மேனிலைக்கல்வியில் புறக்கணிக்கப்படும் கலைப்பாடங்கள்
- மு. சிவகுருநாதன்
11,12 ஆகிய வகுப்புகளை பள்ளிக் கல்வியிலிருந்து பிரித்து இளநிலைக் கல்லூரியாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது. இவை ஒருபுறமிருக்க SSA, RMSA போன்ற பத்தாம் வகுப்பு வரையுள்ள திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மேனிலைக் கல்வி மிகுந்த புறக்கணிப்புக்கு உள்ளாகியிருப்பது விளங்கும்.
5 கி.மீட்டருக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 முதல் 10 கி.மீட்டருக்குள் ஒரு மேனிலைப்பள்ளி என்பதை திட்ட இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாவுகம், உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் பள்ளிகளில் எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தாமல் வெறுமனே தரம் உயர்த்துவது என்பது வெறும் பெயர்ப் பலகை மாற்றத்துடன் முடிந்துப் போகிற அவலந்தான் மிஞ்சுகிறது.
தரம் உயர்த்தப்படும் ஒரு மேனிலைப் பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடமும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம், பாட ஆசிரியர்கள் பணியிடமும் சேர்த்த 6 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. முதுகலைத் தமிழாசிரியர் பணியிடங்களை உருவாக்குவதில்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியதுதான் பாக்கி. புதிய மேனிலைப் பள்ளிகளுக்கு பல ஆண்டுகளாக முதுகலைத் தமிழாசிரியர் பணியிடமே உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். ஆனால் தமிழ்ப் பெருமை, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு உள்ளிட்ட வெற்று ஆரவாரக் கூச்சல்களுக்கு மட்டும் பஞ்சமில்லை.
மொழிப் பாடத்திற்கு இரண்டு தாள்கள் என்பதும் தேவையில்லாத ஒன்று. ஆசிரிரயர்களையே நியமிக்காமல் ஒரு பாடத்திற்கு ஒரு தாள்கள் வைத்தாலென்ன? அல்லது இரு தாள்கள் வைத்தால் என்ன? மொழிப் பாட மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதால் அது பற்றி மாணவர்கள் உள்பட யாரும் கவலைப் படுவதில்லை. அதனால்தான் என்னவோ அரசும் ஆசிரியர்களைக் கூட நியமிக்காமல் இருக்கிறதோ என்னவோ?
மொழிப் பாடத்திற்கு இரு தாள்கள் என்பதால் மட்டும் மொழித்திறன் வளர்ந்து விடுவதாக நாம் கருத வேண்டியதில்லை. 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில மொழியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்கள் அம்மொழியை சரளமாக பேச, எழுத, படிக்க இயலாத நிலையே இங்குள்ளது. ஒரு மொழியை பேச, எழுதக் கற்க இவ்வளவு ஆண்டுகள் எடுத்துக் கொள்வது முறையா, தேவையா என்றும் யோசிக்க வேண்டும். எந்தவொரு மொழியாக இருப்பினும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கற்றுக் கொண்டு அடுத்த மொழி அல்லது பாடத்தை படிக்கத் தொடங்க வேண்டும். LKG முதல் இளநிலைப் பட்டப்படிப்பு வரை 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்தை வெறுமனே ஒரு பாடமாக கற்பித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் மாணவர்களுக்கு ஆங்கில மொழியறிவு வசப்படவேயில்லை. எனவே தான் மொழிப் பாடம் பற்றிய சிந்தனை மாற வேண்டும் என்கிறோம்.
அரசு அளிக்கும் இப் பணியிடங்களைக் கொண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என்ற ஒரு பிரிவை மட்டுமே புதிய மேனிலைப் பள்ளியில் தொடங்க முடியும. கிராமப்புற ஏழை மாணவர்கள் பலர் இந்தப் பிரிவின் பாடச்சுமையை தாங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏன் சில அரசுப் பள்ளிகள் கூட கணிதப்பிரிவில் சேர 10 ஆம் வகுப்பில் 400, 450 மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே சேர்ப்பது என்ற நிலையை வைத்திருக்கிறார்கள். ஒரு சில மதிப்பெண்கள் குறைந்தாலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களை மேனிலை வகுப்புகளில் படிக்க முடியாமற் போகிறது. அரசு இட ஒதுக்கீட்டை மேனிலை வகுப்புச்சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சமத்துவமான கல்விச் சூழல் உருவாகும்.
ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளுககும் 10 கணினிகள் வழங்கப்பட்டு தூசி படிந்து கிடக்கிறது. மேனிலைப் பள்ளிகளுக்கு மட்டுமாவது ஒரு கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்டால் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய மற்றொரு பிரிவு தொடங்க வசதியாக இருக்கும். மேலும் அந்த ஆசிரியரைக் கொண்டே பிற வகுப்புகளுக்கும் கணினிப்பாடம் சொல்லிக் கொடுக்க வசதி ஏற்படும்.
சுற்றுச் சூழல் கல்வி, அறிவியல் தமிழ் போன்றவற்றை தனித் தனி பாடங்களாக கற்பிப்பதை அறவே நீக்கி விட்டு அறிவியலுடன் சுற்றுச் சூழல் கல்வியையும் தமிழுடன் அறிவியல் தமிழையும் இணைத்து கற்பிக்க வேண்டும். இவையிரண்டும் தனித்தனியே கற்பிப்பதால் என்ன பயன் என்று தெரியவில்லை. எனவேதான் இவ்விரு பாடங்களும் பயன்பாடின்றி அந்தரத்தில் தொங்குகிறது. இந்த இரண்டு பாடத்திற்கும் தனித்தனியே பாடநூற்கள் அச்சடிப்பதையும் தவிர்த்து அறிவியல், தமிழ் போன்ற பாடங்களுடன் இணைத்துக் கற்பிக்கும் போது ஏதாவது பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாரத்திற்கு 40 பாட வேளைகள் என்ற கணக்கில் அப்போதுதான் கணினிப் பாடத்திற்கென தனி பாட வேளையும் ஒதுக்க முடியும். இதை செய்யாமல் 10 கணினிகளை மட்டுமே வழங்கிவிட்டால் ஆகப் போவது என்னவென்று தெரியவில்லை. IAS போன்ற போட்டித் தேர்வுகளில் வரலாறு போன்ற கலைப்பாடங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மேனிலை வகுப்புக்களிலிருந்தே வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்கியல், தமிழ் போன்ற கலைப் பாடங்கள் பெரும் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. புவியியலை அறிவியலாக ஏற்றுக் கொண்ட பிறகும் கூட தமிழகத்தில் புவியியல் பட்டதாரிகளின் நிலையும் தமிழ்ப் பட்டதாரிகளின் நிலையும் ஒன்றுதான். இருவருக்கும் பணியிட வாய்ப்புகள் இல்லை என்பதே உண்மை. பல நூறு கோடிகள் செலவு செய்து செம்மொழி நடத்துவதை விட பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி கல்விக்கும் சுகாதார வசதிகளை மேம்படுத்தி பாமர மக்களுக்கும் பேருதவி புரியலாம். ஆனால் தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்குமென கனவுகூட காணமுடியாது.
வரலாறு, பொருளியல்,வணிகவியல்-கணக்கியல் என மூன்று பாட ஆசிரியர்களை நியமனம் செய்தால் இவர்களைக்கொண்டு மேலும் இரண்டு பிரிவுகளைத் தொடங்கமுடியும். புதிய பள்ளிகளில் தொழிற்கல்விப் பிரிவுகளும் கேள்விக்குறியாகவே உள்ளன. தொழிற்கல்விப் பிரிவிற்கு தேவையான ஆசிரியர் நியமனமும் இல்லை. அந்த வகைப்பிரிவுகள் தொடங்கப்படுவதும் இல்லை.
இவற்றை சுயநிதிப் பிரிவாகத் தெடங்குவதற்கு அரசு அனுமதியளிக்கிறது. பேருந்துக் கட்டணம் செலுத்தியோ, சொந்த சைக்கிளில் சென்றோ படிக்கமுடியாத இம்மாணவர்களுக்காகத்தானே அரசு இலவச பஸ்பாஸும் சைக்கிளும் வழங்குகிறது. இவர்கள் எப்படி சுயநிதிப் பிரிவில் பணம் செலுத்திப் படிக்கமுடியும்?
அரசு உதவிபெறும் பள்ளிகள் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு உண்டான உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டே அதே பள்ளி வளாகத்தில் சுயநிதிப் பிரிவுகள் பல தொடங்கி கல்விக்கொள்ளையில் ஈடுபடுகின்றன. அரசுக்கு தெரிந்தும் இவற்றைக் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக 1,000 மாணவர்கள் படிக்கக்கூடிய ஒரு அரசு உதவிபெறும் பள்ளி ஆங்கில வழி மற்றும் மேனிலை சுயநிதிப் பிரிவுகள் மூலம் 500 மாணவர்களைக் கூடுதலாக சேர்ப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த 500 மாணவர்களிடம் பண வசூல் மட்டும் செய்யப்படுகிறதே தவிர அரசு உதவிபெறும் பிரிவு மாணவர்களின் உள் கட்டமைப்பு வசதிகளையே இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவது அரசு உதவிபெறும் ஏழை மாணவ மாணவிகள் மட்டுமே. இந்த சட்ட மீறலை அரசு தெரிந்தே அனுமதிக்கிறது.
பல்லாயிரக்கணக்கில் பல்கிப் பெருகி வரும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றுமதி செய்யும் முகவர்களாக செயல்படும் அரசு அதற்கென மறுதேர்வு போன்ற திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இதனால் மாணவர்களும் ஓரளவு பயனடைகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் பெயருக்கு பள்ளி தொடங்கி அறிவியல் பிரிவு மட்டும் நடத்துவோம் என்பதும் பிறவற்றை சுயநிதியில் தொடங்குங்கள் என்று சொல்வதும் ஏழை மக்கள் கல்வி பெறும் உரிமையைப் பறிக்கும் செயலாகும். மத்திய அரசும் தனது கல்வி உரிமைச்சட்டத்தில் குழந்தைகளின் வயதெல்லையை 6-14 வரை என்கிற போதும் மேனிலைக் கல்வியைக் கை கழுவும் நிலையே ஏற்படுகிறது. புதிய மேனிலைப் பள்ளிக்கு தற்போது அனுமதிக்கும் 6 பணியிடங்களைக் கொண்டு ஒரு பாடப்பிரிவு தொடங்கி அதிகபட்சமாக 50 மாணவர்கள் மட்டுமே கல்வி பயில வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழ், வரலாறு, பொருளியல், வணிகவியல் - கணக்கியல், கணினி மற்றும் ஒன்றிரண்டு தொழிற்கல்வி ஆசிரியர்கள் என சிலரை நியமனம் செய்தால் கூடுதலாக பல பிரிவுகளைத் தொடங்கி பல நூறு மாணவர்களை மேனிலைக் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும். எதற்கும் உருப்படாத சைக்கிள்கள், ஓராண்டு கூட படம் பார்க்க முடியாத தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதை விட இதைச் செய்வது எவ்வளவோ மேல்.
அறிவியல் பாடப் பிரிவுகளையும் ஆய்வுக் கூட வசதிகளை மேம்படுத்தி அளிக்காவிட்டால் எவ்வித பயனுமில்லாமல் போய் விடும்.தாவரவியல்,விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்களை நியமிக்கும் வழக்கத்தை அரசு நிறுத்தியுள்ளது.உயிரியல் பாடத்திற்கென ஒரு ஆசிரியர் மட்டும் நியமிக்கப்படுவதால் மருத்துவப்படிப்பு செல்வதற்கு போதுமான மதிப்பெண்கள் பெற இயலாத நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது. முதல்வரின் சொந்த ஊரில் அரசு மேனிலைப் பள்ளியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. பொறியியல் கல்லூரியின் நிலையே இவ்வாறு இருக்க மேனிலை வகுப்பு அறிவியல் ஆய்வகங்களைப் பற்றி என்ன சொல்ல?
பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் கலந்தாய்வு மூலம் வெளிப்படையான பணி மாறுதல்கள் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கல்வியாண்டு முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாறுதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன. நிர்வாக மாறுதல் என்ற திரை மறைவில் லஞ்ச ஊழல் மூலமே இம்மாறுதல்கள் வழங்கப்படுகின்றன. எனவே இந்தப் பாடப் பிரிவிற்கு ஆசிரியர்களை நியமனம் செய்தால் மட்டும் போதாது. அவர்களைத் தொடர்ந்து அந்த இடங்களில் தக்க வைக்க வேண்டும்.
ஆசிரியர்கள் குக்கிராமங்களில் பணியாற்ற விரும்புவதில்லை. பணியேற்றவுடன் எப்போது ஓராண்டு முடியும் என காத்திருந்து கலந்தாய்வில் கிடைக்காவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது நிர்வாக மாறுதல் என பணம் கொடுத்து மாறுதல் வாங்க தயராகி விடுகிறார்கள். தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக மாவட்ட வேலை வாய்ப்பக பதிவு மூப்பு பின்பற்றப்பட்டது. அதுவும் நீதிமன்ற ஆணையின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. எப்படியேனும் பல லட்சங்கள் கொடுத்தாவது மாறுதல் வாங்கி விட வேண்டும் என்ற துடிப்பு ஆசிரியர்களிடம் அதிகமாக உள்ளது. ஊழல் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
கல்வி உரிமைச் சட்டம், சமச்சீர் கல்வி, கல்லூரி வரை இலவசக் கல்வி என்றெல்லாம் பெருமை பேசுவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு மேனிலைக் கல்வியை கொஞ்சம் சீர் செய்தாலாவது கல்லூரி அல்லது பட்டயப் படிப்புகள் படிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்பதில் அய்யமில்லை.
SSA, RMSA ஆகியவற்றின் ஊடாகவே மேல்நிலைக் கல்வியில் கலைப் பாடங்கள் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளைத் தொடங்குவதற்கு ஏதுவாக தகுந்த ஆசிரியப் பணியிடங்களை உருவாக்கி உடன் நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளில் சுயநிதிப்பிரிவுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் பள்ளி வளாகத்தில் சுயநிதிப்பிரிவு நடத்த அனுமதிக்கக் கூடாது. 11, 12 வகுப்புகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வழி வகுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலமே கல்வியில் சமூக நீதியைப் பேண முடியும்.