திங்கள், ஏப்ரல் 23, 2012

புத்தகங்களுடனான வாழ்க்கை - பகுதி 0001

புத்தகங்களுடனான வாழ்க்கை - பகுதி 0001  

                                                   -மு.சிவகுருநாதன் 

             (இன்று ஏப்ரல்-23  உலக புத்தக தினம்)

   எழுத்துக் கூட்டிப் படிக்க அப்போது வீட்டில்  'சுதேசமித்திரன் ' கிடைத்தது. அது நின்றுபோன பிறகு அப்பா  'அலைஓசை ' வாங்கினார். பின்னர் அதுவும் மரணிக்க 'தினமணி'க்கு மாறவேண்டிய கட்டாயம் அப்பாவுக்கு. அன்றிலிருந்து தினமணி படிப்பது தலைவிதியாகிவிட்டது. ஏறத்தாழ அனைத்துத் தமிழர்களின் தலைவிதியும் இதுதான். இந்தியாவில் ஆங்கில மொழி நாளிதழ்களுக்கும் வேறுமொழி நாளிதழ்களுக்கும் தேர்ந்தெடுக்க வேறுபட்ட சாய்ஸ் உண்டு. ஆனால் தமிழில் அதிகம் படிக்க விரும்புபவன் தினமணியைத்தான் நம்பியிருக்கவேண்டும். வேறு வழியில்லை. நமது தலையெழுத்து அப்படி. வேறு என்ன செய்வது?

    அப்போதெல்லாம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடைக்கோடியில் இருக்கும் எங்களது குக்கிராமத்திற்கு மாலையில்தான் நாளிதழ்கள் வந்து சேரும். அப்போது தினமணியின் ஆசிரியர் ஏ.என்.சிவராமன். தலையங்கப்பகுதியில் ஏ.என்.எஸ். என்று குறிப்புகள், கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதுவார். இப்போது பக்கமெல்லாம் நிறைக்கும் வைத்தியநாதன் படங்கள் போன்று ஆசிரியரின் படங்கள் நிகழ்ச்சிகள் அன்று வெளியானதில்லை. நூல் மதிப்புரை, வரப்பெற்றோம் பகுதியில் நூல்கள் பற்றிய குறிப்புகள் படிக்கக் கிடைக்கும். 

    குமுதம், ஆனந்த விகடன்  போன்ற இதழ்களை எங்கள் அப்பா வாங்கியதில்லை. அவற்றின் அட்டைப்படம் உள்ளிட்ட சினிமா செய்திகள் அவருக்குப் பிடிக்காத காரணமாக இருக்கலாம். இருப்பினும் சீரியஸ் வாசிப்பிற்கு இவைகள் அன்றெனக்கு உதவவில்லை என்றே சொல்லவேண்டும். அவைகள் இன்றிருப்பதைவிட மோசமான தரத்தில்தான் அன்று இருந்திருக்கின்றன என்கிறபோது இதனால் பெரிய இழப்பொன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

    தினமணி சிலரது ஆசிரியப் பொறுப்பில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்ட காலமொன்று உண்டு. அந்த வகையில் ஐராவதம்  மகாதேவன் ஆசிரியராக இருக்கும்போது தினமணி சுடர், தமிழ் மணி போன்ற அனுபந்தங்கள் வெளியாயின. அதிலுள்ள அறிவியல், தமிழியல் சார்ந்த கட்டுரைகளும் விவாதங்களும் வாசிப்பை மேலும் கூர்மைபடுத்தியதோடு தேடலையும் அதிகப்படுத்தின. பிறகு சிறுவர் மணி வந்தபோது நான் சிறுவனாக இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். தினமணியின் இந்த நிலை கி.கஸ்தூரிரங்கன்  காலகட்டத்திலும் தொடர்ந்தது.

   மாலன் தினமணியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றபிறகு 20 -40 க்குமான இதழ் என்ற போர்வையில் முற்றிலும் வணிகமயமாகிபோனது. இராம.சம்பந்தம் காலத்திலும் இப்போதும் பழ.நெடுமாறன் போன்ற தமிழ் தேசியர்களுக்கும் அர்ஜுன் சம்பத் போன்ற மத வெறியர்களுக்கும் தலையங்கப்பக்கத்தில் அளிக்கப்படும்   முக்கியத்துவம் எஸ்.வி.ராஜதுரை போன்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்கிற ஆதங்கத்தையும் இங்கு பதிவு செய்யவேண்டியுள்ளது. 

     நூலகம் என்றால் என்ன என்று கேட்கக்கூடிய  குக்கிராமப் பின்னணி கொண்ட எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் நூற்களை வாசிக்கவும் அறிமுகம் செய்யவும் இல்லாத நிலையில் அப்பா முழுவதும் வாசித்தபிறகு தூக்கிப்போடும் தினமணிதான் எனக்குக் கிடைத்த ஒரே சாளரம். அதன் வழியே ஏற்பட்ட இலக்கிய அறிமுகம் நூற்கள் வாசிக்கும் சேகரிக்கும் பழக்கமாக இன்றுவரை ஒருவித போதையுடன் தொடர்வது வேடிக்கையாகத்தானிருக்கிறது.  

                                                                                                   -வாழ்க்கை நீளும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக