சென்னை நகரின் பழம் பெருமை மிக்க கவின் கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராடுவது, அதைத் தொடர்ந்து காலவரையறையின்றி அக்கல்லூரி மூடப்பட்டுள்ளது ஆகியவற்றைக் கண்டு கவலையுற்ற சமூக அக்கறை மிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கீழக்கண்ட உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்தனர்.
உறுப்பினர்கள் :
1) பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்.
2) முனைவர் பா. சிவக்குமார், முன்னாள் முதல்வர், அரசு கல்லூரி.
3) பேரா.மு. திருமாவளவன், முன்னைப் பொறுப்பு முதல்வர், அரசு கல்லூரி.
4) கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
5) அயன்புரம் இராசேந்திரன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே.
6) குட்டி ரேவதி, கவிஞர்.
7) உதயம் மனோகரன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
8) முருகன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
9) சுகுமாரன், தொழிலாளர் ஒற்றுமை முன்னணி, சென்னை.
10) வெங்கட், ஆய்வு மாணவர், எம்.ஐ.டி.எஸ், சென்னை.
இக்குழுவினர் நடந்த நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிதல், கல்லூரி சுமுகமாக இயங்குவதற்குரிய பரிந்துரைகளை பொறுப்பானவர்களுக்குச் செய்தல் ஆகிய நோக்கங்களுடன் சென்ற ஏப்ரல் 30, 31 தினங்களில் போராடும் மாணவர்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், தற்போது பொறுப்பு முதல்வராக உள்ள திரு வ. ஜெயபால் ஆகியோரைச் சந்தித்தனர். கலை பண்பாட்டுத் துறைச் செயலர் திரு. வே. இறையன்பு இ.ஆ.ப. மற்றும் கலை பண்பாட்டுத் துறை ஆணையர் திரு. மணி, காவல்துறை உதவி ஆணையர் திரு. அசோக்குமார், முன்னாள் பொறுப்பு முதல்வர் திரு மனோகர் நடராஜ் ஆகியோருடன் விரிவாக உரையாடி தேவையான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பழமை வாய்ந்த இக்கவின் கலைக் கல்லூரி தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இவ் அரசு கல்லூரிகளில் ஒன்று. மற்றது கும்பகோணத்தில் செயல்படுகிறது. நான்காண்டு பட்டப்படிப்பு (பி.எஃப்.ஏ.) மற்றும் இரண்டாண்டு பட்டமேற்படிப்பு (எம்.எஃப்.ஏ) ஆகிய பட்டப் படிப்புகள் இங்கு சொல்லித் தரப்படுகின்றன. சுமார் 620 மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். பெரும்பாலும் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களே இதில் பயில்கின்றனர். சுமார் 80 சதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பிற அரசு கலைக் கல்லூரிகள், மருத்துவ / பொறியியல் கல்லூரிகளுக்குத் தரப்படுகிற எந்தவித முக்கியத்துவம் மற்றும் அக்கறை எதுவும் காட்டப்படாமல் இரண்டாம் பட்சமாகவே இக்கல்லூரிகளை தமிழக அரசு நீண்ட நாட்களாக அணுகிச் செயல்பட்டு வருகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர், எமது குழு உறுப்பினர் முனைவர் சிவக்குமார் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக இருந்தபோதுதான், மாணவர் போராட்டம் ஒன்றின் பின்னணியில், இக் கல்லூரியில் வழங்கப்பட்டு வந்த சான்றிதழ் ‘பட்டயம்’ என்கிற நிலையிலிருந்து ‘பட்டம்’ என்கிற நிலைக்கு மாற்றப்பட்டது. இன்று வரை AICTE அல்லது UGC ஏற்பு எதுவும் இக்கல்லூரிகளுக்கு உள்ளதாகத் தெரியவில்லை. இக்கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி, பணியமர்த்தல் முதலானவற்றில் அகமதாபாத்திலுள்ள NID நிறுவனத்தின் தரங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை.
