எதிர் அறவியல்
மு.சிவகுருநாதன்
+1, +2 வகுப்புகளில் அறவியலும் இந்தியப் பண்பாடும் (Ethics and Indian Culture) என்றொரு பாடமிருப்பதை அறிவீர்கள். அறவியலும் பண்பாடும் விரிந்த பொருள் கொண்டவை. வேத, வைதீக, இந்து மத நச்சுக் கருத்துகளை அறமென இப்பாடநூல்கள் புனைந்துரைக்கின்றன. உள்ளதை உள்ளபடி சொல்லிச் செல்வதுதானே முறையாக இருக்க இயலும். மாறாக அவற்றை வாழ்க்கை நெறியாகவும் கடைபிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தும் பாசிசச் சொல்லாடல்கள் எங்கும் நீக்கமற நிறைகின்றன. ‘அழிவில்லாத நிலையான அறம்’ என்று இவர்களால் போற்றப்படும் ‘சனாதன தரும’த்தை பொது அறமாகக் கட்டமைக்கின்றனர். இத்தகைய ‘எதிர் அறவியலை’த் தமிழ்ச் சமூகம் இவற்றை வெறுமனே கடப்பது வியப்பிற்குரியது.
‘ஸ்மிருதிகள்’ பற்றி உள்ளவை:
“இவை உயர்ந்த உள்ளங்களின் சிந்தனைத் தொகுப்புகள்” சூத்திரங்கள், தரும சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்பன ஸ்மிருதிகளாகும். இவை எழுதப் பெற்றவை. இதில் தரும சாஸ்திரம் என்பது சட்டம், சமுதாய நடைமுறைகளை விவரிக்கின்றன. பல்வேறு சாதிக் கடமைகளையும், பல்வேறு நிறுவனங்களையும் (அமைப்புகளை) விளக்குகின்றன. நடைமுறை வாழ்வில் குற்றம், குற்றங்களுக்குரிய தண்டனை முறை, குழந்தை தத்தெடுப்பு (adoption), மரபுரிமையாகச் சொத்தைப் பெறும் சட்ட உரிமைகள் போன்றவை இவற்றுள் விவரிக்கப்பட்டுள்ளன”. (பக்.42, 12 அறவியலும் இந்தியப் பண்பாடும்)
‘பின்வேதகாலச் சமூக நிலை’ எனும் தலைப்பில்:
“பின் வேதகாலச் சமூகம், வர்ணாசிரம முறைச் சமூகமாகக் காணப்பட்டது. அம்முறையின்படி மக்களிடையே
1. பிராமணர்
2. சத்ரியர்
3. வைசியர்
4. சூத்திரர் ஆகிய சமூகப் பிரிவினர் இருந்தனர்.
பிராமணர்கள்
கல்வி கற்பது, சமயச் சடங்குகள் செய்வது, வெகுமதிகளைப் பெறுவது, சமுதாயத்திற்கு நல்வழி, உலக நன்மைக்காக இறைவனை தியானிப்பது இவர்களது வாழ்வியல் ஒழுக்கமாகும் .
சத்திரியர்கள்
நாட்டை ஆள்வதும், நாட்டைக் காப்பதும் இவர்களுக்குரிய கடமைகளாகும். இவர்கள் வீரம் பொருந்தியவராகவும் ஆளுந்தன்மை உடையோராகவும் திகழ்ந்தனர். தன்னலம் (பக்.43) கருதாமல் பிறரைக் காக்கும் கடமைஉணர்வு மிக்கவர்களாக திகழ்ந்தனர்.
வைசியர்கள்
வாணிகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபாடு உடையவர்கள். நேர்மையாக வாணிகம் செய்து அறவழியில் பொருளீட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர்.
சூத்திரர்கள்
முதல் மூன்று பிரிவினர்களுக்கும் வேண்டிய பணிகளைச் செய்வது இவர்களது பணிகளாகும். தமக்கு இடப்பட்ட பணியை நிறைவேற்றி முடித்தனர்”. (பக்.44)
“இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது”, (பக்.59) என்ற உண்மையை, அறத்தை இவர்கள் விண்டுரைக்கும்போது நமக்குப் புல்லரிக்கிறது. ‘பக்தி இயக்கம் தோன்றக் காரணங்களில்’ மட்டும் “உயர் குடியினராகக் கருதப்பட்டவர்கள், பிற பிரிவினரிடம் பாகுபாடு காட்டினர்” (பக்.150) என்று கூறப்பட்டுள்ளது.
‘புராணங்களின் நோக்களைக் காண்க:
“புராண இலக்கியமானது ஆழ்ந்த இந்து சமயக் கருத்துகளைக் கொண்டதாகவும் பருப்பொருள் தத்துவமாகவும், அறிவியலாகவும் போற்றப்படுகிறது. சமயம், தத்துவம், அறிவியல் இவை சம்மந்தமாக வெளிப்பட்ட பழங்கால மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அவற்றில் புரியாத கடினமான கருத்துகளையும் மிகச் சுவையாகவும், உவமான, உவமேயங்களின் மூலமும் விளக்கி மக்களின் மனத்தில் பதியச் செய்வது புராணங்களின் முக்கிய நோக்கமாகும்.
வேதக் கட்டளைகளான ‘உண்மைபேசு’ (ஸ்த்யம் வத), தருமத்தைச் செய் (தர்மம் சர) என்பனவற்றை நீதிக்கதைகள் மூலம் விளக்கிக் கடைப்பிடிக்கச் செய்தன. வாழ்வைச் சீர்படுத்துவதும் சமய ஞானமும், கடவுள் (பக்.52) பக்தியும் கலந்த தெய்வீக உணர்வினைத் தருவதும் புராணங்களாகும். (பக்.53)
‘புராணங்களின்இன்றியமையாமை’யைக் கவனிக்க:
“புராணங்கள் பழைமை வாய்ந்தவை என்றும், சமயக் கருத்துகளை மட்டுமே பிரதிபலித்தன எனவும் கொள்ளுதல் தவறு. புராணங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் மக்களுக்குப் பயன்படும் அரிய உண்மைகளை எளிமையாக ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கூறியுள்ளன”. (பக்.52)
நவீன காலத்திற்கு வேதங்களின் ஏற்புடைமை
- “வேதங்களில் கூறப்பட்டுள்ள அரிய உண்மைகள் இன்றைய உலகில் அறிவியல் உண்மைகளோடு மிகவும் ஏற்புடையதாய் காணப்படுகின்றன. மேலும், இன்றைய வாழ்வின் அடிப்படைப் பண்பாட்டுக் கூறுகளையும் பிரதிபலிக்கின்றன.
- புவியின் வயது, விண்வெளியின் எல்லைகள், சூரியனின் உட்பகுதி, (பக்.53) வானநூல் பற்றிய கருத்துகளை வேதங்கள் கூறியுள்ளன. இவை அனைத்தும் இன்றைய அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
- ஆயுர்வேதம் எனப்படும் மருத்துவ இயல், தனுர்வேதம் எனப்படும் போர்க்கலை, காந்தர்வ வேதம் எனப்படும் நுண் கலை ஆகிய மூன்றும் வேதங்களாலும், இதிகாசங்களாலும் விளக்கப்படுகின்றன. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இதனை ஏற்றுக் கொள்கின்றன.
- ஆயுர்வேத மருத்துவம் என்ற முறை ஆன்மிகத்தையும் மருத்துவத்தையும் இணைக்கிறது.
- மூலிகை மருத்துவம் பற்றிய தெளிவான அறிவை ஆயுர்வேதம் கூறுகிறது.
- உலோகவியல் பற்றிய கருத்துகள் வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
- காலக் கணக்கிற்கு உதவும் கணித அறிவும் வேதத்தில் கூறப்பட்ட அறிவாகும்.
- விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதத்தில் கூறப்பட்டுள்ளன.
- நியாய-வைசேடிகம் என்ற தத்துவம் அணு விஞ்ஞானம், அணுவின் அமைப்பையும், தன்மையையும் , ஆற்றலையும் குறிப்பிடுகிறது.
- வேதத்தில் இந்தியாவின் இருப்பிடம் புவியியல் வல்லுநர்களால் கூறப்பட்டுள்ள அட்ச, தீர்க்க ரேகைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. கிரகணங்கள் நடைபெறும் காலத்தை முன் கூட்டியே கணக்கிடும் கலையை வேதங்கள் விளக்கிக் கூறுகின்றன.
- தனி மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தனி மனிதன் சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்களின் கடமை பற்றியெல்லாம் வேதங்கள் விளக்கியுள்ளன. இத்தகைய மேன்மை பொருந்திய வேதத்தைக் கற்றுணர்ந்து, நம் வாழ்வில் பின்பற்றி உயர்வதே மனிதவாழ்வின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
வேத உபநிடதங்களை ஏற்கும் சனாதன தர்மம் என்கிற இந்து மதத்திற்கு ஒரு குறிப்பிட்ட நூல் மட்டுமே புனிதநூலாக அமையவில்லை. வேதம், உபநிடதம், பகவத்கீதை, புராணங்கள், இதிகாசங்கள் என்ற நீண்ட பட்டியலே உண்டு. ஒவ்வொன்றும் மனித இயல்புகளுக்குத் தக்கபடி வாழ்க்கை நெறிமுறை மற்றும் தத்துவங்களைப் போதிக்கிறது. வேதங்களில் யாகங்களும் சடங்குகளும் முக்கியத்துவம் பெற்றன. உபநிடதங்களில் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தத்துவ உண்மைகள் காணப் படுகின்றன. எனவே, உபநிடதங்களை அனைவரும் புரிந்து கொண்டு, நடைமுறை வாழ்க்கை மேற்கொள்ள பகவத்கீதை, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வழிகாட்டுகின்றன.
நிறைவுரையாக…
இந்தியப் பண்பாட்டிற்குக் கிராம வாழ்க்கை முறை, கூட்டுக் குடும்பமுறை போன்றவற்றைக் கொடையாகத் தந்தது வேத காலப் பண்பாடாகும். சிந்துவெளி நாகரிகத்தின் பழைமையான வேளாண்மை முறை வேதகாலத்தில் தான் புதிய பரிணாம வளர்ச்சி பெற்றது எனலாம். அரசன், அரசமைப்பு, நிருவாக முறை, போன்றவை புதிய வளர்ச்சி பெற வேதகாலமே வித்திட்டது. இந்திய இலக்கிய வளர்ச்சியை வேதகாலமே தொடங்கி வைத்தது. கிரேக்கர்கள், அரேபியர்கள், துருக்கியர்கள், ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்தாலும், இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது வேதகாலப் பண்பாடாகும். (பக்.54)
கங்கை நதி புனிதமானதாம்! ஏன் சரஸ்வதி நதியை மறந்தனர் எனத் தெரியவில்லை?
“இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கையிலான துணைநதிகளைப் பெற்றுள்ள நதி என்று பல சிறப்புகளைக் கங்கை நதி பெற்றுள்ளது”. (பக்.19)
‘இந்து மதம்’ பற்றிச் சொல்லப்படுவன:
இந்து என்னும் சொல்லின் தோற்றம்
“கிரேக்கர், அராபியர், பாரசீகர் போன்ற அயல்நாட்டினர், பாரத நாட்டைச் சிந்து ஆற்றின் பெயரால் (ஸிந்து) ஹிந்து என்று அழைத்தனர். அது நாளடைவில் ஹிந்து என்று மாறியது. இது தமிழில் இந்து என்று வழங்கப்படுகிறது. இப்பெயர் இந்திய துணைக்கண்டமாகிய நிலப்பரப்பு மட்டுமின்றி, இங்கு வாழ்கின்ற மக்கள், பண்பாடு போன்றவற்றிற்கும் இவர்களது சமயத்திற்கும் பெயராகி உள்ளது.
இந்து என்னும் சொல்லின் பொருள்
“இந்து அல்லது 'ஹிந்து' என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம் – ஹிம்சையில், து–துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்தகாரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்றமுன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும். (இந்த விளக்கத்தைச் பெரிய சங்கராச்சாரி கூட ஏற்கவில்லை. பார்க்க: தெய்வத்தின் குரல் – பகுதி-1)
இந்து சமயம், சனாதன தருமம், வேசமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் 'அழிவில்லாத நிலையான அறம்' எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ’வேத சமயம்’ என்றும், வேத நெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்து சமயத்தின் அடிப்படை
இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு கடவுளை அடைவதாகும். எல்லாவற்றையும் விட இவர் மேலானவராக இருப்பதால், கடவுளைப் பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது. கடவுள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறார். படைக்கும்போது அவர் பிரம்மன் என்றும், காக்கும்போது விஷ்ணு என்றும், அழிக்கும்போது சிவன் என்றும் அறியப்படுகிறார். இந்த வெவ்வேறு மூன்று தொழில்களைச் செய்யும் பரம்பொருளையே மும்மூர்த்திகள் என்று கூறுகின்றனர். ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை இந்து சமயத்தின் அடிப்படை கருத்துகள் ஆகும்”. (பக்.58)
ஐந்து வேள்விகள்- (பஞ்ச யக்ஞம்)
“தெய்வவழிபாடு (தேவ யக்ஞம்) கடவுளை நாள்தோறும் வழிபடுதல் வேண்டும்.
வேதம் ஓதுதல் (பிரம்ம யக்ஞம்) நாள்தோறும் வேதங்களையும் , அறநூல்களையும் ஓதுதல் வேண்டும்.
முன்னோர் வழிபாடு (பித்ரு யக்ஞம்) இறந்த மூதாதையர்கள் தெய்வங்களாக உள்ளனர் எனக் கருதி அவர்களை வழிபடவேண்டும்.
உயிரினங்கள் வழிபாடு (பூத யக்ஞம்) செடி, கொடி, மரம், விலங்கு, உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் கடவுளாகக் கருதி அவற்றுக்கு உணவு அளித்துப் பேணவேண்டும்.
மனித வழிபாடு (மனுஷ்ய யக்ஞம்) அறவோரையும், துறவிகளையும் வணங்கி உதவிடவேண்டும்.
இந்து தர்மம்
இந்து சமயம் ஒவ்வொரு இந்துவுக்கும் தனி மனித கடமைகள் (ஆசிரம தர்மம்), சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) என இரு கடமைகளை வலியுறுத்துகிறது.
1. தனிமனித கடமைகள் (ஆசிரம தர்மம்)
மனித வாழ்க்கையின் நான்கு படிநிலைகளில் ஒவ்வொரு காலத்திலும் அவன் ஆற்ற வேண்டிய கடமைகளைப்பற்றி கூறுகிறது. அவை பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம். இவை படிப்படியாக மனிதன் வாழ்வு முழுமை பெற ஏற்படுத்தப் பட்டவையாகும்.
2. சமூகக்கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்)
இந்து சமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்றவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது”. (பக்.59)
ஐந்து வேள்விகள், இந்து தர்மக் கடமைமைகள் எல்லாம் இந்து என்ற பேரடையாளத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பொதுவானதல்ல. வருணக் (சாதி) கடமைகள் சமூகக் கடமைகள் ஆகாது. இங்கு சாதியும் சமூகமும் ஒன்றாக்கப் படுகிறது. பிராமணர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட கடமைகளை பிறர் எப்படி பங்கேற்க முடியும்?
இந்து சமயத்தின் பெருமைகள்
- “இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையானது. அஃது உலகெங்கும் பரவி இருந்ததை நவீன கால ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.
- இந்து சமயத்தில் இடம் பெற்றுள்ள முக்கியக் கருத்துகள் பிற சமயங்களிலும் இடம் பெற்றுள்ளன.
- இந்து சமயம் பிற சமயங்களை இழிவுபடுத்தாமல், அவற்றின் கோட்பாடுகளை மதித்து அரவணைத்துச் செல்கிறது.
- இந்து சமயத்தின் மீது பல்வேறு தாக்குதல்கள் நிகழ்ந்த போதும் அது தாழாமல் உயர்ந்து திகழ்கிறது.
- இந்து சமயம் வெறும் நம்பிக்கை உணர்வோடு நின்றுவிடாமல் நம்பிக்கைகளுக்கான அறிவியல் காரணங்களையும் தன்னகத்தே கொண்டது.
- மனித உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தாது சுதந்திரமாக வாழும் உரிமையை வழங்குகிறது. நமது சமூகங்களில் கட்டுப்பாடு நிலவினாலும் சமயத்தில் அளப்பரிய சுதந்திரம் வழங்கப்படுகிறது.
- இல்லறத்தில் இருப்பினும் துறவறத்தில் இருப்பினும் நல்வாழ்வின் வாயிலாக வீடுபேறு அடையலாம் எனக் கூறுகிறது.
- மக்கள் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப மறுபிறவி உண்டெனக் கூறி, மக்களின் வாழ்வை நெறிப்படுத்தித் துன்பமற்ற வாழ்க்கைக்கு வழிசெய்கிறது.
இந்தியப் பண்பாட்டிற்கு இந்து சமயத்தின் கொடை
- இந்து சமயத்தில் காணப்படும் இல்லறம், மனிதாபிமான உணர்வு, சகிப்புத் தன்மை, உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கின்றன.
- இந்து சமய இலக்கியங்களான வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே வழங்கப்பட்ட கொடைகளாகும்.
- யோகா என்னும் அற்புதமான அறிவியல் உண்மையை, மிகப்பெரிய கொடையாக இந்து சமயம் உலகிற்கு அளித்துள்ளது.
- கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை இவற்றில் மனிதனின் ஆன்மிக உணர்வுகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உலகிற்குக் காட்டிய சமயம், இந்து சமயமேயாகும்.
- உருவ வழிபாட்டு முறை, வீடுபேறு அடைவற்கான அறநெறி கோட்பாடுகள் அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவ, சித்தாந்த நெறிகள் போன்ற தத்துவக் கோட்பாடுகளையும் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்திருப்பது இந்து சமயம்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை”. (பக்.66)
இந்தியப் பண்பாட்டிற்குச் சமண சமயத்தின் கொடையாக, “கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு சமணக் கல்வி போதிக்கப்பட்டது” (பக்.71) என்கின்றனர். பிற்காலச் “சோழர்கள் ஆட்சியில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் கல்வி போதிக்கப்பட்டன. கோயில்கள் கல்விக் கூடங்களாகத் திகழ்ந்தன”, (பக்.117) எனும்போது மதம் வெளிப்படுவதில்லை. இவர்களது கோயில் தமிழ்க் கல்வியை (!?) இலக்கியப் பட்டியலே வெளிச்சம் போட்டுக் காட்டும்.
இவர்களது வழமையான பிற்காலச் சோழப்பெருமைகளில் ‘குடவோலை நோய்க்கு’ இடமில்லாது போகுமா? எந்நோய்க்கு மருந்து கண்டாலும் இந்நோய்க்கு முடியாது என்பது திண்ணம். இந்த திருவுளச்சீட்டு முறையில் உறுப்பினரின் முதல் தகுதி பிராமணராக இருக்க வேண்டும் என்பதே. தற்காலத் தேர்தல்கள், உள்ளாட்சி முறை என்றெல்லாம் பிதற்றுவது நோயின்றி வேறில்லை.
பிரம்மதேயங்கள்
“நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு, அரசன் கொடையாக வழங்கும் நிலம் பிரம்மதேயம் எனப்படும். இந்நிலங்கள் இறையிலி நிலங்களாக வழங்கப்படுவதால், அந்தணர்கள் இந்நிலத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டனர்”. (பக்.109)
கிராமஆட்சிமுறை
“சோழர் காலத்தில் கிராம ஆட்சிமுறை சிறப்புப் பெற்றிருந்தது. கிராமசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, அதன் செயல்பாடுகள் குறித்து உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படுள்ளது.
குடவோலைமுறை
முதலாம் பராந்தகன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குடவோலை முறையின் மூலம் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
சபை உறுப்பினராவதற்குத் தகுதிகள்
உறுப்பினராவதற்குக் கால்வேலி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.
சொந்த நிலத்தில் வீடு இருக்க வேண்டும்.
35 வயது முதல் 70 வயதிற்குள் நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
வேதங்கள், புராணங்கள் கற்றுத் தேர்ந்தவராக இருக்கவேண்டும்.
ஒரு முறை உறுப்பினராய் இருந்தோர், அடுத்த ஐந்து ஆண்டுக்குப் பிறகே உறுப்பினராக முடியும்.
தேர்ந்தெடுக்கும் முறை
ஊர் பல குடும்புகளாகப் (Ward) பிரிக்கப்படும். ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுடையவர்களின் பெயர்களைப் பனை ஓலையில் எழுதி அதனைக் குடத்தில் இடுவார்கள். தேர்தல் நாளன்று அக்குடத்தைச் சபையோர் முன் நன்றாகக் குலுக்கிய பின், 5 வயதுக்குட்பட்ட சிறுவனைக் குடத்திலுள்ள ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். அதில், யார் பெயர் வருகிறதோ, அவரையே உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு, சபையின் உறுப்பினர்கள் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்”. (பக்.115)
எல்லா வகுப்புகளிலும் இதே கதைதான். “பராந்தகச் சோழனின் உத்திரமேரூர்க் கல்வெட்டு, சோழர் கால கிராம ஆட்சி முறையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இக்கல்வெட்டில் கிராம உறுப்பினர்களின் தகுதிகள், தேர்ந்தெடுக்கப்படும் முறை ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன”. (பக்.05, 11 அறவியலும் இந்தியப் பண்பாடும்)
உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் ‘குடவோலைமுறை’
“கிராம ஊராட்சி சபைஉறுப்பினரை தேர்ந்தெடுக்க, சோழர் காலத்தில் குடவோலை தேர்தல் முறை பயன்படுத்தபட்டது. இத்தேர்தலில் குற்றமற்றோரையும் தகுதியுள்ளோரையும் நிற்கச் செய்வார்கள். அவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். சிறுபிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்து அதில் வரும் பெயருடைய நபரையே தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் கொண்டு போட்டிப் பூசலின்றி தேர்தல் நடந்தது. இதனை, தற்கால தேர்தல் முறைக்கு முன்னோடியாகக் கருதலாம்”. (பக்.05, 11 அறவியலும் இந்தியப் பண்பாடும்)
“பாண்டியர்களின் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் வலிமை பெற்றுத் திகழ்ந்தன. இதில் மூன்று வகை சபைகளிருந்தன.
பிராமணர்கள் இருந்த பிரம்மதேயச் சபை
பிரம்மதேயமல்லாத ஊர்களிலிருந்த சபை
வணிகர்கள் வாழ்ந்த நகரசபை
மேற்காணும் சபைகளைப்பற்றி, மானூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சபை உறுப்பினர்கள் ‘குடவோலை‘ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தகுதிக்கேற்ப வாரியப் பணிகளில் நியமிக்கப்பட்டனர்”. (பக்.120) என்று பாண்டியர் காலத்தில் இருக்கும்போது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே கிராம சபை எப்படி இருந்தது என விளக்க வேண்டாமா?
“ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர். இவர்கள் செய்த தொழிலுக்கு இறையிலி நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்கள் அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடைக் காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை, கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன”. (பக்.131)
கல்வி
“சோழர் காலத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் கல்வி போதிக்கப்பட்டன. கோயில்கள் கல்விக் கூடங்களாகத் திகழ்ந்தன. முதலாம் பராந்தகன் வேதபாடசாலை நடத்துவதற்காக, மான்யம் அளித்துள்ள செய்தியைக் காமப்புல்லூர் கல்வெட்டு பகர்கின்றது. முதலாம் இராஜராஜன் காலத்தில் வேதங்களையும், இலக்கணங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை அணியூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இராஜேந்திரன் காலத்தில் வேதங்களைப் போதிக்கும் கல்விக் கூடங்கள் திரிபுவனம், எண்ணாயிரம், திருவொற்றியூர், வேம்பந்தூர் போன்ற இடங்களில் இருந்தன. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது. இறவாப்புகழ் பெற்ற தமிழிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டன. அவை,
இலக்கியம்
ஔவையார் - ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை
சேக்கிழார் - பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் (பக்.116)
கம்பர் - கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபரந்தாதி, சரஸ்வதி அந்தாதி, இலக்குமி அந்தாதி, சிலை எழுபது
புகழேந்திப் புலவர் - நளவெண்பா
ஒட்டக்கூத்தர் - மூவருலா, பிள்ளைத்தமிழ் (குலோத்துங்க சோழன்)
ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி
கச்சியப்ப சிவாச்சாரியார் - கந்த புராணம்
போன்ற நூற்படைப்புகள் சோழர் கால இலக்கியத்திற்குப் பெருமை சேர்ப்பவையாகும்”. (பக்.117)
இந்தியப்பண்பாட்டிற்குச் சோழர்களின் கொடை
- “மன்னருக்கு வாரிசு இல்லாத போது, அரச குடும்பம் சார்ந்த / சாராத ஒருவர் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, நல்லாட்சிக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும்.
- கிராம சபை உறுப்பினர்களைக் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் முறையானது, இந்தியப் பண்பாட்டிற்குச் சோழர்கள் நல்கிய சிறந்த கொடையாகும்.
- சோழர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குடும்புகள் முறை, தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது.
- சோழர் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு தரம் வாரியாக வரி விதிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் நிலம் அளந்து தரம் பிரித்ததால் ‘உலகளந்த சோழன்' என்று புகழப்பட்டார்.
- ஐம்பெரு மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள் போன்றவை தமிழ் இலக்கியப்படைப்பிற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் சிறந்த கொடைகளாகும்.
- நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத் திவ்விய பிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்.
- குலோத்துங்க சோழப் பேரேரி, இராசேந்திர சோழப் பேரேரி போன்றவை சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.
- ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும் கடமையும் பற்றிச் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
- சோழர் காலத்தில் வேதக்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த நன்கொடையாகும்”. (பக்.119)
வேத, புராணப் பெருமைகளுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல, சைவ, வைணவப் பெருமைகள். அவற்றைக் கீழ்க்கண்ட வரிகள் நிருபிக்கும்.
“புல்லாகிப்பூடாய்…… என்ற பாடல் வரிகள் பல்வகை உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறுகின்றன. ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதிரத்து ஈரமில் கிருமி செறிவினில் பிழைத்தும்‘ எனத் தொடங்கும் பாடலடிகள் கருவியல் (Embrology) அறிவை நன்கு தெரிவிக்கின்றன”. (பக்.155)
சுவாமி தயானந்த சரஸ்வதியின் ‘சுத்தி இயக்கம்’ குறித்த பாடமெழுதிகளின் இந்துத்துவப் பார்வையைக் கண்டுகொள்ளுங்கள். பிற சமயங்களுக்குச் சென்ற இந்துக்கள் ஏன் மீண்டும் இந்துவாக மாற வேண்டும்? அவர்களைக் கட்டாயப்படுத்தி இணைக்கும் தீண்டாமைச் சடங்கு முறையே சுத்தி இயக்கமாகும். (மீண்டும் இந்துவாதல் என்றால் சூத்திரன் மற்றும் பஞ்சமன் ஆதல் என்பதுதான் உண்மை.)
“ஆரிய சமாஜம் தோன்றுவதற்கு முன் பிற சமயங்களுக்குச் சென்ற எவரும், மீண்டும் இந்து சமயக் கோட்பாடுகளை ஏற்று இந்துவாக மாறமுடியாத நிலை இருந்தது. சுத்தி இயக்கத்தின் (Sudhi Movement) மூலம் பிற சமயத்தில் உள்ள இந்துக்களைத் தன் சமயத்தில் மீண்டும் இணைத்துக்கொண்டது”. (பக்.180)
ஸ்ரீ நாராயணகுரு பற்றி எழுதும்போது, “அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் அவர்ணர், சவர்ணர் என்றும் குறிப்பிடப் பட்டனர். அவர்ணர்கள் கல்வி கற்கக்கூடாது, சாஸ்திரங்களைக் கற்கக்கூடாது, கோயில்களை நிறுவக்கூடாது, (பக்.186) பூஜைகளைச் செய்யக்கூடாது என்ற சவர்ணர்களின் அடக்குமுறைக்கு முடிவு கட்ட நாராயணகுரு உறுதி பூண்டார். எனவே, திருவனந்தபுரத்திற்கு அருகில் அருவிப்புரத்தில் கோயில் கட்டி சவர்ணர்கள் மட்டுமே பிரதிஷ்டை செய்யமுடியும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிந்தார்”, (பக்.187) என்று குறிப்பிடுகின்றனர்.
ஏதோ நாராயணகுரு காலத்தில் அதுவும் கேரளாவில் மட்டும் சாதி வேறுபாடுகளும் ஒடுக்குமுறைகளை இருந்ததாகச் சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை?
“ஜோதிபா பூலே மராத்திய மாநிலத்தில் பூனாவில் பிறந்தவர். பூத்தொடுக்கும் குடும்பத்தில் பிறந்தமையால் பூலே என்று அழைக்கப் பட்டார்”, (பக்.187) என்று கண்டுபிடிக்கிறார்கள். உண்மை என்ன?
ஜோதிபா புலே மராட்டிய அடித்தட்டு விவசாய குடும்பங்களில் ஒன்றான கோர்ஹே (Gorhe); தோட்ட வேலை இவர்களது குலத்தொழில். பூக்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் பயிரிட்டு வணிக செய்தனர். பூக்களை உற்பத்தி செய்து வணிகத்தில் ஈடுபட்டதால் புலே என்பது குடும்பப் பெயரானது. (புல் என்றால் பூ என்று பொருளாகும்.)
பெரியார், “பெயருக்குப் பின்னால் வரும் சாதியின் பெயரை ஒழிக்கப் பாடுபட்டார்”. (பக்.189) இது பாராட்டா? விமர்சனமா? வேத, புராண, இந்து மதப் பெருமைகளைப் பேசும்போது வராத தன்மை பெரியாரைச் சொல்லும்போது மட்டும் வருவதேன்?
“உலக சுகாதார மையம் (WHO), உடல்நலம் என்பது, நோயிலிருந்து விடுபடுதல் என்பது மட்டுமல்லாது உடல், மனம், சமூக நலம் போன்றவற்றைப் பேணிக்காப்பதுமாகும் என விளக்குகிறது. ஒருவர், தம் உடலில் எவ்வித நோயும் இல்லாத நிலையுடன் நல்ல உடலமைப்பைப் பெற்று நலமுடனும் மனநலத்துடனும் சமூகத்தில் அனைவரிடமும் ஒழுக்க நெறிகளோடு வாழும் முறையை யோகா கல்வி நமக்குக் கற்றுத் தருகிறது. மேலும், இந்தியாவின் பண்பாட்டைப் பேணிக் காக்கவும் அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கவும் யோகாகல்வி நமக்கு உதவுகிறது”. (பக்.219)
வேதங்கள், புராணங்கள், வருண தர்மம் (சாதி) ஆகியவற்றை ஏற்கும் ஒருவன் (இந்துத் தன்னிலை) மனநலத்துடன் வாழ்வதாகக் கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். இவ்வளவு அழுக்குகளையும் அதனோடு இணைக்கப்பட்ட யோகா மூலம் அறநெறிகளை உற்பத்தி செய்வது கற்பிதம் மட்டுமல்ல; நகைச்சுவையும் கூட.
இறுதியாக ஒரு பயிற்சி:
சமண சமயத்தில் ஐந்து பெரும் நோன்புகள் (அல்லது) பஞ்சமஹாவிரதம்
1. எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காமை– அகிம்சை (Ahimsa)
2. உண்மைபேசுதல் – வாய்மை (Satya)
3. திருடாமை– பிறர் பொருளைக் கவராமை (Asteya)
4. சொத்துகள் சேர்த்தலை விடுதல் – பற்றுகளிலிருந்து விடுபடல் (Abarigraha)
5. தன்னடக்கம் - பிரம்மச்சரியம் (Brahamacharya) (பக்.68)
இவை சமண நோன்புகளாகப் பட்டியலிடப் படுகிறது. யோகாவை இந்து மதக் கொடையாக மாற்றியாகிவிட்டது. பின்வரும் ‘யோகம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்’ எனும் பாடத்தில் கீழ்க்கண்டவை சொல்லப்படுகிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைக் காண்க.
இயமம்
“மனத்தில் உள்ள விரும்பத்தகாத எண்ணங்களை நீக்குவதற்கான வழிமுறைகளை இயமம் வெளிப்படுத்துகிறது. இது சமூகக் கடமைகளை வலியுறுத்தும் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை முறையே,
1. அஹிம்சை - வன்முறை இல்லாமை
2. சத்தியம் – உண்மை
3. அஸ்தேயம் – திருடாமை
4. பிரம்மச்சரியம் - தன்னடக்கம்
5. அபரிக்ரஹம் – அதிக பொருள் சேர்க்காமல் மகிழ்ச்சியாக இருத்தல். (பக்.199)
(அடுத்த கட்டுரையுடன் நிறைவடையும்.)