ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

அக்னி 5 : 100 கோடி இந்தியர்களின் வயிற்றிலடித்த சாதனை!

அக்னி 5  : 100 கோடி இந்தியர்களின் வயிற்றிலடித்த சாதனை!  

                                                                                       -மு.சிவகுருநாதன்  

      அக்னி 5 ஏவுகணை வெற்றி கிரிக்கெட் வெற்றிக்கு இணையான தேசியப் பெருமிதமாகக் கொண்டாடப்படுகிறது.  ராணுவத்தில் நடைபெறும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளை மறக்கடிக்க இந்தப் போலியான வெற்றிப் பெருமிதம் நமது அரசியல்வாதிகளுக்கு பெரிதும் உதவுகிறது. 

      அக்னி 5 ஏவுகணை ஏவப்பட்டதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய வல்லரசுகளின் பட்டியலில் நாமும் சேர்ந்துவிட்டோமாம்! வெட்கமாக இல்லை! கல்வி, சுகாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் நாம் எப்போது இவர்களுடன் சேர்வது? 

    அது கிடக்கட்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணில் நாம் என்று 100 இடத்திற்குள் வருவது? லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் பல நம்மை பின்னுக்கு தள்ளுகின்றனவே. ஏன் இலங்கை கூட நம்மைவிட முன்னேதான் இருக்கிறது.

     அக்னி 5 ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லி போலிப்பெருமை பேசுவது ஒருபுறமிருக்க , 70 - 80 % மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற வேறோரு செய்தியும் கிடைக்கிறது. நமது அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகளும் சொல்லிய அணு மின்சாரக் கணக்குதான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. இவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பதை மக்கள் அனைவரும் உணரும் நாள் விரைவில் வரத்தான் போகிறது.

     10000 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய  அதிகத் திறனுள்ள ஏவுகணைகள் பெரும் வல்லரசுகளிடம் இருக்க வெறும் 5000 கி.மீ. திறனுடைய அக்னி 5 ஏவுகணையை கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடியது என்று சொல்வதுகூட அபத்தமானதுதான். சீனர்களின் உழைப்பை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய நிலையில் அதற்குமாறாக அவர்களுடன் ஆயுதப்போட்டியில் ஈடுபடுவது இந்தியாவை கற்காலத்திற்கு  அழைத்துச் செல்லும் முயற்சியாகத்தான் இருக்கமுடியும்.

    இந்தியா ஒரு வல்லரசு என்று பீற்றிக்கொள்ளவும்    ஐ.நா.  பாதுகாப்பு  சபையில் நிரந்தர உறுப்பினர் தகுதி பெறவும்  ஆயுதக் கொள்முதல் மூலம்
பெரும் கொள்ளைகளில் ஈடுபடவும் இந்திய அதிகார வர்க்கம் முனைந்து நிற்கிறது.   அதற்காக இந்திய மக்களின் வரிப்பணத்தின் பெரும் பகுதியை ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்கிறது. இவற்றின் மூலம் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதக் குவிப்பு வேலைகளிலும் பெருமளவிலான ஊழல்களிலும் ஈடுபடுகிறது. 

      இதற்காக கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இந்திய மக்களுக்குச் செய்துதர மறுத்து இவ்விதமான மனிதகுலத்திற்கெதிரான  ஆயுதக் குவிப்பு வேளைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக வறுமையில் வாடும் இந்தியமக்களின் வயிற்றில் அடிக்கும் பணியை மிகச் செம்மையாக செய்துவருகிறது. 

     இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தின்  இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் நீண்ட பாரம்பரியப் பெருமையை கேலி செய்வதாக உள்ளன. மகாவீரர், புத்தர், அசோகர், காந்தி ஆகியோர் பிறந்த இந்திய மண்ணின் பெருமையை இவர்களின் போலிப்பெருமைகள் மூழ்கடித்துக்கொண்டுள்ளன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக