செவ்வாய், ஏப்ரல் 24, 2012

பல்கிப் பெருகும் சிறுபத்திரிக்கை வீச்சு

சிற்றிதழ் அறிமுகம்: அடவி - 7, ஜனவரி - 2012.
 
 பல்கிப் பெருகும் சிறுபத்திரிக்கை வீச்சு
 
 - மு. சிவகுருநாதன்
 
 
 
 இன்றுள்ள நவீன கணினி யுகத்தில் கிடைக்கும் பலதரப்பட்ட வசதிகளைக் கொண்டு பணம் இருந்தால் மட்டும் சிறுபத்திரிக்கைகளைச் செம்மையாக, அழகுற அச்சிட்டு வெளிக் கொண்டு வர முடியும். அவற்றை வாசகர்களின் கையில் சேர்ப்பது, தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் மீண்டு வருவது போன்ற பல்வேறு படிகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து தில்லை முரளி ஆசிரியப் பொறுப்பில் அடவி இதழ் 07 ஜனவரி 2012இல் வெளிவந்துள்ளது.  இந்த இதழில் 
ஜே.பி. சாணக்யா, ஜோஸ் அன்றாயன் ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  ஜோஸ் அன்றாயனின் "இங்கு மூத்திரம் கழிக்காதீர்" கதையில் எள்ளல், பகடி சிறப்பாக வந்துள்ளது.

"உலக ஆட்சிக்கான சிவில் சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதே உலக கார்ப்பரேட் மற்றும் அரசுகளின் நிதி உதவி பெற்று இயங்கும் என்.ஜி.ஓக்கள்" (பக்.04) என்று சொல்லும் ஜமாலன் கட்டுரை (மேலே பூதம் கீழே கடல் - சிவில் சமூகமும் அரசு சாரா சமூகமும்) முதலாண்மை நிறுவனங்களின் உலக ஆட்சிச் செயல்பாடுகளை விளக்குகிறது.

"வர்ண - தர்மத்திற்கு அப்பால் சிவில் சமூகம் என்கிற பொதுவெளி சாத்தியமற்ற நிலையில், சிவில் சமூகம் பற்றிய நிறைய பேச்சுகள் சமீப காலங்களில் பெருக்கப்படுகின்றன.  இந்திய சிவில் சமூகத்தில் சாதியத்தின், சாதியக் குழுக்களின் பங்கு என்ன என்பதைத் தீர்க்காமல், சிவில் சமூகம் என்கிற குடியாண்மைச் சமூகத்தை உருவாக்க முடியாது" (பக். 05) என்று கூறும் ஜமாலன்

"காவல்துறை, இராணுவம், நீதி பரிபாலன சட்ட அமைப்பு உள்ளிட்டவற்றைக் கொண்ட வன்முறை சார்ந்த கருவிகளை வெளிப்படையானதாக வைத்து உள்ளது.   குடும்பம், கல்வித்துறை, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட குடியாண்மைச் சமூகம் கருத்தியல் வழியாக இணக்கமான மனநிலையை உருவாக்குவதாக உள்ளது.  ஓர் அரசமைப்பு வன்முறைக் கருவிகளைக் கொண்டு மட்டுமே ஆள முடியாது, அதிகாரம் செலுத்த முடியாது.  தனது ஆளுகையை ஏற்கக் கூடிய தன்னிலைகளை உருவாக்க வேண்டும்.  அதற்கு இந்த அரசு சாரா, தன்னார்வ, தொண்டு நிறுவனங்கள் பணியாற்றுகின்றன". (பக். 06) என்றும் கணிக்கிறார். 

"சிவில் சமூகம் என்பது அரசிற்குச் சமமான அதிகாரத்தைப் பெற்றதாக முன் வைக்கப்படுகிறது.  இந்தியாவில் அன்னா ஹசாரேவின் அரசியல் அதைத்தான் முன் வைக்கிறது" என்றும் விளக்குகிறார்.

    பத்தி (தக்கார் தகவிலார்) பகுதியில் வல்வில் ஓரி எந்தச் சாதி? என்ற ஆய்வில் ஈடுபடும் பெருமாள் முருகன், அவன் பெயரிலுள்ள அடைமொழிக்கேற்ப கொங்குப்பகுதி வேட்டுவர்களுக்கு ஓரியின் சாதி என்று கொண்டாட உரிமை உள்ளது என்ற முடிவுக்கு வருகிறார்.

கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரிக்கு அரசு விழா எடுக்கிறது.  இவ்விழாவில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்து விடுவதால் அதற்குப் பயந்து அவர்களனைவரும் இவ்விழாவைப் புறக்கணித்து விடுகிறார்கள்.  சென்ற ஆண்டு விழாவில் (02.08.2011) கொங்கு இளைஞர் பேரவையின் சட்ட மன்ற உறுப்பினர் 
உ. தனியரசு மட்டும் கலந்து கொண்ட செய்தியைச் சொல்லியிருக்கிறார்.  தஞ்சை பெரிய கோயில் குறித்தும் இம்மாதிரியான நம்பிக்கை இருப்பதாலும் அங்கு இதே கதைதான்.  இவர்களைத் திருத்தவே முடியாது. 

புரட்சி மனம் கொண்ட அழகுமிக்க பிலடெல்பியப் பெண்ணுக்கும் பாகிஸ்தானியக் கவிஞரான அரசியல் நிபுணருக்கு பிறந்த குழந்தை (டேவிட் கோல்மன் ஹெட்லி - 49) இப்படியொரு தீய மயக்கல்கார, அடிப்படைவாதியாகுமென்று யாரும் கண்டறிந்திருக்க முடியாது. (பக். 14) என்று சொல்லும் கையாளுக்கலை (சிகாகோ நீதிமன்றத்தில் தன் உயிரைக் காக்கும் டேவிட் ஹெட்லி) என்ற ஜுலை 2011 த காரவன் கட்டுரையின் முதல் பகுதி விவரிக்கிறது.  போதை மருந்து கடத்தல்காரனான டேவிட் ஹெட்லியை ஒற்றனாக பயன்படுத்திய அமெரிக்கா தற்போது பயங்கரவாத எதிர்ப்பு முகமூடியை அணிந்து கொள்வது வேடிக்கையானது.

'மரண தண்டனை சில சிந்தனைகள்' என்ற கி. பார்த்திபராஜாவின் கட்டுரை (பக். 24) ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.   ராஜீவ் கொலையில் வெளிநாட்டுச் சதி கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதையும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நடத்தி வரும் நீதிப்போராட்டத்தையும் நமக்கு இக்கட்டுரை நினைவூட்டுகிறது.

மரணத் தண்டனை ஒழிப்புப் போராட்டத்தில் உள்ள பாகுபாடுகளை இக்கட்டுரை வலியுறுத்துவதை ஏற்க முடியாது.  மரண தண்டனையை ஒழிக்கச் சொல்லும்போது அதில் விதி விலக்குகள் ஏற்படுத்துவது நியாயமில்லை.  இந்த மூன்று பேருடன் கூடவே அப்சல் குரு, கஸாப் (நாளை), தர்மபுரி பேருந்து எரிப்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முனியப்பன் உள்ளிட்ட மூவர்  என யாருக்குமே மரணதண்டனை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்தவொரு தேசிய இன விடுதலை இயக்கங்களின் மரண தண்டனைகளையும் நாம் எதிர்த்தே ஆக வேண்டும்.

வருங்காலத்தில் நரேந்திர மோடி, ராஜபக்சே, கஸாப், வாரன் ஆண்டர்சன் போன்ற எவருக்கும் அவர்கள் செய்த குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கக் கூடாது என்பதே உண்மையான மரண தண்டனை எதிர்ப்பாக இருக்க முடியும்.  இவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்பதற்கு இவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்கு தொடுத்து தண்டனை வழங்காமல் தனி விமானத்தில் வெளிநாடு தப்ப உதவி புரியவேண்டும் என்பது பொருளல்ல.

உயிரைப்பறிக்கும் மரணதண்டனைக்கு சட்டத்தில் இடமிருக்கக் கூடாது.  வாழ்நாள் சிறையை விட ஒரு நிமிடத் தூக்குத் தண்டனை உண்மையான தண்டனையாகவோ குற்றங்களை குறைப்பதாகவோ இருக்க முடியாது என்பதே நிதர்சனம்.  

திரைப்பகுதியில் தார்க்கோவஸ்கியின் 'இவானின் குழந்தைப் பருவத்தை'  ஜி. முருகன் அறிமுகம் செய்கிறார். " பன்னிரண்டு வயதுச் சிறுவனின் ஆன்மாவில் போர் என்ற ராட்சதன் வரைந்த ஒரு காலத்தின் சித்திரம்" இப்படமெனச் சொல்லும் இக்கட்டுரை இப்படத்தின் அனுபவமும், பார்வையும் அந்த்ரே ரூப்ளே படத்திற்கான அஸ்திவாரமாக அமைந்ததையும் வெளிப்படுத்துகிறது. 

"எது நடந்ததோ......"  என்ற குறும்படம் குறித்த பதிவு ஒன்று உள்ளது.  இதழ் தொடர்ந்து வெளிவருவது தமிழ்ச் சூழலுக்கு நல்லது. 

பக். 48 விலை ரூ. 15  
 
 
தொடர்பு முகவரி: 
 
15- மாரியம்மன் கோவில் தெரு,
பவித்திரம் - 606 806,
திருவண்ணாமலை.
 
தொலைபேசி: 99948 80005
மின்னஞ்சல்: adavimagazine@gmail.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக