வியாழன், டிசம்பர் 21, 2023

கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி!

 

கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி!

அஞ்சலி: தோழர் என். சங்கரய்யா (15.07.1922 – 15.11.2023)

மு.சிவகுருநாதன்

 


 

             விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா (102) வயது முதிர்வின் காரணமாக இயற்கையில் (நவம்பர் 15, 2023) கலந்தார். தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூர் கிராமத்தில் பிறந்த (ஜூலை 15, 1922) பிறந்த சங்கரய்யாவிற்கு முதலில் பெற்றோர் வேறு பெயர் (பிரதாப சந்திரன்) சூட்டினாலும் அவரது தாத்தாவின் பெயரே நிலைத்தது. பணியின் காரணமாக குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. எனவே பள்ளி, கல்லூரிக் கல்வியை மதுரையில் பெற்றார். பள்ளி மாணவனாக இருக்கும்போதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார்.

          சென்னை மாணவர் சங்கத்தைப் போன்று மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக பணிபுரிந்தார். 1941இல் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து அமெரிக்கன் கல்லூரியில் கண்டனக் கூட்டம் நடத்திக் கைதானார். கல்லூரியில் படிக்கும்போது விடுதலைப் போரில் பங்கேற்றதால் இறுதித்தேர்வுக்கு முன்னதாக பிரிட்டிஷ் அரசு அவரைக் கைதுசெய்து சிறையலடைத்தது. இதனால் பட்டப்படிப்பு முழுமை பெறாமல் போனது.

          தொடக்கத்தில் திராவிட இயக்கத் தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்த சங்கரய்யா, 1940இல் பொதுவுடைமைக் கொள்கையின் மீது கொண்ட ஈடுபாட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். விடுதலைப் போராட்டங்களில் பலமுறையில் சிறைலடைக்கப்பட்ட சங்கரய்யா இறுதியாக மதுரைச் சதி வழக்கில் (1946) சிறை சென்று, நாட்டு விடுதலைக்கு முதல் நாள்தான் (ஆகஸ்ட் 14, 1947) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். எட்டு ஆண்டுகள் சிறைகளில் கழித்த மக்கள் விடுதலைப் போராளி சங்கரய்யா. கட்சி தடை செய்யப்பட்டபோதும் சீனப் போரின் போதும் கைதாகி சிறை சென்றார். கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை மற்றும் அடக்குமுறைகளின்போது நான்கு ஆண்டுகள் தலைமறைவுவாக இருந்து கட்சிப் பணியும் மக்கள் பணியும் செய்தவர்.

         நாட்டு விடுதலைக்குப் பின் கட்சியைச் சேர்ந்த நவமணி அம்மையாரை காதல் திருமணம் செய்துகொண்டார். இது சாதி, மத மறுப்புத் திருமணமாக அமைந்தது மட்டுமின்றி அவரகளது குழந்தைகளுக்கும் அதே வழியில் திருமணங்கள் நடக்க அடித்தளமாக அமைந்தது. கருத்தியலும் கொள்கைகளும் அவரையும் குடும்பத்தினரையும் வழி நடத்தியது. ‘தீக்கதிர்நாளிதழின் முதல் ஆசிரியர் இவரே. ‘செம்மலர்இதழ், தமுஎகச உருவாக்கத்திலும் முதன்மைப்பங்கு வகித்தார்.

       1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது அதிலிருந்து வெளியேறிய 32 தலைவர்களுள் ஒருவராக சங்கரய்யா இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது முதல் மத்தியக் குழுவில் இடம்பெற்றார். 1967, 1977, 1980 என மூன்று முறை மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொண்டாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் இவரது பணிகள் அளப்பரியது. கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பணியாற்றினார்.  

         80 ஆண்டுக்கு மேலாக பொதுவாழ்வில் இருந்த சங்கரய்யா களப் போராளியாகவும் மக்கள் போராளியாகவும் பணி செய்தார். மார்க்சிய கருத்தியல் அவரை முன்னோக்கிச் செலுத்தியது. தமிழ்ச்சூழலில் அவருக்கு தொடக்க காலந்தொட்டே திராவிட இயக்கத் தாக்கமும் இருந்தது. தீண்டாமை ஒழிப்பு, சாதியொழிப்பு போன்ற சமூக மாற்றச் சிந்தனைகள் மேலும் செழுமையடைந்தன.

        விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டபோது சங்கரய்யா அதனை ஏற்க மறுத்தார்.  விடுதலைப் போரில் படிப்பைக் கைவிட்டதை எவ்வாறு மகிழ்வோடு எதிர்கொண்டாரே அதைப்போல அதற்கு சன்மானம் எதையும் பெற அவரது மனம் ஏற்கவில்லை. அவரது மார்க்சிய, காந்தியத் தாக்கம் இதற்கு ஒப்பவில்லை. அந்த மார்க்சியவாதிக்குள்ளும் ஒரு காந்தியர் இருந்தார். விடுதலைப் போரில் பங்கேற்றதை தமது கடமையாகக் கருதினார். 2021இல் தகைசால் தமிழர்விருதுக்கான தொகையை அரசுக்கே வழங்கினார். கம்யூனிஸ்ட் கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினரின் ஊதியம் உள்பட எதுவும் கட்சிக்கே செல்லும். தனக்கென வாழாமல் கட்சி, கருத்தியல், மக்கள் என வாழ்ந்து மறைந்த தோழர்.

        மதுரைக் காமராஜர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு தோழருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தபோது சான்றிதழில் வேந்தர் என்கிற முறையில் கையொப்பமிட மறுத்து ஆளுநர் பதவிக்கு தீராக் களங்கத்தை ஏற்படுத்தினார் ஆர்.என்.ரவி. இதை மக்களுக்கு எதிராக உருவாகும் பாசிசக் கருத்தியல் வன்முறையின் ஓரங்கமாக எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் மக்களுடன் சார்ந்த எக்கருத்தியலுடனும் நிற்கத் தகுதியற்றவர்கள். டாக்டர் பட்டத்தால் அவருக்கு எந்தப் பெருமையும் வந்துவிடப் போவதில்லை. தோழர் என்.எஸ். (என்.சங்கரய்யா) என்ற பட்டமும் பெயரும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

         எல்லா தரப்பும் இவரது மறைவையொட்டி அருங்குணங்களைப் பட்டியலிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர். ஆனால் சமூகத்தின் ஆழ்மனதில் இவரைப் போன்றவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்என்கிற எண்ணமும் இருக்கிறது. இன்றைய சமூகம் இடதுசாரி இயக்கத் தலைவர்களான சிங்காரவேலர், ஜீவா, பி.எஸ்,சீனிவாசராவ், நல்லசிவம், நல்லக்கண்ணு போன்றோரை பொதுவாழ்வில் எளிமை, தூய்மை, நேர்மை போன்ற அருங்குணங்களுக்காகக் கொண்டாடுகிறது.  காந்தி, காமராசர் போன்ற மறைந்த தலைவர்களை நினைவுகூறும் போதும் இத்தகைய நிலை தொடர்வதைக் காணலாம். இந்த கொண்டாட்ட, பெருமித மனநிலை   மட்டுமே இன்றைய சமூகத்திற்குப் போதுமானதாக உள்ளது கவலைக்குரியது. மறுபுறம் அத்தகைய குணங்களை தங்களது வாழ்வில் இம்மியும் கடைபிடிக்காத தன்மையையும் பலரிடம் நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். இப்பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டும். நாட்டில் பிழைக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

        கம்யூனிட் கட்சியில் உள்ளோர் மட்டும் கம்யூனிஸ்ட்கள் இல்லை. காங்கிரசில் இருப்போர் மட்டும் காந்தியர்கள் இல்லை. திராவிட இயக்கங்களில் இருப்போர் மட்டும் பெரியாரிஸ்ட் இல்லை. தலித் இயக்கங்களில் செயல்படுவோர் மட்டும் அம்பேத்கரிஸ்ட் இல்லை. இதை எல்லா இடங்களுக்கும் கருத்தியல்களுக்கும் விரிவாக்கலாம். இந்தக் கருத்தியல் செயல்பாட்டாளர்கள் வெளியிலும் இருக்கக்கூடும். வினோபா, ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றில்லை. இது பெரும்பாலும் எல்லா கருத்தியலுக்குப் பொருந்தும்


 

          இன்றுள்ள சூழலில் ஒரே கருத்தியலின் ஆதிக்கம் இருப்பது சரியல்ல. சங்கரய்யாவின் எளிமைக்குள் காந்தியம் உண்டு. சாதியொழிப்புக் கண்ணோட்டத்தில் அம்பேத்கரியம் பங்களிக்கும். சுயமரியாதை, தன்னுரிமைச் சிந்தனையில் பெரியாரியத்தின் சாயல் மிகும். தொழிலாளர்கள், வர்க்கப் பார்வையில் மார்க்சிய சிந்தனை மிளிரும். இவ்வாறான மக்கள் சார்பான கருத்தியல்களின் வானவில் கூட்டணியே இன்றைய தேவை என்பதை சங்கரய்யாவின் வாழ்வும் பணியும் நமக்கு உணர்த்தி செல்கின்றன.

           மனிதர்களுக்குண்டான குறைபாடுகள் அனைவரிடத்திலும் இருக்கும். எதையும் நூற்றுக்கு நூறு சரியானதாக மதிப்பிட இயலாது. இருப்பினும் கருத்தியல் சார்ந்த நேர்மையுடன் அடுத்தகட்ட பாதை சமைப்பவர்களே சிறந்த தலைவராக விளங்க முடியும். இத்தகைய பண்புக்கூறுகளை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியாமற்போகும்போது மக்களுக்கான அரசியல் இல்லாமற் போய்விடுகிறது. பொதுவாழ்வு என்பது   அறவியல் கூறுகளை உள்ளடங்கிய அரசியலாகப் புத்தெழுச்சி பெற வேண்டும். பொதுவாழ்வில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் உயரிய குணங்களை முடிந்த அளவு பின்பற்றுவதே நாம் அவருக்கு செய்யும் வீரவணக்கமாக இருக்க முடியும். 

நன்றி: பேசும் புதியசக்தி - டிசம்பர் 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக