செவ்வாய், ஏப்ரல் 24, 2012

போராளி கென் சரோ விவா

போராளி கென் சரோ விவா
                                   
                                   - மு. சிவகுருநாதன்(2009இல் 'பயணி' வெளியீடாக யூமா. வாசுகி மொழி பெயர்ப்பில் வெளியான 'ஒகோனிக்கு எதிரான யுத்தம் - ஷெல்லின் கொலைக்களம் - கென் சரோ விவா' நூல் பற்றிய அறிமுகப்பதிவு)   
  
    200 -க்கு மேற்பட்ட இனங்களைக் கொண்ட நைஜீரியா நாட்டின ஒகோனி (Ogoni) இன மக்கள் வசிக்கும் நைகர் நதி பாயும் 404 சதுர மைல் பரப்பு, ஒரு சதுர மைலுக்கு 1500 மக்கள் அளவில் மிக அதிகமான மக்களடர்த்தி உள்ள பகுதியாகும்.  இப்பகுதியில் 1958-ல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது.  எனவே இப்பகுதி பிரிட்டிஷ் எண்ணெயக் கம்பெனியான செல் (shell)  மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் கொள்ளை பூமியாக மாறிப்போனது.
  
 ஒகோனி சின்னாபின்னமான கதையை கென் சரோ விவாவின் வார்த்தைகளால் கேட்போம்.

    "ஷெல்லின் துளையிடும் இயந்திரங்கள் ஒகோனியின் இதயத்தை ஆழமாகப் பிள்ககத் தொடங்கின.  அவர்களது இயந்திரங்கள் ஒகோனிகளின் விவசாய நிலத்தை சின்னாபின்னமாக்கின.  வாயுச் சுவாலைகளைத் தேடின.  அவற்றிலிருந்து வெளிவந்த கார்பன் மோனாக்சைடும் மற்ற விஷவாயுக்களும்  என் மக்களின் சுவாச உறுப்புகளில் புகுந்து திணிந்தன."
       
    எண்ணெய் வளம் கொள்ளையடிக்கப்பட்டதால் குடிக்க குடிநீர் இல்லை.  சுவாசிக்க நல்ல காற்று கூட இல்லை.  எனவேதான் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை இன உரிமைச் சங்கம் (Ethinic Minority Rights Organisation of Africa - EMIROAF)  உயிர் வாழ்விற்கான ஒகோனி மக்கள் இயக்கம் (Movement for the Survival of the Ogoni People - MSCOP) ஆகியன தோற்றுவிக்கப்படுகின்றன.

    தூய காற்று, தூய குடிநீர், தூய இருப்பிடம் ஆகியவற்றைக் கேட்டு ஒகோனி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் எழுத்தாளர், மனித உரிமையாளர், கவிஞர், பதிப்பாளர், சூழலியாளர், நாவலாசிரியர், குழந்தை எழுத்தாளர், பத்திரிக்கையாளர், நாட்டுப்புற பாடல் தொகுப்பாளர், நாடகாசிரியர் போன்ற பல்வேறு முகங்கள் கொண்ட போராளி கென் சரோ விவாவின் தலைமையில் வீறு கொண்டெழுந்தது.

    1994இல் எண்ணெய் நிறுவனங்களும் நைஜீரிய ராணுவ அரசு ஒகோனி மக்கள் போராட்டத்தை ஒடுக்கி பல்லாயிரக்கணக்கான ஒகோனி மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.  1994 ஜுனில் கென் சரோ விவா கைது செய்யப்படுகிறார்.

    விவா சிறையில் இருக்கும் போது அரசோடு இணங்கிய ஒகோனித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான சதித் திட்டத்தை தீட்டினார் என்று பொய்க் குற்றஞ்சாட்டி பல நாடுகள், தலைவர்கள், அமைப்புகள், அறிஞர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தும் நைஜீரியாவின் ராணுவ அரசு  கென் சரோ விவாவை 1995 நவம்பர் 10 அன்று தூக்கிலிட்டுக் கொலை செய்தது.  கூடவே எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.  உடன் நைஜீரியா காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட போதும் லண்டனின் காரோட்ட ஒகோனி எண்ணெய் இன்றும் பயன்படுவதை பதிப்புரை பதிவு செய்கிறது.

