் காண வேண்டியுள்ளது.

     “பண்டைய இந்தியாவின்  சிந்துவெளி நாகரிகத்தில் தாய் கடவுள வணங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அச்சான்றுகளிலிருந்து அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மதிக்கப்பட்டிருந்தனர் என தெளிவாகத் தெரிகிறது. ரிக்வேத காலத்தில்  மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக  இருந்தது. குறிப்பாக மதச் சடங்குகளில்  பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது  ஏற்றுக்கொள்ளப்பட்டன”. (பக்.157)

      சிந்துவெளி நாகரிகத்துடன் ரிக் வேதகாலத்தை இணைப்பதும் பாசிசமே. நாம் முன்பே கூறியது போன்று இவ்விரண்டும் ஒன்றல்ல. “மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக  இருந்தது”, என்றால் இதரப் பெண்கள், விதவைகளின் நிலை எவ்வாறு இருந்தது? கோயில் வழிப்பாட்டில் அன்றும் இன்றும் பெண்களுக்கு இடமில்லை என்பதே யதார்த்த நிலை. வீடுகளில் மதச் சடங்குகள் செய்வதும் பொது வெளியில் மதச் சடங்குகள் செய்வதும் ஒன்றல்ல; தீட்டு போன்ற கற்பிதங்களும் உற்பத்தியானது.

     

        வேத காலங்களில் உச்சத்தில் இருந்த இந்தியச் சமூகம் இடைக்கால இஸ்லாமியப் படையெடுப்புகளில் மிக மோசமான நிலையை அடைவதாக 'பாடநூல் இந்துத்துவவாதிகள்' கதையாடல்களை நிகழ்த்துகின்றனர்.

 

     இடைக்கால சமூகத்தில் பெண்களின்  நிலை மேலும் மோசமடைந்தது. சதி, குழந்தை திருமணங்கள், பெண்சிசுக்கொலை, பர்தா முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற பல  சமூக தீமைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்". (பக். 89)

 

          “இடைக்காலத்தில் பெண்களின் கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்படவில்லை. இருப்பினும் பெண்களுக்கெனதனியாக பள்ளிகள்எதுவும் காணப்படவில்லை, பெண்கல்வி முறையாக இல்லை”.  (பக். 89)

       “முஸ்லிம்கள் வருகைக்கு முன்னரே இந்தியாவில் ஒரு மேம்பட்ட கல்விமுறை நடைமுறையில் இருந்தது”. (பக். 56, 8 ஆம் வகுப்பு, இந்தியாவில் கல்வி வளர்ச்சி)

        மேற்கண்ட சொல்லாடல்களின் வழி இடைக்காலத்தில் இஸ்லாமியர் படையெடுப்புகளால் சமூகத்திலும் கல்வியிலும் பெண்களின் நிலை மோசமாக இருந்தது. வேத காலமே பெண்ணுரிமையின் உச்சம் என்று தமிழகப் பாடநூல்கள் கதைப்பது பக்கங்கள் தோறும் நீள்கிறது. இப்பாடநூல்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டவையா அல்ல நாக்பூரில் தயாரிக்கப்பட்டவையா என்கிற அய்யத்தை உண்டாக்குகின்றன.

(தொடரும்…)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக