வேத, குருகுலக் கல்வியும் அவைதீகக் கல்வியும் (பவுத்த, சமண, ஆசீவகம்) எப்படி ஒன்றாகும்?
(தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 09)
மு.சிவகுருநாதன்
“பண்டைய
இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன. இல்லங்கள், கோயில்கள்,
பாடசாலைகள், குருகுலங்கள் ஆகியவற்றில் அப்பகுதிக்கேற்றவாறு கல்வி வழங்கப்பட்டது. வீடுகள், கிராமங்கள் மற்றும் கோயில்களில் இருந்த
மக்கள், சிறு குழந்தைகளுக்கு பக்தியுடன் நேர்மையான வாழ்க்கை முறைகளை வாழ ஊக்குவித்தனர்.
கல்வி அளிப்பதிலும், கற்றல் மையமாக செயல்படுவதிலும் கோயில்கள் முக்கிய பங்கு வகித்தன.
மாணவர்கள் தங்கள் உயர்படிப்புக்காக விகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர். வாய்வழியாகவே கற்பித்தல் இருந்தது. குருகுலங்களில் கற்பிக்கப்பட்டவைகளை மாணவர்கள் நினைவிலும்,
ஆழ்சிந்தனையிலும் வைத்திருந்தனர். பல குருகுலங்கள் முனிவர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டன”.
(பக்.54)
‘முறையான மற்றும் முறைசாரா கல்வி’ என்று கதையளப்பதைப் பாருங்கள்!
(பாடநூல்களின் இலக்கணப் பிழைகள் சொல்லி மாளாதவை!) இல்லங்கள் (வீட்டுப்பள்ளிகள்), குருகுலங்கள்
ஆகியவற்றில் முறைசாராக் கல்வியும் கோயில்கள், பாடசாலைகள் போன்றவற்றில் முறையான கல்வியும்
இருந்ததாகச் சொல்ல வருகின்றனர். பொதுவான கல்வித்திட்டம் ஏதேனும் இருந்திருக்க முடியுமா?
சமஸ்கிருதம் தவிர்த்து பிற மொழிகளைக் கற்க வழியுண்டா? பாலி, பிராகிருதம், தமிழ் போன்ற
மொழிகள் பவுத்த, சமண அவைதீகக் கல்வியில்தான் சாத்தியப்பட்டது.
“கல்வி அளிப்பதிலும், கற்றல் மையமாக செயல்படுவதிலும் கோயில்கள் முக்கிய பங்கு
வகித்தன” என்கிறார்கள். கோயில்கள் என்பது சைவ, வைணவக் கோயில்களைக் குறிக்கும். இவற்றில்
நுழைய யாருக்கு அனுமதி இருந்தது? நந்தனார் எப்படி, ஏன் எரிக்கப்பட்டார்? கோயில்கள் எப்படி பொதுக்கல்வியை அளித்தன என்பதை
விளக்க வேண்டாமா? ஆதாரமின்றி இந்துத்துவக் குப்பைகளைக் குழந்தைகள் உள்ளத்தில் திணிக்கின்ற
வேலையைப் பாடநூல்கள் செய்கின்றன.
“காட்டில் அமைதியான சூழலில் அமைந்த குருகுலங்களில்,
நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றாகத் தங்கி கற்றுக் கொண்டனர். தொடக்க காலத்தில் ஆசிரியரால்
(குரு / ஆச்சார்யா) தன்னை சுற்றி இருந்த மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. மேலும் குருவின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல
வந்து தங்கி கல்வி பயின்றனர். இதுவே குருகுலக் கல்விமுறை எனப்பட்டது. இந்த குருவின்
குடும்பமானது வீட்டுப்பள்ளி (அ) ஆசிரமமாக செயல்பட்டது. அந்த காலக்கட்டத்தில், குருக்களும்
அவர்களுடைய சீடர்களும் (மாணவர்கள்) ஒன்றாக வசித்து, அன்றாட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர்
உதவி செய்தனர். அக்காலத்தில் முழுமையான கற்றல்,
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்தல், ஒருவரின் உள்ளார்ந்த திறமையை உணர்ந்து கொள்ளச் செய்தல்
போன்றவையே கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது. மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் சில ஆண்டுகள்
வரை தங்கள் வீடுகளை விட்டு விலகி குருகுலங்களில் வாழ்ந்தனர். குறிப்பிட்ட காலத்தில்
குருவுக்கும் மாணவனுக்குமிடையேயான உறவு வலுப்பெறும் இடமாகவும் குருகுலம் திகழ்ந்தது”.
(பக்.54)
பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய துவிஜர்களுக்கு
(இருபிறப்பாளர்கள்) குருகுலத்தில் அனுமதியுண்டு. சூத்திரர்களுக்கு (வேசி மக்கள்) குருகுலத்தின்
கதவுகள் திறக்குமா? இவர்களை பண்டைய குருகுலத்தில் கல்வி பயின்றதற்கு ஆதாரங்கள் உண்டா?
கடைக்கோடி பஞ்சமர்களின் நிலை என்ன? துரோணர்
– ஏகலைவன் கதை உணர்த்துவது என்ன? இவை குலக்கல்விக் கூடமாகவல்லவா அன்று இருந்தன. 20ஆம்
நூற்றாண்டிலும் வ.வே.சு.அய்யரின் குருகுலத்தில் கூட பிராமணர்களுக்கு தனிப்பந்திதான்!
பழங்காலத்தில் அதாவது வேதகாலத்தில் வருண (சாதி) பேதம் நிலவாத குருகுலங்கள் உண்டோ?
உயர்த்தப்பட்ட சாதி மாணவனும் குருவின்
வீட்டிற்கு ஒரு பண்ணையடிமை போலத்தான் இருந்தான். இந்த குலக்கல்வி முறையில் ‘உள்ளார்ந்த
திறமையை உணர்ந்து கொள்ளச் செய்தல்’ என்பது கேலிக்குரியது. குருகுலம்
புகட்டும் ஒழுக்கம் வருணப் படிநிலைகளுக்காக வேதங்களும் மநுதர்மம் போன்றவையும் உருவாக்கியவை
என்பதை மறுக்க இயலுமா? குருகுலக்கல்வியை இன்றைய
கல்வியோடு பொதுக்கல்வி போலக் கட்டமைக்கும் கயமையைச் செய்கின்றனர். இங்கு எந்த மொழி
கற்பிக்கப்பட்டது, பயிற்று மொழியாக எது இருந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்ல முன்வருவார்களா?
கோயில்களில் நடந்த சமஸ்கிருத, வேதக்கல்வியோடு பவுத்த,
சமண அவைதீகக் கல்விமுறைகளோடு ஒன்றாக்குவது மிகக் கொடியது; இந்துத்துவம் எல்லாவற்றையும்
விழுங்கும் ‘அனகோண்டாவாக’ இருப்பதைப்போல பாடநூல் இருக்கக்
கூடாதல்லவா!
“மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது முதல்
அவர்களின் பாடத்திட்டங்களை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்களின் பங்கு
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மாணவர்களின்
திறனில் ஆசிரியர் திருப்தி அடையும் போது மட்டுமே அவர்களின் கல்வி நிறைவடைந்ததாக கருதப்பட்டது.
அவரது விருப்பத்திற்கேற்ப பல மாணவர்களை சேர்த்துக் கொள்வதுடன், மாணவர்கள் எதை கற்க
ஆர்வமாக இருந்தனரோ அதையே கற்றுக் கொடுத்தார். விவாதங்கள் மற்றும் கலந்தாலோசித்தல் ஆகியன
கற்பித்தலின் அடிப்படையான வழிமுறைகளாகும். கல்வியில் மேம்பட்ட நிலையிலிருந்த மாணவர்கள்
ஆசிரியர்களுக்கு உதவினர்”. (பக்.55)
சாதி (வருணம்) பார்த்து இரு பிறப்பாளர்களை மட்டுமே
மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை மிக உன்னதமான ஒன்றாக இருக்க இயலாது. இதில் மாணவர்களின்
விருப்ப அளவுகோல் ஏதுமில்லை. பாடத்திட்டங்கள், ஒழுக்க வரையறைகள் ஆகியன ஏற்கனவே கட்டமைக்கப்பட்டது.
இது என்னமோ, பாவ்லோ பிரைய்ரே அல்லது பின்லாந்துக் கல்விமுறை என்பதாக கதைப்பதை எப்படி
பொறுப்பது? குருகுலக் கல்வியின் தோல்விக்கு உ.வே.சா. ஒரு எடுத்துக்காட்டு. மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மட்டுமே அவர் குருகுலக் கல்வி பெற்றிருந்தால் சமண, பவுத்த
இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்குமா?
(தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக