புதன், மே 16, 2018

அரசுப்பள்ளிகள் அன்றும் இன்றும்


அரசுப்பள்ளிகள் அன்றும் இன்றும்


(நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் அரசு மேனிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு ஆர். ஆனந்தராஜ் (KTC) அவர்களுக்கான பாராட்டுகளை முன்வைத்து…)


மு.சிவகுருநாதன்



     அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் அரசுப்பள்ளிகள் இன்று வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கின்றன. உலகமயத்தின் தாக்கம் பிற துறைகளைப் போலவே கல்வியிலும் சீரழிவை உண்டு பண்ணியுள்ளது. இவற்றைச் சரிசெய்வது ஒரு சிலரால் முடிகிற காரியல்ல. இருப்பினும் “அரசுப்பள்ளிகளைக் காப்போம்”, என்று தன்னலமற்றுச் செயல்படும் ஆசிரியர்கள் சிலர் இயக்கங்கள் நடத்துகிறார்கள். கல்வி மேம்பாட்டு இயக்கம், பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்றெல்லாம் புதிய இயக்கங்களும் அமைப்புகளும் தோன்றுவது வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் அய்யமில்லை.

     அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அரசுப்பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் பலரை அடையாளம் காட்டுவதும் விருதளித்து ஊக்குவிப்பதுமான பணிகளைச் செய்து வருகின்றன. இவையும் பாராட்டப்பட வேண்டியவை. கடந்த இரண்டு நாள்களாக அச்சு, காட்சி, சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட, பகிரப்பட்ட ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் பற்றியும் அத்துடன் அரசுப்பள்ளிகளின் 40 ஆண்டுகால வளர்சிதை மாற்றம் பற்றியும் சில கருத்துகள் இங்கு  முன்வைக்கப்படுகின்றன. 

   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் 2 –ம் சேத்தி இரா. நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டு (2017-2018) பணி ஓய்வு பெற்ற திரு. ஆர்.ஆனந்தராஜ் (ஆர்.ஏ. சார்)  அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் 9 லட்சங்கள் மதிப்பிலான கார் மற்றும் தங்கச் சங்கிலி, கணையாழி அளித்து பாராட்டிய செய்தி சமூக ஊடகங்களில் அதிகம் வலம் வந்த ஒன்று. நமது ஆசிரியப் பெருமக்கள்  இடம்பெற்றக் குழுக்களில் அரசுப்பள்ளி மற்றும் ஆசிரியர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக மீண்டும் மீண்டும் இப்பதிவுகள் இடப்பட்டன. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்று ஒரு சொலவடை உண்டல்லவா! டியூஷன் ஆசிரியரின் சாதனையை தங்களுடையதாகக் காட்டிக்கொள்ள இவர்கள் துளியும் வெட்கப்படவில்லை.

    இத்தகைய பாராட்டுதல்களுக்கும் சிறப்பிற்கும் மிகவும் பொருத்தமான ஒரு ஆசிரியர் திரு ஆர்.ஆனந்தராஜ்  என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஏனென்றால் நானும் அவரது மாணவன். 1988 – 1990 களில் அதேபள்ளியில் (அப்போது அது அரசு மேல்நிலைப் பள்ளி, பின்னாளில்  இரா. நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளி என பெயர் மாற்றப்பட்டது. இந்தப் பெயர்க் குழப்பத்தில் தந்தி டிவி ஒரு தனியார் பள்ளி என்றது.) +1, +2 வகுப்புகள் படித்தேன். மே 1989 முதல் மார்ச் 1990 வரை நான் அவரது மாணவனாக இருந்தேன். அவருக்கு நினைவிருக்குமோ என்னவோ எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது. 

      ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் கலைமகள் டியூஷன் சென்டர் (KTC) வெகு பிரபலம். அந்நிறுவனத்தை  ஆர்.ஆனந்தராஜ்  நடத்தி வந்தார். அன்றைய காலகட்ட அரசுப்பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் இம்மாதிரியான சென்டர்கள் பக்கத்துணையாக இருந்திருக்கின்றன. பல இடங்களில் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய டியூஷன் சென்டர்கள் இருந்திருக்கலாம். ஆனால் KTC இல் RA மட்டும் ஒன்மேன் ஆர்மி. இவர் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். எங்களுக்கு இவர் கணிதவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களையும் எடுத்தார். ஆறாம் வகுப்பிலிருந்து அவரிடம் படித்தவ மாணவ நண்பர்கள் மிகக் கடுமையாக அடிப்பார் என்று சொல்லி பயமுறுத்துவதுண்டு. சரியாக படிக்காத, தேர்வுகளை சரியாக எழுதாத மாணவர்கள் அடிபட்டதை பார்த்ததுண்டு. 

    இனிமையாகவும் மிகவும் மரியாதையாகவும் பேசி பாடம் நடத்தக்கூடியவர். பாடநூலைக் கையில் எடுக்காமல் வேதிச்சமன்பாடுகளை எழுதிச்செல்லும் பாங்கு அற்புதமானது. இவரது வேதியியல் நடத்தும் முறையால் கவரப்பட்டு, அப்பாடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு  வேதியியல் படிக்க கனவு கண்டதுண்டு. அது நிறைவேறவில்லை.

   அன்று கணிதப்பிரிவில் 51 மாணவ மாணவிகள் படித்தோம். (இப்போது அது ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி ஆயக்காரன்புலம் 3 –ம் சேத்தியில் உள்ளது.) இன்று சில அரசுப்பள்ளிகளில் கணிதவியல் பிரிவில் 10 பேர் கூட சேராத நிலையை எண்ணிப் பார்க்கிறேன். அன்று பயிர் உற்பத்தி, பயிர் பாதுகாப்பு ஆகிய தொழிற்பிரிவுகளில் கூட 50 மாணவ – மாணவிகள் படித்தனர். பிற்காலத்தில் நான் பணியாற்றிய பள்ளியில் பயிர் பாதுகாப்பு பிரிவு ‘மண்வெட்டி க்ரூப்’ என கேலி செய்யப்பட்ட நிலையையும் அதற்கு ஒரு சில மாணவர்களை மட்டும் தேடிப்பிடிக்கும் நடைமுறையும் இருந்ததை வேதனையோடு பார்க்க நேரிட்டது. தற்போது அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் கிட்டத்தட்ட மூடுவிழா நடத்தியாகிவிட்டது. 

   இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் உண்டு. ஆனால் அன்று எங்களுக்கு கணிதவியல் ஆசிரியர் இல்லை. இயற்பியல், வேதியியல் பாடங்களில் முதல் தொகுதியை மட்டுமே நடத்திவிட்டு, செய்முறைகளுக்குத் தாவி விடுவார்கள். எனவே எங்களுக்கு ஒரே புகலிடம் KTC மட்டுமே. மே மாதம் தொடங்கி காலை, மாலை நேரங்கள், சனி, ஞாயிறு விடுமுறைகள் என KTC இல் ஆனந்தராஜ் மூலமே படித்தோம். உயிரியலுக்கு வேறு ஒரு ஆசிரியர் வந்தார். உயிரியல் படிப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. 

   KTC -ம் ஆனந்தராஜூம் இல்லையென்றால் ஓரளவிற்கு +2 இல் மதிப்பெண்கள் பெற்று ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்குச் சென்று படிக்க முடிந்திருக்காது. அந்த ஆண்டு வேதாரண்யம் வட்டத்திலிருந்து நான் மட்டுமே ஆடுதுறை சென்றேன். இன்று 20 பயிற்சி நிறுவனங்கள் மூடப்படுகின்றன; சேர்வதற்கு ஆளில்லை. இன்று நிறைவான ஊதியத்துடன் இருக்க +2 வே அடிப்படை. அந்த அடைப்படையைக் கட்டமைத்தவர் திரு ஆர். ஆனந்தராஜ் அவர்கள். அதனை இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது  என்கிற விவரம் எனக்குத் தெரியவில்லை. பல்லாண்டுகள் அவரிடம் படித்தவர்கள் இந்த ஓராண்டு மாணவனை அறிந்திருக்க நியாயவில்லைதான். 

    இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் அனைவருமே KTC இல் டியூஷன் படித்து உயர்பதவிகளுக்குச் சென்றவர்கள். அவருக்கு 2004 இல்தான் அரசுப்பணி கிடைக்கிறது. 2018 வரை 14 ஆண்டுகாலம் மிகச்சிறப்பான பணியைச் செய்திருப்பார் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. ஆனால் இந்நிகழ்வை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வெற்றியாகக் கொள்ள முடியாது என்பதே எனது கருத்து..

    அன்றைய பள்ளிகளில் அடைப்படை வசதிகள், ஆசிரியர்கள் பணியிடங்கள் என நிறைய பற்றாக்குறைகள் இருந்தன. ஆனால் இன்று இவை ஓரளவிற்கு நீங்கியுள்ளன. இயற்கையோடும் வெப்பத்தைத் தாங்கும் கீற்று வேய்ந்த கூரைகள் உடலுக்குக் கேடு  செய்யும் ஆஸ்பெட்டாஸ் தகடுகள், காங்கிரீட் கட்டடங்கள் என மாற்றம் பெற்றுள்ளன. கும்பகோணம் தீ விபத்துகளுக்குப் பிறகு இவைகள் வந்து சேர்ந்தன. 40% ‘கமிஷன்’களால் கட்டப்படும் கட்டடங்கள் எத்தனை உயிர்களைப் பறிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அப்போது திறந்த வெளிகளை மட்டுமே நாடுமா அரசு? 

   பணியிடப் பற்றாக்குறை இருப்பினும் அன்றைய நிலை இன்றில்லை. ஆசிரியர்களை நிரவல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. 

  அன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளுக்குப் போட்டியாக அரசு உதவிபெறும் பள்ளிகள் இருந்தது. இன்று உதவிபெறும் பள்ளிகள் வெறும் உதவி பெறும் பள்ளிகளாக இல்லை. அவை தங்களுக்குள்ளாக ஒரு சுயநிதிப்பள்ளியைக் கொண்டுள்ளது. அரசு உதவி பெறும் மாணவர்களைச் சுரண்டும் செயலிது. அரசு தெரிந்தே இம்முறைகேட்டை அனுமதிக்கிறது. 

    இன்றைய  அரசுப்பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் சுயநிதிப் பள்ளிகளே போட்டியாக உள்ளது. ஒரு வகையில் போட்டி என்று சொல்வதைவிடவும் அரசுப்பள்ளிகளை சுயநிதிப்பள்ளிகள் விழுங்கி வருகின்றன என்பதே உண்மை. மஞ்சள் வேன் நுழையாத தமிழகக் குக்கிராமங்களே இன்று இல்லை. ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் சேலம், நாமக்கல், ஈரோடு ‘கோழிப்பண்ணை’ப் பள்ளிகளைத் தொடங்கி அதில் தங்களது குழந்தைகளைச் சேர்த்து இந்த சூத்திரத்தை தமிழகமெங்கும், பரப்பியுள்ளனர். 

   அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனிப்பயிற்சி, சுயதொழில், வட்டிக்கடை என சென்று கல்வி கேள்விக்குரியானது. வேலையில்லாத பட்டதாரிகளான ஆர். ஆனந்தராஜ் போன்றவர்கள் நடத்திய தனிப்பயிற்சிக்கும் ஆசிரியர்களே நடத்திய தனிப்பயிற்சிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. 

   2010 இல் கல்வி உரிமைச்சட்டம் அமலானபிறகும்கூட  நமது கல்வி உரிமைகளைப் பற்றிக் கேள்வி கேட்கும் நிலை இன்றில்லை. எட்டாம் வகுப்பு வரைத் தேர்ச்சியை அமல் செய்ய கலைக்கோட்டு உதயம் உயர் நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. 

    இத்தகைய சட்டங்கள் இல்லாத அன்று உரிமைகளைப் பேசுவது யார்? KTC (ஆனந்தராஜ்) செய்த தொண்டின் மூலம் ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தொடர்ந்து நற்பெயர் உண்டானது. 1990 களுக்குப் பிறகு அதீத வளர்ச்சி கண்டு நாகப்பட்டினம் மாவட்ட அரசுப்பள்ளிகளில் முதலிடம் பெற்றது. கணிதவியல் பிரிவில் சேர பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்கிற நிலை உண்டானது.

   1978 இல் தொடங்கப்பட்ட +1 முறைக்குப் பொதுத்தேர்வு வைக்க 40 ஆண்டுகள் ஆனதுதான் நமது கல்விமுறையின் அவலம். 2018  இல் தானே +1 க்கு பொதுத்தேர்வு நடைமுறையில் வந்துள்ளது. அண்ணா பல்கலை. பொறியியல் தேர்வுகளில் மாணவர்கள் பெயிலானதும் +1 பாடப்பகுதிகளை நாங்களே நடத்துகிறோம் என்று பல்கலை. சொன்னது. நீட் தேர்வு வந்தபிறகே +1 க்கு தேர்வு என்கிற நிலைப்பாடு வருகிறது. அதைப்போல + 1 சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்பது பல்லாண்டுக் கோரிக்கை. சமூக நீதி பேசும் நமது அரசுகள் சென்ற ஆண்டுகளில்தான் இம்முறையை அறிமுகம் செய்தது. இதனால் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்டது பற்றி கவலை யாருக்கும் இல்லை. அரசுப்பணிகளில் 69% இடஒதுக்கீட்டை குயுக்தியாக புறந்தள்ளும் நிலை பல இடங்களில் உள்ளது. +1 சேர்க்கையில் இடஒதுக்கீடு அமலாக்கத்தைக் கண்காணிக்கும் அமைப்புகள் இல்லை என்பதுதுதானே உண்மை. 

    ஆயக்காரன்புலம் மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பொதுவான அம்சம் அங்கு செயல்படும் இடைநிலைச் சாதியம். தலித்கள், மிகவும் பிற்பட்டோர் கல்வி கற்பதற்கு பல்வேறு தடைகள் இருந்தன; இன்றும் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. தென் மாவட்டப் பள்ளிகளைப் போன்று சாதியம் செயல்படும் நிலையை கவனிக்க ஆள்களில்லை. 1940 களில் எனது தந்தையாரால் அப்பள்ளியில் நுழைய  முடியாத நிலை இருந்தது. ஐந்தாம் வகுப்பை முடித்தவர் தொடர்ந்து படிக்க அந்த ஊரில் ஆறாம் வகுப்பு  வரும்வரை மூன்றாண்டுகள் காத்திருக்க நேரிட்டது. 

   நாங்கள் படிக்கும்போதே இந்த சாதியத்தின்   வெம்மையை உணர்ந்தோம். எனது அனுபவம் ‘கணையாழி’ புதுமலர் அனுபவச் சிறுகதையாக (பலியாடுகள்) வெளியானது. எனது ஊரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ளது இப்பள்ளி. அன்று ஒரு தனியார் பேருந்து பள்ளி மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் (ரூ. 1.75 க்குப் பதிலாக ரூ.1.00) பள்ளிக்குக் கொண்டுவந்து சேர்த்தது. காலதாமதம் அல்லது ஏதேனும் ஒன்றாக இருந்தாலும் முதலில் கேட்பது எந்த ஊர் என்பதாகவே இருக்கும். சொன்னவுடன் ஏன் முத்துப்பேட்டைப் பள்ளிக்குச் செல்லவில்லை என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள். அந்தளவிற்கு அங்கு பணியாற்றிய பல ஆசிரியர்களிடம் சாதியம் தலைதூக்கி நின்றது. அன்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம். இப்போதுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் சேர்ந்திருந்த நிலை. எங்கள் ஊரிலிருந்து முத்துப்பேட்டைக்கு 20 கி.மீ. இது அந்த ஆசிரியர்களுக்குத் தெரியாது என்று என்னால் நம்ப இயலவில்லை.

     இப்போது முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டத்திலும் ஆயக்காரன்புலம் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் உள்ளன. தில்லை விளாகம், இடும்பாவனம், (திருவாரூர் மாவட்டம்) சரபோஜிராஜபுரம், தாணிக்கோட்டகம், தகட்டூர் (நாகை மாவட்டம்) ஆகிய இடங்களில் இன்று மேனிலைப்பள்ளிகள் உள்ளன. அன்று இவற்றில் சில நடுநிலைபள்ளியாகவோ, உயர்நிலைப் பள்ளியாகவோ இருந்தன. 

    ஆயக்காரன்புலம் விழா நடந்த அன்று இடும்பாவனம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்ததாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இப்பள்ளிக்கு பெருமை உண்டு. நிரந்தர ஆசிரியர்களை விட பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அதிகம் பணியாற்றும் பள்ளி என்கிற பெருமையே அது. தலைமையாசிரியர் பணியிடமும் பல்லாண்டுக் கணக்கில் காலியாக இருக்கும் ஒரு பள்ளி அது. 

   முன்னாள் மாணவர்கள் விழா எடுக்கவேண்டும், படித்த பள்ளிக்கு உதவிகள் செய்யவேண்டும் என்பது மிக மோசமான நடைமுறை என்றே நான் கருதுகிறேன். அப்புறம் எதற்கு அரசுகள், நிர்வாகம் எல்லாம்? ராணுவத்திற்கு அள்ளிக் கொட்டும் அரசுகள் கோத்தாரி குழு சொன்ன 6% ஐ கூட செலவு செய்ய மறுக்கும்போது நாம் ஏன் மவுனமாக இருக்க வேண்டும்? கடந்த ஆண்டுகளில் கல்வி ஒதுக்கீடு 3% விட குறைந்துள்ளது.

   மாணவர் வருகைப் பதிவேட்டில் ஏன் சாதியை எழுதுகிறீர்கள் என்று பெரும் போராட்டம் செய்ய வேண்டிய நிலைதானே இன்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் செயல்படும் சாதியத்தை வேரறுக்க அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை. பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் பலனாக பிற மாநில இந்தியர்களைப் போன்று சாதிப்பெயரை சுமக்காமல் இருக்கிறோம் என்ற பெருமை மட்டுமே எஞ்சியிருக்கிறது. இங்கு சாதி உடலோடு, ரத்தததோடு கலந்துவிட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. 

   திரு ஆர். ஆனந்தராஜ் போன்ற கல்வித் தொண்டர்களை பாராட்டும் வேளையில் நமது பாதையில் முன்னும் பின்னும் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. இதை அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சாதனையாகச் சொல்வது வெறும் சுயமோகத்தைத் தவிர வேறில்லை. இது கல்வியை செழுமைப்படுத்த, சீரமைக்க உதவாது.

   தனிப்பயிற்சியை கொண்டாட முடியாது. அன்றைய கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இவர்கள் ஏணியாக இருந்தனர். மறுபுறம் ஆசிரியர்களும் தனிப்பயிற்சி   நடத்தி கல்விக்கும் சமூகத்திற்கும் துரோகம் செய்தனர். இவற்றைக் கொண்டாடுவது அரசின் தோல்விகளை, மெத்தனப்போக்கை கொண்டாடுவது போலத்தான். மக்கள் நல அரசுகள் மக்கள் விரோத அரசுகளாக   மாறும்போது அதைத்தட்டிக் கேட்கக்கூடிய பொறுப்பும் சமூக நோக்கும் ஆசிரிய சமூகத்திற்கு இருக்க வேண்டும். இம்மாதிரியான செய்தித் துணுக்குகளை தங்களது வெற்றிச்சரித்திரமாக மாற்றச்செய்ய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எத்தனங்கள் கேலிக்குரியவை மட்டுமல்ல; சமூக அவலமும் கூட.

    இன்று தனிப்பயிற்சிக் கூடங்கள் ‘கோச்சிங் சென்டர்’களாக மாறியுள்ளது. ஒருபுறம் பள்ளியே ‘கோச்சிங் சென்டராக’ உருமாற்றம் பெற்றுள்ளது. ஆறாம் வகுப்பிலிருந்தே ‘நீட்’ கோச்சிங் என்று விளம்பரங்கள் சொல்கின்றன. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்விற்கு ஆறாம் வகுப்பிலிருந்து பயிற்சி அளிக்கிறோம் என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது. அரசும் அரசுப்பள்ளிகளில்  இத்தகைய வதை முகாம்களுக்கு ஏற்பாடு செய்கிறது. கல்வியின் உருவம் இதுவல்ல; இவற்றை மாற்றப் போராடுவதே சமூகம் மற்றும் கல்வியின் பால் அக்கறையுள்ள அனைவரின் கடமையும் பொறுப்புமாகும்.

பத்தரிக்கையாளர் பாரதி

பத்தரிக்கையாளர் பாரதி

மு.சிவகுருநாதன் 


         பத்தரிக்கையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஸ்காட்லாந்து யாடுக்கு நிகரான தமிழக காவல்துறைக்கு கழிசடைகளைக் கைது செய்யத் துப்பில்லை.
இன்றுள்ள நவீன வசதிகள் முதலாளித்துவ இதழியலில் பல புதிய திறப்புகளை உண்டு பண்ணியிருப்பினும் அதன் மறுபுறம் கோரமாகவே உள்ளது. 



     முதலாளித்துவ இதழியலுக்கு முதல்தான் முக்கியம். அது தன் பணியாளர்களைப் பற்றிக்கூட அது கவலைப் படுவதில்லை.
பாரதி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞனாக மட்டுமல்ல பத்தரிக்கையாளராகவும் மகத்தான பணி செய்தவர். பிரித்தானிய காலனியாதிக்கத்தில் பத்தரிக்கையாளர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளைச் சற்றுக் கூடுதலான, முற்றிலும் வேறு வகையான தொந்தரவுகளை இன்று நேர்கொள்ள வேண்டியுள்ளது.





     100 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் இடம்பெற்றது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் சிற்றூர்.
அங்கு ஒரு தியான மண்டபம் கட்டியிருக்கிறார்கள்.
இன்று (27.05.2018) வெள்ளி மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் மேலநாகை சென்று வந்தேன்.
சில படங்கள் இங்கே...