திங்கள், ஜூலை 24, 2023

'களரி' வழங்கிய சுந்தரி கல்யாணம்

 

'களரி' வழங்கிய சுந்தரி கல்யாணம்
 
மு.சிவகுருநாதன்
 

 
 
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் வடகண்டம் அருகே எட்டியலூர் என்னும் கிராமத்தில் மணல்வீடு களரி மு.ஹரிகிருஷ்ணன் வழங்கிய 'சுந்தரி கல்யாணம்' மரப்பாவைக் கூத்து இன்றிரவு (23/07/2023) நடைபெற்றது.
கிருஷ்ணன் மகள் சுந்தரி அத்தை மகன் அதாவது அர்ஜுனன் - சுபத்திரையின் மகனான அபிமன்யூவை விரும்புகிறாள். மாறாக கிருஷ்ணன் துரியோதனன் மகனுக்குச் சுந்தரியை நிச்சயம் செய்கிறான்.
இதை மறுக்கும் சுந்தரி சிறை வைக்கப்படுகிறாள். சிறையிலிருந்து சுந்தரி கடிதம் எழுத, அபிமன்யூ சுந்தரியை மீட்டு மணம் முடிப்பதுதான் சுந்தரி கல்யாணம்.
இது மகாபாரதக் கிளைக்கதை. உண்மையில் இந்த நாட்டார் கதை ஏழை-பணக்காரன், ஆண்-பெண் உறவுகள், அதிகாரங்கள், வர்க்க, பாலின முரண்கள் போன்றவற்றை
தன்னளவில் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது.
ஜெயமோகன்கள் எத்தனைப் பத்தாயிரம் பக்கங்கள் எழுதினாலும் இந்த நாட்டார் பிரதி முன் நிற்க முடியாது.
நிகழ்த்திய மு.ஹரிகிருஷ்ணன் குழுவினருக்கும் ஏற்பாடு செய்த அவ்வூர் பொதுமக்களுக்கும் நன்றி.

சனி, ஜூலை 22, 2023

"இரும்புக்கை மாயாவியும்" பேண்டசியும்

  "இரும்புக்கை மாயாவியும்" பேண்டசியும்

மு.சிவகுநாதன் 


 


இன்று (22/07/2023) திருவாரூர் தைலம்மையில் மேட்னி ஷோ நிலாக்களுடன் "மாவீரன்" திரைப்படம்.
"மண்டேலா" படமெடுத்த இயக்குநர் மடோன் அஸ்வின் படமிது.
ஒரு சிறந்த அரசியல் படமாக மாறியிருக்க வேண்டிய மாவீரன் குழந்தைகளுக்கான "காமிக்ஸ் பேண்டசி"யாகவும் பரிணமிக்காமல் ஒரு காமெடிப்படமாக உருமாற்றிவிட்டார்கள்.
அரசியல், அடித்தட்டு மக்களின் வாழ்வியலை தனிமனிதச் சாசகச் சினிமாவின் மூலம் "இரும்புக்கை மாயாவி" ரேஞ்சுக்கு எடுத்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், யோகிபாபு மட்டுமல்லாது வில்லன் மிஷ்கின் உள்ளிட்ட பலர் படத்தில் நம்மை சிரிப்பில் ஆழ்த்துகின்றனர்.
காமிக்ஸ் செருகலால் சிறுவர் படம் என்றும் சொல்ல இயலாது; வன்முறைகள் அதிகம். ஆனால் சிறுவர்கள் இந்த உத்தியை விரும்பக்கூடும். ஏதோ ஒரு ஆன்லைன் கேம் விளையாடுவதைப் போல.
தமிழில் குழந்தைகள், அரசியல், பேண்டசி படங்களை எதிர்பார்க்கக்கூடாது. இங்கு அத்தகைய சூழல் இல்லை.

புதன், ஜூலை 12, 2023

தென்னாப்பிரிக்காவில் காந்தி

 

தென்னாப்பிரிக்காவில்  காந்தி

(மகாத்மாவின் கதை தொடரின் ஏழாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்


 

         பிரிட்டோரியாவில் வசித்த ஓராண்டு காலத்தில் மதிப்புமிக்க அனுபவங்கள் காந்திக்கு கிடைத்தன. பொதுப்பணியைச் செய்வதற்கான வாய்ப்பையும் அதற்கான ஆற்றலை பெற்ற இடமிது. சமய உணர்ச்சி உயிர் சக்தியானது இவ்விடத்தில்தான். பேக்கர், கன்னி ஹாரிஸ், கன்னி கார். கோட்ஸ் போன்ற கிருஸ்தவ சமயப் பரப்பாளர்கள் தொடர்பும் ஏற்பட்டது. வழக்கறிஞர் தொழில் தொடர்பான ஞானத்தையும் தொழில் ரகசியத்தையும் தன்னாலும் வழக்கறிஞர் தொழில் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டது.

        தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால், ஆரஞ்சு பிரீ ஸ்டேட் (Orange Free State) ஆகிய இடங்களில் வாழும் இந்தியர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை  காந்தி அறிந்துகொண்டதோடு, இந்தியக் கூலிகள் படும் துயரங்களை தானும் அனுபவித்தார். டிரான்ஸ்வாலில் 1885இல் கொண்டுவரப்பட்ட சட்டமும் அடுத்தாண்டு செய்யப்பட்ட அதன் திருத்தங்களும் இந்தியர்களுக்கு எதிராக இருந்தன. டிரான்வாலுக்குள் செல்ல இந்தியர்கள் 3 பவுன் தலைவரி செலுத்தவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர பிற இடங்களில் சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் இரவு 9 மணிக்குமேல் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்ற கடுமையான விதிகளை உடையதாக இச்சட்டம் இருந்தது.

         ஆரஞ்ச் பிரீ ஸ்டேட்டிலும் இதே நிலைதான். அங்கு 1858 இல் கொண்டுவரப்பட்ட சிறப்புச் சட்டம் இந்தியர்களின் வாழ்வுரிமைகளைப் பறித்தது. சுயமரியாதையுள்ள இந்தியனுக்கு உகந்த நாடாக தென்னாப்பிரிக்கா இல்லை என்பதை காந்தி உணர்ந்தார். இதை மாற்றுவது எப்படி என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியபடி இருந்தது.  

        ஆனால் தாதா அப்துல்லாவின் வழக்கை சமரசமாக முடித்தபின் பிரிட்டோரியாவில் இருக்க வேண்டிய தேவை இல்லாமற்போனது. டர்பனுக்குத் திரும்பிய பின்னர் இந்தியா திரும்ப விரும்பிய காந்திக்கு அப்துல்லா சேத் பிரிவுபசார விழாவும் நடத்தினார். அப்போது நேட்டால் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்தெடுக்க இந்தியர்களுக்கு இருந்த உரிமையைப் பறிக்கக் கொண்டுவரப்படும் மசோதா பற்றிய  இந்தியர்களின் வாக்குரிமைபற்றிய செய்தி நாளிதழ்களை புரட்டியபோது கண்ணில் பட்டது.

       இதைப்பற்றி காந்தி அப்துல்லா சேத்திடம் விசாரித்தபோது, வியாபாரத்தைப் பாதிக்கும் விஷயங்களை மட்டும்  ஓரளவு அறிந்து வைத்திருக்கிறோம். பிறவற்றுக்கு எங்களுக்கு கண்களாகவும் காதுகளாகவும் இருப்பவர்கள் ஐரோப்பிய அட்டர்னிகளே, என்றார். படித்த இந்திய இளைஞர்கள் கிருஸ்தவர்களாக இருப்பதால் அரசு ஆதரவாளர்கள் என்ற செய்தி காந்திக்கு எட்டியது. இவர்களைநம்மவர்கள்என்று உரிமை கொண்டாடவேண்டும் என்று காந்தி நினைத்தார்.  இந்த உரையாடலைக் கேட்ட விருந்துக்கு வந்திருந்தவர்கள் காந்தியின் பயணத்தை ரத்து செய்யவும் ஒருமாதம் தங்கியிருந்து போராட வழிகாட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

       அப்துல்லா சேத் காந்தியின் பயணத்தை நிறுத்தி வைக்கும் முடிவை ஏற்றுக்கொண்டார். காந்தி பாரிஸ்டர் என்பதால் அவருக்குரிய கட்டணம் பற்றி வினவினார். இதனால் வருத்தமடைந்த காந்தி பொதுச்சேவைக்குக் கட்டணம் கிடையாது. நான் உங்களுடன் சேவகன் என்கிற முறையில் தங்குகிறேன். தந்திகள் அனுப்ப, பிரசுரங்கள் அச்சிட, இங்குள்ள சட்ட நூல்களை வாங்க பணம் தேவைப்படும். மேலும் இப்பணிக்கு எனக்கு உதவிசெய்ய பலர் முன்வர வேண்டும் என்றார். பிரிவுபசார விழா முடிவெடுக்கும் செயற்குழுவாக மாறிப் போனது. இது தென்னாப்பிரிக்காவின் காந்தி வாழ்க்கையைத் தொடரவும் தேசிய சுயமரியாதைக்கான போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது.

       அப்போது நேட்டால் இந்தியர்களிடையே தலைவராக இருந்த சேத் ஹாஜி முகமது தாதா தலைமையில் அப்துல்லா சேத் இல்லத்தில் கூட்டம் நடத்தி வாக்காளர் மசோதவை எதிர்க்கத் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இந்தியக் கிருஸ்தவ இளைஞர்கள் அழைக்கப்பட்டுப் பங்கேற்றனர். மதம், மொழி, இன வேறுபாடுகளை மறந்து எல்லாரும் நாட்டின் குழந்தைகளாக, சேவகர்களாக மாறினர். நேட்டாலிலிருந்து பணிசெய்ய வேண்டியிருப்பதால் காந்தி அங்கு குடியேறினார். பொதுச்சேவைக்கு ஊதியம் பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

        வாக்குரிமைப் பறிக்கும் மசோதா எதிர்ப்போடு நின்றுவிட முடியாது. தீவிரமான ஆலோசனைகளுக்குப் பிறகு நமது உரிமைகளுக்காகப் போராட அமைப்பு தேவை என்ற முடிவுக்கு காந்தி வந்தார். காங்கிரஸ் என்ற பெயர் இங்கிலாந்து கன்சர்வேட்டிவ்களுக்கு வெறுப்பாக இருந்தபோதிலும் இந்தியாவின் உயிராக இருப்பது காங்கிரஸ் என்பதால், நேட்டால் இந்திய காங்கிரஸ் 1894 மே 22இல் உதயமானது. உறுப்பினர்களுக்கு மாதம் 5 ஷில்லிங் எனவும் பணவசதி படைத்தவர்கள் அதிகம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்ட்து. சந்தா வசூலிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக ஆண்டுக்கொருமுறை குறைந்தபட்சம் 3 பவுன் சந்தா என மாற்றியமைக்கப்பட்டது. 

        வசூல், வரவு செலவுக்கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்பட்டன. ‘இந்தியக் கல்விச் சங்கம்ஒன்றும் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் சார்பில் புத்தகச் சாலையும் தொடங்கப்பட்டது. பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பிரிட்டானியருக்கும் வேண்டுகோள், நேட்டால் இந்தியரின் வாக்குரிமை போன்ற தலைப்புகளில் பிரசுரங்கள் வெளியாயின. இதன் வழியே தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கான வேலைத்திட்டம் உருவெடுத்தது.

      ஒப்பந்தத் தொழிலாளியாக இருந்த தமிழர் பாலசுந்தரம் ஐரோப்பிய முதலாளியால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு முன்பற்கள் உடைக்கப்பட்டு காந்தியிடம் வந்து சேர்ந்தார். காந்தியிடம் இருந்த தமிழ் குமாஸ்தா மூலம் விவரங்களைக் கேட்டறிந்தார். உரிய மருத்துவச் சான்று பெற்று வழக்கும் தொடுத்தார். ஒப்பந்தத் தொழிலாளர் சட்டங்கள் மிக மோசமாக இருந்தன. இது ஓர் அடிமை முறையின் இன்னொரு வடிவமே. பாலசுந்தரத்தை அவரிடமிருந்து விடுவித்து மற்றொருவருவரிடம் சேர்த்தார். 

       பாலசுந்தரம் வழக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை பற்றி மேலும் ஆராய காந்தியைத் தூண்டியது. 1894 இல் நேட்டால் அரசு இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 25 பவுன் வரி விதிக்க முடிவு செய்தது. இதை எதிர்க்க காங்கிரஸ் முடிவு செய்தது. இறுதியாக் வரி 3 பவுனாகக் குறைக்கப்பட்டது. இதை காங்கிரசின் பெரிய வெற்றியாக காந்தி கருதவில்லை. வரி ரத்தாவதுதான் காங்கிரசின் கொள்கை. இப்போராட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திரளாகப் பங்கு பெற்றனர். துப்பாக்கிச் சூட்டில் சிலர் உயிர்த்தியாகம் செய்தனர்.  போராட்டம் நடைபெறாமலிருந்தால் அது நிரந்தர அவமானமாக அமைந்திருக்கும் என்று காந்தி எண்ணினார்.

        காந்தி தென்னாப்பிரிக்காவிற்கு வந்து மூன்றாண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒரு மாதம் நேட்டாலில் தங்க முடிவாகி இரண்டரை ஆண்டுகளாக பணிகள் தொடர்ந்தன. இன்னும் அதிக காலம் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்பதால் ஆறு மாதங்கள் இந்தியா சென்று வர காந்தி விரும்பினார். அங்கிருந்து மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவது என்றும் முடிவு செய்தார்.

       1896இல் கல்கத்தா செல்லும் கப்பலில் எளிதாக இடம் கிடைத்ததால் போங்கோலோகப்பலில் புறப்பட்டுச் சென்றார். 24 நாட்கள் பயண முடிவில் ஹூக்ளி நதியின் அழகை ரசித்தவாறு கல்கத்தாவில் இறங்கி அன்றே ரயில் பம்பாய் பயணமானார். ரயில் அலகாபாத் ரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் நின்றது. அப்பொது ஊரைச்சுற்றிப் பார்க்க முடிவு செய்தார். இடையில் மருந்து வாங்க ஏற்பட்ட  காலதாமதத்தால் ரயிலைத் தவறவிட்டார். இருப்பினும் தனது பணிகளை இங்கிருந்தே தொடங்கினார். இந்த நேரத்தில்பயோனீர்பத்தரிகையின் ஆசிரியர் செஸ்னேவை சந்தித்து உரையாடினார். தனது ஆதரவுப் பயணம் இங்கே தொடங்கியாகிவிட்டது.

     பின்னர் பம்பாயிலிருந்து ராஜ்கோட்டுக்குச் சென்று  தென்னாப்பிரிக்காவின் இந்தியர்களின் நிலை குறித்த துண்டறிக்கை எழுதி வெளியிட முடிவு செய்து அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினார். ஒருமாதம் கழித்து துண்டறிக்கை வெளியானது. இந்த நேரத்தில் பம்பாயில் பிளேக் நோய்ப் பரவல் ஏற்பட்டது. சுகாதாரத் துறையுடன் சேர்ந்து சேவையாற்றும் விருப்பத்தை வெளியிட்டார். அதனை ஏற்ற அரசு ஒரு குழுவில் காந்தியை இணைத்தது. கழிப்பறைச் சுகாதாரத்தை வலியுறுத்த ஆய்வு செய்யும்போது பணக்காரர்கள் வீட்டு கழிப்பறைகள் மிக மோசமான நிலையிலிருப்பதை அறிந்து கவலையுற்றார். கோயில்களும் மிக மோசமான நிலையில் இருந்தன.  தலித் குடியிருப்புகளைப் பார்வையிட அக்குழுவிலுள்ள ஒருவர் மட்டுமே தயாராக இருந்தார். பம்பாயில் நோயுற்றிருந்த மைத்துனரையும் சகோதரியையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்து பணிவிடை செய்தார். இம்மாதிரியான சேவைகளில் மனைவியையும் ஈடுபடுத்தினார். பிற்காலத்தில் அவரது குழந்தைகளும் இப்பணிகளைச் செய்தனர்; அவற்றை அவர்கள் இன்றும் தொடர்கின்றனர். 

          சர் பெரோஷா மேத்தா, பத்ரூதின் தயாப்ஜி, மகாதேவ கோவிந்த ரானடே போன்றோரை பம்பாயிலும் பால கங்காதர திலகர், ஆசார்ய பண்டார்கர், கோபாலகிருஷ்ண கோகலே போன்றோரை பூனாவிலும் சந்தித்தார். திலகர் எம்.ஜி.ரானடேவால் 1870இல் தொடங்கப்பட்ட பூனா சர்வஜனிக் சபையுடனும் கோகலே 1880 இல் தொடங்கிய  தக்காணக் கல்விச் சங்கத்திலும் (Deccan Education Society) தொடர்பிலிருந்தனர். இரண்டிற்கும் பொதுவான ஆசார்ய பண்டார்கர் தலைமையில் புனாவில் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு ஆதரவான கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பம்பாய், புனே, சென்னை போன்ற இடங்களிலும் காந்தி உரையாற்றிய கூட்டங்கள் நடந்தன. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான கொடுமைளை உலகறியச் செய்வதும் அவர்களுக்கு இதழ்கள், தலைவர்கள் வழியாக பலவழிகளில் ஆதரவு திரட்டினார்.

       காந்தி சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் பயணத் திட்டத்தின் இடையே உடன் தென்னாப்பிரிக்கா வருமாறு தந்தி வந்தது. 1896 நவம்பரில் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதை காந்தி அவதானிக்க முடிந்தது.  தாதா அப்துல்லா கம்பெனியார்கோர்லாண்டுஎன்ற கப்பலை வாங்கி, குஜராத் போர்பந்தருக்கு தென்னாப்பிரிக்கா நேட்டாலுக்கும் இடையே கப்பல் ஓட்டும் துணிவான பணியைச் செய்தனர். அக்கப்பலில் காந்தியும் அவரது குடும்பத்தினரும் கட்டணமின்றி பயணம் செய்ய வலியுறுத்தியதால் வேலையை முடிக்காமல் அக்கப்பலில் டிசம்பர் 1896இல் பயணமானார்.

       காந்தியுடன் அவரது மனைவி கஸ்தூரிபா, குழந்தைகள் ஹரிலால் (9), மணிலால் (5), காந்தின் சகோதரி ராலியாபெஹனின் மகன் கோகுல்தாஸ் (10) ஆகியோர் இக்கப்பலில் இருந்தனர். Persian Steam Navigation கம்பெனிக்குச் சொந்தமானநாடேரிஎன்ற கப்பலும் டர்பனுக்குப் புறப்பட்டது. இரண்டிலும் சேர்த்து சுமார் 800 பயணிகள் இருந்தனர். இவர்களனைவரும் நேட்டாலை முழுமையாக நிரப்பி விடுவர் என்றும் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு ஆதரவாக காந்தி இந்தியாவில் மேற்கொண்ட நடவடிக்கைகளை மிகைப்படுத்தியும் வெறுப்பு, அவதூறுகள் மூலமும் காந்திக்கும் இந்தியர்களுக்கும் எதிராக வெறுப்புணர்வு தூண்டப்பட்டது.

       ஐரோப்பிய உடைகள் சரிவராது என்பதால் காந்தி குடும்பத்தினர் பார்சி உடை அணிவதே சரி என்கிற முடிவுக்கு காந்தி வந்தார். இருப்பினும் பூட்ஸ், ஸ்டாக்கிங் அணிவதால் குழந்தைகளின் கால்விரல்கள் புண்ணாயின. கப்பல் எங்கும்  நிற்காமால் நேட்டாலை நோக்கி விரைந்தது. எனவே 18 நாள்களில் பயணம் முடிந்துவிடும். பயணத்தின் நான்கு நாள் மீதமிருக்கும் நிலையில் கடும் புயல் காற்று வீசியது. டிசம்பர் மாதம் நிலநடுக்கோட்டுக்கு தென்பகுதியில் கோடைகாலம்; அந்நேரத்தில் புயல்கள் உருவாவது வழக்கமானதுதான். கப்பல் உறுதியானது, ஆபத்து இல்லை என கேப்டன் பயணிகளின் பயத்தைப் போக்கினார். காந்தி கேப்டன் மற்றும் பயணிகளுடன் உரையாடிப் பொழுதைக் கழித்தார். புயல் ஆபத்து விலகியது; இனி அடிக்கப் போகும் உண்மையான புயல் பற்றி யாருக்கும் தெரியவில்லை! 

       டிசம்பர் 18 அல்லது 19 (1896) டர்பன் துறைமுகத்தை அடைந்தது. அதே நாளில்நாடேரிகப்பலும் வந்து சேர்ந்தது. பிளேக் நோயைக் காரணம் காட்டிக் கப்பலை 23 நாட்கள் கடலில் நிறுத்தி வைத்தனர். பயணிகளை திரும்ப அழைத்துச் செல்ல வலியுறுத்தினர். பயணிகள் யாரும் திரும்பிப் போக விரும்பவில்லை. ஒருவழியாக 1897 ஜனவரி 13 அன்று கப்பல் இறங்க அனுமதித்தபோது காந்தியின் மீது வெள்ளையர்கள் கடுங்கோபத்திலிருப்பதால் குடும்பத்தினரை மட்டும் இறக்கி பார்சி நண்பர் ரூஸ்தம்ஜி வீட்டிற்குப் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இருட்டியபிறகு காந்தி இறங்கலாம் என்று நேட்டால் அரசு வழக்கறிஞர் எஸ்கோம்பு வலியுறுத்தியிருந்தார். சிறிது நேரத்தில் டர்பன் பிரபல வழக்கறிஞரும் காந்தி நண்பருமான லாப்டன் வந்து கேப்டனிடம் பேசி காந்தியை வெளியே அழைத்து வந்தார். இரவில் திருடனைப்போல இறங்க விரும்பாத காந்தி இதற்கு ஒப்புக்கொண்டார்.

       காந்தியின் தலைப்பாகை மூலம் அடையாளம் கண்ட கலவரக்காரர்கள் கத்தத் தொடங்கினர். உடனே கும்பல் காந்தியைத் திட்டிக்கொண்டே கற்கள் மற்றும் கிடைக்கின்ற பொருள்கள் கொண்டு தாக்கத் தொடங்கினர். லாப்டனை காந்தியிடமிருந்து தனியே பிரித்துக் கொண்டுச் சென்று விட்டனர். ஒரு முரடன் காந்தியின் முகத்தில் பலமாக அறைந்து உதைத்தான். தலைப்பாகையை பிடுங்கி வீசினர். காந்தி நிலைகுலைந்து மயங்கி கீழே விழப்போன நிலையில் சுவர் கிராதிகளைப் பற்றி அமர்ந்தார். பின்னர் எழுந்து நடந்தார். அப்போதும் அடித்தவர்களை திட்டவோ திருப்பித் தாக்கவோ இல்லை.

       டர்பன் காவல் கண்காணிப்பாளரின் மனைவி திருமதி அலெக்ஸாண்டர்  காந்தியை மீட்டு நண்பரின் வீட்டில் சேர்த்தார். கூட்டம் அங்கும் கூடி ரகளையில் ஈடுபட்டது. கப்பலின் மருத்துவ அதிகாரி காந்திக்கு மருத்துவம் செய்தார். வெளிக்காயங்களைவிட உட்காயங்கள் அதிகம்; வலி அதிகமானது. வெளியே கூடியிருந்த கும்பல் காந்தியை வெளியே அனுப்பச் சொல்லிக் கூக்குரலிட்டது. வீட்டையும் சூறையாட எத்தனித்தனர். வேறுவழியின்றி இந்தியப் போலீஸ் உடையில் பின்வாசல் வழியே காந்தி வெளியே பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். கும்பலின் பிரதிநிதிகள் வீட்டினுள் சென்று காந்தி இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே கலைந்து சென்றனர்.

      டர்பன் பத்தரிகை நிருபரிடம் காந்தி தனது நிலையை விளக்கி விரிவான நேர்காணல் ஒன்றை அளித்தார். அது அடுத்தநாள் பிரசுரமானது. ஐரோப்பிய அறிவாளிகள் தங்கள் குற்றத்தை உணர்ந்து ஒப்புக்கொண்டனர். நேட்டால் சம்பவத்தில் காந்தியைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து குடியேற்ற அமைச்சர் சேம்பர்லைன் அரசுக்கு தந்தி கொடுத்தார். அரசு வழக்கறிஞர் எஸ்கோம்பு காந்தியை அழைத்து சேம்பர்லைன் தந்தி பற்றிக் குறிப்பிட்டு வருத்தத்தைத் தெரிவித்தார். தன்மீது தாக்குதல் தொடுத்தவர்கள் மீது வழக்குத் தொடர விரும்பவில்லை என்று எழுதிக்கொடுத்தார் காந்தி.

          குழந்தைகளின் படிப்பு பற்றிய கவலைகள் காந்திக்கு எழுந்தன. அங்கு ஐரோப்பியக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அனுப்ப விதிவிலக்கு பெற வேண்டும். கிருஸ்தவப் பாதிரியார்கள் நடத்தும் பள்ளிகள் காந்திக்குப் பிடிக்காத காரணத்தால் அவற்றில் சேர்க்க விரும்பவில்லை. ஆங்கில வழியில் போதனை இருந்ததும் ஓரு காரணம். எனவே குழந்தைகளுக்கு வீட்டிலேயே கற்க ஏற்பாடு செய்ய முடிவெடுத்தார். உரிய குஜராத்தி ஆசிரியர் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ஆங்கிலப் பெண்மணியை மாதம் 7 பவுன் ஊதியத்தில் அமர்த்தினார். திருப்தியில்லை என்றாலும் வேறு வழியில்லை. குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைப்பதை காந்தி விரும்பவிலை. அவர்களிடம் தாய்மொழியான குஜராத்தியிலேயே உரையாடி வந்தார். சகோதரி மகன் கோகுல்தாஸ், மூத்த மகன் ஹரிலால் இருவரையும் சிலகாலம் இந்திய மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளிக்கு அனுப்பினர். அதையும் பிறகு நிறுத்திவிட்டார். 1911 இல் ஹரிலால் காந்தியுடன் சண்டையிட்டு இந்தியாவிற்கு சென்று அகமதாபாத் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். மருமகன் கோகுல்தாஸ் காந்தியுடனே இருந்தார். ஆனால் கெடுவாய்ப்பாக இளைஞராக இருந்தபோதே அவர் நோயுற்று மரணமடைந்தார்.

       ஹரிலாலைத் தவிர காந்தியின் மற்ற மூன்று குழந்தைகளும் பொதுப்பள்ளியில் படித்தது இல்லை. தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்களின் குழந்தைகளுக்கு தொடங்கப்பட்ட வசதிக்குறைவான பள்ளிகளில் சிறிது காலம் படித்தனர். பின்னாளில் பள்ளிக்கூடக் புறக்கணிப்பு அவரது சத்தியாகிரகத்தின் ஒர் அங்கமாக இருந்தது. கல்வி பற்றிய அவரது  புதிய அணுகுமுறைகளையும் கொள்கைகளையும் வெளிப்படுத்துவதாக இவை அமைந்தன.   

(தொடரும்…)

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ், ஜூலை 2023