மொழி, சமூகம், அரசியல் - அரசியலின் அரசியல்!
இரா.மோகன்ராஜன்
மொழி, சமூகம், அரசியல் குறித்த தோழர் மு.சிவகுருநாதனின் விரிவான பார்வை 16 கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. தோழர் சிவகுருநாதன் ஏற்கனவே கல்விப்புலம் தொடர்பான ஆழ்ந்த அனுபவமும், செயல்பாடும் கொண்டவர். கல்விப் புலப் பணியில் இருப்பவர். அது தொடர்பான நூல்கள் சில வெளியாகிக் கொண்டுள்ளன. கற்றலில், கற்பித்தலில் நவீன அணுகுமுறையைக் கோருபவர். கல்விப்புலத்தில் புரையோடிப் போயுள்ள பழமைவாத கருத்துகள், நடைமுறைகள் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்புபவர், எழுப்பக்கோருபவர். அவரது எழுத்துகள் பவுலோ பிரையரை அத்துறையில் நினைவுபடுத்தக் கூடிய ஒன்று; அவசியமானதும் கூட.
இத்தொகுப்பு அவரது வழமையான கல்விப்புலம் கடந்து பொதுவெளியைத் தொட்டுப் பேசுகிறது. பொதுவெளி கல்விப்புலத்திற்குள் வருவதில்லை; வரவேண்டும். கற்பவரும், கற்பிப்பவரும் பொதுவெளியின் பிரதிநிதிகள்தாம். கல்விப்புலம் சார்ந்தவர்கள் பொதுவெளியை உள்ளுக்குள் கொண்டுவருவதில் அரசியல் தடைகள் இருப்பினும் அப்படியான பொது வெளிப்பார்வைகளை கொண்டிருப்பது அவசியமானதாகும். ஒரு ஆசிரியர் எல்லா நேரங்களிலும் ஆசிரியராக இருக்க வேண்டும். ஆசிரியர் என்றால் கற்றுக் கொள்வதிலும், கற்பிப்பதிலும் அதற்கு முன் நிபந்தனையாக இருப்பது வாசிப்பும், எழுத்துமாகும். அது கைவரப்பெற்றவர் தோழர் சிவகுருநாதன் அவர்கள்.
தீவிர இடதுசாரிக் கருத்தியல் பின்புலத்தில் இயங்கக்கூடிய அவரது இத்தொகுப்பின் கட்டுரைகள் அவற்றையே முன் மொழிகின்றன. இடதுசாரியென்றால் பெரியார் உவப்பானவர் அல்லர்; அம்பேத்கரியர் என்றால் பெரியார் உவப்பானவர் அல்லர்; பெரியார் என்றால் அம்பேத்கரியரை ஏற்பவர் அல்லர் என்ற தடைகளுக்கு அப்பால் இவர்கள் இணையும் புள்ளிகளை கண்டடைவது முக்கியம் அந்த வகையில் பெரியார் குறித்த தொகுப்பின் முதல் கட்டுரை முக்கியமானது. பெரியார் ஏன் இன்னும் தேவைப்படுகிறார்? என்று தோழர் எழுப்பும் கேள்வியும் அதற்கான பதிலும் விரிந்த தளத்தில் வைத்துப் பேசக்கூடிய ஒன்று. மனுவும், சனாதனமும் இருக்கும் வரை பெரியார் தேவைப்படவே செய்வார். இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனியம் அதன் அடியான அதிகார அரசியல் இருக்கும் வரை பெரியார் தேவைப்படவே செய்வார் என்பதை அறிவோம்.
பக்தி முக்தி அடையச் செய்கிறதோ இல்லையோ... பெண்களை அதுவும் மாற்று மதப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யக் கடவுளிடமே வேண்டச் செய்கிறது என்பதை பெரியார் மேடைகளில் சம்பந்தரின் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டி பேசுவதை தோழரின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. அப்படியான மனிதத்தன்மையற்ற மதம், அதன் அதிகார வெறி திருஞானசம்பந்தரிடம் வெளிப்படுவதையும் அதன் நீட்சி இன்றைக்கு எவ்வாறெல்லாம் நடைமுறையில் இருக்கிறது என்பதையும் பார்க்கிறோம். மதம் அதன் அடியான சாதி, பார்ப்பனிய, அதிகார அரசியல் என்பன பெரியாரின் தேவையை மட்டுமல்ல பெரியாரைச் சாகவிடாமலும் வைத்திருப்பதுதான் பேருண்மை.
இயற்கைச் சீற்றம் என்ற வார்த்தை போய் இன்றைக்கு இயற்கைப் பேரிடர் என்று இயற்கையை 'பேரிடர்' என்று சொல்லும் காலத்திற்கு நகர்ந்து சென்றிருக்கிறோம். முதலாளியமும் அதன் சுரண்டல் முறை அமைப்பும் சுற்றுச்சூழலை இயற்கையை மனிதனுக்கு எதிராக நிறுத்தி வைத்திருக்கிறது. இனிவரும் இயற்கைச் சீற்றங்கள் சாதாரணமானதாக இருக்காது என்று சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எப்படி உலகெங்கும் முதலாளியம், உலகமயம் என்பன பொதுவான நடைமுறையாகிவிட்டதோ அவ்வாறே இயற்கைப் பேரிடர் என்பதும் ஒரு பொது அம்சமாகியிருக்கிறது. புவிச் சமநிலைக் குலைவு தனிமனிதர் தொடங்கி இப்புவிப் பரப்பெங்கும் தேச எல்லைகளைக் கடந்து கடும் சேதங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியா, தமிழகச் சூழலில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள சுற்றுச்சூழலில் கவனம் செலுத்த வேண்டி அவசர அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான தனி அமைச்சகமும், துறையும், பேரிடர் மேலாண்மையும், நவீன தொழில்நுட்பங்களும் பெரும் அவசியமாகியிருக்கின்றன. இதில் அரசியல் செய்ய எந்த வழிவகையும் கிடையாது. பேரிடர்களை எதிர்கொள்ள நவீன அறிவியல் முறைகள் தேவைப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது இதுதான் நிலைமை. இது உலகெங்குமான இயற்கைச் சீற்றத்தின் பொது நிகழ்ச்சி நிரல். நாம் அதை எப்படி எதிர் கொள்கிறோம், எதிர்கொள்ளப்போகிறோம் என்பதே முக்கியமானது. தோழர் கஜா புயல் குறித்து எழுதியிருக்கும் பதிவு முக்கியமானது.
காவல்துறையை நவீனபடுத்திய அளவுக்கு இயற்கைச் சீற்றங்களை அறியும் வகைகளை நவீனப்படுத்த இன்றுவரை நம்மிடம் போதுமான வசதிகளோ, கருவிகளோ இருக்கவில்லை. கடந்த 2024 திசம்பரில் வந்த இரண்டு புயல்களை கணிக்க இந்திய ஒன்றியத்தின் மண்டல வானிலை ஆய்வு நடுவம் (சென்னை) முற்றாகத் தவறிவிட்டது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக அவற்றைச் சரியாக கணிப்பதுச் சவாலாக இருக்கிறது என்றது மண்டல வானிலை நடுவம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 320 மேற்பட்ட ராடர்கள் பயன்படுத்தும் போது நாம் வெறு 32 ராடர்களையே பயன்படுத்திக் கணிக்க வேண்டியுள்ளது என்று வானிலை நடுவத்தின் இயக்குநர் கைவிரிக்கிறார். நாம் செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம். அதற்கு கொடுக்க வேண்டிய விலை கஜா போன்ற புயல்கள், கேரளாவின் வயநாடு போன்ற இடங்கள் பலிவாங்கிய எண்ணற்ற உயிர்கள்.
கஜா புயலின் அனுபவங்கள் இதுவரை எதிர்கொள்ளாத ஒன்று அந்த பகுதியை சேர்ந்தவன் என்பதாலும் அவற்றை ஊடகங்களில் பதிவு செய்தவன் என்ற முறையிலும் அந்தப் பேரிடர் அனுபவங்கள் ஒரு பக்கம் இருக்க, அன்றைய ஆளும் கட்சி எதிர் கொண்ட முறை அதனினும் கொடுமையானது. அரசு அறிவித்த பேரிடர் உதவித் தொகை முறையற்றவர்களின் கரங்களுக்கு போய் சேர்ந்ததே பெரிய அவலம்.
இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்த போது தென்னைத் தொழிலாளிகளுக்கோ 20, 30 தென்னை மரங்கள் வைத்திருந்தவர்களுக்கோ உதவித் தொகை போய்ச் சேரவில்லை. மாறாக அரசு அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும், அவர்களை ஒட்டிய பெரும் தென்னை, பெருநிலக்கிழார்களுமே பயன் அடைந்தனர். பலரும் வெறும் தரிசுகளைக் காட்டி உதவிப் பெற்றனர். அந்த வகையில் மெய்யாக பாதிக்கப்பட்ட சிறு உழவர்களையோ, குறைந்த அளவு தென்னை மரங்கள் வைத்திருந்த சிறு உரிமையாளர்களுக்கோ தென்னை மரத்தினை ஒட்டி சிறு தொழிலில் ஈடுபட்டவர்களுக்கோ போய் சேரவில்லை. பேரிடர் என்பதும், அதன் இழப்பு என்பதும் வழமைபோல விளிம்பு நிலையினருக்கு என்றால் அதில் பயன்பெறுபவர்கள் அதிகார வர்க்கத்தினரும், நடுத்தர வர்க்கத்தினரும் என்றால் மிகையில்லை. இதுவே தமிழக ஆட்சி நிர்வாக அரசியலின் நிரந்தரத் துயரம்.
தோழர் சிவகுருநாதனைப் பொறுத்தவரை கட்டுரைகளில் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்துவிட்டு நகர்ந்துவிடுபவர் அல்லர். அதற்குத் தெளிவான தீர்வுகளை முன்வைக்கக் கூடியவர். முக்கியமாக அவற்றின் அரசியலின் அரசியலைத் துணிந்துப் பேசக்கூடியவர். அந்த வகையில் கஜா புயல் தொடங்கி மதுவிலக்கு மற்றும் கள்ளச் சாராயச் சாவுகள் தொடர்கதையாகும் அரசியல் வரையில் ஆய்வு நோக்கில் அவர் வைக்கும் அதற்கானத் தீர்வுகள் முக்கியமானவை, சிந்திக்க வேண்டியவை எல்லாவற்றையும் தாண்டி அவை நடைமுறைபடுத்த வேண்டியவை. அவ்வாறே கல்வி தொடர்பான அவரது விரிந்த பார்வைகள், தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் என்பன இத்தொகுப்பின் கட்டுரைகள் வழி நாம் வந்தடையும் மிக முக்கியமான இடமாகும். அதனைத் தொகுப்பின் கட்டுரைகள் கூடுமானவரை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
கூர்த்த மதியும், விரிந்த, தெளிந்த பார்வையும் கொண்டவராக செயற்பாட்டரங்கில் தொடர்ந்து இயங்கும் - அரிதாகவே எழுதும் தோழர் அதுவே பல சமகாலச் சிக்கல்கள் தொடர்பான அவரது கருத்துகள், பார்வைகள் அறிய இயலாது செய்துவிடுகிறது என்பதே தொகுப்பு தொடர்பாக நான் வைக்கும் மிகப்பெரிய குறைபாடும் குற்றச்சாட்டுமாகும். தொடர்ந்து மொழி, சமூகம், அரசியல், கல்வி சார்ந்து தமிழ் நிலத்தின் வாசிப்பு உலகுக்கு அவரது எழுத்தின் வழி புத்தொளி பாய்ச்ச வேண்டும், பங்களிக்க வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பு.
('மொழி, சமூகம், அரசியல்' நூலுக்கு தோழர் இரா.மோகன்ராஜன் அவர்களின் அணிந்துரை.)
நூல் விவரங்கள்:
மொழி - சமூகம் - அரசியல் (கட்டுரைகள்)
மு.சிவகுருநாதன்
முதல்பதிப்பு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 154 விலை: ரூ. 180
ISBN: 978-93-94414-99-0
நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:
நன்னூல் பதிப்பகம்,
மணலி – 610203,
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் – மாவட்டம்.
அலைபேசி: 9943624956
மின்னஞ்சல்: nannoolpathippagam@gmail.com
G Pay: 8610492679