புதன், ஜூன் 19, 2019

பன்மைத்துவ மக்கள் மொழி தமிழ்


பன்மைத்துவ  மக்கள் மொழி தமிழ்



(தமிழ்ப் பாடநூல்களில் ‘வாழ்த்து’ நீக்கச் சர்ச்சை குறித்த சில கருத்துகள்.)


மு.சிவகுருநாதன்

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 14)



      கடந்த இரு கல்வியாண்டுகளாக தமிழகக் கல்விப் பாடநூல்கள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்தக் கல்வியாண்டின் (2019-2020) இறுதிக்குள் 1 முதல் 12 முடிய அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடநூற்கள் அறிமுகமாகிவிடும். சமச்சீர் கல்விப் பாடநூல்கள் தொடங்கி தற்போதைய புதிய பாடநூல்கள் வரையில் அவற்றை ஆய்வு செய்து நிறை – குறைகளைச் சுட்டிவருகிறேன். ஒரு மோசமான திரைப்படத்திற்குப் பக்கம் பக்கமாக விமர்சனமும் மோசமான நூல்களைக் கூடக் கொண்டாடும்  இதழ்கள், குழந்தைகள் படிக்கும் பாடநூல்களை விமர்சனத்திற்கு உட்படுத்துவதில்லை என்கிற ஆதங்கம் உண்டு. பரபரப்பு செய்திகளுக்காக மேம்போக்கான விதத்தில் சர்ச்சைகளை மட்டும் இவை உற்பத்தி செய்கின்றன. 

   தமிழ்ப் பாடநூல்களில் முன்பிருந்த ‘இறை வாழ்த்து’ பாடல்களை நீக்கியதற்கு தமிழாசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டனம் என்ற செய்தி செய்தி ஊடகங்களில் (இந்து தமிழ் திசை ஜூன்  09, 2019) வெளியானது. இவர்கள் மேம்போக்காகக் கூட தமிழ்ப்பாடநூல்களை புரட்டிப் பார்க்கவில்லை என்பதே என் கருத்தாகும். பாடநூலை முழுமையாக ஆய்வு செய்யாமல் இவ்வாறு கருத்துரைப்பது சரியல்ல. பொதுவாக கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் ஆகியவற்றை தொடக்கத்திலேயே இசைக்கும் வழக்கம் உண்டு. இறுதியில் அனைவரும் இருப்பதில்லை என்பதும் ஒரு காரணம். ஏன் கூட்ட முடிவில் ஏன் நாட்டுப்பண் இசைக்கவில்லை என்று கேட்பதைப் போல இது இருக்கிறது. பள்ளிகளில் தொடங்கும்போதுதானே இவையிரண்டும் பாடப்படுகின்றன; மாலை முடிக்கும்போது அல்லவே! மேலும் இந்த நடைமுறையில் ‘கடவுள் வாழ்த்து’ என்ற ஒன்றை இடையில் நுழைத்தவர்கள் இவர்கள்.


     முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். முந்தைய சமச்சீர் கல்விப்பாடநூலில் ‘இறை வாழ்த்து’ எனும் தலைப்பே இல்லை. வாழ்த்து என்ற தலைப்பில் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகனார், ராமலிங்க அடிகள், திரு.வி.க., தாயுமானவர் (8, +1 வகுப்புகள்), கம்பர் (9, +2 வகுப்புகள்), மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல்கள் ‘வாழ்த்து’ எனும் பெயரில் முதலில் இடம்பெற்றன. 


   
       அதற்கு முந்தைய பாடநூல்களில் ‘கடவுள் வாழ்த்து; எனும் தலைப்பும் செய்யுள் பகுதியின் இறுதியில் ‘வழிபாட்டுப்பாடல்களும்’ (பல்சமயப் பாடல்கள்) இடம் பெற்றது. சைவம், வைணவம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய சமயம் சார்ந்த பாடல்கள் இவற்றில் இடம் பெறும். கொஞ்சம் உழைத்தால் கிடைக்கும் உண்மையிது.


    மேற்குறிப்பிட்ட எவரது பாடல்களையும் பாடநூல்கள் விலக்கவில்லை; தடை செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் முன்பைவிட மிகுதியாக இவர்களைப் போன்றவர்களது பாடல்கள் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மை. எனவே தமிழ் மொழியின் பன்மைத்துவ சிறப்புகளைப் புறந்தள்ளி இடைக்கால பக்தி இலக்கியங்கள் மற்றும் பிற்காலச் சோழப்பெருமையின் வழி தமிழை அடையாளப்படுத்துவது பெரும் மோசடி. தமிழின் இந்த ஒற்றையடையாளம் சமத்துவமற்றது. முன்னதாக பாடநூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பார்த்துவிடுவோம். 


    பொருண்மையின் கீழ் கவித்துவ தலைப்பில் பாடங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு 8 பொருண்மைகள் உண்டு. அவை,


  • மொழி
  • இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல்
  • பண்பாடு
  • கல்வி
  • நாகரிகம், தொழில், வணிகம்
  • கலை, அழகியல், புதுமைகள்
  • நாடு, சமூகம், அரசு, நிருவாகம்
  • மனிதம், ஆளுமை


+2 வகுப்புப் பாடம் கவிதைப்பேழையில் உள்ளவை:

மொழி - உயிரினும் ஓம்பப்படும்

  • இளந்தமிழே! – சிற்பி பாலசுப்பிரமணியம் (பக்.02)
  • தென்னேர் இலாத தமிழ் – தண்டியலங்கார மேற்கோள் பாடல் (பக்.08)
  • இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல் – பெய்யெனப் பெய்யும் மழை
  • பிறகொரு நாள் கோடை – அய்யப்ப மாதவன் (பக்.29)

பண்பாடு – சுற்றத்தார் கண்ணே உள

  • விருந்தினர் இல்லம் – ஜலாலுத்தின் ரூமி (பக்.52)
  • கம்பராமாயணம் – அயோத்தியா, ஆரண்ய, கிட்கிந்தா, யுத்த காண்டங்களிலிருந்து குகம், சடாயு, சுக்ரீவன், வீடணன் பற்றிய பாடல்கள் (பக்.53-56)

கல்வி – செல்வத்துள் எல்லாம் தலை

  • இதில் வெற்றி பெற – சுரதா (பக்.86,87)
  • இடையீடு – சி. மணி (பக்.88)
  • புறநானூறு – ஒளவையார் (பக்.89)

நாகரிகம், தொழில், வணிகம் – நாடென்ப நாட்டின் தலை

  • தெய்வமணிமாலை – இராமலிங்க அடிகள் (பக்.111)
  • தேவாரம் – திருஞான சம்மந்தர்(பக்.113)
  • அகநானுறு – அம்மூவனார் (பக்.115)

கலை, அழகியல், புதுமைகள் – சிறுகை அளாவிய கூழ்

  • கவிதைகள் – நகுலன் (பக்136)
  • சிலப்பதிகாரம் (புகார்காண்டம் அரங்கேற்று காதை) – இளங்கோவடிகள் (பக்.137,138)
  • மெய்ப்பாட்டியல் – தொல்காப்பியர் (பக்.141)
  • திருக்குறள் – (பக்.157-160)

நாடு, சமூகம், அரசு, நிருவாகம் – அருமை உடைய செயல்

  • அதிசய மலர் – தமிழ்நதி (பக்.169)
  • தேயிலைத் தோட்டப்பாட்டு – முகம்மது இராவுத்தர் (பக்.170,171)
  • புறநானூறு – பிசிராந்தையார் (பக்.172)

மனிதம், ஆளுமை எல்லா உயிரும் தொழும்

  • முகம் – சுகந்தி சுப்பிரமணியன் (பக்.195)
  • இரட்சணிய யாத்திரிகம் – எச்.ஏ.கிருட்டிணனார் (பக்.196,197)
  • சிறுபாணாற்றுப்படை- நத்தத்தனார் (பக்.200,201)


+2 வகுப்பு இலக்கிய நயம் பாராட்டல்: 


  • கண்ணதாசன் (பக்.20)
  • பாரதியார் (பக்.44)
  • நாமக்கல் கவிஞர் (பக்.70)
  • கவிமணி (பக்.126)
  • பாரதிதாசன் (பக்.154)
  • நா.காமராசன் (பக்.185)
  • திரிகூட ராசப்பக் கவிராயர் (பக்.216)

+2 வகுப்பு மொழியை ஆள்வோம் பகுதியில் இடம்பெறும் சான்றோர் சித்திரங்கள்:


  • ஆறுமுக நாவலர் (பக்.19,20)
  • மாயூரம் வேதநாயகம் (பக்.43,44)
  • பரிதிமாற்கலைஞர் (பக்.69)
  • மறைமலையடிகள் (பக்.102)
  • சோமசுந்தர பாரதியார் (பக்.126)
  • வை.மு.கோதைநாயகி (பக்.153)
  • மா.இராசமாணிக்கனார் (பக்.184)
  • வ.சுப.மாணிக்கம் (பக்.214)

+1 வகுப்புப் பாடம் கவிதைப்பேழையில் உள்ளவை: 

மொழி – என்னுயிர் என்பேன்

  • யுகத்தின் பாடல் – சு.வில்வரத்தினம் (பக்.02)

இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல் – மாமழை போற்றுதும்

  • ஏதிலிக் குருவிகள் (பக்.32)
  • காவியம் – பிரமிள் (பக்.33)
  • திருமலை முருன் பள்ளு – பெரியவன் கவிராயர் (பக். 34)
  • ஐங்குறுநூறு (ஆடுகம் விரைந்தே) – பேயனார் (பக்.37)

பண்பாடு – பீடு பெற நில்

  • காவடிச்சிந்து – சென்னிகுளம் அண்ணாமலையார் (பக்.62)
  • குறுந்தொகை – வெள்ளிவீதியார் (பக்.64)
  • புறநானூறு – கடலுள் மாய்ந்த பெருவழுதி (பக்.66)
  • திருக்குறள் (பக்.83)

கல்வி – கேடில் விழிச்செல்வம்

  • பிள்ளைக்கூடம் – மீனாட்சி (பக்.97)
  • நற்றிணை – போதனார் (பக்.98)
  • தொல்காப்பியம் – சிறப்புப்பாயிர விளக்கப்பாடல் (பக்.100)

நாகரிகம், தொழில், வணிகம் – நாளெல்லாம் வினை செய்

  • சீறாப்புராணம் – உமறுப்புலவர் (பக்.123,124)
  • அகநானுறு – வீரை வெளியன் தித்தனார் (பக்.126)

கலை, அழகியல், புதுமைகள் – பல்கலை நிறுவு

  • ஆத்மநாம் கவிதைகள் – (பக்.156)
  • குற்றாலக்குறவஞ்சி – திரிகூட ராசப்பக் கவிராயர்  (பக்.157)
  • திருச்சாழல் – மாணிக்கவாசகர் (பக்.159)

நாடு, சமூகம், அரசு, நிருவாகம் – வையத் தலைமை கொள்

  • புரட்சிக்கவி – பாரதிதாசன் (பக்.183-185)
  • நிரைய வெள்ளம் (பதிற்றுப்பத்து) – குமட்டூர்க் கண்ணனார் (பக்.187)

மனிதம், ஆளுமை – யாரையும் மதித்து வாழ்

  • ஒவ்வொரு புல்லையும் – இன்குலாப் (பக்.207)
  • தொலைந்துபோனவர்கள் (பக்.208)
  • மனோன்மணீயம் – சுந்தரனார் (பக்.210-212) 


+1 வகுப்பு இலக்கிய நயம் பாராட்டல்: 


  • கவிமணி (பக்.54)
  • பாரதியார் (பக்.114)
  • தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடல் (பச்சை மாமலை போல் மேனி), கண்ணதாசன் (சீரிய நெற்றி எங்கே?)  (பக்.137)
  • கம்பர் (பக்.175)
  • நாமக்கல் கவிஞர் (பக்.201)
  • ஹெச்.ஜி.ரசூல் (பக்.224)

+1 வகுப்பு மொழியை ஆள்வோம் பகுதியில் இடம்பெறும் சான்றோர் சித்திரங்கள்:


  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் (பக்.22)
  • ஆபிரகாம் பண்டிதர் (பக்.53)
  • சி.வை.தாமோதரனார் (பக்.72)
  • ஜி.யு.போப் (பக்.112)
  • ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் (பக்.140)
  • சங்கரதாசு சுவாமிகள் (பக்.162)
  • மயிலை சீனி.வேங்கடசாமி (பக்.1990
  • திரு.வி.கலியாண சுந்தரனார் (பக்.222)

   
 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் இந்தப் பொருண்மைகளில் சில மாற்றங்களுடன் 9 இயல்களாக உள்ளது. அவை பின்வருவாறு:


  • மொழி
  • இயற்கை, சுற்றுச்சூழல் (வேளாண்மை இல்லை)
  • பண்பாடு
  • அறிவியல், தொழிநுட்பம்
  • கல்வி
  • கலை, அழகியல், புதுமைகள்
  • நாகரிகம், தொழில், வணிகம், நாடு, சமூகம், அரசு, நிருவாகம் (இரண்டு பொருண்மைகள் ஒன்றாக)
  • அறம், தத்துவம், சிந்தனை (புதியது) 
  •  மனிதம், ஆளுமை


10 ஆம் வகுப்பு கவிதைப்பேழையில் உள்ளவை: 

மொழி – அமுத ஊற்று

  • அன்னை மொழியே – பாவலேறு பெருஞ்சித்தரனார் (பக்.02)
  • இரட்டுற மொழிதல் – சந்தக்கவிமணி தமிழழகனார் (பக்.09)

இயற்கை, சுற்றுச்சூழல் – உயிரின் ஓசை

  • காற்றே வா! – பாரதியார் (பக்.310
  • முல்லைப்பாடு – தப்பூதனார் (பக்.33)

பண்பாடு – கூட்டாஞ்சோறு

  • காசிக்காண்டம் – அதிவீரராம பாண்டியர் (பக்.54)
  • மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார் (பக். 56)

அறிவியல், தொழிநுட்பம் – நான்காம் தமிழ்

  • பெருமாள் திருமொழி – குலசேகராழ்வார் (பக்.82)
  • பரிபாடல் - கீரந்தையார் (பக்.83)  

கல்வி – மணற்கேணி

  • நீதி வெண்பா – கா.ப.செய்குதம்பிப் பாவலர் (பக்.106)
  • திருவிளையாடற்புராணம் – பரஞ்சோதி முனிவர் (பக்.107-109)

கலை, அழகியல், புதுமைகள் – நிலா முற்றம்

  • பூத்தொடுத்தல் – உமா மகேஸ்வரி (பக்.133)
  • முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர் (பக்.134)
  • கம்பராமாயணம் (பக்.136-138)
  • திருக்குறள் (பக்.154-156)

நாகரிகம், தொழில், வணிகம், நாடு, சமூகம், அரசு, நிருவாகம் – விதை நெல்

  • ஏர் புதிதா? – கு,பரா,ராஜகோபாலன் (165)
  • மெய்கீர்த்தி (இரண்டாம் இராசராச சோழன் (பக்.166)
  • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் (பக்.168)

அறம், தத்துவம், சிந்தனை – பெருவழி

  • ஞானம் – தி.சொ.வேணுகோபாலன் (பக்.188)
  • காலக்கணிதம் – கண்ணதாசன் (பக்.189)

மனிதம், ஆளுமை – அன்பின் மொழி

  • சித்தாளு – நாகூர் ரூமி (பக். 211)
  • தேம்பாவணி – வீரமாமுனிவர் (212,213)


10 ஆம் வகுப்பு இலக்கிய நயம் பாராட்டல்: 


  • கா.நமசிவாயர் (பக்.22)
  • காளமேகப் புலவர் (பக்.68)
  • பாரதியார் (பக்.96)
  • பாரதிதாசன் (பக்.181)
  • வள்ளலார் – பக்.200)


10 ஆம்  வகுப்பு மொழியை ஆள்வோம் பகுதியில் இடம்பெறும் பாடல்கள்:


  • தனிப்பாடல் திரட்டு (பக்.210
  • கவிமணி (பக்.21)
  • அப்துல் ரகுமான் (பக்.45)
  • இலங்கைத் தமிழ்க் கவிஞர் டெபோரா பர்னாந்து (பக்.95)
  • பாரதியார், பாரதிதாசன் (பக்.123)
  • மகாகவி (இலங்கை) (பக்.149)
  • கவி கா.மு.ஷைரீப் (பக்.180)
  • கம்பன், கண்ணதாசன் (பக்.190)
  • நாணற்காடன், புதுவைத்தமிழ் நெஞ்சன் (பக்.199) 


 9  ஆம் வகுப்பு கவிதைப்பேழையில் உள்ளவை: 

மொழி – அமுதென்று பேர்

  • தமிழோவியம் – ஈரோடு தமிழன்பன் (பக்.08)
  • தமிழ்விடு தூது – சீர்பெற்ற செல்வம் (மதுரை சொக்கநாதரிடம் தமிழைத் தூது விடுவது) (பக்.10)

இயற்கை, சுற்றுச்சூழல் – உயிருக்கு வேர்

  • பட்ட  மரம் – கவிஞர் தமிழ்ஒளி (பக்.39)
  • பெரியபுராணம் – சேக்கிழார் (பக்.40,41)
  • புறநானூறு – குடபுலவியனார் (பக்.44)

பண்பாடு – உள்ளத்தின் சீர்

  • மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார் (பக்.68,69)
  • திருக்குறள் – (பக்.87-90)

அறிவியல், தொழிநுட்பம் – எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

  • ஓ, என் சமகாலத் தோழர்களே! – வைரமுத்து (பக்.103)
  • உயிர்வகை – தொல்காப்பியர் (பக்.105)

கல்வி – கசடற மொழிதல்

  • குடும்ப விளக்கு – பாரதிதாசன் (பக்.130,131)
  • சிறுபஞ்சமூலம் – காரியாசான் (பக்.133)

கலை, அழகியல், புதுமைகள் – கலை பல வளர்த்தல்

  • இராவண காவியம் – புலவர் குழந்தை (பக்.157,158)
  • நாச்சியார் திருமொழி – ஆண்டாள் (பக்.161)
  • திருக்குறள்  (பக்.177,178)

நாகரிகம், தொழில், வணிகம், நாடு, சமூகம், அரசு, நிருவாகம் – வாழிய நிலனே

  • சீவக சிந்தாமணி – திருத்தக்கத் தேவர் (பக்.186,187)
  • முத்தொள்ளாயிரம் (பக்.189)
  • மதுரைக் காஞ்சி – மாங்குடி மருதனார் (பக்.191)

அறம், தத்துவம், சிந்தனை – என்தலைக் கடனே

  • ஒளியின் அழைப்பு – ந.பிச்சமூர்த்தி (பக்.215)
  • தாவோ தெ ஜிங் – லா வோட்சு (பக்.217)
  • யசோதர காவியம் (பக்.219)

மனிதம், ஆளுமை – அன்பென்னும் அறனே

  • அக்கறை – கல்யாண்ஜி (பக்.237)
  • குறுந்தொகை – பாலை பாடிய பெருங்கடுங்கோ (பக்.239)


9 ஆம் வகுப்பு இலக்கிய நயம் பாராட்டல்: 


  • ம.லெ.தங்கப்பா (பக்.28)
  • கவிமணி (பக்.59)
  • பாரதிதாசன் (பக்.119)
  • வாணிதாசன் (பக்.205)
  • குமரகுருபரர் (பக்.228)
  • வள்ளலார் (பக்.251)


9 ஆம்  வகுப்பு மொழியை ஆள்வோம் பகுதியில் இடம்பெறும் பாடல்கள்:


  • கவிஞர் வாலி (பக்.27)
  • பூ மொழி – யூமா.வாசுகி (பக்.57)
  • நாட்டுப்புறப்பாட்டு (பக்.82)
  • மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம் – பாடல் (பக்.117)
  • பாப்பா பாட்டு – பாரதியார் (பக்.146)
  • பாவேந்தர் பாரதிதாசன் (பக்.173)
  • நவீன கவிதைகள் இரண்டு (பக்.204)
  • உமர் கய்யாம் (பக்.227)


எட்டாம் வகுப்பு

மொழி – தமிழ் இன்பம்

  • தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் (பக்.02)
  • செந்தமிழ் அந்தாதி – து.அரங்கன் (பக்.03)
  • தமிழ் மொழி மரபு – தொல்காப்பியர் (பக்.05)

இயற்கை – ஈடில்லா இயற்கை

  • ஓடை – வாணிதாசன் (பக்.24)
  • கோணக்காத்துப் பாட்டு – வெங்கம்பூர் சாமிநாதன் (பக்.27)
  •  திருக்குறள் (பக்.43,44)

அறிவியல், தொழிநுட்பம் – உடலை ஓம்புமின்

  • நோயும் மருந்தும் – நீலகேசிப் பாடல் (பக்.48)
  • வருமுன் காப்போம் – கவிமணி தேசிக விநாயகனார் (பக்.50)

கல்வி – கல்வி கரையில

  • கல்வி அழகே அழகு – குமரகுருபரர் (பக்.70)
  • புத்தியைத் தீட்டு – ஆலங்குடி சோமு (பக்க்.72)

கலை, அழகியல், பண்பாடு – குழலினிது யாழினிது

  • திருக்கேதாரம் – சுந்தரர் (பக்.94)
  • பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை (பக்.96)
  • திருக்குறள் (பக்.118,119)

நாகரிகம், தொழில், வணிகம் – வையம்புகழ் வணிகம்

  • வளம் பெருகுக – தகடூர் யாத்திரைப் பாடல் (பக்.122)
  • மழைச்சோறு – மழை வேண்டி பாடல் (பக்.124,125)

நாடு, சமூகம் – பாருக்குள்ளே நல்ல நாடு

  • படை வேழம் – செயங்கொண்டார் (பக்.144)
  • விடுதலைத் திருநாள் – மீரா (பக்.147)

அறம், தத்துவம், சிந்தனை – அறத்தால் வருவதே இன்பம்

  • ஒன்றே குலம் – திருமூலர் (பக்.168)
  • மெய்ஞ்ஞான ஒளி – குணங்குடி மஸ்தான் சாகிபு (பக்.170)
  • திருக்குறள் (பக்.188,189)

மனிதம், ஆளுமை – குன்றென நிமிர்ந்து நில்

  • உயிர்க்குணங்கள் – இறையரசன் (பக்.192)
  • இளைய தோழனுக்கு – மு.மேத்தா (பக்.195)


ஏழாம் வகுப்பு

மொழி – அமுதத் தமிழ்

  • எங்கள் தமிழ் – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் (பக்.02)
  • ஒன்றல்ல இரண்டல்ல – உடுமலை நாராயணகவி (பக்.05)

இயற்கை - அணிநிழல் காடு

  • காடு – சுரதா (பக்.26)
  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம் – ராஜமார்த்தாண்டன் (பக்.29)
  • கலாப்பிரியா கவிதை – (படித்துச் சுவைக்க) (பக்.31)
  • திருக்குறள் (பக்.47,48)

நாடு, சமூகம் – நாடு அதை நாடு

  • புலி தங்கிய குகை (புறநானூறு) – காவற்பெண்டு (பக்.52)
  • பாஞ்சை வளம் – வீரபாண்டிய கட்டமொம்மு கதைப்பாடல் (பக்.56)

அறிவியல், தொழிநுட்பம் – அறிவியல் ஆக்கம்

  • கலங்கரை விளக்கம் – கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பக்.76)
  • கவின்மிகு கப்பல் (அகநானூறு) – மருதன் இளநாகனார் (பக்.79)

கல்வி – ஓதுவது ஒழியேல்

  • இன்பத் தமிழ்க்கல்வி – பாரதிதாசன் (பக்.100)
  • அழியாச் செல்வம் (நாலடியார்) – சமண முனிவர் (பக்.103)

கலை, அழகியல், பண்பாடு – கலை வண்ணம்

  • ஒரு வேண்டுகோள் – தேனரசன் (பக்.122)
  • கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) – காளமேகப்புலவர் (பக்.125)
  • திருக்குறள் (பக்.144,145)

நாகரிகம், தொழில், வணிகம் – நயத்தகு நாகரிகம்

  • விருந்தோம்பல் – முன்றுறை அரையனார் (பக்.148)

அறம், தத்துவம், சிந்தனை – ஒப்புறவு ஒழுகு

  • புதுமை விளக்கு – பொய்கை ஆழ்வார் (பக்.168)
  • அறம் என்னும் கதிர் – முனைப்பாடியார் (பக்.171)
  • திருக்குறள் (பக்.188,189)

மனிதம், ஆளுமை –மானுடம் வெல்லும்

  • மலைப்பொலிவு – கண்ணதாசன் (பக்.192)
  • தன்னை அறிதல் – சே.பிருந்தா (பக்.195)


ஆறாம் வகுப்பு

மொழி – தமிழ்த்தேன்

  • இன்பத்தமிழ் – பாரதிதாசன் (பக்.02)
  • தமிழ்க்கும்மி – பெரிஞ்சித்திரனார் (பக்.05)

இயற்கை – இயற்கை இன்பம்

  • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் (பக்.26)
  • காணிநிலம் – பாரதியார் (பக்.29)
  • திருக்குறள் (பக்.45,46)

அறிவியல், தொழிநுட்பம் எந்திர உலகம்

  • அறிவியல் ஆத்திச்சூடி – நெல்லை சு.முத்து
  • பிறந்தநாள் வாழ்த்து - அறிவுமதி

கல்வி – கண்ணெனத் தகும்

  • மூதுரை – ஒளவையார் (பக்.78)
  • துன்பம் வெல்லும் கல்வி – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (பக்.80)
  • குறள், பழமொழி நானூறு – படித்துச்சுவைக்க (பக்.93)

நாகரிகம், பண்பாடு பாடறிந்து ஒழுகுதல்

  • ஆசாரக்கோவை (பக்.100)
  • கண்மணியே கண்ணுறங்கு – தாலாட்டுப்பாடல்  (பக்.102)
  • திருக்குறள் (பக்.120,121)

தொழில், வணிகம் – கூடித்தொழில் செய்

  • நானிலம் படைத்தவன் – முடியரசன் (பக்.126)
  • கடலோடு விளையாடு (மீனவர் பாடல்) (பக்.129)

நாடு, சமூகம் – புதுமைகள் செய்யும் தேசமிது

  • பாரதம் அன்றைய நாற்றங்கால் – தாராபாரதி (பக்.148)

அறம், தத்துவம், சிந்தனை – எல்லாரும் இன்புற

  • பராபரக் கண்ணி – தாயமானவர் (பக்.166)
  • நீங்கள் நல்லவர் – கலீல் ஜிப்ரான் (பக்.168)
  • புலவர் அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர் – படித்து மகிழ்க (பக்.181)
  • திருக்குறள் (பக்.184,185)

மனிதம், ஆளுமை – இன்னுயிர் காப்போம்

  • ஆசிய ஜோதி – கவிமணி தேசிக விநாயகனார் (பக்.188,189)


       வாழ்த்து முதலில் இல்லாமற்போனதற்காக வருத்தப்படுபவர்கள் பாடநூல்களை முழுமையாகப் படிக்கவில்லை என்பதை இப்பட்டியல்கள் உணர்த்தும்.  தமிழ்ப் பாடநூலின் உருவத்தில் மட்டும் சில மாற்றங்களைச் செய்து உள்ளடக்கம் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. இது எத்தனை காலம் தொடரும் என்று தெரியவில்லை. இந்த உருவமாற்றத்தை புரட்சியென பிரகடனப்படுத்துவது ஆகச்சிறந்த கொடுமை. 


    தமிழ் திணைகளின் மொழி; நிலங்களின் மொழி; இயற்கையின் மொழி. அதாவது மக்களின் மொழி. எனவே தமிழுக்கு ஒருபடித்தான் அடையாளங்கள் இருக்க முடியாது. தமிழ் தொன்மையான மொழி மட்டுமல்ல, பன்மைத்தன்மை மிக்கதுகூட. இவற்றில் ஒரே அடையாளத்தைத் திணிப்பது / அடைப்பது என்பது மோசமானது.

    தமிழ்மொழிக்கு இந்து சைவ, வைணவ அடையாளங்களையும் பிற்காலச் சோழப்பெருமைகளையும் சூட்டுவது மிக எளிது. இந்த ஓரடையாளத்தை மட்டும் முதன்மைப்படுத்தி மொழியின் பன்மையடையாளங்களை நிராகரிக்க யாருக்கும் உரிமையில்லை. 


     தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்களை மூன்று பிரிவாக அணுகலாம். ஒன்று சங்க இலக்கிய, இலக்கணப் பயிற்சியுடைவோர். இவர்கள் தமிழை சங்க இலக்கியக் கண்ணாடி கொண்டு அணுகுபவர்கள். இன்று இவர்களது எண்ணிக்கை குறைவு. ஏனெனில் ஆழ்ந்த புலமையும் பயிற்சியும் வேண்டுகின்ற செயலிது. சங்க இலக்கியத்தை நவீன இலக்கியத்திற்குக் கடத்தும் பணியை இவர்களால் செய்யமுடியும். நவீன இலக்கிய வாசிப்பும் அகன்ற ஆய்வுப்பார்வையும் அதற்கு அவசியம். விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையால் தமிழில் இன்னும் சாத்தியப்படாத நிலையே உள்ளது.

    இரண்டாவது வகையினர் இடைக்கால பக்தியிலக்கியத்தின் பிரதிநிதிகள். இவர்கள் தமிழை சைவ, வைணவ பக்தியிலக்கியங்கள் வாயிலாக மட்டும் காண்பவர்கள். அதிலும் சைவப் பக்தி சற்று அதிகம். இவர்களது எண்ணிக்கை ஏராளம். புராண, இதிகாசங்கள், பக்திச் சொற்பொழிவுகளே இவர்களது ஆதாரமும் மூலதனமும். எவ்வித கடின உழைப்பையும் தேவைப்படாத பணியிது. இவர்களது பெரும்பான்மை ஆதிக்கத்தால் தமிழ் மத, சாதி அடையாளங்களுடன் சிக்கித் தவிக்கிறது. 

   சங்க இலக்கிய ஆசிரியர்கள் ஒன்றிரண்டு பாடல்கள் எழுதியிருப்பினும் அவற்றின் வழியே என்றும் நினைவுகூறப்படுவர். இவர்களில் பலரது பெயர்கள்கூட நமக்குத் தெரியவில்லை. இருப்பினும் பாடல்வரிகளின் வழியே இவர்களை நினைவுகூர்கிறோம். சூழல் அப்படியிருக்க உலகப்பொதுமறை எனும் திருக்குறளைப் படைத்த வள்ளுவருக்கு ஏன் உருவ மற்றும் சிலை வழிபாடு. சங்க இலக்கியப் பனுவல்களையும் சமயத்துள் நுழைக்கும் முயற்சியிது. மேலும் திருவள்ளுவருக்கு பூணூல் போட்டுக்கொண்டதும், சைவப் பழமாக மாற்றியதும் உண்டு. திராவிட இயக்கத்தின் மாபெரும் சறுக்கல் இது. தமிழன்னைக்குச் சிலை எடுத்தல், இந்துப்பெண்ணுருவத்தை தமிழத்தாயாக உருவகம் செய்தல் போன்ற தமிழை சமஸ்கிருதமாக்கும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. 

    திருக்குறளுக்கு இந்துத்துவ, வேத விளக்கங்கள் சொல்வதும் நடக்கிறது. சுட்டி டிவியில் ‘பொம்மியும் திருக்குறளும்’ எனும் தலைப்பில் பேரா. ஞானசம்மந்தன் என்பவர் குழந்தைகளுக்குத் திருக்குறளைச் சொல்லி விளக்கமளிக்கிறார். குறளைவிட்டு எங்கோ சென்று வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் வழி விளக்கமளிக்கும் கொடுமையை என்ன செய்வது? இந்தக் குப்பைகளைலிருந்து வினாக்கள் கேட்டுப் பதிலளிப்பது இன்னும் அவலம். இது புராணத்தொடர்களைவிட மிக மோசமாக உள்ளது. பேரா. சாலமன் பாப்பையா அவரது பட்டிமன்ற பாணியில் சொல்லும் விளக்கங்கள் முன்பு விமர்சிக்கப்பட்டு வந்தது. அது எவ்வளவோ பரவாயில்லை. திருக்குறளை இந்துமதச் சகதியில் தள்ளும் இம்முயற்சியை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. 

   மூன்றாவது வகையினர் நவீன இலக்கிய வாசிப்பு உடையவர்கள். இவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பமே. அவர்களும் எதையும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு  கதைப்பவர்களாக உள்ள நிலையும் உள்ளது. ‘யானை டாக்டர்’ எழுதியிருப்பதால் ஜெயமோகனும் டாக்டராக இருக்க வேண்டும் என்பது போன்ற எளிய சமன்பாடுகளை உருவாக்குகின்றன. யாரோ ஒரு சிலர் சுட்டிக்காட்டும் எடுத்துக்காட்டுகளைக் கொண்டே அவர்கள் நவீன இலக்கிய உலகைக் கற்பனை செய்கிறார்கள். அந்தக் குருக்களின் சாய்வு இவர்களது பார்வையில் படிகிறது. ஆழ்ந்தகன்ற விரிவான வாசிப்பும் நடுநிலையான ஆய்வு அணுகல் முறையும் இல்லாத நிலை இதை மேலும் சிக்கலாக்குகிறது. 

    எனவேதான் சூழலியல் தொடர்பான பாடத்திற்கு விரிவான வாசிப்பிற்கு இவர்களால் சுந்தர ராமசாயின் ‘ஒரு புளியமரத்தின் கதை’யை  இவர்களால் பரிந்துரைக்க முடிகிறது. இங்கு நக்கீரனின் ‘காடோடி’ நாவலை ஏன் பரிந்துரை செய்ய முடியவில்லை என்பதே இவர்களது வாசிப்பு மற்றும் ஆய்வுத்திறனை வெளிக்காட்டும். எனவே ‘காலச்சுவடு; பதிப்பக வெளியீடுகள், அதில் அங்கு பெறுவோர், அவர்களது பரிந்துரைகள் பாடநூலில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தியிருக்கும் பின்னணி இதுதான். (பாடநூலில் ‘காலச்சுவட்டின்’ தாக்கம் பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டியிருக்கிறது.)

    நவீன இலக்கியத்திற்கு பாடநூலில் இடமிருக்கிறது என்று சொல்வோருக்காக ஒரு குறிப்பு மட்டும். வைரமுத்து போன்றவர்களுக்கு நிரந்தர பீடமும், ராஜமார்த்தாண்டன்கள் பாடத்தின் உள்ளேயும் கலாப்பிரியா, யூமா.வாசுகி போன்றோர் பாடத்திற்கு வெளியேயும் நிறுத்தப்படும் பாடநூலரசியலை விமர்சிக்க வேண்டிய தேவையிருக்கிறது. 

     6 முதல் 12 ஆம் வகுப்புப் பாடங்களை ஆராய்ந்தால் இடைக்கால சைவ, வைணவ பக்தியிலக்கியத்திற்கு பெரும் பங்கு அளித்திருப்பதும் அவற்றை விதந்தோதும் பண்பாடும் புலனாகும். மேலும் வாழ்த்துப் பகுதியில் இவை இடம்பெறாவிட்டாலும் பாடம் முழுக்க வியாபித்திருக்குமாறு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பாடல் வரிகளில் கடவுளைப் பற்றி இல்லையே என்று மிக எளிதாக வாதிடலாம். அவைகள் எவற்றைச் சுட்டுகிறது என்பதும் குறிப்புரைகளின் (நூல்வெளி) மையம் எதுவாக இருக்கிறது என்பதும் இங்கு முதன்மையானது. 

     மொழி வாழ்த்துப் பாடலில் நெற்றித் திலகமிட்ட இந்துப்பெண்ணுருவம் தமிழன்னை எனும் சித்தரிப்பில் பல இடங்களில் வருகிறது. தமிழன்னை உருவம் எப்படி, எதனடிப்படையில் வடிவமைக்கப்பட்டது? உருவ வழிபாட்டை மறுப்பவர்கள் தமிழர்கள் இல்லையா? அத்தகைய மரபு தமிழில் இல்லையா? 

     ஒன்பதாம் வகுப்புத் தமிழில் ‘தமிழோவியம்’ பாட்டில் கோயில், தாஜ்மகால், தேவாலயம் ஆகியன உள்ளது. இவை மூன்று மட்டுமே தமிழ் அடையாளமா? 

    தமிழ்த்தாய் வாழ்த்துப் பகுதியில் தமிழ் மூவேந்தர்கள் இலச்சினை உள்ளது. தமிழ் இதனுடன் நின்று போனதா? களப்பிரர்கள் கால பதினெண்கீழ்கணக்கு நூல்களை என்ன செய்யலாம்? இப்படித் தமிழை ஒரு குறுவட்டத்திற்குள் அடைப்பதேன்? ஆனால் பாடநூல் இடைக்காலத்திலேயே சிலையாகி நிற்கிறதே!

     பக்தியிலக்கிய மற்றும் பிற்காலச் சோழப்பெருமைக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கும் போக்கிற்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள்:


  • சைவ, வைணவ கோயில்களின் அட்டைப்படமின்றி பாடநூல்களின் அட்டைகளை வடிவமைக்க இயலாதா?
  • 9 ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் தஞ்சை பெரிய கோயில் போன்ற வரைபடம்.
  • +1 வகுப்பு பின்னட்டையிலும் தஞ்சை பெரிய கோயில் ஓவியம், முதலாம் ராஜராஜன் சிற்பம்.
  • 10 ஆம் வகுப்பு தமிழ் பின்னட்டையில் “விண்தொடும் நெடுங்கோபுர மாமதுரை வீதி” – ஓவியம் (மனோகர் தேவதாஸ்)
  • 10 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இராசராச சோழன் – மெய்கீர்த்தி (பக்.166)
  • தமிழன்னை சிலை நிற்கும் வடிவில் பத்தாம் வகுப்பு (பக்.02)
  • திருவிளையாடற் புராணம் (பக்.107)
  • இராமானுஜர் நாடகம் (பக்.191-194)
  • +1 தமிழன்னை ஓவியம் (பக்.02)
  • +2 தமிழில் தமிழன்னை படம் சித்தரிப்புகள் (பக்.02 &08)
  • +2 வள்ளலார் மற்றும் கோயில் (பக்.111)
  • +2 முத்துப்பல்லக்கில் திருஞான சம்மந்தர் (பக்.113)
  • +2 குடவோலை முறை - நாட்டின் நிருவாகத் திறனுக்கோர் சான்று: சோழர்காலக் குடவோலை முறை தேர்தல் – உத்திரமேரூர் கல்வெட்டு (பக்.163)


     பாடநூலில் அறிமுகமாகும் தமிழறிஞர்கள் ஒரு சிலரைத்தவிர அனைவரும் சைவ, வைணவக் கருத்தியலுக்கு ஆட்பட்டவர்கள். இதுவே பாடநூலில் கருத்தியலாக மாற்றப்படுவது வன்முறையன்றி வேறில்லை. தனித்துவப் பார்வையோடு செயல்பட்ட அறிஞர்களைப் புறக்கணிக்கும் போக்கு நிறுத்தப்படவேண்டும். விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக்கொள்வோம். சாதி, மதங்களை நிறுவுவதற்கு தமிழ்ப் பாடநூல்களைப் பலியிட வேண்டாம் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம். 

                         (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக