வெள்ளி, செப்டம்பர் 09, 2022

தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள்

 

தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள்

(தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 05)

மு.சிவகுருநாதன்

 


 

           ‘தேவதாசி முறை’ குறித்து நமது பாடமெழுதிகளின் அறிவு வெளிப்பாட்டையும் புனைவுகளையும் எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் காணலாம்.   எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் 'காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை' என்றொரு பாடம் உண்டு. அதில் ‘தேவதாசி முறை’ குறித்து கீழ்க்கண்டவாறு புலம்புகின்றனர். தீரர் சத்தியமூர்த்திக்கு இணையான புலம்பல் இது.

 

    “தேவதாசி (சமஸ்கிருதம்) அல்லது தேவர் அடியாள் (தமிழ்) என்ற வார்த்தையின் பொருள் “கடவுளின் சேவகர்” என்பதாகும். பெண் குழந்தையை கோவிலுக்கு நேர்த்தி கடனாக  அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் கோயிலைக் கவனித்துக்கொள்வதோடு  மட்டுமல்லாமல், பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய இந்திய கலைகளையும் கற்றுக் கொண்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையையும் அனுபவித்தனர். பிற்காலங்களில் அவர்கள் மோசமாக  நடத்தப்பட்டு அவமானப் படுத்தப்பட்டனர். மேலும் தேவதாசிகள் தங்கள் கண்ணியம், பெருமை உணர்வு, சுயமரியாதை மற்றும் கௌரவம்  ஆகியவற்றை இழந்தனர். அதைத் தொடர்ந்து  தேவதாசி முறை ஒரு சமூக தீமையாக மாறியது”. (பக்.91)

 

      தேவதாசிகள் தொடக்கத்தில் பெற்ற சமூக உயர்நிலைகள் எவை? அத்தகைய நல்லப் பழக்கத்தை ஏன் சட்டம் மூலம் தடுக்க வேண்டும்?  கடவுளின் அடிமை எப்படி “கடவுளின் சேவகர்” ஆக முடியும்?  ஆண்கள் ஏன் ‘அடியாள்’ ஆகவில்லை? பொதுவாக ஆண் விலங்குகளைத் தானே கடவுளுக்கு அர்ப்பணிப்பர்! இங்கு மட்டும் பெண்களை அர்ப்பணிப்பது ஏன்? அவர்களுக்கு திருமண உரிமை ஏன் மறுக்கப்பட்டது?  அதுவும் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களை மட்டும் இந்தச் சேவைக்கு ஏன் தெரிவு செய்தனர்? அவர்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துகொள்ளும் ஆணாதிக்கச் சூழ்ச்சிதானே!  

 

      தேவதாசிகளின் விடுதலைக்காக போராடிய மற்றொரு பெண்மணி மூவலூர் ராமாமிர்தம் ஆவார். ராஜாஜி, பெரியார் மற்றும் திரு.வி.க. ஆகியோரின் தொடர்ச்சியான தார்மீக ஆதரவுடன் இந்த கொடுமையான முறைக்கு எதிராக அவர் முழக்கம் எழுப்பினார். இதன் விளைவாக அரசாங்கம் “தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை” நிறைவேற்றியது”. (பக். 92, 8 சமூக அறிவியல்)

  

            இச்சட்டம் கொண்டுவர பெரியாருடன் சேர்ந்து ராஜாஜி தார்மீக ஆதரவு கொடுத்தாராமே! (பக்.92) தீரர் சத்தியமூர்த்தி அய்யர் கொடுத்த வெளிப்படையான ஆதரவை ஏன் பாடநூல் இருட்டடிப்பு செய்கிறது? 1930 இல் கொண்டுவரப்பட்ட மசோதா 1947 இல் தானே நிறைவேறியது.  இதில் ராஜாஜியின் பங்களிப்பு ஏன்? அவர் பதவியில் இருந்தபோது மசோதா ஏன் நிறைவேறவில்லை? அதைத் தடுத்தது யார்?

 

     இது குறித்து நாம் பேசுவதைவிட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கூறுவதே சரியாக இருக்கும்.

 

       “சிறிதும் கள்ளங்கபடம் இல்லாத பெண்களை மதத்தின் பெயரால் ஒரு ஒழுக்கமற்ற, தவறான, பலருடன் உடலுறவு கொள்ளும், உடல் உள்ளம் இரண்டையும் நோய் பீடிக்குமாறு  செய்யும் ஒரு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவது பெரிய அநீதி, மனித உரிமை மீறல் என்பதோடு, நம் உயரிய மனிதப் பண்புக்கே எதிரான ஒரு பழக்கம் என்று நான் எப்போதும் மிகத் தீவிரமாக உணர்ந்திருக்கிறேன்”. (பக்.94, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, அவ்வை இல்லம் வெளியீடு: ஜூலை 2014)

 

         “1937 ஆம் ஆண்டு புதுச் சீர்திருத்தத்தின் படி காங்கிரஸ் கட்சி சென்னை மாகாணம் உட்பட ஏழு மாகாணங்களில் வெற்றி பெற்று இந்தியச் சட்டமன்றத்தில்  இடம் பிடித்தது. திரு. சி. ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண்களைக் கோவில்களுக்கு அர்ப்பணிப்பதைத் தடுக்கும் மசோதா ஜனங்களின் முழு ஆதரவுடன் சட்டமன்றத்துக்குத் திரும்பிவந்தாலும், காந்திஜி வேண்டிக்கொண்டாலும், திரு. ராஜகோபாலாச்சாரியார் இந்தத் தீய வழக்கத்தை நிறுத்துவதற்கு ஆதரவு காட்டாததால் இதைச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்துவதைத் தாமதித்தார். 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் மந்திரி சபை ராஜினாமா செய்தது. ஆகவே, இந்த மசோதாவின் இறுதி முடிவு தள்ளிவைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு டாக்டர் சுப்பராயன் உள்துறை அமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் மந்திரி சபையால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு திரு. ராஜகோபாலாச்சாரியார் நம் சமூகத்தில் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர் என்பது நிரூபிக்கப்பட்டது”. (பக்.104, மேலது)

 

        “இந்து தர்மம் அழிந்துவிடும், என்றும் அவர்கள் வீட்டுப் பெண்களில் ஒருவரையாவது பொட்டுக்கட்டி இந்துக் கலாச்சாரத்தைக் (?!) காப்பாற்றுங்கள்!”, என்று கூவியவர் சத்தியமூர்த்தி. “நம்முன் எவ்வளவோ பணிகள் உள்ளன. தேவதாசி ஒழிப்பு தற்போதைய முதன்மைப் பணியாக இருக்க முடியாது”, என்று சத்தியமூர்த்திக்கு ஆதரவாக நின்று மசோதாவைக் கிடப்பில் போட்டவர் ராஜாஜி. வரலாற்று உண்மைகள் இவ்வாறிருக்க பாடநூல் ஏன் இப்படி கதையளக்கிறது? இது யாரைக் காப்பாற்ற? எத்தகைய தர்மத்தை உயர்த்திப்படிக்க?

 

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக