சனி, மே 31, 2014

வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டிய சாதி வன்முறை – உண்மை அறியும் குழு அறிக்கை

வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டிய சாதி வன்முறை – 

                     உண்மை அறியும் குழு அறிக்கை


கடலூர்
மே 30, 2014

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், குமராட்சி ஒன்றியத்தில் உள்ள வடக்கு மாங்குடி கிராமத்தில் சுமார் 400 வன்னியர் குடும்பங்களும் நூறு தலித் (பறையர்) குடும்பங்களும் வாழ்கின்றன.  நாடாளுமன்றத் தேர்தல் நடந்த அன்று (24–04–2014) இரவு ஏழு மணி வாக்கில் அங்கு  நடைபெற்ற சாதி வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் தாக்கப்பட்டன. தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் தற்போது இருவர் இறந்துள்ளனர். இன்னும் அக்கிராமத்தில் அமைதி திரும்பவில்லை. இது குறித்த உண்மைகளை அறியவும் அக்கிராமத்தில் அமைதி திரும்புவதற்கான வழி முறைகளைக் கண்டறியவும் இப்பகுதியில் இயங்குகிற ‘சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டணி’யின் பொறுப்பாளர் திரு.எஸ்.சுந்தர் அவர்கள் ஒரு உண்மை அறியும் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று கீழ்க்கண்டவாறு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

குழு உறுப்பினர்கள்

பேரா. அ. மார்க்ஸ், மனிதஉரிமைகளுக்கானமக்கள்கழகம் (PUHR), சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள்உரிமைக்கூட்டமைப்பு (FPR). புதுச்சேரி
வழக்குரைஞர்க. கவுதமன், சிதம்பரம்,
வழக்குரைஞர்க. கேசவன், குடியுரிமைப்பாதுகாப்புமையம் (CPCL) சென்னை,
இரா. பாபு, இளைஞர்களுக்கானசமூகவிழிப்புணர்வுமையம் (SASY), கடலூர்,
ஆர். தனவந்திரன், ஏகாதிபத்தியஎதிர்ப்புஇயக்கம், சீர்காழி,
தே. மகேஷ், திராவிடர்விடுதலைக் கழகம், மயிலாடுதுறை,
எம். அன்பு,  திராவிடர்விடுதலைக் கழகம், மயிலாடுதுறை.

   இக்குழு உறுப்பினர்கள் நேற்று வடக்கு மாங்குடி சென்று இரு தரப்பு மக்களையும் சந்தித்து விரிவாகப் பேசினர். பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் சேதமாக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டனர். வன்னியர் மக்கள் தந்த மனுக்களையும் பெற்றுக் கொண்டனர். முதல் தகவல் அறிக்கை, இறந்தவர்கள் இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை, பாதிக்கப்பட்டோருக்கு அரசு அளித்துள்ள உதவி தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றையும் சேகரித்துக் கொண்டனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராம் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் மிகவும் விளக்கமாக எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். முன்னதாக இக்குழுவைச் சேர்ந்த பாபு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப் பட்டவர்களையும் சிதம்பரம் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி அமுதா சிவானந்தம் அவர்களையும் சந்தித்து வந்தார்.

பின்னணி

      வடக்கு மாங்குடி கிராமத்தில் வன்னியர் பகுதியை ஒட்டி சுமார் 100 மீட்டர் தொலைவில் தலித் குடியிருப்பு அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தீவைப் போல இது வன்னியர் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. தலித் மக்களின் வீடுகளை ஒட்டி வன்னியர்களின் சுடுகாடு உள்ளது. பிணங்கள் எரிக்கப்படும்போது அங்குள்ள தலித் வீடுகள் அனைத்திலும் துர் நாற்றம் மட்டுமல்லாமல் புகையும் சூழும் நிலையில் இச் சுடுகாடு அமைந்துள்ளதை பஞ்சாயத்து மற்றும் அரசு நிர்வாகங்கள் எவ்வாறு இதுகாறும் அனுமதித்து வந்துள்ளன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. தற்போது பிரச்சினைக்குப் பின் காவல்துறை அளித்த அழுத்தத்தின் காரணமாக அதற்குப் பின் இறந்த இரு வன்னியர்களின் உடல்கள் அங்கு எரிக்காமல் புதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் படம் எடுத்துக் கொண்டோம்.

   தலித் மக்களில் ஒருவரைத் தவிர பிறர் யாருக்கும் வீட்டு மனைகளைத் தவிர வேறு சொத்துக்கள் இல்லை. அவர்கள் தம் வாழ்வாதாரத்திற்கு வன்னியர்களையே சார்ந்துள்ளனர். அவர்கள் வெளியூர் செல்வதாயினும், பில்ளைகள் பள்ளிக்குச் செல்வதாயினும் வன்னியர் குடியிருப்புகளைக் கடந்தே செல்ல வேண்டும். அப்போது பேன்ட் அணிந்து செல்லும் மாணவர்களை அமட்டுவது, மாணவிகளைக் கிண்டலடிப்பது முதலான நிலை எப்போதும் உள்ளதாக தலித் மக்கள் அனைவரும் ஒத்த குரலில் புலம்பினர். தவிரவும் தலித் குடியிருப்பிற்கு அருகிலுள்ள சுடுகாட்டிற்குப் பிணத்தை எடுத்துச் செல்லும் போது பாடைகளில் சுற்றியுள்ள பூமாலைகளை தலித் வீடுகள் மீது வீசுவது, வாண வெடிகளை அந்தப் பக்கமாக எறிவது, தாரை தப்பட்டைகளை உரக்க முழக்கி அச்சுறுத்துவது முதலியன தொடர்ந்து நடந்து வந்துள்ளன. கண்ணுசாமி என்பவரின் மனைவி செல்வி (60) என்பவர் மீது இவ்வாறு எறியப்பட்ட வாணம் ஒன்று அவரது காலில் தொடை வரை எரித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததை எங்கள் குழு படம் எடுத்துக் கொண்டது.

   தலித் மக்கள் மலம் கழிக்கச் செல்வதானாலும் ஆடு மாடுகளை மேய்ப்பதானாலும் வன்னிய மக்களுக்குச் சொந்தமான வெளிகளுக்குத்தான் செல்ல வேண்டும். அபோதெல்லாம் சில நேரங்களில் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் உண்டு. இன்றைய பிரச்சினைக்குப் பின் கிராம சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கட்டப்பட்டு தண்னீர் வசதிகள் இல்லாது மூடப்பட்டிருந்த ஒரு கழிவறை தற்போது பயன்படுத்தப்படும் வகையில் சீர்திருத்தப் பட்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். தற்போது பெண்கள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதாகவும், அப்படியும் அங்கு குளிப்பதற்கு வசதி இல்லை எனவும் கூறப்பட்டது.

   தலித் மக்களுக்கான சுடுகாடு சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. அதற்குப் பாதை கிடையாது. மழைக் காலத்தில் பிணங்களைத் தூக்கிச் செல்வது மிகவும் பிரச்சினை. எனினும் எந்த மாற்றையும் வசதிகளையும் அரசு இது தொடர்பாகச் செய்து தரவில்லை. இது தொடர்பாக வன்னிய மக்களிடம் பேசும்போது அவர்கள் அந்தப் பாதை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் வடிகால் பகுதி எனவும் அவ்வழியே சாலை அமைக்கப்பட்டால் நீர் வழியமுடியாமல் தேங்கும் நிலை ஏற்படும் எனவும் கூறினர். தலித் மக்களுக்கான இச்சுடுகாட்டை ஒட்டியுள்ள நிலங்களில் செங்கல் அறுப்பது முதலான வடிவங்களில் வன்னியர்கள் ஆக்ரமிப்புச் செய்துள்ளதாகவும் தலித் மக்கள் குற்றம் சாட்டினர்.

   நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இத் தொகுதியில் மோதிரச் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும். பா.ம.க சார்பில் மாம்பழம் சின்னத்தில் சுதா மணிரத்தினம் அவர்களும் போட்டியிட்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சந்திரகாசி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

   நெடுநாளாகக் கனிந்து கொண்டிருந்த இந்த தீண்டாமைப் பகை இன்று தேர்தலில் வக்களிப்பது தொடர்பான ஒரு பிரச்சினையை ஒட்டி ஒரு சாதி வன்முறையாக வடிவெடுத்துள்ளது.

சம்பவம்

     ஏப்ரல் 24 அன்று வாக்குப் பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் முதலியன கொண்டு செல்லப்பட்ட கையோடு இரவு ஏழு மணி வாக்கில் தலித் குடியிருப்பிற்கு அருகாமையிலிருந்த ட்ரான்ஸ்ஃபார்மர் அணைக்கப்பட்டுப் பெருங் கூச்சலுடன் சுமார் அறுபது எழுபது பேர் அடங்கிய கும்பலொன்று தலித் மக்கள் வசித்த பகுதியில் இரும்பு பைப் மற்றும் தடிகள், அருவாள்கள் ஆகியவற்றுடன் கொச்சையான சொற்களில் சாதி சொல்லித் திட்டிக் கொண்டு பெருங் கூச்சலுடன் நுழைந்துள்ளது.

   வெறித்தனமாக நுழைந்த இக்கும்பலைக் கண்டவுடன் தலித் இளைஞர்களும் வயது வந்த ஆண்களும் தப்பித்து ஓடியுள்னர். எஞ்சிய வயதானோரும் பெண்களும் மட்டும் அஞ்சி நடுங்கிய வண்ணம் அங்கிருந்துள்ளனர். அவர்கள் கம்புகளாலும் இரும்புத் தடிகளாலும் தாக்கப்பட்டுள்ளனர். வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த கிரைன்டர்கள் முதலியன அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள ஒரே சற்றுப் பெரிய கான்க்ரீட் வீடு விடுதலைச் சிறுத்தைகளின் முகாம் தலைவர் தம்பிதுரை (த/பெ நாகூரான்) யுடையது. அதற்குள் நுழைந்து இரும்பு பீரோவை உடைத்துள்ளனர். கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன.

   வன்முறை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் வந்து குவிந்து நிலைமையைக் கட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

   ஆனால் காவல்துறை வருவதற்குள்ளான இந்த இடைப்பட்ட சுமார் 45 நிமிடங்களில் குறைந்தபட்சம் பத்து பேர்கள் கடுமையாகத் தக்கப்பட்டனர். அதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். சிதம்பரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட எட்டு பேர்களில் இந்த நால்வரும் கடலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் ஜிப்மெருக்கு அனுப்பப் பட்டனர். இவர்களில் அய்யாக்கண்ணு மகன் பழனி (80) தாக்கப்பட்ட 13ம் நாள் வீடிற்குக் கொண்டுவரப்பட்டு மரணம் அடைந்தார். சிவக்கொழுந்து மனைவி பாப்பா (65) சரியாக ஒரு மாதம் கழித்து ஜிப்மெர் மருத்துவமனையில் இறந்தார். இவர்களுக்கு வெளிக்காயங்கள் இருந்தது பிரேத பரிசோதன அறிக்கையில் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  .

    வாசல்களில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் இரு டாடா ஏஸ் வாகனங்கள் அடித்துச் சேதப்படுத்தப்பட்டன. பல வீடுகளில் கிரைன்டர், மிக்சி முதலியன நொறுக்கப்பட்டுள்ளன. ஒரு குடிசை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

  தம்பிதுரையின் வீடு சேதப்படுத்தப்பட்டது தவிர உடைக்கப்பட்ட பீரோவிலிருந்த 3 பவுன் சங்கிலி ஒன்றும் வாசலில் பம்புடன் இணைக்கப்பட்டிருந்த மோட்டார் ஒன்றும் வன்முறையாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

   தாக்குதல் நடந்த அடுத்த நாள் (ஏப்ரல் 26) இரவு வன்னியர்களுக்குச் சொந்தமான இரு மோட்டார் கொட்டகைகள் எரிந்துள்ளன. அவற்றில் இருந்த விதை நெல் முதலியனவும் எரிந்துள்ளதாக வன்னியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தலித் மக்களே அதைச் செய்தனர் எனவும் குறிப்பான சில பெயர்களைச் சுட்டியும் வன்னியர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மறுத்த தலித் மக்கள் இதை வன்னியர்களே செய்து விட்டுத் தம் மீது பழி போடுகின்றனர் எனக் கூறுகின்றனர்.

மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

  அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சென்ற ஏப்ரல் 25 அன்று பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (குற்ற எண் 114/14) மற்றும் மே 17 அன்று தாக்கல் செய்யப்பட்ட  சட்டப் பிரிவுத் திருத்த அறிக்கை ஆகியவற்றில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இ.த.ச 1147,148,294 (பி), 324,323,307,379,436, 302 3 of PPD act, SC St Act திருத்தப்பட்ட அவசரச் சட்டம் 2014  3(1)(r), 3(1)(s), 3(1)(0), 3(2)(va) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   ஏப்ரல் 25 அன்று 25 பேரும், 26ல் ஒருவரும், மே 19ல் ஒருவரும், 23ல் மூவரும் ஆக 30 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 78 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 48 பேர் தேடப்பட்டு வருவதாகவும் வழக்கை விசாரித்து வரும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் குறிப்பிட்டார். மற்றவர்களைக் கைது செய்வதில் ஏன் இந்தத் தாமதம் எனக் கேட்டபோது மூன்று படைப் பிரிவுகள் அமைத்துத் தேடி வருவாதாகவும் விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவதாகவும் அவர் கூறினார்.

   முதல்நாள் கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருந்தும் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர். மற்றவர்களும் இன்று இச் சட்டத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் தற்போது இருவர் இறந்துள்ளதால் இ.த.ச 302, 307 வது பிரிவுகளின் கீழ் பிணை பெற வேண்டியுள்ளதால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. எனினும் அவர்களும் இந்தப் பிரிவுகளிலும் பிணை பெற்று விரைவில் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

   தமது மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டதாக வன்னியர்கள் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

     மே 23 அன்று நடந்த அமைதிக் கூட்டத்தில் தலித் மக்கள் மட்டுமே கலந்து 
கொண்டுள்ளனர்.. நாங்கள் விசாரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் வந்து தலித் மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

   இறந்து போன இருவர் குடும்பங்களுக்கும் தலா 1,85,000 ரூபாயும், பிற காயம்பட்ட ஒவ்வொருவருக்கும் 2500 முதல் 5,000 ரூபாய் வரையும், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டவர்களுக்கு 3,000 முதல் 8,000 வரையிலும், எரிந்த மற்றும் தாக்கப்பட்ட வீடுகளுக்கு 2,500 முதல் 5000 ரூபாய் வரையும் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் கூற்று

   இரு தரப்பிலும் நாங்கள் பலரையும் சந்தித்தோம். ஆண்கள், பெண்கள் இளைஞர்கள் என ஒவ்வொரு தரப்பிலும் சுமார் 50 பேர்கள் எங்கள் முன் வாக்குமூலங்கள் அளித்தனர். அவர்களின் பெயர்கள் இங்கே தவிர்க்கப்படுகின்றன. வன்னியர் தரப்பில் எழுத்து மூலமாகவும் வாக்கு மூலங்கள் அளிக்கப்பட்டன.

   தலித் மக்கள் கூறியது: “மாம்பழத்துக்கு ஓட்டுப் போடமாட்டீங்களான்னு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டிகிட்டே வந்து அடிச்சாங்க. எங்க பசங்க பேன்ட் சர்ட் போட்டுட்டு ரோடு வழியாப் போக முடியாது. பள்ளிக் கூடத்துக்குப் போற பொம்புளப் புள்ளங்களை வன்னியர் தெரு தாண்டுற வரைக்கும் யாராவது கூடவே பெரியவுங்க கொண்டு போய் விட வேண்டி இருக்கு. டீக்கடைகள்ல எங்களுக்கு டவரா செட்டிலதான் டீ குடுப்பாங்க. பஸ்சில அவங்க ஏறி உட்காந்தப்புறந்தான் நாங்க ஏறணும். இப்ப அவங்க எங்களுக்கு வேல கொடுக்கிறதுல்ல, எங்க ஆடு மாடுங்களை மேய்க்க விடமாட்டேங்குறாங்க. நாங்க எல்லாத்தையும் பக்கத்து கிராமங்கள்ல இருக்கிற எங்க சொந்தக்காரங்க வீடுகளுக்கு ஓட்டி விட்டுட்டோம் நாங்க இந்த ஊருல தொடர்ந்து இருக்க முடியாது. எங்க புள்ளைங்களாவது பயமில்லாம வாழ ஏதாவது வழி செய்யணும். சிதம்பரம் பை பாஸ் ரோட்ல இருக்கிற கூத்தங் கோயில்ல எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கணும். நாங்க எல்லாரும் அங்கே போயிடுறோம்.”

    இவற்றைச் சொல்லும்போது சிலர் அழுதனர். எல்லோர் கண்களிலும் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது. ஓட்டுக் கேட்க வந்த பா.ம.கவினரிடம் சம்பந்தம் வச்சுக்கலாமா என தலித் யாரோ ஒருவர் கேட்டதால்தான் இவ்வளவும் நடந்துள்ளது என அவர்கள் சொல்கின்றனரே என நாங்கள் கேட்டபோது அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே இல்லை என உறுதியாக மறுத்தனர். அதே போல வன்னியர்களின் இரு மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டதற்குத் தாங்கள் காரணம் இல்லை, அவர்களே எரித்துக் கொண்டு விட்டுத் தம் மீது புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினர். போலீஸ் காவல் உள்ள போது நாங்கள் எப்படி அதைச் செய்திருக்க முடியும் என்றனர். வன்னியர்களைப் போலீஸ் தேடிக் கொண்டுள்ளபோது அவர்கள் மட்டும் இதை எப்படிச் செய்திருக்க முடியும் என நாங்கள் கேட்டபோது, அவங்க எல்லாம் பக்கத்துக் கிராமங்கள்லதானே ஒளிஞ்சிருக்காங்க, ராத்திரியில வந்து எரிச்சிருப்பாங்க என்று பதில் வந்தது.

  வன்னியர் தரப்பில் இத்தகைய தீண்டாமை ஒதுக்கல்களில் முன்நிற்பவர்களாக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்கள் தமிழ்மாறன், தன ராஜேந்திரன், இன்றைய தலைவர் செந்தில், மற்றும் லோகநாதன், ஆசைமணி, முத்துக்குமரன், ராஜசேகரன், கபிலன் முதலானவர்களின் பெயர்களைக் கூறினர்.

   வன்னியர் தரப்பில் கூறியது: “இதுவரைக்கும் எங்க கிராமத்துல எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை. இப்ப ஓட்டுக் கேக்கப் போனபோது அவங்க பசங்க யாரோ ஏதோ பொண்ணு தருவீங்களான்னு சொன்னதா சொல்றாங்க. அன்னைக்கு ராத்திரி எங்க ஆளுங்க இதைக் கேக்கப் போனபோதுதான் பிரச்சினை. ரொம்பப் பேரு போகல. ஒரு இருவது முப்பது பேரு போயிருப்பாங்க. ஆனா எழுபது பேருக்கும் மேல கேஸ் போட்டுத் தேடுறாங்க. இந்தப் பிரச்சினைக்குச் சம்பந்தமே இல்லாத இஞ்சினீரிங் படிக்கிற கதிரவன், விஜயபாலன், கலைச்செல்வன் அப்புறம் விஜயேந்திரன் மாதிரி மாணவர்களை எல்லாம் புடிச்சுக் கைது பண்ணி இருக்காங்க. வெளியூர்கள்கள்ல வேல செஞ்சுட்டுருக்கவங்களை எல்லாம் கேஸ்ல சேத்திருக்காங்க. அப்பாவிங்கள கேஸ்ல இருந்து விடுவிக்கணும்.”

   நிறையப் பெண்கள் முன்வந்து எங்களிடம் பேசினர், தங்களின் மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் குறை கூறினர். ஏப்ரல் 24 அன்று தங்கள் தரப்பில் கொஞ்சப் பேர்கள் சென்று தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொண்ட அவர்கள், எனினும் இறந்து போனவர்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனவும், அவர்கள் கீழே விழுந்து இறந்திருக்கலாம் எனவும் கூறினர். ஏன் நீங்கள் இப்போது தலித் மக்கள் யாருக்கும் வேலை கொடுக்கவில்லை எனக் கேட்டபோது இப்பத்தான் எல்லாம் நடந்திருக்கு. எங்கள் ஆம்பிளைகளே இன்னும் வீடு திரும்பல. .அவங்க வந்து விவசாய வேலைகளைத் தொடங்கினாதான நாங்க அவங்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்றனர்.

   அன்றைய தாக்குதலில் நேரடியாகப் பங்கு பெறாத சிலரும் கைது செய்யப்பட்டிருப்பதை தலிப் தரப்பிலும் ஏறுக்கொண்டனர். இது குறித்துத் துணைக் கண்காணிப்பாளரைக் கேட்டபோது இந்த வன்முறையை நியாயப்படுத்தி இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த வகையில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அவ்வளவு பேரும் குற்றவாளிகளே எனவும் தாங்கள் அப்பாவிகள் யாரையும் கைது செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

1. வடக்கு மாங்குடியில் இதுவரை பெரிய சாதி மோதல்கள் நடைபெறாவிட்டாலும் பல்வேறு வடிவங்களிலும் தீண்டாமை ஒடுக்குமுறைகள் அங்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளன. நாலாபுறமும் ஆதிக்க சாதியினரால் சூழப்படுள்ள இம்மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  தேர்தலை ஒட்டிய இன்றைய தாக்குதல் இந்த அச்சத்தை மிகுதிப்படுத்தியுள்ளது. இனிமேலும் இந்தக் கிராமத்தில் வாழ இயலாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு இன்று அவர்கள் வந்துள்ளனர். தலித் மக்களுக்குத் தனிக் குடியிருப்பு வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கட்டத்தில் வைத்த கோரிக்கையை இன்று அவர்கள் ஒரு கையறு நிலையில் தன்னிச்சையாக வைக்க நேரிட்டுள்ளனர். அமைதிக் கூட்டத்திலும் அவர்கள் இக் கோரிக்கையை வைத்துள்ளனர் சுற்றிலும் ஆதிக்கச் சாதியினரால் சூழப்பட்டுள்ள நிலையும், சாதி வெறி அரசியல் ஒன்று இங்கு கட்டமைக்கப்ப்டுகிற சூழலும் இன்று தங்களின் பாரம்பரிய வாழிடத்தை விட்டுவிட்டு வெளியேறும் நிலைக்கு த்லித் மக்களைத் தள்ளியுள்ளது கவலை அளிக்கிறது. இந்த அச்சத்தைப் போக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. தாக்குதல் நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் 78 பேர்கள் இருந்தும் மாதம் ஒன்றாகியும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 48 பேர்கள் இன்னும் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. தருமபுரியில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட பலர் பின்னர் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் கைது செய்யப்படாமல் போனது போல இங்கும் நிகழக் கூடாது. தேடப்படுகிற பலரும் அருகிலுள்ள கிராமங்களிலேயே ஒளிந்துள்ளதாகத் தெரிகிறது. மூன்று தேடுதல் படைகள் அமைத்தும் அவர்களைக் கைது செய்ய இயலவில்லை எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை. காவல்துறை உடனடியாகப் பிறரையும் கைது செய்ய வேண்டும்.

3. இந்தத் தாக்குதலுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததில் முழுச் சமூகத்திற்கும் பொறுப்புள்ளது எனக் காவல்துறை சொல்வது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனினும் முற்றிலும் தொடர்பில்லாத சில மாணவர்களும், வெளியூரில் இருந்த சிலரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என வன்னியர் தரப்பில் சொல்லப்படுவதால் காவல்துறையினர் இதைத் தீர விசாரித்து அதில் உண்மை இருந்தால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கலாம். அதேபோல இப்போது வழக்கில் சேர்க்கபடாதவர்களில் யாரும் வன்முறையின் பின்னணியில் இருந்துள்ளனரா எனத் தீர விசாரித்து அப்படி இருந்தால் அவர்களும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

4. ஆதிக்க சாதியினரின் சுடுகாடு உடனடியாக தலித் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப் பட வேண்டும் தலித் மக்களின் சுடுகாட்டிற்குச் செல்லும் பாதை நீர் வடிகாலைப் பாதிக்காத வகையில் உடனடியாகச் சீர்திருத்தப்பட வேண்டும். தலித் மக்கள் பயன்படுத்துவதற்கு இன்னும் அதிக அளவில் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் உடனடியாகக் கட்டித் தரப்பட வேண்டும். தலித் மக்களுக்குக் கட்டித் தரப்பட வேண்டிய சுமார் எட்டு தொகுப்பு வீடுகளின் பணி கட்டுமானப் பொருட்கள் வழங்கப் படாமையினால் நின்று போயுள்ளது. உடனடியாக அவற்றை வழங்கிப் பணிகளை நிறைவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.

5. சுற்றிலும் ஆதிக்கச் சாதியினரால் சூழப்பட்டுள்ள தலித் மக்கள் தற்சார்பு பெற அவர்களுக்கு நிலம் அளிக்கப்படுதல் அவசியம். குடும்பம் ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் அளிக்கும் திட்டம் இங்கு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை நூறு நாள் வேலைத் திட்டம் முதலியவரற்றை தலித் மக்களுக்கு உடனடிப் பயன் அளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். தற்போது இவ்வேலைத் திட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு இரு மாத ஊதிய பாக்கி இருப்பதாகத் தலித் தரப்பில் கூறப்பட்டது. அது உடனடியாக வினியோகிக்கப்பட வேண்டும்.

6. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு முன் ஜாமீன் அளிக்கப்படக் கூடாது என விதி இருந்தும் அவர்களுக்கு முன் ஜாமீன் அளிப்பதும், கைது செய்யப்பட்டவர்கள் எளிதில் பிணையில் விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது வருந்தத்தக்கது. நீதிமன்றங்களும் இதற்கு ஒத்துழைப்பது வேதனை அளிக்கிறது. தற்போது திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்பு அவசரச் சட்டத்தில் (2014) வன்முறையாளர்களைப் பிணையில் விடுதலை செய்யும் போது பாதிக்கப்பட்டவர்களிடம் இவ்வாறு விடுதலை செய்வதால் தங்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் உள்ளதா என அவர்களின் கருத்தைக் கேட்க வேண்டும். எனினும் இவ்வாறு கேட்கப்படாமலேயே இப்போது கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நாங்கள் கேட்டபோது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எளிதில் இனிப் பிணையில் விடுதலை ஆகாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் துணைக் கண்காணிப்பாளர் பதிலுரைத்தார். திருத்தப்பட்ட அவசரச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலக் காவல்துறைத் தலைமை இச் சட்டப் பிரிவுகளை விளக்கி உரிய சுற்றறிக்கைகளை உடனடியாகக் காவல் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

7. தலித் மக்களுக்கு வேலை கொடுக்க மறுப்பது, வன்னியர் பகுதி வழியே தலித் மாணவ மாணவிகள் செல்வதற்கு அச்சம் நிலவுவது, தலித் மக்கள் ஆடு மாடுகள் மேய்ப்பதற்குத் தடை என பல பிரச்சினைகள் உள்ளன. இத்தகைய அச்சங்களைப் போக்கும் வண்ணம் இரு தரப்பினரையும் கூட்டி அமைதிப் பேச்சு வார்த்தை ஒன்றை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

 தொடர்பு: 

அ.மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
அடையாறு, 
சென்னை- 600020.   
செல்: 94441 20582, 9894054640

நன்றி: அ.மார்க்ஸ்

மேல்மங்கலம்,உத்தபுரம் சாதி வன்முறைகள் – உண்மை அறியும் குழு அறிக்கை

                 மேல்மங்கலம்,உத்தபுரம் சாதி வன்முறைகள் – 

                               உண்மை அறியும் குழு அறிக்கை

                                                                                                                                                                                 மதுரை,
                                                                                   மே 19, 2014.

  தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஆண்டிப்பட்டி சாலையில் வடுகப்பட்டியை ஒட்டி உள்ள ஊர் மேல்மங்கலம். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஊர்களை ஒட்டி அமைந்துள்ள ஊர் இது. ஏப்ரல் 6 அன்று இரவு அவ்வூரைச் சேர்ந்த, ஆனால் தற்போது வெளியூரில் வசிக்கும் நண்பர் ஒருவரிடமிருந்து பதட்டத்துடன் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள அருந்ததிய மக்களின் வீடுகளை அவ்வூர் ஆதிக்க சாதியினர் எரித்துள்ளதாகவும், மக்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நண்பர் கூறினார்.
அடுத்த நாள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திலுள்ள உத்தபுரம் கிராமத் திருவிழாவில். நீதிமன்ற ஆணையை மீறி அவ்வூர் ஆதிக்க சாதியினர் அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற காவல்துறை மற்Ruம் வருவாய்த் துறை அதிகாரிகளை அவ்வூர் ஆதிக்க சாதியினர் கல்லெறிந்து தாக்கிய செய்தியையும் அறிந்தோம்

    அடுத்தடுத்த நாட்கள் நாளிதழ்களிலும் இவை தொடர்பான செய்திகளைக் கண்ட எங்கள் குழுவினர் சென்ற ஏப்ரல் இறுதியில் மேல்மங்கலம் சென்று இது தொடர்பாக விசாரிக்க முனைந்தபோது காவல்துறையினர் எங்களை அனுமதிக்க மறுத்தனர். காவல்துறைக் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசியும் எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

   சென்ற சில மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் நடுப்பட்டி கிராமத்தில் அருந்ததிய மக்கள் தாக்கப்பட்டது குறித்த உண்மைகளை அறிய நாங்கள் சென்றபோதும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் இரு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்யச் சென்றபோதும் இவ்வாறே காவல்துறையினர் எங்கள் முயற்சிகளைத் தடை செய்துள்ளனர்.

    மிக்க நடுநிலையுடன் பிரச்சினைகளை ஆய்வு செய்து வெளியிடப்படும் எங்கள் அறிக்கைகள் நீதிமன்றங்களாலேலேயே முக்கிய ஆவணங்களாக பலநேரங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இப்படியான உண்மை அறியும் குழுக்களை அமைத்து செயல்படுவதற்கு முன்னோடியாக விளங்குபவர் மகாத்மா காந்தி அடிகள்தான். ஜாலியன்வாலா பாக் படுகொலையின் போது மோதிலால் நேரு அவர்கள் காந்தி தலைமையில் அப்படி ஒரு குழுவை நியமித்தார். மிக நடுநிலையான அற்புதமான அந்த அறிக்கை அக்காலத்திலேயே தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கி வெளியிடப்பட்டது.

    பரமக்குடி துப்பாக்கிசூடு குறித்த இது போன்ற ஒரு ஆய்வைத் தடை செய்ய தமிழகக் காவல்துறை நீதிமன்றத்தை அணுகியபோது நீதியரசர் இராமசுப்பிரமணியம் அவர்கள் அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மனித உரிமை அமைப்புகளின் இத்தகைய செயல்பாடுகள் ஒரு மூன்றாவது புலனாய்வு முயற்சி எனவும் உண்மைகளை அறிய இவை உதவி புரிகின்றன எனவும் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

   இந்தப் பின்னணியில் நாங்கள் இம்முறை நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தோம். எங்கள் மனு [W.P. (MD) NO. 6750 of 2014] நீதியரசர் இராம சுப்பிரமணியம் அவர்கள் முன் விசாரணைக்கு வந்தபோது ஏற்கனவே அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டதாகவும் நாங்கள் இவ்வூர்களுக்குச் செல்வது அந்த அமைதியைக் குலைக்கும் எனவும்  அரசு வழக்குரைஞர்  வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதியரசர் அரசியல்சட்டத்தின் 19 (1) (e) பிரிவின்படிஅங்கு செல்வது எங்களின் அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டினார். இன்று அங்கு நிலவும் அமைதி குலையக் கூடாது என அரசு தரப்பில் சொல்வது புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்றபோதிலும் இந்த அமைதி இயற்கையாக உருவானதா இல்லை மேலிருந்து திணிக்கப்பட்டதா என உறுதி செய்யும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. ஒரு மூன்றாவது தரப்பு இதை உறுதி செய்வது உண்மையில் காவல்துறையின் பணிக்கு ஒரு நற் சான்றாகவே அமையும். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் காவல் மற்றும் வருவாய்த்துறையினரே இது போன்ற மூன்றாம் தரப்பினரை அப்பகுதிகளுக்குச் சென்று வர அழைப்பு விடுத்து உண்மைகளை அறியச் செய்வது நல்லது எனக் கூறி மேற்குறித்த இரு கிராமங்களுக்கும் எங்கள் குழு சென்று வர அனுமதிக்குமாறு ஆணையிட்டார் (ஏப்ரல் 29, 2014).

     இதன்படி சென்ற மே 14 அன்று மேல்மங்கலம் கிராமத்திற்கு நேரிற் சென்று இரு தரப்பு மக்களையும், ஜெயமங்லம் காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் என்பவரையும் சந்தித்தோம். தேனி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேஷ் ஐ.பி.எஸ் அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததால் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசினோம்.

   மாலையில் உத்தபுரம் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம். காவல்துறை அதிகாரிகள் மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்ததால் சந்திக்க இயலவில்லை. விவரங்கள் வருமாறு:

எங்கள் குழுவினர் :

    மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தை (People’s Union for Human Rights) சேர்ந்த பேரா. அ.மார்க்ஸ், வழக்குரைஞர் ரஜினி மற்றும் கு.பழனிச்சாமி, தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பைச் (National Confederation of Human Rights Organisations) சேர்ந்த வழக்குரைஞர் ஏ.சையத் அப்துல் காதர், ஆதித் தமிழர் பேரவையின் மாநிலத் துணைச் செயலாளர் விடுதலை வீரன் ஆகியோர்.

மேல்மங்கலம்

    அருந்ததிய மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட காமாட்சி மகன் முத்துவேலு (39), பழனிச்சாமி மகள் காவியா (7), பழனி மனைவி பாண்டியம்மாள் (35), முத்தையா மனைவி காளியம்மாள் (80), கருப்பன் மனைவி நாகம்மாள் (70), முருகன் மனைவி முத்துப்பழனி (28), அழகுமணி மனைவி ஈஸ்வரி (39) உள்ளிட்ட பலரையும் சந்தித்தோம். அருந்ததிய மக்களின் உறவு முறைத் தலைவர் எஸ்.எம்.முருகன் மற்றும் ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டத் தலைவர் வீர பாண்டியன் ஆகியோர் விரிவாகத் தம் மக்கள்மீது நடைபெற்ற தாக்குதல் பற்றிக் கூறினர், எரிக்கப்பட்ட வீடுகள், கொளுத்தப்பட்ட அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் பார்வையிட்டுப் புகைப் படங்களும் எடுத்துக் கொண்டோம்.

   மேல்மங்கலம் கிராமத்தில் அம்பலக்காரர், கள்ளர், மறவர், ஆசாரி, பிள்ளமார், செட்டியார் ஆகிய ஆதிக்க சாதியினர் மத்தியில் சுமார் 100 அருந்ததியக் குடும்பங்கள் வசிக்கின்றன. ஆதிக்க சாதியினர் மொத்தத்தில் 1000 தலைக்கட்டு எனக் கூறப்படுகிறது. நிலமனைத்தும் கள்ளர், தேவர், அம்பலக்காரர் முதலான ஆதிக்க சாதியினருக்கே சொந்தம். அருந்ததிய மக்கள் இவர்களிடம் கூலி வேலை செய்து வாழ்கின்றனர். சுமார் 7 பேர் துப்புரவுப் பணி செய்கின்றனர். படித்தவர்கள் யாருமில்லை.
22 ஆண்டுகளுக்கு முன் பாண்டி என்கிற அருந்ததிய இளஞர் ஒருவர் அகம்படியர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒண்டு ஊரை விட்டு ஓடியுள்ளார். அதன் பிறகு இன்றுவரை அவர் ஊர் திரும்பவில்லை.

   அதற்குப் பின் இன்று மேல்மங்கலம் கிராமத்து அருந்ததிய சாதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பாலுச்சாமியின் மகன் சுரேஷ் (32) என்பவர் அதே ஊரை சேர்ந்த நாட்டார் கள்ளர் சாதியச் சேர்ந்த முத்துலட்சுமியைக் காதலித்து வந்துள்ளார்.  ஏப்ரல் முதல் வாரத்தில் இருவரும் ஊரை விட்டுச் சென்று எங்கோ வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

     ஏப்ரல் 3 அன்று நாட்டார் கள்ளர் சாதியச் சேர்ந்த மலைச்சாமி, பால்கார மணி, செல்லப்பாண்டி,  சுப்பையர அம்பலகாரர் மகன் முருகன் முதலானோர் அருந்ததிய உறவு முறைத் தலைவர் ஜி.எம்.முருகனைச் சந்தித்து உடனடியாகத் தம் பெண்ணைக் கொண்டு வந்து ஓப்படைக்குகுமாறு எச்சரித்துள்ளனர். முருகன் ஒப்புக் கொண்டு ஒருவார கால அவகாசம் கேட்டு வந்துள்ளார்.

    உறவுமுறைக் கூட்டத்தைக் கூட்டி அவர் பேசியபோது சுரேஷின் பெற்றோர், தம் மகன் சுரேஷும் முத்துலெட்சுமியும் இருக்குமிடம் தமக்குத் தெரியாது எனவும், எனவே தாங்கள் எதுவும் செய்ய இயலாது எனவும் கூறி விட்டனர். ஒரு கட்டத்தில் விவாதம் முற்றி சுரேஷின் சகோதரன், முருகனுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதற்கிடையில் ஆதிக்க சாதியினரின் மிரட்டலால் அருந்ததியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள அல்லிநகரம் கிராமத்தில் சுரேஷும் முத்துலட்சுமியும் இருப்பதாகக் கேள்விப்பட்டு 6 ந்தேதி காலை முருகன் அங்கு சென்று விசாரித்துள்ளார். தமிழ்ப் புலிகள் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்களிடமும் கேட்டுள்ளார். எதுவும் பயனின்றி ஊர் திரும்பியுள்ளார்.

    அன்று மதியம் புரோட்டா வாங்கக் கடைக்குச் சென்ற கருப்பசாமி என்கிற அருந்ததியச் சிறுவன் (17) ஒருவனை ஆதிக்க சாதி இளைஞர்கள் அடித்து அனுப்பியுள்ளனர். இது குறித்து முருகன் ஆதிக்க சாதித் தலைவர்களிடம் போனில் பேசிய போது சின்னப் பையன்கள் செய்து விட்டதாகவும், கண்டிப்பதாகவும் சமாதானம் சொல்லியுள்ளனர்.

   அன்று மாலை 6 மணி அளவில் அருந்ததியச் சாதியச் சேர்ந்த முருகுபாண்டி (35) என்பவர் குடித்துவிட்டு வந்து கள்ளர் சாதிப் பெண்ணைத் தம் சாதிப் பையன் அழைத்துச் சென்றதைப் பற்றி ஏதோ பெருமையாகப் பேசியுள்ளார். முருகுபாண்டி இவ்வாறு குடித்துவிட்டு வந்து மனைவியை அடிக்கக் கூடியவர் எனவும் யாருக்கும் கட்டுப்படாதவர் எனவும் முருகன் குறிப்பிட்டார்.

    முருகுபாண்டியின் பேச்சில் ஆத்திரமுற்ற கள்ளர், தேவர் முதலான ஆதிக்க சாதியினர் சுமார் 6.30 மணி வாக்கில் அருந்ததியர் வசிக்கும் சத்திய நகர் பகுதிக்குச் சென்று வீடுகளைத் தாக்கியுள்ளனர். முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும் தற்போதைய சொசைடி தலைவரும் நாட்டார் கள்ளர் சாதியில் முக்கியமானவருமான மலைச்சாமிடம் முருகன் இது குறித்து முறையிட்டபோது, “நான் போய் அவர்களை அமட்டி வைக்கிறேன்” எனச் சொல்லிச் சென்றுள்ளார்.

   ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான ஆதிக்க சாதியினர் ஆண்களும் பெண்களுமாய்த் திரண்டு வந்து மேல்மங்கலம் அருந்ததியர் பகுதியைத் தாக்கியுள்ளனர். ஆறு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். தாக்கியவர்கள் அருந்ததியர்களின் கடவுளரையும் விட்டுவைக்கவில்லை. கூரை வேய்ந்த இரு ‘வீர் சின்னம்மாள்’ கோவில்களும் எரிக்கப்பட்டுள்ளன.

   முத்துவேல் என்பவர் ஏழு குழந்தைகளை அழைத்துச் சென்று ஒரு வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்துள்ளார்.  பின் அந்த வீடும் எரிக்கப்பட்டுள்ளது நல்ல வேளையாக அவர்கள் அனைவரும் தப்பியுள்ளனர். எனினும் முத்துவேலுவிற்குத் கையில் தீக்காயம்பட்டுள்ளது. ஈஸ்வரி என்பவரின் காது அறுக்கப்பட்டு அதிலிருந்த கம்மலும் பறிபோயுள்ளது. பல வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டுள்ளன. தங்கள் வீட்டிலிருந்த பணமும் எரிக்கப்பட்டுவிட்டதாகவும், பறி போய்விட்டதாகவும் முத்துப்பழனி என்னும் பெண்ணும் முத்துவேலுவும் கூறினர். கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் வந்த காவல்துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

   இது குறித்து ஆதிக்க சாதியினரில் முக்கியமானவரான முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மலைச்சாமியிடம் நாங்கள் பேசியபோது தாங்கள் தாக்குதல் நடத்தியதை அவர் மறுக்கவில்லை. முருகுபாண்டியின் பேசில் ஆத்திரமுற்று அப்படி நடந்துவிட்டது என்றார், தங்கள் சாதிப் பென்ணை அழைத்துச் சென்ற சுரேஷின் குடும்பமே அப்படிப்பட்டதுதான் என்றார். சுரேஷின் அப்பா வேறொரு ஊரில் தான் தேவர் எனச் சொல்லி அச் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதாகவும் கடைசி நேரத்தில் தாங்கள் சென்று அவர் ஒரு மாதாரி என்பதைச்  சொல்லித் திருமணத்தை நிறுத்தியதாகவுக் குறிப்பிட்டார். சுரேஷ் – முத்துலட்சுமி காதலைப் பொறுத்த மட்டில் முத்துலட்சுமியை  ஒப்படைத்து விட்டு சுரேஷ் கேரளா பக்கம் போய்விடுவதுதான் சரியாக இருக்கும். அல்லது முத்துலெட்சுமியை விட்டுவிட்டு அவன் வேறு பெண்ணைக் கட்டிக் கொண்டு ஊருக்கு வரலாம் என்றார்.

      ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 20 பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது (குற்ற எண்: 60 / 2014). வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 3(1) (10), 3 (2) (5) முதலான பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பிணையில் விடுதலை செய்ய இயலாது. ஆனால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது என உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்து அந்த அடிப்படையில் வன்கொடுமையாளர்கள் பிணையில் விடுதலை கோருவதும் அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்வதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.. இங்கும் கைது செய்யப்பட 20 பேர்களும் ஒரே வாரத்தில் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர்.

    அருந்ததியர் சாதியைச் சேர்ந்த முருகு பாண்டியின் மீது இ.த.ச 307 வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு (குற்ற எண் 59) இன்னும் அவர் சிறையில் உள்ளார்.

   எரிக்கப்பட்ட 5 வீடுகளுக்கு 2500 முதல் 5000 வரை இழப்பீடும் துணி மணிகளும் பாத்திர பண்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. காயமடைந்த ஐவருக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவாகியுள்ளது.  பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 வீடுகள் கட்டித் தர உள்ளதாகவும் காவல்துறைத் தரப்பில் சொல்லப்பட்டது.

    இந்த இழப்பீடு முதலியவை எல்லாம் கூட எங்களைப் போன்றவர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னரே மேற்கொள்ளப்பட்டது என்பதும், அரசுத் தரப்பில் அதுவரை எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அருந்ததியர்களைத் தாக்கிய ஆதிக்க சாதியினர் தமிழக அமைச்சரவையில் மிகவும் செல்வாக்குள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சாதியைச் சேர்ந்தவர்கள். சிலர் உறவினர்களும் கூட. அதனால்தான் அரசு நடவடிக்கைகளில் இந்த மெத்தனம் காணப்பட்டது எனவும் தாக்கியவர்கள் எளிதில் பிணையில் விடுதலை பெற முடிந்துள்ளது எனவும் ஒரு கருத்தும் அந்த அடிப்படையில் அருந்ததியர்கள் மத்தியில் ஒரு அச்சமும் நிலவுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

   அருந்ததியர்களைப் பொருத்த மட்டில் அவர்கள் தங்கள் பிழைப்பிற்கு ஆதிக்க சாதியினரையே நம்பியுள்ளனர். தற்போது அவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. நியாய விலைக் கடையில் வேலை செய்த ஒருவரையும் கூட வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். துப்புரவுப் பணியாளர்கள் ஏழு பேர் மட்டும் அந்தப் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடுகளுக்குப் புல் பிடுங்கவும் கூடத் தங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றார் சக்திவேல் என்பவர்.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கடும் அச்சம் அருந்ததியர்கள் மத்தியில் நிலவுகிறது. அஞ்சி ஓடிபோன பலர் இன்னும் வீடு திரும்பவில்லை.

   நிவாரணப் பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார். வன்முறையாளர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதைப் பற்றிக் கேட்டபோது, நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது என்றார். வேலை கொடுக்காமல் சமூகப் புறக்கணிப்பு செய்யப்படுவதைப் பற்றிக் கேட்டபோது சுமார் 50 பேருக்குத் தான் அருகிலுள்ள கோவில் ஒன்றில் தற்காலிக வேலை வாங்கித் தந்துள்ளதைக் குறிப்பிட்டார். தினம் 200 ரூபாய்க் கூலியில் ஒரு வார காலத்திற்கு அந்த வேலை தரப்பட்டுள்ளது. அதற்குப் பின் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

உத்தபுரம்

    இங்கு கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டதை ஒட்டி இந்திய அளவில் கவனம் பெற்ற ஊர் இது. இவ் ஊருக்கு நாங்கள் செல்வது இது நான்காவது முறை.

   சுவர் இடிக்கப்பட்டதாக உலக அளவில் செய்தி பரப்பப் பட்டுள்ள போதிலும் இன்றளவும் அவ்வழியே வண்டிகள், ஆட்டோக்கள், லாரிகள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே சுவர் இடிக்கப்படும் முன் இப்பகுதியில் வாழும் பட்டியல் சாதியினர் எததகைய கஷ்டங்களையும் அவமானங்களையும் அனுபவித்தார்களோ அவை இன்னும் தொடர்கின்றன.
பேருந்து நிறுத்தம் கட்டப்படுவது தொடர்பான கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது.

  இன்னொரு முக்கிய கோரிக்கையான முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் வழிபடும் உரிமை என்பது பட்டியல் சாதியினருக்கு இன்னும் மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தெளிவான ஆணையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை இட்டிருந்தும் பிள்ளைமார் சாதியினர் அதை அனுமதிக்கவில்லை.

    இந்த ஆண்டு திருவிழாவின் போது பொங்கல் வைத்து சாமி கும்பிட ஆவன செய்ய வெண்டும் எனப் பட்டியல் சாதியினர் (தேவேந்திர குல வேளாளர்கள்) சென்ற மாதத் தொடக்கத்தில் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர். பொங்கல் வைக்க வேண்டாம், சாமி கும்பிட ஆவன செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதை இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

   இது தொடர்பாக சென்ற ஏப்ரல் 7 ந்தேதியன்று ஆர்.டி.ஓ, தாசில்தார், டி.எஸ்.பி ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்த உத்தபுரம் வந்துள்ளனர். முதலில் தேவேந்திரர்கள் சார்பாக சங்கரலிங்கம் பேசி விட்டுச் சென்றுள்ளார். அடுத்து கோவில் நிர்வாகத்தைக் கையில் வைத்துள்ள பிள்ளைமார்களிடம் பேச இருந்தபோது அதிகாரிகள் அமர்ந்திருந்த கட்டிடத்தின் மீது பிள்ளைமார்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அதிகாரிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே பிரச்சினையாகி பேச்சுவார்த்தை நின்றுள்ளது. கோவில் பூட்டப்பட்டுள்ளது. திருவிழா நடக்கவில்லை. கல்வீசியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிய பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தேவேந்திரர்கள் சமாதானப் படுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மத்தியிலும் சுமுக உறவில்லாமல் கனிந்த பகையுடன் நிலைமை தொடர்கிறது.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

   பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய அம்சம். அதை வரவேற்கிறோம். ஆனால் பிரச்சினை அத்தோடு முடிவதில்லை. பாதிக்கப்படும் பட்டியல் சாதியினர் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்குவது அரசின் கடமை. மேல்மங்கலத்தைப் பொருத்த மட்டில் இந்த அச்சம் இன்னும் போக்கப்படவில்லை. இன்று அங்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் அமைதி போலித்தனமான ஒன்று.  இதை அரசும் காவல்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தாக்கியவர்கள் அனைவரும் இன்று பிணையில் வெளி வந்து தைரியமாக நடமாடுகின்றனர். அருந்ததியர் வீதி வழியே தான் ஆதிக்க சாதி இளைஞர்கள் திறந்த வெளியை நோக்கி விளையாடச் செல்கின்றனர். நாங்கள் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் கிண்டலும் கேலியுமாக அச்சுறுத்தும் வகையில் அவ்வழியே சென்று வந்ததைக் கண்டோம்.

1.அருந்ததியர் பகுதியை ஒட்டி நிரந்தரமாக அங்கு காவல்துறை அவுட் போஸ்ட் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

2. வன்கொடுமைக்குக் காரணமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்யக் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டு வழக்கைக் கவனமாக நடத்தி குற்றவாளிகளுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலுள்ள அதிகபட்சத் தணடனையைப் பெற்றுத் தர காவல்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. அருந்ததிய மக்களுக்கு வேலை மறுக்கப்படுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி சமூகப் புறக்கணிப்புக் குற்றம். இது தொடருமானால் இச்சட்டப் பிரிவுகள் பயன்படுத்தப்படும் எனவும் இப்பகுதி வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்கப்படும் எனவும் விளம்பரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஆதிக்க சாதியினரின் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் மதுபானங்கள் விற்கப்படுவதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்துக் காவல்துறை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தாக்குதலின்போது அருந்ததியர் வீடுகளிலிருந்த பணம் முதலியன பறிபோயுள்ளதாகச் சிலர் கூறினர். இது உண்மையா என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. அருந்ததியர்களுக்கு நிரந்தர வருவாய் வரும் வகையில் சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் முதலிய சாத்தியமான வேலை வாய்ப்பு வழி முறைகளை அரசு கண்டறிந்து நடைமுறைப் படுத்த வேண்டும்.

     உத்தபுரத்தைப் பொறுத்த மட்டில் ஆண்டுகள் பலவாகியும் பிரச்சினைகள் தொடங்கிய இடத்தில் அப்படியே தேங்கி நிற்கின்றன. அரசைப் பொறுத்த மட்டில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் விருப்புறுதி கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

1. சுவர் இடிக்கப்பட்ட இடத்தை அகலப்படுத்தி அங்குள்ள எதற்கும் பயனற்ற கிணற்றை மூடி வண்டி, லாரிகள், டிராக்டர்கள் செல்ல வழி வகுக்க வேண்டும். பாதையில் போக்கு வரத்திற்கு இடைஞ்சலாக வேண்டுமென்றே அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகள் முதலியன அகற்றப்பட்டு உறுதியான சிமின்ட் சாலை அமைக்க வேண்டும்.

2. முத்தாலம்மன் கோவில் அற நிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இதை நாங்கள் தொடர்ந்து எம் அறிக்கைகளில் வற்புறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

3. ஏப்ரல் 7 அன்று பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகளைத் தாக்கியதோடு பேச்சுவார்த்தைகள் நடைபெற விடாமல் தடுத்தது கடுமையான குற்றம். இதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடராதது கண்டிக்கத் தக்கது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும்.

தொடர்பு : 

அ.மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
சென்னை-600 020. 
செல்:94441 20582, 94432 94892.

நன்றி: அ.மார்க்ஸ்