வரலாற்றின் குறுக்குவெட்டுப் பார்வைகள்
மு.சிவகுருநாதன்
நேர்காணல் (செவ்வி) எனப்படுவது அ-புனைவின் ஒரு வடிவமாக அமைவதாகும். பொதுவாக வெகுவாக அறியப்பட்டவர்களை நேர்கண்டு வெளியிடுவது பெரிய இதழ்களின் பணியாக இருக்கும். விருதுபெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை அவ்வப்போது நேர்கண்டு பிரசுரிப்பதும் உண்டு. காட்சியூடகங்களிலும் இத்தகைய பிரபலங்களை நோக்கி ஓடும் தன்மையே காணப்படுகிறது. மாறாக பரவலாக அறியப்படாத பலரை இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த சிறுபத்தரிக்கைகள்தான் விரிவான நேர்காணல்கள் மூலம் ஆவணப்படுத்தியுள்ளன. பவுத்த அய்யனார் ‘நேர்காணல்’களுக்காக காலாண்டிதழ் ஒன்றை கொண்டு வந்தார். இன்று தமிழ் இதழ்களில் நேர்காணல்கள் இடம்பெறுவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.
இருப்பினும் இத்தகைய நேர்காணல்களில் பல்வேறு நெருடல்கள் வெளிப்படும். உரையாடும் நபரை சரிவரப் புரிந்துகொள்ளாமலும், கேள்வி கேட்பவர்கள் தனது மேதமையைக் காட்டுவதான பாவனையில் அமைவதைக் காணமுடியும். பாவெல் சூரியனின் இந்த நேர்காணல்கள் அவ்வாறு அமைந்தவை அல்ல. தேர்ந்தெடுத்த ஆளுமைகளின் கருத்தியல்கள், செயல்பாடுகள் போன்றவற்றை முழுமையாக உள்வாங்கி, உணர்ந்து உரையாடிப் பெற்றவையாகும். அந்த வகையில் இந்நூலில் இடம்பெறும் நேர்காணல்கள் சிறப்பிடம் பெறத்தக்கவை.
எதோ ஒருவகையில் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ஆளுமைகளைத் தேடிப்பிடித்து அவர்களை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்யும் பணியை தோழர் பாவெல் சூரியன் தொடர்ந்து நேர்காணல்கள் மூலம் செய்துவருகிறார். அவரது எட்டு அரசியல் நேர்காணல்கள் ‘தமிழகத்தின் மேற்குவங்கம்’ என்ற தலைப்பில் அழகான நூலாக உருவெடுத்துள்ளது. ஏ.ஜி. கஸ்தூரிரங்கன், இரா. ஜவஹர், வை. அறிவொளி, எழில்மாறன், அ. பத்மநாபன், கலைச்செல்வன், சி. அறிவுறுவோன், தொ.கு. அரசு ஆகிய எட்டுத் தோழர்களின் நேர்காணலும் பெரியதும்பூர் கோ. பக்தவச்சலம் (தோழர் ஜி.பி.), ஏ.ஜி.கே. ஆகியோர் பற்றிய நினைவுக் குறிப்புகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.
ஏஜி.கே.வின் நேர்காணல் வட்டார அளவில் இயங்கிக் கொண்டிருந்தவரை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தது என்றால் மிகையில்லை. சிறுபத்திரிக்கைகளிலும் அது துண்டுப் பிரசுரமாக வெளியானாலும் அதன் வீச்சு அதிகம் என்பதையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும். இதிலுள்ள நேர்காணல்கள், நினைவுக் குறிப்புகள் போன்றவை காலம் கடந்தும் பேசப்படுபவையாக இருக்கின்றன. வரலாற்றின் குறுக்குவெட்டாக நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ளவும் அதன்மூலம் படிப்பினைகளைப் பெறவும் வழிவகுக்கின்றன.
இவற்றின் வழியே, அவர்கள் செயலாற்றிய காலத்தின் வரலாற்றை. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளை நம் கண்முன் கொண்டு வருவதை அணிந்துரையில் மு.வசந்தகுமார் குறிப்பிடுகிறார். இந்த ஆளுமைகள் இடது இயக்கங்களிலும் தொழிற்சங்கங்களிலும் பணி செய்தவர்கள். இவர்களது அனுபவப் பாடங்கள் பொதுவுடைமை இயக்கம் நடந்துவந்த பாதையை மீளாய்வு செய்யப் பயன்படுவதை பதிப்புரையில் கே.எஸ்.கருணாபிரசாத் தெரிவிக்கிறார்.
“சாதி பற்றிய விஷயங்களை இன்னும் கூர்மையாகப் பார்த்திருக்க வேண்டும்; தவறியிருக்கிறோம்” (பக்.53), என்கிற சுயவிமர்சனப் பார்வையுடன் சாணிப்பால், சவுக்கடியை ஒழிக்க கம்யூனிஸ்ட்கள் போராடியதைப் பதிவு செய்யும் இரா. ஜவஹர், “சூழலைப் புரிந்துகொண்டு, அதில் நம்மைப் பொருத்திக் கொண்டு மாற்ற உழைப்பதுதான் போராட்டம்” (பக்.41), என இலக்கணம் வகுத்துக் கொண்டு களமிறங்கிய ஏ.ஜி.கே., “கட்சிதான் பிரதானமே தவிர, மத்ததெல்லாம் அப்புறம் தான். கட்சி நாம நினைச்ச மாதிரி வரலியே தவிர, திருப்தி இருக்கு. கடைசி வரைக்கும் கட்சியோடயும், அதன் நினைவுகளோடயும் தான் இருக்கேன். கட்சிதான் என் உயிர்”, (பக்.86) என்று இறுதிவரை கட்சியை விட்டுக்கொடுக்காத வை. அறிவொளி என பலகுரல்களின் தளமாக இந்த உரையாடல் தொகுப்பு அமைகிறது.
“ஒழுங்கா கட்சி சொல்றத கேட்டுகிட்டு இருங்கன்னு”, ஜீ.வி. சொல்ல, “நான் எருமமாடு வாங்கி மேச்சாலும் மேப்பேன். இனிமே இங்க வரமாட்டேன்னு”, சொல்லிட்டு வந்து, “அடுத்த சந்தைக்கே போயி, ரெண்டு எருமைய வாங்கிட்டு வந்து கட்டிட்டேன். பொழப்பப் பாக்கணும்ல”, (பக்.201) என்று சி.அறிவுறுவோன் யதார்த்தமாகப் பேசுவதும் , “பொதுவுடமைவாதிகளைப் பொறுத்தமட்டில் பெரியார் எடுத்துக்கொண்ட கொள்கைகளை அவங்க எடுத்துக்கல. பொதுவுடமைவாதிகள் எடுத்த கொள்கைகளை பெரியார் எடுத்துக்கல. இத ரெண்டையும் ஒருங்கிணைக்க முடியாமப் போனதுதான் இவ்வளவு பின்னடைவுக்குக் காரணம்”, (பக்.103) என்று எழில்மாறன் குறிப்பிடுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
“இடதுசாரி இயக்கங்கள் வர்க்கப் பிரச்சினைக்கு கொடுக்கிற அழுத்தத்தை வர்ணப் பிரச்சினைக்குக் கொடுப்பதில்லை. இப்போதுதான் அம்பேத்கரைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.; தீண்டாமை ஒழிப்பு முன்னணியைத் தொடங்கியிருக்கிறார்கள்”, (பக். 146) என்று தொழிற்சங்கவாதி தோழர் அ.பத்மநாபன் விமர்சித்திருக்கிறார். “சாதியத்தின் தோற்றம் தனியானதல்ல; அதுவும் பொருளாதாரத்தின் ஒரு பகுதிதான்”, … (பக்.162) “சிவாஜியின் லட்சியத்திற்கும் இவர்களின் (இந்துத்துவவாதிகள்) நோக்கத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை. உண்மையில் இவர்களை எதிர்த்து உருவானவர் தான் சிவாஜி.”, … “நிலப்பிரபுக்களும், கவர்னரும் இல்லாமல், அரசாங்கத்துக்கு மக்கள் நேரடியாக வரி கொடுக்கும் ஏழை, எளிய மக்களுக்கான ஒரு சாம்ராஜ்யத்தைத்தான் சிவாஜி உருவாக்கினார்”, (பக்.169) என்றும், “எனக்குப் புரியாத எதையும் மொழிபெயர்க்க மாட்டேன். … மொழிபெயர்ப்பில் நான் கற்றுக்கொண்டது, முழுமையாகப் புரிகிற வரை, எதையும் மொழிபெயர்க்கக் கூடாது என்பதுதான். அதுவே, இலக்கிய உலகிற்கு நாம் ஆற்றுகின்ற ஆகப் பெரிய உதவி” (பக்.174) என்று ‘ஹீரா பிஜிலி’ (மின்னல் வைரம்) நாவலாசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான கலைச்செல்வன் பதிவு செய்கிறார்.
நாகப்பட்டினம் வட்டாரத்தை தமிழகத்து மேற்குவங்கமாக மாற்றிய போராளிகளுள் ஒருவரான ஏ.ஜி.கே. பெரியாரியம், மார்க்சியம் (தி.க. ® சி.பி.எம். ® தி.க.) என இயங்கி இறுதியில் தமிழ்த் தேசியப் பாதைக்குத் திரும்பியவர். சி. அறிவுறுவோன் தமிழியக்கம், மார்க்சியம் எனச் செயல்பட்டு மீண்டும் தமிழ்த் தேசியத்தைக் கைக்கொண்டவர். பெ. மணியரசனைப் போன்று இயக்கம் கட்டியிருக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாகச் சொல்கிறார். இன்னொரு தமிழ்த் தேசிய அமைப்பைக் கட்டுவதால் என்ன பலன் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். அ. பத்மநாபன் இடதுசாரி தொழிற்சங்கம், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி என இயங்கி கருத்து முரண்பட்டு தற்போது விடுதலைச் சிறுத்தைக் கட்சியில் இணைந்து பணியாற்றுகிறார்.
“சமீபத்தில், இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் சிபிஐ, சிபிஎம் ஏறத்தாழ பூஜ்யம்னு சொல்ற அளவுக்குத் தேய்மானமாயிருக்கு. அவர்களுக்கே இந்த நிலைமைன்னு சொன்னா சிறுசிறு குழுக்களைப் பற்றிச் சொல்லவே வேணாம்”, (பக்.120) என்று சொல்லும் தோழர் அ.பத்மநாபன் மறுபுறம் வி.சி.க.வில் இருப்பதை நியாயப்படுத்துகிறார். இவர்கள் மார்க்சியத்தை விமர்சிக்கும் அளவுக்கு தமிழ்த் தேசியத்தை விமர்சனப் பூர்வமாக அணுகுவதில்லை.
இவர்களனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் களப்போராளிகள் என்பதே. மக்களை அமைப்பாகத் திரட்டி போர்க்குணத்துடன் போராடியவர்கள். நடைமுறைப் பிரச்சினைகளில் கருத்தியலுடன் முரண்பட்டு சமத்துவத்திற்கும் மக்களுக்கு எதிரான தமிழ்த் தேசியக் கருத்தியல்களுடன் இவர்கள் மேற்கொண்ட சமரசப் போக்கை ஒருவகையில் வீழ்ச்சியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.
உலகத் தமிழ்க் கழகத்தை அரசியல் இயக்கமாக மாற்ற பெருஞ்சித்தரனாரிடம் கேட்கப்பட்டபோது, “இது கட்டி முடிக்கப்பட்ட கட்டடம், அறுக்கப்பட்ட செங்கல், இதை மாற்றுவதற்கு ஒன்றுமில்லை”, (பக்.182) என்கிறார். இவ்வியக்கத்தில் செயல்பட்ட பெ.மணியரசன் கருத்து வேறுபாட்டால் முன்னதாக சி.பி.எம். சென்றுவிட உழவுத் தொழிலாளர் முன்னணியைக் கட்டும் சி.அறிவுறுவோன் ஒரு நெருக்கடியான காலத்தில் சி.பி.எம். இல் சேரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. “ஜீ.வி. (தோழர் ஜி.வீரையன்) என்னை வச்சிகிட்டு கமிட்டியிலேயே, சி.ஏ.வ கட்சியில்லாத ஊர்ல கொண்டுபோயி விட்டா, கட்சிய கட்டிபுடுவாரு; கட்சி இருக்கிற ஊர்ல விட்டா கட்சிய உடைச்சிடுவாருன்னு சொல்வாரு” (பக்.202) என்கிற வரிகள் பொதுவுடைமைக் கட்சிகளில் ஜனநாயகம் எந்த அளவிற்கு செயல்பட்டது என்பதை விளக்குவதாகக் கொள்ளலாம். இவை செயல் மற்றும் கள முரண்பாடுகள்தானே தவிர கருத்தியல் முரண்கள் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இடதுசாரி அமைப்புகளின் செயல்பாடுகளில் காணப்படும் குறைகள் கணக்கில் கொள்ளப்பட்டு மாற்றம் உள்வாங்கப்பட வேண்டும். அதேசமயம் தமிழ்த்தேசியம் பொதுவுடைமைக்கு எந்நாளும் மாற்றாக அமையப்போவதில்லை.
“எங்கேயோ கன்னடத்துல, பிறந்து வளர்ந்த பி.எஸ்.ஆர். தஞ்சையில வந்து விவசாயச் சங்கம் நிறுவி உழைச்சவர். அவர் பேர்ல தெரு, பேர், கொடிக்கம்பம், நினைவுமேடை இல்லாத ஊரே கிடையாது. ஆனா அவருக்கு முன்னதா இங்க இருந்த சி.கே.க்கு (மணலி கந்தசாமி) எந்த ஊர்லயும் எதுவும் இல்லை. ஏன் இது? என்ன காரணம்? நடவடிக்கை மாறிப்போச்சி. கடைசி வரைக்கும் வாழ்ற வாழ்க்கைதான் நம்மளப் பத்திப் பேசும்”, (பக்.80) என வை. அறிவொளி பேசுகிறார். இந்தக் கம்யூனிஸ்ட் தோழரைப்போல அனைவரும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த இயலாது. கருத்து முரண்பாட்டால் ‘தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி’ கண்ட மணலி கந்தசாமிக்கே இந்த நிலை என்றால் மார்க்சியத்தை விட்டுவிலகி தமிழ்த் தேசியத்தை நோக்கிச் செல்பவர்களின் நிலை எப்படியிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை.
தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு கருத்தியல் தெளிவில்லை. மக்களை, உழைக்கும் வர்க்கத்தை மறந்து இவர்கள் நிழற்போர்களில் ஈடுபடுகின்றனர். கொஞ்ச காலத்திலேயே மக்களிடமிருந்து விலகி அந்நியப்பட்டு போய்விடுகின்றனர். மார்க்சியத்தை செழுமைப்படுத்தவும் அதன் நடைமுறைகளில் உண்டாகும் பிரச்சனைகளை திறந்த மனதுடன் விவாதிக்கவும் உரியவர்கள் முன்வரவேண்டும். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் உள்ளிட்ட மக்களுக்கான கருத்தியல்கள் ஆழமாகவும் சமகாலப் பொருத்தப்பாட்டுடனும் செழுமையுற வேண்டும். அதற்கான தேவையை இந்நூல் வலியுறுத்தி நிற்கிறது என்றே சொல்லலாம். இதற்கென கடும் உழைப்பை செலவிட்டிருக்கும் தோழர் பாவெல் சூரியனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்நூலை அழகாக வெளியிட்டிருக்கும் போதிவனம் பதிப்பகத்திற்கும் நன்றி.
நூல் விவரங்கள்:
தமிழகத்தின் மேற்குவங்கம் – அரசியல் உரையாடல்கள்
(நேர்காணல்களின் தொகுப்பு)
– பாவெல் சூரியன்
விலை: ₹ 300 பக்கங்கள்: 242
முதல் பதிப்பு: செப்டம்பர் 2024
வெளியீடு:
போதிவனம்,
அகமது வணிக வளாகம் – தரைத்தளம்,
12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை,
ராயப்பேட்டை,
சென்னை - 600014.
அலைபேசி: 98414 50437
மின்னஞ்சல்: bodhivanam@gmail.com
நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் - டிசம்பர் 2024