மாணவர்களிடம் பேசியவற்றிலிருந்தும், நாங்கள் விசாரித்து அறிந்தவற்றிலிருந்தும் வெளிப்படையாகத் தெரிகிற வேறு சில குறைபாடுகள்:
1. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாயினும் மாணவ, மாணவியர்க்கு விடுதிகள் ஏதுமில்லை. தரமணியில் இருந்த விடுதி இன்று மூடப்பட்டு புத்தகக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று அறைகள் மட்டும் திறந்து விடப்பட்ட போதும் இப்போது அவையும் செயல்படுவதில்லை. மாணவர்கள் விடுதியில் இல்லாததால் அவர்கள் வெளியூர்களைச் சேர்நத்வர்களாயினும் உள்ளூர் மாணவர்களாகவே (day scholars) கருதப்படுவதால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முழு உதவித் தொகையையும் பெற இயலுவதில்லை. மாணவிகளில் சிலருக்கு இசைக் கல்லூரி விடுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வசதியற்ற ஒரு மாணவர்க் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி கல்லூரிக்கு வந்து செல்வதைக் கேள்விப்பட்டு எமது குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
2. மிகப் பெரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. சுமார் 25 பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியமர்த்தலில் சீரான அளவுகோல்கள் ஏதும் கடைபிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. முதல்வர் மற்றும் நிர்வாகத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே தேர்வுகள் மற்றும் பணி நீக்கங்கள் செய்யப்படுவதாகத் தெரிகிறது. துகிலியல், சுடுமண்துறை, காட்சித் தொடர்பு வடிவமைப்பு, சிற்பத்துறை, வண்ணக்கலை, பதிப்போவியத்துறை எனப் பல துறைகள் உள்ளபோதும் குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெறாத ஆசிரியர்களை அத்துறைக்கு நியமிக்கும் போக்கு உள்ளது.
3. கவின் கலைப் பயிற்சி என்பதால் வெறுமனே பாடப் புத்தகங்கள், வகுப்பறை என்பதாகவன்றி சூளை, க்ளெய்ன், ஜக்கார்ட் மெஷின் வெல்டிங் மற்றும் டிரில்லிங் மெஷின் ஆகியவை தவிர களிமண், பாக்ஸ் போர்ட், ஷீட்மெடல், சிங்க் ப்ளேட் ஆகிய பொருட்களும் தேவைப்படுகின்றன. இந்த எந்திரங்கள் பல இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படாமல் உள்ளன. தவிரவும் போதிய அளவு கச்சாப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த ‘ஆர்டர்’களை எடுத்துப் பயன்பெறும் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கான இவற்றைச் சொந்த லாபத்திற்குப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. வேண்டிய மாணவர்களுக்குப் கொடுப்பது வேண்டாதவர்களைப் புறக்கணிப்பது முதலான குற்றச்சாட்டுகளும் உண்டு.
4. ஆசிரியர் பற்றாக்குறை, எந்திரங்கள் செயல்பாடின்மை, கச்சாப் பொருடகள் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக வகுப்புகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை. ஆசிரியர்கள் சொந்த ஒப்பந்த வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாலும் வகுப்புகள் சரியாக நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
5. கல்லூரிக்குப் போதிய ‘டாய்லட்’ முதலிய வசதிகள் கிடையாது. இரவு நேரத்தில் கல்லூரி வளாகத்தில் தங்கி வேலை செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிகிறோம். ஆனால், அவர்களை மேற்பார்வையிட ஆசிரியர்கள் யாருக்கும் பணி ஒதுக்கப்படுவதில்லை.
6. இரு கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர்களின் முறைப்படுத்தப்பட்ட பணி மூப்புப் பட்டியல் ஏதும் தயாரிககப்பட்டுள்ளதாகவும் தெரியவில்லை. இன்று நேர்ந்துள்ள சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
7. மாணவர்கள் சிறப்பாக ஏதும் திட்டங்கள் (projects) மேற்கொண்டு செயல்படும்போது அவர்களுக்கான கச்சாப்பொருள் மற்றும் பிற உதவிகள் செய்வதற்கு முறையான நெறிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதாகவும் தெரியவில்லை. இதுவும் இன்று எழுந்துள்ள சிக்கலுக்குக் காரணமாக உள்ளது.
மாணவர்கள் முன் வைக்கக் கூடிய மேலும் சில குற்றச்சாட்டுகளாவன:
1. இக்கல்லூரியில் நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்கிற பயிற்சி வகுப்புளை சில ஆசிரியர்கள் நடத்துகின்றனர். இவ்வாறு நடப்பதை எமது குழுவினரும் உறுதி செய்து கொண்டனர். தற்போது பிரச்சினைக்குக் காரணமாகியுள்ள ஆசிரியர் திரு. மனோகர் நடராஜ் இத்தகைய வகுப்பை நடத்துவதாகவும், இக்கல்லூரியில் சேர வேண்டுமானால் அவ் வகுப்பில் படிப்பது மறைமுகமாகக் கட்டாயமாக்கப்படுகிறது எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
2. முறையான வருகைப் பதிவு செய்வதில்லை. வருகைப் பதிவேடு ஒழுங்காகப் பராமரிக்கப்படுவதில்லை. மாணவர்களைப் பழிவாங்க இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.
3. வகுப்புகளை ஒழுங்காக நடத்தாமலும், பயிற்சிகளே அளிக்கப்படாமலும் மாணவர்கள் தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். பிற படிப்புகளைப்போல ஏதோ புத்தகங்களைப் படித்துத் தேர்வு எழுதுவதுபோல இங்கு சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முறையிட்டால், ‘‘நீங்கள் தேர்வுகளுக்கு வாருங்கள். நாங்கள் உங்களுக்கு அதிக மதிப்பெண்களுடன் ‘பாஸ் போடுகிறோம்’ எனச் சொல்வதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிப்ரவரி 26 தேதிய நிகழ்வு
இந்தப் பின்னணியில் நடைபெற்ற ஒரு நிகழவே இன்றைய பிரச்சினைகளுக்கும், கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுள்ளமைக்கும் காரணமாகியுள்ளது.
சசிகுமார் என்பவர் முதலாமாண்டு பட்ட மேற்படிப்பு மாணவர். தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சசிகுமார் சிற்பங்களாக ஆக்கிக் காட்சிப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். இனவெறியர்களால் யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதை நினைவிற் கொண்டு, தீயாற் சுட இயலாதவாறு தமிழ் இலக்கியங்களைச் சுடுமண் சிற்பங்களாக ஆக்குதல் என்பதான ஒரு கருத்தமைவுடன் இந்தப் பணியைத் துவங்கியதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
இப்படியான ஒரு திட்டத்திற்கு எவ்வித முன் அனுமதியும் அவர் கல்லூரி நிர்வாகத்திடமோ இல்லை செம்மொழி மாநாட்டுக் குழுவிடமோ அனுமதி பெறவில்லை என்கிறார் கலை பண்பாட்டுத் துணை ஆணையர் மணி. ஆனாலும், பொறுப்பு முதல்வர் மனோகர் நடராஜிடம் தான் வாய்மொழி அனுமதி பெற்றதாக சசிகுமார் கூறுகிறார்.
ஏற்கனவே இருந்த முதல்வர் ஓய்வு பெற்றதை ஒட்டி இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மனோகர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டள்ளார். இவரைக் காட்டிலும் பணி மூப்புடையவர்கள் இருந்த போதிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர் முதல்வராக்கப்பட்டுள்ளதாக போராடுகிற மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றைச் சேர்ந்த இவர், தலித் மாணவர்களை இழிவாக நடத்துகிற வழக்கம் கொண்டவர் எனவும் குற்றச்சாட்டுகள் உண்டு. 2004-ம் ஆண்டில் இவர் இவ்வாறு ஒரு தலித் மாணவரை சாதி, குறிப்பிட்டுப் பேசியதை ஒட்டி எஸ்.எப்.ஐ. மாணவர்கள் போராடியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.கே.மகேந்திரன் இது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளதையும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். இதை ஒட்டி மனோகரன் குடந்தைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, பின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இங்கு மீண்டும் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
இவர் பணி ஏற்றவுடன் குமார், நடராசன், சுரேந்திரன், சிங்காரம் ஆகிய நான்கு பகுதி நேர ஆசிரியர்களும் நிதி பற்றாக்குறையைக் காட்டி பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இந்த நான்கு ஆசிரியர்களும் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆசிரியரல்லாத பணியாளர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் குடந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின் அந்த ஆணை ரத்து செய்யப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். எனினும் தற்காலிக பொறுப்பு முதல்வர் ஜெயபாலிடம் இது பற்றிக் கேட்டபோது அத்தகைய உள்நோக்கம் ஏதுமில்லை. நிதிப் பற்றாக்குறைதான் பணி நீக்கத்திற்குக் காரணம். சுரேந்திரன் எம்.எஃப்.ஏ. சேர்ந்ததால் தொடர்ந்து அவர் பகுதி நேர ஆசிரியராக இருக்க இயலாது. ஊழியர்களை இடமாற்றம் செய்ய நேர்ந்தது நிர்வாகக் காரணங்களுக்காகத் தான், பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை ரத்து செய்தோம் என்றார்.
இப்படியான ஒரு சூழலில்தான் சசிகுமார் தனது குறள் சுடுமண் சிற்பப் பணியைத் தொடங்குகிறார். தேவையான களிமண்ணை மனோகரனின் ஒப்புதலுடன் கொண்டுவந்து கல்லூரி வளாகத்தில் இறக்குகிறார். தான் இதற்கு ஒப்புதல் அளிக்க இயலாது எனவும் உரிய தொகையை உடனடியாக வழங்க இயலாது எனவும் மனோகரன் கூறியுள்ளார். வண்டிக் கூலியை உடனடியாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த சசிகுமார் மாணவர்களிடம் ரூ. 5, 10 எனச் சேகரித்து வண்டிக்காரரை அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில் சசிகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லை என ‘டிசம்பர் 12, 2010’ என்கிற தேதியிட்டு எச்சரிக்கைக் கடிதம் ஒன்று அவர் வீட்டிற்கு கல்லூரியிலிருந்து அனுப்பப்படுகிறது. தொலைபேசியிலும் பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். கலக்கமடைந்த பெற்றோர்கள் சசிகுமாரைத் திட்டியுள்ளனர்.
மனரீதியாகப் பாதிக்கப்பட்ட சசிகுமார் சென்ற பிப்ரவரி 26 அன்று வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரது கார் கண்ணாடியை (wind screen) உடைத்துவிட்டு ஓடியுள்ளார். இந்தத் தவறை அவர் ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
எனினும் இது குறித்து தற்போதைய பொறுப்பு முதல்வர் கூறுவது : ‘‘பிப்ரவரி 16-ந் தேதி அன்றே அம் மாணவன் கல்லுரிக் கட்டிடத்தில் ஒரு கண்ணாடியை உடைத்தார். நாங்கள் புகார் ஏதும் செய்யவில்லை. 19-ம் தேதி அன்று களிமண்ணுக்காக ரூ.1600 அவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அடுத்த நாள் தேர்வுக் கட்டணம் கட்ட கடைசி நாள் என அம்மாணவர் கூறியதை ஒட்டி அன்று அப்பணத்தைத் தந்தோம். எனினும் 26-ந் தேதி அம்மாணவன் கார் கண்ணாடியை உடைத்தான்.
பணம் கொடுக்கப்பட்ட பின்னும் ஏன் அப்படி நடந்து கொண்டாய் என நாங்கள் வினவியபோது, ‘செய்த குறள் பலகைகளைச் சுடுவதற்கு சூளை இல்லை என்பதால் சொந்தமாக ரூ.4200 செலவு செய்து சூளை ஒன்று கட்டினேன். அந்தப் பணம் தரப்படவில்லை. தவிரவும் வீட்டுக்கு போனில் மிரட்டியதால் ஏற்பட்ட மனப் பாதிப்பினால் அப்படி நேர்ந்துவிட்டது’ என்று பதிலளித்தார்.
ஆசிரியர் மனோகரன் பெரியமேடு காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் ஒன்றை அளித்தார். கூடவே அவரைத் தூண்டிவிட்டதாக 2-ம் ஆண்டு பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்வந்திரன் நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் கமலஹாசன் என்கிற இரு தலித் மாணவர்கள் மீதும் புகாரளித்தார்.
காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் இக்குற்றச்சாட்டை விசாரித்துள்ளனர். தற்போது வேறொரு வழக்கில் கொலையாளிக்கு உதவியதாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் முருசேன் மனோகரனது சாதியைச் சேர்நதவர் எனச் சொல்லப்படுகிறது. எஸ்வந்திரனின் தம்பி ஆனந்தகுமார் அதே கல்லூரியில் நான்காமாண்டு பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டுள்ளார். அவரைப் பிடித்து சாதி சொல்லித் திட்டி அடித்த முருசேன் அவரைக் கொண்டே அவரது அண்ணன் எஸ்வந்திரனை இரவு 1.30 மணி அளவில் கைது செய்து இருவரையும் கடுமையாக அடித்து சாதி குறிப்பிட்டு இழிவாகப் பேசி இரவு முழுவதும் சங்கிலியால் பிணைத்து காவல் நிலையத்தில் வைத்துள்ளார். ‘‘தேவர் காரோட கண்ணாடியை உடைத்தவன்’’ என முருகேசன் இவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாங்கள் காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபொழுது, முதல்வரின் காரை கொடூரமாக தாக்கியது குறித்து அளித்த புகாரில் எஸ்வந்த், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்டிருந்ததாலேயே அவர்களைத் தேட நேர்ந்தது எனவும் யாரையும் சங்கிலியால் பிணைத்து வைப்பது தமக்கு வழக்கமில்லை எனவும் மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார்.
அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு ‘‘கார் கண்ணணடியை உடைத்தவரைக் காட்டிக் கொடுத்தேன்’’ என எழுதி வாங்கிக் கொண்டு ஆனந்தகுமாரை விடுதலை செய்துள்ளனர். எஸ்வந்திரன் ‘ரிமான்ட்’ செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். சசிகுமார், கமலஹாசன் ஆகிய இருவரும் முன் ஜாமினில் வெளி வந்துள்ளனர்.
எஸ்வந்தரனும், ஆனந்தகுமாரும் பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். எஸ்வந்திரன் தமிழக அளவில் ஒரு முக்கியமான சிற்பக் கலைஞர். அவரும் கமலஹாசனும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணம் உள்ளவர்கள் என்பதாலும், சில போராட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்திருந்ததால் மனோகரின் கோபத்திற்கு ஆளாகியிருந்துள்ளனர். மனோகரன் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு சிலையை மையமாக வைத்து ஒரு இந்து கோயிலை கட்டியதற்காகத் தான் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவே தன் பெயரை குற்றச்சாட்டில் சேர்த்தார் என்கிறார் கமலஹாசன். வளாகத்திற்குள் பழைய கிணறு ஒன்றை தூர்க்கும் முயற்சியையும் இவர் எதிர்த்துள்ளார் இதுவும் மனோகரின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது. தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டவுடன் ‘‘பறப் பசங்களா’’ எனச் சொல்லி மனோகர் கடுமையாகப் பேசினார் என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்வந்திரன் இக்கல்லூரி மாணவராயினும் சில சிற்பப் பணிகளை மேற்கொண்டுள்ளதால் தற்போதைய பிரச்சினைகளில் தொடர்பில்லாது உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாங்கள் மனோகரிடம் கேட்டபோது ஒரு சதம் கூட இதில் உண்மையில்லை என மறுத்தார். தனிப் பயிற்சி நடத்துவது பற்றிக் கேட்டபோது பதவி உயர்வு பெற்றபின் கடந்த 2 ஆண்டுகளாக நடத்துவதில்லை எனவும், எனினும் தனது மாணவர்கள் சிலர் அவ்வாறு நடத்துகின்றனர் எனவும் கூறினார்.
வழக்குரைஞர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறையுள்ள சிலரின் ஆலோசனைகளின்படி இவ்வாறு சாதி சொல்லித் தாக்கியதற்காகவும் பொய் வழக்கு போட்டதற்காகவும் புகார் ஒன்றை பாதிக்கப்பட்ட மாணவர்கள் காவல்துறைக்குத் தந்துள்ளனர். எனினும் அவை ஏற்றுக் கொள்ளப்படாததோடு எந்த நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்த உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களிடம் கேட்டபோது ஆனந்தகுமார் முதலில் கொடுத்த மனுவில் அதுகுறித்துப் பேசியது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை எனவும் பிறகு அளித்த மனுவிலேயே அதைக் கூறியுள்ளதாகவும், இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முகாந்தர(prama fecie)சான்றுகள் இல்லை எனவும் கூறினார். மாணவர்கள் கதவை தாழிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மிகவும் மனிதாபிமானத்தோடு நடந்து கொணடதாகவும் குறிப்பிட்டார்.
கல்விப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் திரும்பும்வரை காத்திருந்த மாணவர்கள் சென்ற மார்ச் 22 அன்று முதல் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், மனோகர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் முதலான கோரிக்கைகளைமுன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதற்கிடையில் மனோகர் பொறுப்பு முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் பொறுப்பு முதல்வராக்கப்பட்டுள்ளார். இவர் நுண்கலைத் துறையைச் சார்ந்தவரல்ல. நிர்வாகத் துறையைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கியவுடன் பெரிய அளவில் காவல்துறையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். இரவில் மாணவிகள் அனுப்பப்பட்டு கதவு பூட்டப்பட்டது. பேச்சு வார்த்தையில் முடிவேதும் ஏற்படவில்லை 23-ந் தேதி மாலை 6 மணி வாக்கில் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேரு ஸ்டேடியம் அருகிலுள்ள திடல் ஒன்றுக்கு அழைத்தச் செல்லப்பட்டு இரவு 9 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது கல்லூரி மூடிக் கிடக்கிறது.
எமது பார்வைகள்
1. கலை பண்பாட்டுத்துறைச் செயலரும் புகழ்பெற்ற எழுத்தாளரும்தான் வே. இறையன்பு அவர்களைத் தொடர்புக் கொண்டு பேசியபொழுத தான் பதவி ஏற்றபின் 1.86 கோடி ரூபாய் இக்கல்லூரிக்கென ஒதுக்கி ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பல்வேறு குறைபாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாகக் கூறினார். க்ளெய்ன், மெடல் கேஸ்டிங், கம்ப்யூட்டர்கள், சூளை முதலியன தொடர்பாக வேலைகள் நடந்துள்ளதைப் பொறுப்பு முதல்வரும் குறிப்பிட்டார். மாணவர்கள் தன் கருத்துகளை ஏற்கவில்லை எனவும், இது முதல்வர் கருணாநிதி அவர்களின் துறையைச் சார்ந்ததால் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். கல்லூரியைத் திறப்பது தாமதமாகக் கூடாது என நாங்கள் கேட்டுக் கொண்டபோது சற்று நிலைமை சீரானவுடன் கல்லூரியைத் திறப்பதில் தடையில்லை என்றார். மிகவும் விரிவாக எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார்.
2. பொறுப்பு முதல்வரும், ஆணையர் திரு மணியும்கூட எங்களிடம் மிகப் பொறுமையாக நாங்கள் முன் வைத்த ஐயங்களுக்கெல்லாம் விளக்கமளித்தனர். எனினும் சில ஐயங்களுக்கு உரிய விளக்கங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.
அவை:
(i) பொதுவாக அரசுத் துறைகளில் பணி மூப்பு அடிப்படையிலேயே பொறுப்புகள் அளிக்கப்படும். பணி மூப்புடைய வேறு சிலர் இருக்கையில் ஏன் மனோகருக்குப் பொறுப்பு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது? மற்றவர்கள் மீது புகார்கள் இருந்தன என்றார் ஜெயபால். மனோகர் மீதும் புகார்கள் இருந்து சட்டமன்றம் வரை அது பேசப்பட்டது குறித்து பதிலில்லை.
(ii) எந்த அடிப்படையில் ஒரு சில பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகவில்லை. சுரேந்திரன் என்பவர் எம்.எஃப்.ஐ. சேர்ந்துவிட்டதால் பணியில் தொடர இயலாது என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எம்.எஃப்.ஐயில் சேரவே இல்லை.
(iii) மனோகர் சாதி சொல்லித் திட்டியது, தனிப் பயிற்சி நடத்துவது குறித்து எதுவும் தமக்குத் தெரியாது என்று நிர்வாகத் தரப்பில் கூறுப்பட்டது.
(iv) விடுதி மூடப்பட்டதற்குக் காரணமாக மாணவர்களின் நடத்தை சரியில்லை எனக் கூறப்பட்டது. தவறுகள் இல்லாமல் கண்காணிக்கப்படுதல், முறையான வார்டன் ஒருவரை நியமித்தல் - முதல்வர் என்கிற வகையில்தான் பிரச்சினைகள் சமாளிக்கபட வேண்டுமே ஒழிய அதற்காக விடுதியையே மூடுவது எப்படி?
3. மாணவர் சசிகுமார், தான் முதல்வரின் கார் கண்£டியை உடைத்ததை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், ஆசிரியர்களும் நிர்வாகமும்தான் எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எமது குழுவில் மூவர் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். கல்லுரிக் கதவுகளை உடைத்தால், ஆசிரியர்களைத் தாக்குதல், ஆசிரியர்களில் வாகனங்களை உடைத்தல், மாணவர்களுக்கிடையே மோதல் முதலான பல சம்பவங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். மாணவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை போல அணுகுதல் அவசியம். பொருளியல் ரீதியாகப் பார்த்தால் ஆசிரியருக்கு ஏற்பட்டது கார் கண்ணாடி சேதமானது மட்டுமே. வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட்டால் அந்த மாணவனின் வாழ்வே பாழாகிவிடும் என்கிற உணர்வு ஆசிரியர்களுக்கு வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக கல்லூரி நிர்வாகக்குழு, ஆசிரியர்கள் கூட்டம் முதலியவற்றைக் கூட்டி விவாதித்து, அம் மாணவனை தற்காலிக நீக்கம் செய்து, விசாரணைக்குழு அமைத்து, குற்றத்திற்குப் பொருத்தமான அபராதம் முதலான தண்டனை அளித்து, எச்சரிக்கை செய்து பிரச்சினையை முடிப்பதே வழக்கம். இங்கோ உடனடியாக போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதத்துடன் ஆசிரியர் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டியுள்ளார். தொடர்பில்லாத இரு தலித் மாணவர்களையும் புகாரில் இணைத்துள்ளார். அடுத்து நான்கு நாட்கள் கழித்தே (மார்ச் 1) இது தொடர்பாககக் கல்லூரியில் கூடி விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் நிர்வாகமும் பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பிரச்சினை முற்றியிருக்காது.
4. மாணவர்கள் போராடுவதை ஒழுக்கக் குறைவாகக் கருத வேண்டியதில்லை. போராட்ட காலங்களில் பேசப்படும் சொற்களையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால், அத்தகைய போக்கு நிர்வாகத்திடம் உள்ளது.
5. சசிகுமார் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் இது போன்ற மாணவ முயற்சிகள் குறித்த ஒரே சீரான அணுகுமுறை இல்லாததே காரணம்.
எமது பரிந்துரைகள்
1. அகமதாபாத்திலுள்ள NID (தேசிய வரைகலை நிறுவனம்) போல பெருமைமிகு நிறுவனமாக வளர்ந்திருக்க வேண்டிய கல்லூரி இது. மாற்றாந்தாய் அணுகல் முறையுடன் அரசு நடந்து கொண்டு வந்துள்ளதே இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம். கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் அக்ககறையுள்ள முதல்வர் கலைஞர் மற்றும் நாடறிந்த எழுத்தாளரும் நிர்வாகியுமான இறையன்பு ஆகியோரின் துறையைச் சார்ந்த இந் நிறுவனம் போதிய நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டு, ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகள் நீக்கப்பட்டு இந்திய அளவில் தரமான ஒரு நுண்கலைப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட வேண்டும்.
2. NID முதலான நிறுவனங்களின் தரநிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி வரன்முறைப் படுத்தப்பட்டு, எல்லோருக்கும் ழிமிஞி ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும்.
3. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் விடுதி திறக்கப்பட வேண்டும். கல்லூரிக்குள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
4. மூடிக்கிடக்கும் கல்லூரி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்.
5. பிப்ரவரி 26ந்தேதி நிகழ்ச்சி தொடர்பாக மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படவேண்டும்.
6. கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத தலித் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டி, சங்கிலியால் பிணைத்து அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.
7. சமீபத்திய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் ஒன்று நியமிக்கப்பட உள்ளதை வரவேற்கிறோம். அந்த ஆணையத்தின் விசாரணை எல்லை கீழக்கண்டவற்றை உள்ளடக்க வேண்டும்.
(i)26-ந் தேதி நிகழ்வை நோக்கிப் படிப்படியாக இட்டுச் சென்ற சூழல் அடையாளம் காணப்படுதல்.
(ii) பணி மூப்பு புறக்கணிக்கப்பட்ட மனோகர் பொறுப்பு முதல்வராக்கப்படுதலின் பின்னணி.
(iii) கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத மாணவர்கள் மீது புகார் சொல்லப்பட்டது மற்றும் அவர்கள் இத்தனை மூர்க்கமாக நடத்தப்பட்டது ஆகியவற்றிற்குப் பின்புலம் ஏதும் இருந்ததா எனக் காணுதல்.
(iv) மனோகர் மீது 2004-ல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தொடர்ந்து அவர் அத்தகைய உணர்வுடன் செயல்பட்டார் என மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய்தல்.
குறிப்பாக கார் கண்ணாடி உடைக்கப்பட்ட அன்று அவர் சாதி சொல்லித் திட்டியது குறித்த புகாரில் கையொப்பமிட்டுள்ள மாணவர்கள் விசாரிக்கப்படுதல்.
(v) பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட பணி நீக்கங்களில் பின்னணி ஏதும் உள்ளதா என ஆராய்தல்.
(vi) ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்துதல், ஒப்பந்தப் பணிகளை எடுத்தச் செயல்படுத்துதல் ஆகியன எந்த அளவிற்கும் கல்விப் பணிகளைப் பாதிக்கின்றன என்பது குறித்து ஆராய்தல்.
(vii) ஆசிரியர்களுக்கிடையே உள்ள குழு மனப்பான்மை மாணவர்களின் கல்வியைப் பாதித்தல் குறித்து ஆராய்தல்.
8. தனிநபர் ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் குற்றமிழைத்தவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.
9. தனிநபர் ஆணையம் அமைக்கும் போது அந்த நபர் சமூக நீதியில் அக்கறை உள்ளவராகவும் நடுநிலையோடு இருப்பவராகவும் இருப்பது அவசியம்.