எதிர் அறவியல் – பகுதி: இரண்டு
மு.சிவகுருநாதன்
ஏற்கனவே ஆறாம் வகுப்பில் மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களைத் திரிப்பதைக் கண்டோம். இங்கு மணிமேகலையின் மையக் கருத்தை விண்டுரைப்பதைப் பாருங்கள்!
“பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்தமுடியும் என்பது, மணிமேகலையின் மையக்கருத்தாகும்”. (பக்.04, வகுப்பு:+1)
“கம்பராமாயணம் சோழப்பேரரசு எழுச்சி பெற்ற காலத்தில் தோன்றிய காப்பியம் கம்பராமாயணம்”, (பக்.50, வகுப்பு:+1) என்று ஒரு பாடநூல் சொல்கிறது. பிற்காலச் சோழர்களின் பிற்பகுதியே (மூன்றாம் குலோத்துங்கன்) கம்பர் வாழ்ந்த காலமாகும். முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் காலமே பிற்காலச் சோழர்களின் பொற்காலமாக இவர்களால் போற்றப்படுகிறது. இங்கு கொஞ்சம் தடுமாற்றம் போலும்!
உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் கீழ்க்கண்ட வரிகள் இடம் பெறுகிறது.
“இந்துக்கள் நாகூராண்டவர் மசூதிக்குச் செல்வதும் – வேளாங்கண்ணித் திருச்சபைக்கு செல்வதும் – பிற சமயங்களோடு கொண்டுள்ள சமய நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்”. (பக்.174, வகுப்பு:+1)
நாகூராண்டவர் மசூதி அல்ல; தர்கா. இந்துக்கள் மட்டுமே பிற மத வழிபாட்டிடங்களுக்குச் செல்கின்றனர் என்பது மிக மோசமானது. அனைத்து சமயத்தாரும் பிற மத இடங்களுக்குச் செல்வதும் நன்கொடைகள், காணிக்கைகள் வழங்குவதும் இயல்பான ஒன்று. இதை இந்துக்களின் பண்பாக திரிப்பது அபத்தம்.
+1 வகுப்பு ‘அறவியலும்
இந்தியப் பண்பாடும்’ பாடநூலில் தீபாவளி பற்றிச் சொல்லப்படுவன:
“தீபாவளி என்றால் (தீபம் + ஆவளி) ‘தீபங்களின் வரிசை’ என்பது பொருள். இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளித் திருநாளாகும். முன்பொரு காலத்தில் நரகாசுரன் தேவர்களையும் மக்களையும் கொடுமை செய்ததாகவும். அவனது கொடுமையை மக்களும் தேவர்களும் பொறுக்க முடியாமல் திருமாலிடம் முறையிட்டதாகவும், திருமால் சக்கராயுதத்தால் நரகாசுரனை வதம் செய்து மக்களையும் தேவர்களையும் காத்ததாகவும் கூறுவர். நரகாசுரன்தான் இறக்கும் தருவாயில் தனது நினைவு நாளை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாகவும் கூறுவர். அந்நாளே, தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா, தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது”. (பக்.99, வகுப்பு:+1)
சமணர்களின் பண்டிகையான தீபாவளி இந்து மதத்தால்
கைக்கொள்ளப்பட்டது என்பதுதானே உண்மை. இந்துமதக் கருத்துகள் எல்லா மதங்களிலும் இருப்பதாகப்
பிதற்றுபவர்கள் பிற சமயக் கருத்துகளை ஏற்காத ‘சுயம்பு மத’மாக இந்து மதத்தைக் கட்டமைக்க
முயன்று தோல்வியுறுகின்றனர். இது பாடநூல் அறமல்ல.
+2 வகுப்பில் ‘இந்தியப் பண்பாடும் சுற்றுச்சூழலும்’ என்ற தலைப்பில் அரசமரம் குறித்துக் கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது.
“பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுவதால், இம்மரம், ‘மரங்களின் அரசன்‘ என்றும் அழைக்கப் படுகிறது”. (பக்.228, 12 அறவியலும் இந்தியப் பண்பாடும்) இவ்வகையான அபத்தங்களை நீக்க முடியும் என்று தோன்றவில்லை.
“இந்தியர்கள் அறுவை சிகிச்சைமுறையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். வயிற்றுப் புறத்தோலில் செய்யப்படும் அறுவை சிகிச்சை (Lab Parotomy), சிறுநீரகக் கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை (Lithicotomy), ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (Plastic Surgery) ஆகியவற்றில் இந்திய மருத்துவர்களின் பணிகள் பாராட்டுக்குரியவையாகும்”. (பக்.242, வகுப்பு:+2)
இம்மாதிரியான போலி அறிவியல் பெருமைகளில் மூழ்குவதை இவர்கள் நிறுத்தப் போவதில்லை. இதன்மூலம் வருங்கால தலைமுறையை பாழாக்குகின்றனர்.
பரதநாட்டியம் பற்றி பாடநூல் உரைப்பவை:
“தமிழ்நாட்டுக்குரிய சிறந்த நடனங்களில் முக்கியமானது பரதநாட்டியம். இது, புராணவியல் அடிப்படையில் பரத முனிவரால் உருவாக்கப்பட்டதால் ‘பரதம்‘ எனப்பெயர் பெற்றது. மிகத் தொன்மை வாய்ந்த இந்நடனம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது”. (பக்.244)
தேவதாசிகளின் ‘சதிராட்டம்’ பரத நாட்டியமாக உருப்பெற்றது. இக்கலையைப் பாதுகாக்க அப்பெண்கள் தங்களது வாழ்வைத் தொலைத்தனர். அன்று இழிவான இக்கலை இன்று மேட்டிமைவாதத்தால் புனிதமாக்கப்பட்டது. அதற்கெற்ப புராண உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன.
“திகம்பரர் – திக் + அம்பரர் – திக் என்றால் திசை, அம்பரம் என்றால் ஆடை = திசைகளையே ஆடைகளாக அணிபவர்கள் எனப் பொருள்படும். (ஆடையே அணியாதவர்கள்)” (பக்.67, வகுப்பு:+2)
திகம்பரர்– திசைகளையே ஆடையாக அணிபவர்
சுவேதம்பரர்– வெண்ணிற ஆடை அணிபவர் (பக்.103, வகுப்பு:+1)
திகம்பரப் பிரிவைச் சேர்ந்த சமணர்கள் ஆடையை அணிவதில்லை என்ற பொருளைத் தருகின்றவல்லவா! திகம்பரத் துறவிகள் மட்டுமே ஆடையற்ற நிர்வாணிகளாக (அமணர்கள்) இருக்கிறார்கள். இல்லறத்தார் ஆடையுடுத்தாமல் இருப்பதில்லை. மேலும் இத்துறவிகள் அகோரிகளைப் போல பொதுவெளிகளில் நடமாடுவதும் குறைவு.
“புத்தர் ஒருநாள் நகர்வலத்தின்
போது கண்ட நான்கு காட்சிகள் அவரது வாழ்வை மாற்றின எனலாம். வயது முதிர்ந்த
மனிதன், நோயாளி, பிணம், துறவி போன்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு அதனைப் போக்க வழி
காண முயன்றார். இதனால் அனைத்தையும் துறந்து துறவியானார்”. (பக்.72, வகுப்பு:+2)
இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த கதைகளைச் சொல்லி ஏமாற்றுவது? சாக்கிய மற்றும் கோலிய இனக்குழு மக்களிடையே ரோகிணி நதிநீரைப் பங்கிடுவதில் ஏற்பட்ட சிக்கலை மேனிலை வகுப்புகளில் கூட பேசவில்லை என்றால், இந்தக் கல்வியால் என்ன பயன்?
“பார்சிக்கள் இறந்துவிட்டால் அவர்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் அமைதி கோபுரம் என்னும் இடுகாட்டுப் பகுதிகளில் விலங்குகள் மற்றும் பறவைகளால் உண்ண செய்கின்றனர். ஆனால், தற்போது இதில் மாற்றங்கள் காணப்படுகின்றன”. (பக்.77, வகுப்பு:+2)
அது என்ன ‘பார்சிக்கள்’? ‘பார்சிகள்’ என்றால் போதாதா? மேற்கண்ட வரிகளின் உள்நோக்கம் என்ன? சடலங்களை கழுகு போன்றவற்றிற்கு உணவாக்குதல் குறித்த வெறுப்பா அல்லது சூழல் மாசுபாடு குறித்த கரிசனமா? இறந்த சடலங்களை விலங்குகளுக்கு உணவாக்குதல் என்பது தொல்குடி மரபு. இதில் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை.
இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படக் காரணம் என்ன? பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் ‘பாறு’கள் இன்று அழிந்துவரும் இனமாகிவிட்டது. விலங்குகளுக்கு அளிக்கப்படும் டைகுளோபினாக் என்னும் வேதி மருந்தின் நச்சுத் தன்மையே இதற்குக் காரணமாகும். காகங்கள், பாறுகள் அழிகின்றபோது பார்சிகளின் இம்முறை இல்லாவிட்டாலும்கூட சூழல் மாசுபாடு ஏற்படவேச் செய்யும். இறந்த விலங்கு உடலங்களை உண்ணும் இவைகள் அழியும்போது உணவு வலையில் பாதிப்புண்டாகும்; சூழல் பாதிப்பு மிகும்.