புதன், செப்டம்பர் 07, 2022

அகத்திய முனிவரின் கமண்டலத்தில் தோன்றிய தாமிரபரணி!

அகத்திய முனிவரின் கமண்டலத்தில்  தோன்றிய தாமிரபரணி!

(தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் - 03)

        மு.சிவகுருநாதன்

 


 

         பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ என்ற பாடம்  உள்ளது. அதில் ஆறுகளைப் பற்றிச் சொல்லும்போது கீழக்கண்ட வரிகள் காணப்படுகின்றன.

           “தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது. இவ்வாற்றின் தோற்றம் அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது”. (பக்.220)

        தாமிரபரணி, காவிரி என எல்லாம் ஆறுகளும் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து தோன்றியது என தமிழக அரசின் புவியியல் பாடநூல் சொல்லித் தருவதை எப்படிப் புரிந்துகொள்வது? சங்கி மாநிலங்களைவிட ஒருபடி முன்னே சென்றுகொண்டுள்ளது தமிழ்நாடு!

      புராணக்கதைகள், தொன்மங்கள், நம்பிக்கைகள் வழி இவர்கள் எத்தகைய அறிவியலை குழந்தைகளுக்கு விதைக்கப் போகிறார்கள்? அறிவியலும் கலைப்பாடங்களும் இங்கு இந்துத்துவ விதைகளைத் தூவுகின்றன. இதன் வாயிலாக வெறுப்பரசியல் குழந்தைகளுக்கு ஊட்டப்படுகிறது.

        இன்னும் பாருங்கள்!

    “பெண்ணையாறு இந்து  சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது.  மேலும் தமிழ் மாதமான தை மாதத்தில் இந்த ஆற்றுப் பகுதியில் (ஜனவரி, பிப்ரவரி) பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன”. (பக்.220)

        இந்து மதம் என்றால் என்ன? அன்றைய வைதீக வேத மதந்தானே! வைதீக வேத மதமும் ஆரியர்களும்  நெருப்பைப் புனிதமாகக் கருதினார்களே தவிர நீரையோ, நதியையோ அல்ல. மேய்ச்சல் நாகரிக மனிதர்கள் விளைச்சல் நாகரிகத்தின் நதிகள், அணைகள் போன்றவற்றை எதிரியாகத்தான் கருதினர். இன்று திராவிட, ஆரியப் பண்பாட்டுக் கலப்பு ஏற்பட்டதால் தீயும் நீரும் ஒரே வழிபாட்டுப் பொருளாக மாறிவிட்டன.

        இந்தப் புனித நதிச் சொல்லாடல்கள் பாடநூலுக்கு உகந்ததல்ல. இதைத் தவிர்த்து நதிகளைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ உண்டு. தாமிரபரணியின் பழைய பெயர் பொருநை. அதைக்கூட சொல்வதற்கு பாடமெழுதிகள் விரும்பவில்லை. ஆனால் அகத்தியரால் உருவானது என்கிற பாசிசச் சொல்லாடல்களை மட்டும் மிக எளிதாக உற்பத்தி செய்ய முடிகிறது.  இதுதான் தமிழகப் பாடநூல்களின் நிலை!

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக