சத்தியாகிரகமும் படுகொலையும்
(மகாத்மாவின் கதை தொடரின் பத்தாவது அத்தியாயம்.)
மு.சிவகுருநாதன்
டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement 1916) விவசாயிகளிடம் விழிப்பை உண்டாக்கி இருந்தது. இதற்கு ஆங்கிலக் கல்வியும் காரணமாக அமைந்தது. கேதா (கேடா) சத்தியாகிரகம் உண்மையில் விவசாயிகள் வாழ்க்கையுடன் தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. சத்தியாகிரகத்தின் முழுவெற்றி என்பது மக்களின் உள்ளார்ந்த பங்கேற்பில் இருப்பதை காந்தி உணர்ந்திருந்தார். இதன் உட்பொருளை முழுமையாக உணர்த்தி மக்களைத் சத்தியாகிரகத்திற்குத் தயார் செய்ய நீண்டதூரம் பயணிக்க வேண்டும் என்பதே காந்தியின் எண்ணமாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது.
1918 இரண்டாம் உலகப்போர் முடிவில் இஸ்லாமிய மதத்தலைவர் துருக்கி கலிபா மிக மோசமாக நடத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாகத் தொடங்கப்பட்ட இயக்கமே கிலாபத் ஆகும். இதை இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு வாய்ப்பாக காந்தி கருதினார். முதல் உலகப்போர் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரமது. வைஸ்ராய் செம்ஸ்போர்டு போர் மாநாடு ஒன்றைக் கூட்டினார். காந்தியுடன் அவருக்கிருந்த நெருங்கிய நட்பால் காந்திக்கும் அழைப்பு விடுத்திருந்தார். காந்தி அம்மாநாட்டில் கலந்துகொள்ள தில்லி சென்றார். அலி சகோதரர்களை (மௌலானா முகமது அலி, மௌலானா சவுகத் அலி) அம்மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்ற வருத்தம் காந்திக்கு இருந்தது. அவர்களது தீரம், சேவைகள் பற்றி காந்தி ஏற்கனவே அறிந்திருந்தார். இரண்டுமுறை அவர்களைச் சந்தித்தும் இருக்கிறார். டாக்டர் அன்சாரி, டாக்டர் அப்துர் ரஹ்மான போன்ற முஸ்லீம் தலைவர்களின் நட்பின் மூலம் அவர்களது நிலைப்பாட்டை அறிய காந்தி ஆவல் கொண்டார்.
இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் உண்மையான நட்பு இல்லை பல இடங்களில் என்பதை தென்னாப்பிரிக்க நிகழ்வுகளின் வழி காந்தி உணர்ந்திருந்தார். எனவே இந்து–முஸ்லீம் ஒற்றுமைக்குத் தடைக்கற்களாக உள்ளவற்றைப் போக்குவதற்கான வாய்ப்பை அவர் தவறவிடவில்லை. அலி சகோதர்களைச் சந்திக்க பெருவிருப்பம் கொண்டிருந்தார். அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் அவர்களுக்குக்கிடையே கடிதத் தொடர்பு நீடித்தது.
கல்கத்தா முஸ்லீம் லீக் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய காந்தி அலி சகோதரர்களின் விடுதலையை வலியுறுத்தினார். பின்னர் அலிகார் இஸ்லாமியக் கல்லூரியில் பேசும்போது நாட்டிற்கு சேவை செய்ய இளைஞர்கள் பக்கீர்களாக வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார். அலி சகோதரர்கள் விடுதலைக்காக அரசுக்கு கடிதங்கள் எழுதினார். கிலாபத் இயக்கம் பற்றி அலி சகோதரர்கள் கொண்டிருந்த கருத்துகளையும் நடவடிக்கைகளையும் காந்தி உன்னிப்பாகக் கவனித்தார். இதர முஸ்லீம் நண்பர்களுடன் இதுகுறித்து விவாதித்தார். உண்மையில் முஸ்லீம்களின் நண்பராக வேண்டுமெனில் அலி சகோதரர்கள் விடுதலை மற்றும் கிலாபத் பிரச்சினையில் நியாயமான முடிவு ஏற்பட அனைத்து வழிகளிலும் உதவி செய்வதே சரியாக இருக்கும் என்கிற திடமான முடிவுக்கு காந்தி வந்திருந்தார். கிலாபத் தொடர்பான இஸ்லாமியர்களின் கோரிக்கை தர்மத்திற்கு விரோதமானது அல்ல என்பதை காந்தி தெளிவுபடுத்தினார். இப்பிரச்சினையில் காந்தியைச் சிலர் குறை கூறியபோதிலும் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும் இனிவரும் காலங்களிலும் இத்தகைய ஒத்துழைப்பை நாடுவேன் என்றும் சொன்னார்.
எனவே, காந்தி முஸ்லீம் தரப்பு நியாயத்தை வைஸ்ராய்க்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தில்லி சென்றார். கிலாபத் இயக்கம் பின்னால் அடைந்த வளர்ச்சி அப்போது இல்லை என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இங்கிலாந்திற்கும் இத்தாலிக்கும் கமுக்க ஒப்பந்தங்கள் உள்ளதாக பத்தரிக்கைகள் எழுதின. இந்நிலையில் போர் மாநாட்டில் பங்கேற்பது தகுமா என்ற கேள்வியை தீனபந்து அண்ட்ரூஸ் எழுப்பினார். இதுகுறித்து செம்ஸ்போர்டுக்கு காந்தி கடிதம் எழுதினார். காந்தியை நேரில் அழைத்து விளக்கமளித்தார். இறுதியாக காந்தி மாநாட்டில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். முஸ்லீம்களின் கோரிக்கைகள் குறித்து வைஸ்ராய்க்கு கடிதம் எழுதவும் காந்தி முடிவு செய்தார்.
மாநாட்டில் கலந்துகொண்ட காந்தி இந்துஸ்தானியில் பேச அனுமதி கேட்டார். அனுமதி அளித்ததுடன் ஆங்கிலத்திலும் பேசுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் போருக்கு ஆதரவு, பங்கேற்பு, இந்தியர்களைப் படையில் சேர்த்தல் போன்ற தீர்மானங்களை ஆதரித்து ஒருவரி மட்டும் காந்தி பேசினார். அரசு, மக்கள் என இருதரப்பு நன்மை கருதியே தான் இம்மாநாட்டில் பங்கேற்பதாகவும் பாலகங்காதர திலகர், அலி சகோதரர்கள் போன்றோர் அழைக்கப்படாமை குறித்த வருத்தத்தையும் காந்தி தனது முந்தைய கடிதத்தில் பதிவு செய்திருந்தார். இக்கடிதம் கேம்ப்ரிஜ் மிஷனைச் சேர்ந்த பூஜ்ய அயர்லாந்த் வழியே சிம்லாவிலிருந்த வைஸ்ராய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. எளிமைக்குப் பெயர்போன அவர் இரண்டாம் வகுப்பு ரயிலில் பயணித்து அக்கடிதத்தைக் கொண்டு சேர்த்தார்.
போரில் ஈடுபட படைக்கு இந்தியர்களைத் திரட்டுவது குறித்து வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட சில நண்பர்களிடம் ஆலோசனை செய்தார். காந்தியின் யோசனைகள் முழுவதையும் அவர்கள் ஏற்கவில்லை. நிலவரிக்கு எதிரானப் போராட்டத்தில் கிடைத்த மக்களின் பங்கேற்பு, வாகனங்கள், உணவு போன்றவை இம்முறை கிடைக்கவில்லை. இது காந்திக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் தந்து நிலைப்பாட்டில் பின்வாங்காது தொடர்ந்து இயங்கினார். அகிம்சையைப் போதிக்கும் நீங்கள் ஆயுதம் தூக்கச் சொல்லலாமா? எங்கள் ஒத்துழைப்பைப் பெற அரசு எங்களுக்கு என்ன நன்மைகள் செய்தது? என கேள்விக் கணைகளை எதிர்கொள்ள நேரிட்டது. காந்தி அவற்றை மிகவும் நிதானமாக எதிர்கொண்டார். இதனால் படிப்படியாக பலர் தங்களது பெயரைப் பதிவு செய்யத் தொடங்கினர்.
தில்லி மாநாட்டைப் போன்று ஒவ்வொரு பகுதியிலும் ஆணையர்கள் இதற்கென மாநாடுகளைக் கூட்டினர். குஜராத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு காந்தி விரிவாக ஆற்றிய உரை சில அதிகாரிகளுக்குப் பிடிக்காமற்போனது. காந்தி படைகளில் மக்களைச் சேர வலியுறுத்தி துண்டறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். அவற்றில் இந்தியர்களுக்கு ஆயுதப் பயிற்சி இல்லாமலிருப்பது பிரிட்டன் ஆட்சியின் தவறான நடவடிக்கைகளுள் ஒன்று. இந்நிலையை மாற்ற இப்பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி பலர் படைகளில் சேரவேண்டும். அதன்பிறகு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் தடையும் தானாக நீங்கிவிடும் என்றெல்லாம் காந்தி கருத்து கொண்டிருந்தார். இதன்பொருட்டு வைஸ்ராய்க்கு விரிவான விளக்கக் கடிதம் ஒன்றையும் எழுதினார்.
விவசாயிகள் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் நிலவரி அவர்களின் சக்திக்கு அதிகமானது. ஒரு குறிக்கோளுக்காக எங்கள் வாழ்வைத் தியாகம் செய்வது முக்கியமானது என்று நானும் எங்களில் பலரும் கருதுகிறோம். இன்று இந்த அரசில் நாங்கள் சமபங்காளிகளாக இல்லை. மற்ற குடியேற்ற நாடுகளைப் போன்று நாங்களும் ஆட்சியில் பங்காளிகளாக விரும்புகிறோம். இஸ்லாமியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்தான் அரசின் உண்மையான பாதுகாப்பு இருக்கிறது, என்ற பல்வேறு கருத்துகள் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தன.
பிரிட்டன் படைக்கு ஆள்திரட்டும் பணியில் இறங்கி காந்தி தனது உடம்பைக் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நிலக்கடலை, வெண்ணெய், எலுமிச்சைப்பழம் ஆகியன அவரது உணவாக இருந்தன. வெண்ணெயை அதிகளவு சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அந்நிலையில் பழச்சாறு உள்ளிட்ட திரவ உணவைத் தவிர வேறு உணவு நல்லதல்ல. பண்டிகைக்காக கஸ்தூரிபா தயாரித்த கோதுமை இனிப்புப் பலகாரத்தைத் தின்றதாலும், காந்திக்கு மிகவும் பிடித்த கிண்ணம் நிறைய பயத்தங்கஞ்சியையும் குடித்ததால் வந்தது வினை! பலமுறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் காந்தி உடல்நிலை மோசமடைந்தது. மருந்துகளை உட்கொள்ள மறுத்தார். ஊசிமூலம் மருந்து ஏற்றிக்கொள்ளவும் விரும்பவில்லை. ஊசிமருந்து ஏதேனும் ஒரு விலங்கின் நிணநீராக இருக்கலாம் என்று தவறான எண்ணம் கொண்டிருந்தார். அது மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது என்பது காந்திக்குப் பிறகுதான் விளங்கியது. விரைவில் மரணம் வரக்கூடும் என்கிற அளவில் காந்தியின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்தது.
காந்தியை நாதியாத்திலிருந்து அகமதாபாத் மீர்ஜாபர் பங்களாவிற்கு மாற்றி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் கடும் வலியால அவதியுற்றார். இந்நிலையிலும் ஜெர்மனி அடியோடு தோற்கடிக்கப்பட்டது; இனி படைக்கு ஆள் திரட்ட வேண்டிய அவசியமில்லை என்ற செய்தி காந்திக்குச் சற்று ஆறுதலளித்தது. நீர்ச் சிகிச்சை மூலம் உடல்நிலை சிறிதுசிறிதாக முன்னேற்றம் கண்டது. மாமிச சூப், முட்டை எனப் பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்பட்டபோதும் அவற்றை “முடியாது” என்ற ஒற்றைச் சொல்லால் எதிர்கொண்டார்.
இருப்பினும் காந்திக்கு தான் மரணத்தின் வாயிலில் இருப்பதாகத் தோன்றியது. ஆசிரமத்திலிருந்த அனுசுயா பென்னுக்குத் தகவல் சொல்லி வரவழைத்தார். வல்லபாய் பட்டேல் டாக்டர் கனுகாவுடன் வந்து காந்தியின் உடல்நிலையை சோதித்தார். காந்தியின் நாடித்துடிப்பைப் பரிசோதித்த டாக்டர் நாடி நன்றாக உள்ளது என்றார். டாக்டர் தல்வல்கர் மராட்டியத்தைச் சேர்ந்த கேல்கர் என்ற விசித்திர நபரோடு வந்தார். அவர் பனிக்கட்டிச் சிகிச்சை முறையை காந்தியிடம் சோதித்துப் பார்த்தார். சிகிச்சை முறை விசித்திரமாக இருந்தாலும் காந்திக்கு மனதளவில் பலம் கிடைத்தது. அவரும் குஞ்சு பொறிக்காத முட்டைகளைச் சாப்பிடலாம் என்று பரிந்துரைத்தார். முட்டை சாப்பிட காந்தி உடன்படவில்லை. உடல்நிலையில் ஏற்பட்ட லேசான முன்னேற்றத்தால் பொதுச்செயல்பாடுகளில் கவனம் செலுத்த விரும்பினார். ஆனால் எழுந்து நடமாட உடலில் தெம்பில்லை.
மாதேரானுக்குச் சென்று தங்கினால் உடல்நிலை சீராகும் என்று டாக்டர்களும் நண்பர்களும் விரும்பினர். அங்குள்ள தண்ணீர் உப்பாக இருந்ததால் உடன் திரும்ப வேண்டி வந்தது. காந்தியின் உடல்நிலைக்குப் பாதுகாவலாக இருந்துவந்த சங்கர்லால் பாங்கர் டாக்டர் தலாலை நேரில் அழைத்து வந்தார். அவர் காந்தியிடம் நீங்கள் பால சாப்பிடவில்லையெனில் உடல்நிலை தேற இயலாது என்றார். கூடவே இரும்பு, ஆர்சனிக் மருந்துகளை ஊசிமூலம் போட்டுக் கொண்டால்தான் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் தரமுடியும் என்றும் சொன்னார்.
ஊசிமூலம் மருந்தை செலுத்த ஒப்புக்கொண்ட காந்தி, பால் சாப்பிடுவதில்லை என்ற விரதம் பூண்டுள்ளேன் என்றார். பால் கறக்கும் கொடிய ‘பூக்கா’ முறைகளாலும் இயற்கையில் பால் மனிதனுக்கு ஏற்ற உணவில்லை என்றாலும் கருத்தாலும் இவ்வாறு செய்வதாகக் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கஸ்தூரிபா, அப்படியெனில் ஆட்டுப்பால் சாப்பிட சிக்கல் இருக்காது என்று கூற டாக்டரும் ஆட்டுப்பால் சாப்பிட்டால் போதுமானது என்றார். காந்தி ஆட்டுப்பால் சாப்பிடத் தொடங்கிய நிகழ்வு 1918 வாக்கில் நடந்தது. டாக்டர் தலால் அளித்த சிகிச்சைகளால் காந்தி மெல்லக் குணமடையத் தொடங்கினார்.
காந்தி உடல்நலிவுற்றிருந்த நிலையில் தற்செயலாக பத்தரிகைகளில் வந்திருந்த ரௌலட் குழு அறிக்கையைப் பார்த்தார். அதன் பரிந்துரைகள் அதிர்ச்சியடைய வைத்தன. அம்மசோதாவை எதிர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என நண்பர்களிடம் கலந்தாலோசித்த பிறகு ஆசிரமத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில் வல்லபாய் பட்டேல், சரோஜினி நாயுடு, ஹார்னிமன், உமார் சோலானி, சங்கர்லால் பாங்கர், அனுசுயா பென் போன்ற வெகுசிலரே கலந்துகொண்டனர். அவர்கள் கையெழுத்திட்ட எதிர்ப்பு அறிக்கை ஒன்றைத் தயாரித்து பத்தரிக்கைகளுக்கு வழங்கினர். சங்கர்லால் பாங்கர் உடனே போராட்டத்தில் இறங்கத் தயாரானார். இந்தியர்களுக்கு அதிகாரங்களை பரிமாற்றம் செய்யாமல் போர்க்கட்டுப்பாடுகளை நிரந்தரமாக அமல்படுத்த முனைந்தது. பிடியாணை இல்லாமல் கைது, விசாரணையின்றி சிறை என காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கிய கருப்புச் சட்டமாக ரௌலட் சட்டம் அமைந்தது.
சத்தியாகிரகம் என்ற புதிய ஆயுதத்தை ஏற்கனவே இருக்கும் அமைப்பில் செயல்படுத்துவது கடினம் என்பதால் சத்தியாகிரக சபை என்ற புதிய அமைப்புத் தொடங்கப்பட்டது. காந்தி இதன் தலைவரானார். சபையில் குஜராத்தி மொழியைப் பயன்படுத்த காந்தி விரும்பினார். காந்தியின் பிடிவாதம், அகிம்சை, விசித்திரப் பழக்கங்கள் போன்றவை படித்த அறிவாளிகள் மத்தியில் இணக்கத்தைத் தடுத்தன என்றே சொல்லலாம். சபை அதிக காலம் உயிர்ப்போடு இல்லை என்றாலும் அதன் நடவடிக்கைகள் வேகமெடுத்தன.
ஒருபக்கம் ரௌலட் சட்ட (Rowlatt Act 1919) எதிர்ப்பு பலமாக இருந்தபோதிலும் அரசு அதை அமல் செய்வதில் மும்முரம் காட்டியது. இந்திய சட்டமன்றத்தில் ரௌலட் சட்ட விவாதம் நடந்தபோது காந்தியின் வாழ்நாளில் ஒருமுறை அங்கு சென்றார். Silver Tongue என்றழைக்கப்பட்ட சீனிவாச சாஸ்திரி ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் பேசினார். வைஸ்ராய் அப்பேச்சை மிகக் கவனமாக உற்றுநோக்கியதை காந்தி கண்டார். காந்தி வைஸ்ராய்க்கு தனிப்பட்ட முறையிலும் வெளிப்படையாகவும் கடிதங்கள் எழுதினார். சத்தியாகிரகம் செய்வதைத்தவிர தனது வேறு வழியில்லை என்று அதில் தெரிவித்திருந்தார். ஆனால் அரசு இறங்கி வரவில்லை.
காந்தியின் உடல் பலவீனமாக இருந்தபோதிலும் சென்னை கஸ்தூரிரங்க அய்யங்காரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சென்னை பயணமானார். தென்னாப்பிரிக்கக் காலம் தொட்டு தமிழர், தெலுங்கர் அடங்கிய தென்னாட்டை காந்தி சொந்தவீடு போல் நினைத்தார். அம்மக்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார். இந்த அழைப்பின் பின்னணியில் இருந்தது ராஜாஜி என்பதை பயணத்தின்போது அறிந்துகொண்டார். கஸ்தூரிரங்கரின் அழைப்பின் பேரிலும் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும் அப்போது ராஜாஜி சேலத்திலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்திருந்தார்.
கஸ்தூரிரங்கர், ராஜாஜி, விஜயராகவாச்சாரி போன்றோருடன் விவாதித்தபோது ரௌலட் சட்டம் அரசிதழில் வெளியான தகவல் கிடைத்தது. 24 மணி நேரம் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தலாம் என்று காந்தி தனது கனவை வெளியிட்டார். இதை அனைவரும் ஏற்றனர். சென்னை, பம்பாய், பீகார், சிந்து ஆகிய மாகாணங்களில் மட்டுமாவது இந்த அறபோரை 1919 மார்ச் 30 நடத்தலாம் என்று முடிவானது. பிறகு ஏப்ரல் 6 என்று நாள் மாற்றப்பட்டது. குறைந்த அவகாசமே இருந்தாலும் மக்கள் தன்னெழுச்சியாக இந்த அறப்போர் மூலை முடுக்கெல்லாம் நிகழந்தது. ஏப்ரல் 6 இல் அறபோர் மாற்றப்பட்ட செய்தி தில்லிக்கு தாமதமாகக் கிடைத்ததால் அவர்கள் மார்ச் 30 அன்றே சத்தியாகிரகம் செய்தனர். காந்தி தென்னிந்தியா சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு பம்பாய் திரும்பினார். சத்தியகிரக அறப்போர் முழு வெற்றியடைந்ததை நேரில் கண்டார்.
இதன் தொடர்ச்சியாக காந்தி எழுதி அரசால் தடை செய்யப்பட்ட ‘ஹிந்த் சுவராஜ்’, ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ நூலைத் தழுவிய குஜராத்தி மொழியில் எழுதிய ‘சர்வோதயா’ ஆகிய நூல்களை அச்சிட்டு வெளிப்படையாக விற்பனை செய்யும் போராட்டம் தொடங்கியது. வந்தே மாதரம், அல்லாஹூ அக்பர், இந்து–முஸ்லீம் ஒற்றுமை வாழ்க என்பது போன்ற முழக்கங்கள் ஆளும் பிரிட்டன் அரசை அதிர்ச்சியில் உள்ளாக்கின.
அகமதாபாத்தில் அனுசுயா பென்னை கைது செய்யதாக வதந்தி பரவி மில் தொழிலாளார்கள் வேலை நிறுத்தம் செய்த்தோடு வன்முறையிலும் இறங்கினர். ஒரு சார்ஜெண்ட் அடித்துக் கொல்லப்பட்டார். நதியாத் தொடர்வண்டி நிலையம் அருகே தண்டவாளங்களை பெயர்க்க முயற்சி நடைபெற்றது. அங்கு சென்ற காந்தி மக்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். அரசும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று காந்தி கோரினார். அதை இருதரப்பும் ஏற்கவில்லை. சத்தியாகிரகத்திற்கான மனப்பக்குவத்தை அடையும் முன்பு சட்டமறுப்பைத் தொடங்கியது இமாலயத் தவறு என்பதை வெளிப்படையாக அறிவித்தார்.
பஞ்சாப்பில் கடும் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. ராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு சட்டத்தை மீறி மக்கள் தண்டிக்கப்பட்டனர். பஞ்சாப் செல்ல காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ‘பம்பாய் கிரானிக்கிள்’ என்ற இதழை ஹார்னிமன் சிறப்பாக நடத்தி வந்தார். அரசின் உத்தரவால் அது தடை செய்யப்பட்டது. இவ்விதழை நடத்திவந்த உமார் சோபானியும் சங்கர்லால் பங்கரும் ‘யங் இந்தியா’ என்ற வார இதழையும் நடத்தி வந்தனர். அவர்கள் ‘யங் இந்தியா’ ஆசிரியப் பொறுப்பை காந்தி ஏற்க வேண்டினர். சத்தியகிரகத்தின் போர்வாளாக ‘யங் இந்தியா’வுடன் பின்னாளில் உயிர்ப்பிக்கப்பட்ட ‘பம்பாய் கிரானிக்கிளும்’ செயல்பட்டன. இரு வார இதழ்களை பிரசுரிக்க ஏற்படும் சிரமங்களைப் போக்க அவை அகமதாபாத்தில் ‘நவஜீவன்’ இதழுடன் சேர்ந்து வெளியாயின.
பஞ்சாப்பிற்கு (பாஞ்சாலம்) போகவேண்டும் என்கிற பரப்பரப்புடன் காந்தி இருந்தார். ரௌலட் எதிர்ப்புப் போராட்டம் பஞ்சாபின் அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் தீவிரமடைந்தது. இப்போராட்டங்களை முன்னெடுத்த டாக்டர் சைஃபுதீன் கிச்லு, டாக்டர் சத்யபால் போன்றோர் ஏப்ரல் 9 ஆம் நாள் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களே காந்தியை பஞ்சாபிற்கு அழைத்திருந்தனர். அரசு காந்தியைக் கைது செய்து பஞ்சாபிற்குள் நுழைய விடாமல் தடுத்தது.
தலைவர்கள் கைதான நிலையில் 1919 ஏப்ரல் 13 அன்று சீக்கியர்களின் அறுவடைத் திருநாளான பைசாகி திருநாளன்று ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர். இதையறிந்த ஜெனரல் டயர் தலைமையில் பீரங்கி வண்டிகளுடன் ஒற்றை வாயிலுடன் உயர்ந்த மதில்களடங்கிய அவ்வளாகத்தைச் சுற்றிவளைத்து எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் சுட்டனர். தொடர்ந்து 10 நிமிடங்கள் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்தது. ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் மடிந்தனர்; ஆயிரக்கணக்கில் காயம் பட்டனர். அமிர்தசரஸ் மக்களுக்கு சவுக்கடி அளித்து தெருவில் ஊர்ந்துபோக வைத்த கொடுமையும் அரங்கேறியது. ரவீந்தரநாத் தாகூர் ‘வீரத்திருமகன்’ (knighthood) என்ற அரச பட்டத்தையும் காந்தி ‘கெய்சர்-இ-ஹிந்த்’ என்ற பதக்கத்தையும் திரும்ப அளித்தனர்.
பஞ்சாப் நிலவரம் குறித்து விசாரிக்க ஹண்டர் குழு நியமிக்கப்பட்ட்து. ஸி.எப். ஆண்ட்ரூஸ் முன்பே அங்கு சென்று அங்குள்ள நிலவரம் குறித்து காந்திக்குக் கடிதமெழுதினார். அவர் கண்டு சொல்லிய செய்திகள் இதயத்தை பிளப்பதாக அமைந்தன. அனுமதி கிடைத்ததும் அக்டோபர் மாதத்தில் பஞ்சாப் சென்றார். காந்தி லாகூர் சென்று இறங்கியதும் பெருந்திரள் மக்கள் கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது.
பஞ்சாப் தலைவர்கள் சிறைப்பட்ட நிலையில் அவர்களது இடத்தை மோதிலால் நேரு, மதன்மோகன் மாளவியா, சுவாமி சிரத்தானந்தஜி ஆகியோர் நிரப்பினர். ஹண்டர் ஆணையத்தை புறக்கணித்து அதில் சாட்சியமளிப்பதில்லை என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பஞ்சாப் படுகொலை பற்றி விசாரிக்க ஒரு உண்மையறியும் குழுவை அமைத்தது. காந்தி, மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ், அப்பாஸ் தயாப்ஜி, எம்.ஆர்.ஜெயகர் ஆகியோர் குழுவில் இடம்பெற்றனர். இதுவே இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் உண்மையறியும் குழுவாகும். இக்குழுவின் விசாரணையில் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், அரசின் மிருகத்தனமான நடவடிக்கைகளை அறிந்து காந்தி மிகவும் வேதனையடைந்தார்.
குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணி காந்திக்கு அளிக்கப்பட்டது. சாட்சிகளின் விசாரணைகளை அப்படியே மிகைப்படுத்தப்படாமல் நீதிமன்ற ஆணையம்போல் இக்குழு உண்மைகளைப் பதிவு செய்தது. இது உடனடியாக நூலாக வெளியிடப்பட்டது. இந்திய மனித உரிமை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
(தொடரும்…)
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் அக்டோபர் 2023