    சிறையில்  கென் சரோ விவாவால் எழுதப்பட்ட அரசியல் அறிக்கையின் சுருக்கம் யூமா.வாசுகியால் அழகாக மொழி பெயர்க்கப்பட்டு பயணி வெளியீட்டால் சிறப்பாக வெளியிட்டுள்ளது.

    மொசோப்-(MSCOP) ன் வன்முறையற்ற போராட்டங்கள் உயிர் வாழ்வுச் சூழலுக்கான உரிமைகள், மனித உரிமைகள், தனித்த குழுக்களின் உரிமைகள் என மூன்று தத்துவங்களைச் சார்ந்திருப்பதாக  கென் சரோ விவா குறிப்பிடுகிறார். (பக். 38).  ஒகோனியின் உரிமைப் பத்திரமே (Ogoni Bill of Rights - OBR) மொசோபின் (MSCOP)  பைபிளாக மதிக்கப்படுகிறது.  அதன் முக்கிய ­ரத்துகள்

01. நைஜீரியாவுக்குள் ஒகோனிகளுக்கு சுயாட்சி உரிமை.
02. அனைத்து நைஜீரிய அரசு நிறுவனங்களிலும் ஒகோனிகளுக்குப் போதுமான பிரதிநித்துவம்.
03. ஒகோனி வளங்களின் நியாயமான பங்கை ஒகோனி மேம்பாட்டிற்குப் பயன்படுத்துதல்.
04. ஒகோனியின் உயிர் வாழ்வுச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கான உரிமை ஒகோனிகளிடம் நிலையாக இருக்க வேண்டும்.
05. ஒகோனியில் ஒகோனி மொழிகளைப் பரப்பவும் பயன்படுத்தவும் உரிமை. (பக. 38, 39)

    மிகவும் சாதாரண இந்த அடிப்படை உரிமைகளைக் கூட ஒகோனி மக்களுக்குத் தர ஐரோப்பிய, அமெரிக்க ஆதரவு பெற்ற நைஜீரிய ராணுவ ஆட்சியாளர்களால் முடியவில்லை.  மாறாக அடக்குமுறையைத்தான் தந்தார்கள். இந்தியாவெங்கும் தற்போது இதுதானே நடக்கிறது.  இந்நூல் வெளிவருவதற்கான தகுந்த தருணந்தான் இது.
   
    கென் சரோ விவா அகிம்மை முறையிலான அறப்போராட்டங்களையே ஆதரிக்கிறார்.  "புரட்சி மாற்றத்தைக் குறிக்கிறது. அது ஒரு போதும் வன்முறையில் ஈடுபாடு உடையதல்ல" என்று சொல்லும் விவா, "யுத்தங்கள் ஒரு பிரச்சினையையும் தீர்ப்பதில்லை.  கலாச்சாரத்தையும் மக்களின் ஆத்ம ஞானத்தையும் பின்தள்ளுவதைத்தான் செய்கின்றன"  என்று போருக்கெதிரான நிலை எடுக்கிறார்.

    கொல்லப்பட்ட ஒகோனித் தலைவர்கள் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.  "கொபானி எனது நெருங்கிய நண்பர்.  நட்சத்திர விளையாட்டு வீரராயிருந்தார் பேதே.  அவர் ஒரு ஒகோனியாக இல்லாதிருந்தால் நைஜீரியாவின் உயர் பதவிகளை அடைந்திருப்பார்.  எஸ்.என். ஒரேக்-உடன் எனக்கு மிக நல்ல உறவு இருந்தது.  டி.பி.ஒரேக் என் மனைவியின் தந்தையுடைய அண்ணனாயிருந்தார்".  (பக். 69-72) இவர்கள் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியதற்காகத்தான் விவா பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

    கைதுக்குப் பின்னால் விவா சித்திரவதை செய்யப்பட்டதை அவரே கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

"1994 மே 21ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டேன்.  உடல் ரீதியானதும் மன ரீதியானதுமான சித்திரவதைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டேன்.  அரசு என்னைத் தனிமைக் சிறையிலிட்டது.  வாரக் கணக்காக உணவளிக்க மறுத்தது.  மாதக்கணக்காகச் சிகிச்சை வசதிகள் கிடைக்கவில்லை.  விசாரணை அதிகாரிகள் என் அம்மாவைச் சாட்டையால் அடித்தார்கள்.  அவரைக் கைது செய்தார்கள்.  அவருக்கு எழுபத்து நான்கு வயது... அவர்கள் என் மனைவியையும் தாக்கினார்கள்.  சிறையிலடைப்போம் என்றும் அச்சுறுத்தல் நிலை நிற்கிறது. என் அலுவலகத்திற்கும் வீட்டிற்குமுள்ள தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்திருக்கிறார்கள்.  மூன்று முறை என் வீட்டையும் அலுவலகத்தையும் விசாரணை அதிகாரிகள் சலித்தெடுத்தார்கள்.  என் சம்பாத்தியங்களையும் அலுவலகக் கோப்புகளையும் ஆவணங்களையும் அவர்கள் தெளிவாகப் பதிவு செய்யாமல் எடுத்துக் கொண்டு சென்றார்கள்". (பக். 87, 88).

    ஒகோனி மக்களின் பூமியையும் மக்களையும் காப்பாற்ற விவாவின் வேதனைக் குரல் படிப்போரை   கலங்க வைக்கிறது.

    "நான் சமாதானத்தை விரும்புவனும் கருத்து வளமுடையவனுமாவேன்.  செழிப்பான நிலப்பகுதியில் தரித்திரர்களாக வாழ விதிக்கப்பட்ட எம்மக்களின் பெருந்துயரம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது.  அரசியல் ரீதியான ஒதுக்கப்படுதல்களுக்கும் பொருளாதார நசுக்குதல்களுக்கும் உள்ளான எங்களுடைய நிலை எனக்கு வேதனையளிக்கிறது.  பாழ் நிலமாகும் பூமி எனக்குக் கவலையளிக்கிறது.  எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றும் எங்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றும் நான் ஆசைப்படுகிறேன்".

    "ஆண் - பெண் பேதமில்லாமல் எல்லோரும் அச்சம் நிறைந்தவராயிருக்கின்றனர்.  உடைகளில் ஒட்டுகிற சொந்த மூத்திரத்தைக் கழுவியகற்றுவதற்குக் கூட அவர்கள் அஞ்சுகிறார்கள்.  நைஜீரியாவை ஆபத்திற்குள்ளாக்கியதற்கும் வரும் தலைமுறைகளை அடிமைத்தனத்தில் தள்ளிவிட்டதற்காகவும் நமது செயற்பாடுகள் விசாரணை செய்யப்படும்".
(பக். 93) என்ற கென் சரோ விவாவின் எழுத்துக்களைப் படிக்கும் போது இங்கும் இன்றும் கூட இந்நிலையை தொடர்வதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.  இந்தியாவின் தண்டகாரண்யப் பகுதியில் இயற்கை வளங்களை வேதாந்தா, ஜுண்டால், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ் போன்ற பல்வேறு கம்பெனிகள் கொள்ளையடிப்பதை நம்மால் வேடிக்கைத்தானே பார்க்க முடிகிறது.  வருங்கால தலைமுறையிடம் நாம் விசாரணைக் கூண்டில் நின்றுதான் ஆக வேண்டும்.

    இன்று நமக்கு மின்சாரம் வேண்டுமென்று கூடங்குளம் அணு உலைக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறமோ, அடுத்த பல லட்சம் ஆண்டுகள் அணுக்கழிவுகளை இந்த பூமியில் யார் தலையில் சுமத்தப் போகிறோம்?  இத்தகையப் போராட்டங்கள் வழியே நாம் தான் அதிக பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

    இன்றைய இந்திய - தமிழச் சூழலில் பன்முகப் பரிமாணங்களுடைய கென் சரோ விவாவின் எழுத்துக்கள் அனைத்தையும் தமிழில் வெளிக் கொணர வேண்டும்.  அத்தகைய முன் முயற்சிகளை தமிழப் பதிப்பகங்கள் முன்னெடுக்க வேண்டும்.  அந்த வகையில் இச்சிறிய முயற்சி பெரும் பாராட்டிற்குரியது.

பக். 96 விலை ரூ. 50 ஆண்டு: 2009
 

பயணி வெளியீடு
 

6/11, 4-வது குறுக்குத் தெரு,
எல்லையம்மன் காலனி,
தேனாம்பேட்டை,
சென்னை -  600 086.
 

தொலைபேசி: 94451 24576, 95001 54052.
மின்னஞ்சல்:  
vijay1975@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக