ஆசிரியர்களும் அரசியலும்
மு.சிவகுருநாதன்
மக்களாட்சியில் யாரும் சிறப்புத் தகுதிகளோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களோ கிடையாது. அனைவரும் சம உரிமையுடையவர்கள்.
நீதிபதிகள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் இது பொருந்தும். நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றிக் கருத்துகள் கூறப்படுவது நீதிமன்ற அமைப்பை வலுப்படுத்துமே ஒழிய அதை அவமதிப்பதாகக் கருதக்கூடாது.
பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அவரைக் குற்றவாளியென்றும் தண்டனை விவரம் ஆகஸ்ட் 20 வழங்கப்படுவதாக இன்று (14/08/2020) அறிவித்துள்ளது.
கருத்துரிமை, மக்களாட்சியை வலுப்படுத்தல், நீதிபரிபாலன அமைப்பை மேம்படுத்துதல் என்கிற நோக்கில் இவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமே தவிர, அவமதிப்பு என்பதாக எடுத்துக் கொள்வது சரியல்ல; நீதி அமைப்புகளுக்கும் இது அழகல்ல. வருங்காலங்களில் இவை சரியாகும் என்று நம்புவோம்.
ஒரு தனியார் தொலைக்காட்சி ஊரடங்கு காலத்தில் ஊதியம் குறித்து விமர்சனம் செய்ததைக் கண்டு ஆசிரியர்கள் பொங்கி எழுகின்றனர். இது முதல் தடவையல்ல; பலமுறை இவ்வாறு நடந்துள்ளது. 'துக்ளக்' இதழில் துர்வாசர் என்ற பெயரில் எழுத்தாளர் வண்ணநிலவன் எழுதிய குறிப்பிற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
'பாலிமர்' தொலைக் காட்சியை ரொம்ப நடுநிலையான தொலைக்காட்சி என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது கண்ணில் பட்டது. இதைப்போல் நடுநிலை அரசியல் இதழ் 'துக்ளக்' என்ற பார்வையும் இருந்துவிட்டால் என்ன செய்வது?
ஆசிரியர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் நுண்ணரசியல் செயல்பாடுகளை எவ்வாறு உள்வாங்கிப் புரிந்துகொள்கின்றனர் என்பதில் பெருத்த அய்யம் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் இருப்பதால் 'அப்பாவிக் குழந்தை மனம்' உடையவர்களாக மாறிவிடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறு பொங்கி எழுவது தேவையா என்பதே நமது கேள்வி. சமூக அசைவியக்கத்தில் இவ்வாறு பல பேச்சுகள் இருக்கவே செய்யும். இவை மட்டுமே ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் இருக்கவியலாது.
ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத காலத்தில் கூட தனியார் நிறுவனங்களும் ஊதியக்குறைப்பு அல்லது நிறுத்தம் செய்யக்கூடாது என்பது அரசின் உத்தரவு. தனியார் நிறுவனங்களே ஊதியத்தை நிறுத்தக் கூடாது எனும்போது அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதை எப்படி குற்றமாக்க இயலும்?
வீட்டிலிருந்து பணி (WFH), சுழற்சி முறையில் பணி, தேவைப்படும்போது பணி, இணைய வழிப் பணி என்ற வகையில் ஏதோ ஒரு வகையில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பணியில் இருக்கின்றனர்.
இவர்களுக்கு 15 நாள்கள் ஈட்டிய விடுப்பு மற்றும் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'கொரோனா' காலம் சனி வேலை நாள்; ஞாயிறு என்ன ஆகுமென்று தெரியவில்லை; கோடை விடுமுறை இருக்காது. சில குறிப்பிட்ட பணிகள் நடந்தேயாக வேண்டும்.
இவற்றைப் பொதுவெளியில் மக்களுக்குப் புரிய வைக்கும் பணி சிறப்பானதே. ஆனால் வெறுமனே பொங்கி எழுவது நலமான அரசியல் செயல்பாடல்ல. ஆசிரியர்கள் மெத்தப் படித்திருந்தாலும் ஒரு அரசியல் முதிர்ச்சி இல்லாத நிலையை இந்த 'பொங்கி எழுவதன்' ஊடாக அவதானிக்க முடிகிறது. பொதுவெளியில் ஊடாடுவது கூட அரசியல் செயல்பாடுதான்.
கல்விக்காகவும் மாணவர்கள் மற்றும் சமூகத்திற்காகப் போராடும், வாதாடும் கடப்பாடு ஆசிரியர்களுக்கும் என்றும் உண்டு. அந்த வகையில் புதிய கல்விக் கொள்கை வரைவுகள் வந்தபோதும் இறுதிக் கொள்கை 2020 அறிவிக்கப்பட்டபோதும் அவற்றை முழுதும் வாசித்து அவற்றின் சாதக, பாதகங்களை ஆராயும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு 10% தாண்டுமா என்பது கேள்விக்குறி.
கல்வியில் அதாவது தான் பணியாற்றும் துறையில் ஏற்படும் மாற்றத்தை அறிந்துகொள்ளும் அல்லது எதிர்வினையாற்றும் ஆர்வம் எத்தனை பேருக்கு இருக்கிறது?
துக்ளக், பாலிமர் போன்றவற்றையே பேசிக் கொண்டிருந்தால் நமது வீட்டில் (கல்வியில்) நடக்கும் கொடுமைகளை யார்தான் கண்டு கொள்வர்?
இதற்கு மாற்று என்கிற பொருளில் நான் சொல்ல வரவில்லை. மேலும் புதிய கல்விக்கொள்கை பற்றிய தீவிரமாக ஆராய்ந்து எதிர்வினை மற்றும் களப்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன்.
நம்மீதான விமர்சனத்தை மட்டும் கண்டு, நம்மைச் சூழும் இருளைக் கவனிக்காதிருக்கக் கூடாது. ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து முதலில் விளாடிமீர் புடின் ஆசிரியர்களுக்கு அளிக்கச் சொன்னதைப் பெருமையாக நினைத்து, அதையே பேசித் திரியாமல் கல்வியில் 'கொரோனா' போன்ற இருள் கவ்வும் நிலையைக் கண்டும் காணாமல் இருப்பது பெரும்பாலான ஆசிரியச் சமூகத்திற்கு அழகல்ல என்பதனையும் உணர்த்த வேண்டிய தருணம் இது.