செவ்வாய், ஏப்ரல் 24, 2012

தினமணி - எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் பகற்கொள்ளை

தினமணி - எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் பகற்கொள்ளை
                                  

                                                                            - மு. சிவகுருநாதன்

     தமிழர்களின் கெட்ட காலம், மாற்று இதழுக்கு வேறு வழியின்றி தினமணியை வாங்கிப் படித்தாக வேண்டிய கட்டாயம்.  அதற்காக தினமணியை நம்பகமான  நாளிதழ் என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம்.  பார்ப்பன தினமலரின் அசிங்கங்களை  ஒப்பிடும்போது தினமணி தேவலாம் என்கிற  நிலைதான்.

    எக்ஸ்பிரஸ் - தினமணி குழுமம் இரு நாளிதழ்களுக்கும் சேர்த்து சலுகை ஆண்டு சந்தா என சென்ற ஆண்டு ரூ. 650 என்று நிர்ணயம் செய்திருந்தது.  இவ்வாண்டு ரூ. 950 என சற்று உயர்த்தப்பட்டுள்ளது.  இது தினமணி வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள சேதிதான்.  ஆனால் இவ்வாறு என்னைப் போல ஆண்டு சந்தா செலுத்தியவர்களிடம் விசாரித்தால் எக்ஸ்பிரஸ் - தினமணி நிர்வாகம் தனது முகவர்களுக்காக அப்பட்டமான பகற்கொள்ளையில் ஈடுபடுவது வெளிச்சத்திற்கு வரும்.

    ஒரு கணம் தினமும் தினமணியின் தலையங்கங்களை புரட்டிப் பாருங்கள்.  அவை இவ்வளவு சமூக அக்கறையா என்று நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கும்.  தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் நடக்கும் முகவர்களின் ஏமாற்றுப் பித்தலாட்டங்களை கண்டு கொள்ள மறுக்கும் இவர்கள் ஊருக்கு உபதேசம் சொல்வது நகைப்பிற்கிடமானது.

    திருவாரூரில் நான் ஆண்டு சந்தா கொடுக்கும்போது அந்த நண்பர் சேவைக் கட்டணம் (Service Charge) கேட்பார்கள் என்றார்.  அதனால் என்ன? கொடுத்துவிட்டால் போச்சு என்றேன்.  எவ்வளவு என்று கேட்டதற்கு ரூ. 10 அல்லது ரூ. 20 கொடுத்தால் போதுமென்றார்.  என்னுடன் சேர்த்து எனது நண்பருக்கும் சந்தா அளித்தேன்.  மே மாதம் ஒன்றிலிருந்து இதழ்கள் வந்தன.  10 நாட்கள் மட்டும் தொடர்ந்து வந்தது.  பிறகு திடீரென்று இதழ்கள் வரவில்லை.  மறுநாள் ஏனென்று கேட்கும் போது வரவில்லை என்ற ஒரு வார்த்தைதான் பேப்பர் போடும் பையனிடமிருந்து பதிலாக வரும்.  ஆனால் வராத நாளன்று தினமணி - எக்ஸ்பிரஸ் இரண்டும் கடைகளில் விற்பனைக்குக் காத்திருக்கும்.  பணம்  கொடுத்து வாங்கியாகவேண்டும். வேறு வழியில்லை.

    நமது தொடர்பு விட்டு விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ சில நாட்களில் ஒரு இதழ் மட்டும் நமக்கு பிச்சை போடுவார்கள்.  சராசரியாக மாதத்தில் 10 நாட்கள் இரு இதழ்களும் 10 நாட்கள் ஏதேனும் ஒன்றும் வராமற்போவது வாடிக்கை.

   அன்று தினமணியோ எக்ஸ்பிரசோ படித்தாக வேண்டும் என்று நமக்கு அரிப்பு ஏற்பட்டால் பேருந்து நிலையம் சென்று பணம் கொடுத்து வாங்கிப் படிக்கலாம்.  பேப்பர் போடுபவரிடம்  வரவில்லை என்பதைத் தவிர வேறு எந்த பதிலும்  வராது.  காலதாமதமாக வந்தால் அடுத்த நாள் கொடுக்கலாமே என்றால் அதுவும் இல்லை.

    மாதம் முடிந்த பிறகு சர்வீஸ் சார்ஜ் கேட்ட பேப்பர் போடும் பையனிடம் பேப்பர் போடாத நாட்களின் விவரங்களையும் அதற்குரிய பணத்தில் சேவைக் கட்டணம் போக மீதித் தொகையைத் தருமாறு கேட்டேன்.  பதிலில்லை.  நான் சண்டை போடுவதாக அவர்  முகவரிடம் சொல்லியிருக்க வேண்டும்.

    இதழ் கிடைக்கவில்லையா போன் செய்யுங்கள் என செல்போன் மற்றும் தரைவழி இணைப்பு எண்களை தினமணியில் கொடுத்திருப்பார்கள்.  அவர்களுக்குத் தொடர்பு கொண்டு பலமுறை புகார் செய்திருக்கிறேன்.  கடிதம் எழுதியிருக்கிறேன்.  தினமணி நிர்வாகத்தின் எக்ஸிகியூட்டிகள் பெயர், முகவரி எல்லாம் கேட்டு விட்டு போடச் சொல்கிறேன் என்பார்கள்.  மறுபடியும் அதே நிலைதான் நடக்கும்.

    ஒரு முறை அவர்கள் சொன்ன செல்போன் எண்ணுக்குப் புகார் செய்து
திரு. வேங்கடராமன்    என்பவருடன் பேசியபோது நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கவில்லை என்றார்.  எவ்வளவு என்றேன். ரூ. 20 என்றார்.  தினமும்
ரூ. 1/- வீதம் மாதத்திற்கு ரூ. 30 தருகிறேன்.  தினமும் பேப்பர் போடச் சொல்லுங்கள் என்றேன்.  ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் பேப்பர் போடவில்லையோ அதற்குரிய தொகையை யார் ஈடு செய்வது என்று கேட்டேன்.  நீங்கள் சண்டையிடுவதாக புகார் உள்ளது என்றார்.  எந்தக் காவல் நிலையத்தில் FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டேன்.  இவ்வாறாக நீண்ட விவாதத்தில் அவர் என்னை சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வலியுறுத்தினாரே தவிர தினமும் பேப்பர் வரும் என இறுதிவரை உறுதியளிக்கவில்லை.

    அப்புறம் கொஞ்ச நாள் இதழ்கள் வந்து கொண்டிருந்தது.  சில நாட்கள் இரண்டும் வருவதில்லை.  பல மாதங்களாக ஏதேனும் ஒரு இதழை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தனர். நம் தொடர்பு விட்டு விடக் கூடாது என்பதற்காகவும் ஏதோ பிழைத்துப் போகட்டும் என்றும் இருந்திருப்பார்கள் போலும்.

    எனக்கு மட்டுமல்ல என் நண்பருக்கும் இதே கதைதான்.  அவர் சொன்னார்... நமக்காவது பரவாயில்லை. நமது பள்ளிக்கு முழுதாக 100 நாட்கள் கூட இதழ்கள் வரவில்லை.  இந்த ஆண்டு போய்த் தொலைந்து போகட்டும்.  இனிமேல் இவ்வாறு ஏமாற வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்தார்.  நானும் எனக்குத் தெரிந்து தினமணிக்கு சந்தா கட்டி ஏமாந்தவர்களிடம் விசாரித்தேன்.  அவர்கள் அனைவரும் சொல்வது, தினமும் இதழ்கள் வருவது குதிரைக் கொம்புதான்.  முகவர்கள் விற்பனையாகாமல் மிச்சமிருந்தால் மட்டுமே நமக்குத் தருவார்கள்.  நிதர்சனம் இதுதான்.  சீட்டுக் கம்பெனிகளிடம் பணம் கொடுத்து ஏமாறுவதில்லையா அதுபோலவே இதையும் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    மே 1 (2011) லிருந்து மார்ச் 31 (2012) வரை இந்தப் போராட்டம் 11 மாதங்கள் தொடர்ந்தது.  ஏப்ரல் 2012 முதல் இதழை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள்.  நான் சந்தா கொடுத்த நண்பரிடம் தகவல் தெரிவித்து விட்டு அமைதியானேன்.

    இந்நிலையில் 23.04.2012 அன்று எனக்கு அஞ்சலட்டை ஒன்று வந்தது.  சந்தா தொடக்கம் 01.05.2011 முடிவு 30.04.2012 - ரூ. 950 செலுத்தி சந்தாவைப் புதுப்பிக்கவும் என்று சொன்னது அந்தக் கடிதம்.  அதில் அதே செல்போன், போன் எண்கள்.  இதுதான் கோபத்தைக் கிளறிவிட்டு என்னை இங்கு எழுத வைத்தது.

     பத்திரிக்கை நடத்துபவர்கள் விற்பனை முகவர்களுக்கு உரிய கமிஷ­ன் கொடுக்க வேண்டியது நியதி.   அது குறைவாக இருந்தால் உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும்.  அதற்கு மாறாக சந்தா என்ற பெயரில் தொகை வசூலித்து அவர்களுக்கு இதழ்களைக் கொடுக்காமல் வெளியில் அந்த பிரதிகளை விற்பனை செய்து வருவாய் பார்ப்பதற்கு தினமணி - எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தனது விற்பனை முகவர்களுக்கு மறைமுக ஏற்பாடு செய்துள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.  இது மிகப்பெரிய மோசடியாகும்.  தினமணி இந்த மோசடியை நிறுத்தட்டும்.  இல்லையென்றால் பம்மாத்து தலையங்கமாவது எழுதாமல் இருக்கட்டும்.

    இதழின் பழைய விலைகளின் படி நாள் ஒன்றுக்கு ரூ. 6.50 அல்லது ரூ. 8.50; புதிய விலைகளின் படி நாளொன்றுக்கு ரூ. 8.50 அல்லது ரூ. 10.00.   ஓராண்டிற்கு ஒரு சந்தாதாரரிடமிருந்து ரூ. 800 முதல் ரூ. 1000 வரை இதழ்கள் பிடுங்கப்பட்டு வெளியே விற்பனை செய்யப்படுகிறது.   தினமணி நிர்வாகத்திற்கு சந்தாவும் கிடைத்து விட்டது.  முகவர்களுக்கு பணம் கிடைத்தாகி விட்டது.  ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.  இந்த முறைகேடான நடைமுறையை நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதன் பின்னணி விளங்கவில்லை.  எனவே இதுவோர் கூட்டுக் கொள்ளை என்று சொன்னால் மிகையில்லை.
       
    மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேல் பேப்பர் போடாமல் இருக்கும் முகவர் எதிர்பார்க்கும் சேவைக் கட்டணத்தின் நியாயத்தைப் பேசும் நிர்வாகம் சந்தா கட்டியவருக்கு தினமும் பேப்பர் போக வேண்டிய நியாயத்தைப் பற்றி ஏன் பேச மறுக்கிறது?   அரசுப் பள்ளிகளுக்கு போடும் பேப்பர் மூலம் முகவர்கள் பெருங்கொள்ளை அடிக்கின்றனர்.  நிர்வாகம் கண்டு கொள்ள மறுக்கிறது.  அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் (RMSA) இதழ்களுக்கு அளிக்கப்படும் தொகை இவ்வாறு விரயமாவது கூட லஞ்சம் போலத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக