வரலாறும் தொன்மமும் - தொடர்
12 இராமாயணக் கதைகள்
மு.சிவகுருநாதன்
புராண, இதிகாசக் கதைகளை நாம் என்றுமே வரலாறாக ஏற்றுக்கொள்ள இயலாது. இருப்பினும் இவை வரலாறாக மாற்றப்படும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகள் நம்மீது செலுத்தும் ஆதிக்கம் அளவிட முடியாதது. இக்கதைகள் வரலாற்றின் இடைச்செருகலாக ஆங்காங்கே நுழைக்கப்படுவதும் பலர் அவற்றை விவரமறியாமல் ஒப்பித்து வருவதையும் பார்க்கிறோம். மநு நீதிச் சோழன் கதை இவ்வகையில் இருப்பதை நாம் அறிவோம். கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய அரசு தொல்லியல் துறை மூலம் சரஸ்வதி நதியைத் தேடிக்கொண்டுள்ளது. சூழலியல் பாதிப்புகள் பற்றி எதையும் கவனத்தில் கொள்ளாத இந்திய உச்சநீதி மன்றம் இராமர் பாலம் என்றவுடன் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்திற்கு உடன் தடை வழங்கியது நினைவிருக்கலாம். கடலடி நீண்ட மணல் திட்டுத் தொடரான ஆதம் பாலத்தை இராமர் பாலம் என்று நம்ப வைப்பதில் ஆளும் அதிகார வர்க்கம் வென்றுள்ளது. இது இன்றைய வெறுப்பரசியலுக்கு உதவும் வழியாகவும் உள்ளது.
ரிக், யஜூர், சாம, அதர்வண உள்ளிட்ட நான்கு வேதங்கள், உபநிடதங்கள், பிரமாணங்கள், ஆரண்யங்கள் ஆகியவை சுருதிகள் என அழைக்கப்படுகின்றன. இன்று இவை எழுத்து வடிவம் பெற்றிருப்பினும் வேத காலத்தில் வாய்மொழியாகப் பரப்பப்பட்டவை. பாராயணம் செய்து பரப்பப்பட்ட இந்த வாய்மொழி மரபே நிலையான ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள் போன்றவை எழுதப்பட்ட பிரதிகள் ஆனாலும் அடிக்கடி மாற்றத்திற்கு உட்படுபவை என்றும் வரையறுக்கப்படுகின்றன. வாய்மொழி மரபை உயர்த்தி எழுத்து மரபை தாழ்த்தும் போக்கு இதனுள் இருப்பதும் எல்லாம் கடவுளால் அருளப்பட்டது என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கவும் இவ்வாறான கட்டமைப்புகள் உருவானதை நாம் அவதானிக்கலாம்.
இராமாயணமும் மகாபாரதமும் இந்திய இதிகாசங்களாகப் போற்றப்படுகின்றன. இவற்றின் புனைவுகளின் வழியே மாய எதார்த்தவாதத்தைக் கண்டடையலாம். ஆனால் இவற்றின் வழியாக வரலாற்று மூலாம் பூச நினைப்பது மிகவும் ஆபத்தானதாகும். இக்கதைகளிலுள்ள புனைவுகளை அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்களோடு ஒப்பிட்டு ஆய்வுகள் செய்யலாம். ஆனால் அவை என்றுமே வரலாறாக மாறிவிடாது. இது தமிழ்க் காப்பியங்களுக்கும் பொருந்தும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி பார்ப்பனர்கள், பசுக்கள் தவிர்த்த பிறர் அடங்கிய மதுரையை எரிக்கும் நிகழ்வையும் இத்துடன் ஒப்புநோக்கலாம். வட இந்தியாவில் வால்மீகியின் ‘லங்கா’ உள்ளதை மார்க்சிய வரலாற்று அறிஞர்களும் இதர வரலாற்று ஆசிரியர்களும் விளக்குகின்றனர். கங்கைச் சமவெளியின் அரசு உருவாக்கத்திற்கும் இனக்குழு சமூகங்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இராமாயணமாக உருப்பெற்றது என்ற கருத்தும் உண்டு.
இராமாயணக் கதையை உண்மை வரலாறாக நம்பிய ஒருவர் அக்கதை வெறுப்பரசியலுக்குப் பயன்படும்போது மனம் வெதும்பி 1930களில் ‘Ramayana and Lanka’ சுமார் 100 பக்கம் கொண்ட ஆங்கில நூலை எழுதுகிறார். இராவண காவியம் எழுதிய புலவர் குழந்தை போல இவர் ஒரு நாத்திகரும் இல்லை. அவர் டி.பரமசிவ அய்யர் எனும் ராம பக்தர். பெங்களூர் அச்சகத்தில் 1940இல் அச்சிடப்பட்டு இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் இரு பகுதிகளாக உள்ளது. வரலாற்றில் வெறுப்பரசியல் விதைக்கப்படும்போது சமூக நல்லிணக்கத்தையும் மனித மாண்புகளையும் அறம்சார் வாழ்முறைகளைப் பின்பற்றோர் இவற்றைக் கண்டும் காணாது இருந்துவிட இயலாது என்பதற்கு இவர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகிறார்.
டி.பரமசிவ அய்யர் மைசூரு சிவசமுத்திர நீர்மின் சக்தித் திட்டத்தை நிறுவிய பொறியாளர் சர்.கே. சேஷாத்ரி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இளமைப்பருவத்திலிருந்து இராமயணத்தை ஆழமாகப் பயின்று பாராயணம் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர். இந்நூலைப் பற்றி விரிவான அறிமுகத்தை பேரா.அ.மார்க்ஸ் ‘சஞ்சாரம்’ இதழில் (ஜன-மார்ச் 2008) இதழில் எழுதியிருந்தார். பின்னர் இந்நூல் இராமாயண அரசியல் என்ற பெயரில் பாரதி புத்தகாலயத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. தற்போது (2019) சிந்தன் புக்ஸ் இந்நூலை வெளியீட்டில் கிடைக்கிறது.
கவிஞர் ரவீந்தரநாத தாகூர் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, அயோத்தியின் அரசி சீதையை ஒரு 10 தலை ராவணன் கடத்திச் சென்று சிறைவைத்தது உங்களுடைய தீவில்தான் என்று சிலோன் மக்களிடம் சொன்னதாகக் கூறுகிறார். தெய்வீகப் பன்புகள் நிரம்பிய தாகூர் மட்டுமின்றி ஜவகர்லால் நேரு, ராஜாஜி போன்றோரும் இம்மாதிரியான கருத்துகளைச் சொன்னதும் பரமசிவ அய்யரை பெரிதும் வருத்தியது. இருவரும் ‘லங்கா’வையும் ‘சிலோனை’யும் ஒன்றாகவே குறிப்பிட்டனர். 1934இல் இலங்கையிலிருந்து திரும்பிவரும் வழியில் சென்னையில் நேருவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், நேரு அனுமனைப் போல இலங்கையிலிருந்து பறந்து வந்ததாகவும் இராமாயணப் போர் நடத்தாமல் தனது முயற்சிகளில் நேரு வெற்றி பெறுவார் எனவும் ராஜாஜி வாழ்த்திப் பேசினார்.
பொறுப்பான பதவிகளில் உள்ளோர் இவ்வாறு இரு நாடுகளுடையே பகைமையையும் மனக்கசப்பையும் உண்டாக்கும் வகையில் பேசுவது பரமசிவ அய்யரை மிகவும் பாதித்தது. ஏற்கனவே பவுத்த சிங்களர்களுக்கும் பிராமணமயமான தமிழர்களுக்கும் இடையே பகையுணர்வு மேலோங்க சோழ, பாண்டிய மன்னர்கள் மேற்கொண்ட படையெடுப்புகள், அவர்கள் அழித்த பவுத்த கலாச்சாரச் சின்னங்கள் போன்றவை காரணமாக அமைந்ததையும் எடுத்துக்காட்டுகிறார். இத்தகைய சூழலின் பின்புலத்தில், தனக்கு மிகவும் பிடித்த ‘ஆதி காவியம்’ என அழைக்கப்படும் இராமாயணக் கதையின் புவியியலை ஆராயத் தொடங்கினார். பிரிட்டிஷ் அரசின் புவியியல் நுண் விளக்க வரைபடத்தாள்களைப் பயன்படுத்தும் பயிற்சி பெற்ற இவர், பிரிட்டிஷ் அரசின் ‘சர்வே’ துறையிலிருந்து 63ஆம் எண்ணுள்ள வரைதாளை ஆராய்ந்தபோது வால்மீகி இராமாயணத்தில் வரும் கங்கையின் வடகரைப் பகுதிகளாகிய டோன் (தமஸா), பிஸ்வி (வேடஸ்ருதி), கும்தி (கோமதி), சாய் (சயந்திகா), சிங்ரார் (ஸ்சிறிங்கவேதபுரம்) என ஏறத்தாழ அவ்வாறே அழைக்கப்படுவது இவருக்கு ஆச்சரியமூட்டியது.
அயோத்தியிலிருந்து ‘லங்கா’ வரை ராமர் கடந்த பாதையைத் அவர் செய்த ஆய்வுகளின் வழி கண்டடைகிறார். தாமோ மாவட்டத்தின் சோனார் ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளான கோப்ரா, பிவாஸ் ஆகியவற்றால் வண்டல் நிலங்களில் ‘கோண்டு’ பழங்குடியினருக்கும் அப்பகுதிகளில் குடியேறிய ஆரியர்களுக்கும் இடையில் நடந்த போராட்டமே இராமாயணம் என்கிற முடிவுக்கு வருகிறார். இதற்கு ஆதாரமாக விரிவான நிலவரைபடங்கள், இராமாயணத்தில் காணப்படும் புவியியல் பகுதிகளைக் குறிப்பிடும் சர்வே வரைபடங்களின் எண், அட்ச, தீர்க்கக் குறியீடுகளைக் காட்டும் அட்டவணைகள் போன்றவை நூலில் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளன.
நூலின் இரண்டாம் பகுதியில் இராமன் வாழ்ந்த ஆண்டுகள், இராமன் நாடு கடத்தப்பட்டதற்கான காரணம், வால்மீகியின் மானுடப் பின்புலம், பெண்கள் குறித்த அவரது பார்வை, சீதை லட்சுமணனை அவமானப்படுத்தியது, காயத்ரி இராமாயணம் ஆகிய பிரச்சினைகள் சார்ந்து தமது ஆய்வுகளை வெளிப்படுத்துகிறார்.
கி.பி.11 ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கையின் ‘லங்கா’வும் இராவணனின் ‘லங்கா’வும் ஒன்றாகப்படவில்லை. ஹர்ஷரின் இரத்னாவளி (கி.பி.608-648), போஜ மன்னனின் ஜம்பு ராமாயணம் (கி.பி. 1010 - 1050) போன்றவற்றில் சிங்கள நாடான சிலோனை லங்கா என்று குறிப்பிடவில்லை. அங்கு ஆண்ட பவுத்த அரசு பற்றிய குறிப்புகள் உண்டு. பிற்காலச் சோழர்கள் காலத்திற்குப் பிறகுதான் இராமயண லங்காவும் இன்றைய சிலோனும் ஒன்றானது என்பதை நிறுவுகிறார்.
வால்மீகி இராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் இராவணனின் இலங்கையும் இன்றைய சிலோனும் ஒன்று என பொருள்படும் குறிப்பு உள்ளது. சிலோன் மீது படையெடுத்து ஆக்ரமித்து, தலைநகர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி சிங்கள மன்னனை வீழ்த்திய பிற்காலச் சோழ மன்னனை பாராட்டும் நோக்கத்தில் இவ்வரிகளை இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டன என்றும் சொல்கிறார். பிற்காலச் சோழ அரசர்களின் காலத்தில் வாழ்ந்த கம்பர் தனது இராமாயணத்தில் லங்கை தமிழ்நாட்டிற்குத் தெற்கே இருப்பதாக வரையறுப்பதில் வியப்பில்லை.
சிவன் அசுரர்களின் கடவுள். இராவணன் லிங்க வழிப்பாட்டில் உள்ளவன். திருமாலின் அவதாரமான இராமன் சென்ற இடத்தில் எல்லாம் லிங்கத்தை நிறுவி வழிபட்டதாக சமயவெறி பிடித்த சைவர்கள் புனைந்த கதை என்கிறார் பரமசிவ அய்யர். இராமேஸ்வரத்தில் லிங்கத்துடன் கோயில் கட்டப்பட்ட காலத்தில்தான் மணல் திட்டுத் தொடரான ஆதம்பாலம் இராமர் பாலமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை நிறுவுகிறார்.
இராமன் புத்தருக்கு முற்பட்டவன் என்பதை அனைவரும் ஏற்கும் நிலையில் இராமாயணத்தில் புத்தரை திருடன், நாத்திகன் என்று இழிவுபடுத்தும் வரிகள் அயோத்தியா கண்டத்தில் மதவெறியர்களால் இடைச்செருகலாக நுழைக்கப்பட்டது என்று தெளிவுபடுத்துகிறார். சிங்கள தீபம் திரிகூட ‘லங்கா’வாகவும், மகேந்திர மன்னர்கள் இராவணர்களாகவும், பவுத்த சிங்களர்கள் அசுரர்களாகவும், புத்தர் திருடராகவும் புனையப்பட்டது கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குவதாகக் கணிக்கிறார்.
பிரயாகை என்பது கங்கையும், யமுனையும் சேர்ந்து உருவான ஒரு பெரிய ஏரி என்றும் வடக்கே பன்னா மலைதொடருக்கும் தெற்கே விந்தியமலைக்கும் இடைப்பட்ட பகுதியே தண்டகாரண்யம் ஆகும். நர்மதை நதியைக் கடந்து இராமன் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகள் இராமனின் பஞ்சவடியில் தொடங்கி இராவணனின் லங்காவில் முடிகிறது. இராவணன் கழுதை பூட்டிய ரதம் ஒன்றிலேயே சீதையைக் கடத்தி வந்ததாகச் சொல்கின்றனர். மகேந்திர மலைக்கும் இராவண ‘லங்கா’ அமைந்திருந்த சுவேல மலைக்கும் இடையேயுள்ள பகுதி இராவணன் கழுதை பூட்டிய ரதத்தால் கடந்தான். அனுமன் அந்த நீர்ப்பரப்பை நீந்தியே கடந்தான். இராமன் வானர சேனையின் உதவியோடு தற்காலிகப் பாலம் போட்டுக் கடந்தான்.
இவையிரண்டிற்கும் இடையேயுள்ள 100 யோஜனைத் தொலைவை கோடை மற்றும் வசந்த காலங்களில் கழுதை வண்டியால் கடக்கக்கூடிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நேரங்களில்தான் நீந்தியோ, பாலம் கட்டியோ கடக்க வேண்டியுள்ளது. எனவே அது சமுத்திரமல்ல. தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்கும் 30 கல் தொலைவுள்ள கடற்பகுதியுடன் இராமயணக் கணக்குகள் பொருந்திவரவில்லை. நீண்ட மணல் திட்டுகளின் (டோம்போலா) தொடரான ஆதம் பாலம் வடமேற்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசையில் அமைகிறது. ஆனால் வால்மீகி இராமாயணம் குறிப்பிடும், வானர சேனைகளின் உதவியோடு இராமன் கட்டியதாகச் சொல்லப்படும் பாலம் மகேந்திரகிரிக்கும் சுவேலகிரிக்கும் இடையில் 100 யோஜனைத் தொலைவு வடக்குத் தெற்கு திசையில் அமைந்துள்ளது. திசை, தொலைவு ஆகியவற்றிலும் வேறுபாடு உள்ளது. மலையுச்சி நகரமான வால்மீகி குறிப்பிடும் ‘லங்கா’ இன்றைய இலங்கை அல்ல. கோதாவரி லங்கா, சோனா லங்கா என்று ஆறுகளுக்கு இடையில் உள்ள திட்டுக்களை ‘லங்கா’ என்று அழைக்கும் நிலை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த கோண்டுகள் இங்கு அசுரர்கள் ஆகின்றனர். பார்ப்பனீய மயமான விபீஷணனும் அவனது வழித்தோன்றல்களும் ராஜகோண்டுகள் எனவும் பிற கோண்டு இனமக்கள் துர்கோண்டுகள் எனவும் அழைக்கப்பட்டனர். இன்றும் இப்பகுதிகளில் இராவண வம்சிகள் என்றும் அழைக்கும் நிலையும் உள்ளதை எடுத்துக்காட்டுகிறார்.
சாத்பூரா, சோட்டா-நாக்பூரி பீடபூமியின் அடர்ந்த காடுகளில் கோண்டுகளோடு கோர்க்கர்கள் எனப்படும் இனக்குழு மக்கள் உள்ளனர். இவர்களை வழிப்பறி செய்யும் குற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர். கோண்டுகள் கோண்டி எனப்படும் திராவிட மொழியைப் பேசுபவர்களாகவும் கோர்க்கர்கள் முண்டா மொழி பேசுபவராகவும் உள்ளனர். வால்மீகி இராமாயணத்தில் வரும் வானரர்கள் கோர்க்கர்கள் என்பது இவர் வந்தடையும் முடிவாகும். வளமிக்க ஜனஸ்தானத்தைக் கோண்டுகளிடமிருந்து ஆரியர்கள் கைப்பற்றியதற்கான போர் இராம-இராவண யுத்தமாக கதைக்கப்படுகிறது.
இதிகாசங்களை நிலைநிறுத்துவதும் போற்றிப் புகழ்வதும் நமது பணியல்ல. பன்னெடுங்காலமாக மக்கள் மத்தில் புழங்கிவரும் இக்கதைகளுக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. பலநூறு பார்வைகளும் வேறுபட்ட கதை சொல்லும் முறைகளும் இருக்கின்றன. இவை பழங்காலக் கற்பனை வளத்திற்கும் சான்றாக அமைகின்றன. அதைத் தாண்டி இவற்றிற்கு அரசியல் முக்கியத்துவம் அளித்து அதன் போக்கில் வெறுப்பரசியலை விதைப்பது இன்றைய அரசியல் வழிமுறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னால் வெறுப்பரசியலுக்கு எதிரான ஓர் ஆய்வாக இந்நூல் அமைவதை நாம் உணரலாம். இம்மாதிரியான ஆய்வுகள் நமது மனங்களில் சிறிது சலனத்தை ஏற்படுத்தினால் அதுவே பெருவெற்றியாகும். எழுத்தறிவு அதிகம் இல்லாத ஒரு சமூகத்தில் இவ்வாறு பரப்பப்படும் கதைகளின் தாக்கம் மிகுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவற்றிலிருந்து விடுபட்டு, விலகி நின்று பகுத்தறிவுடன் சிந்தித்துச் செயல்படுவதே அனைவருக்கும் உகந்த வழிமுறையாக இருக்க இயலும்.
- முற்றும்.
(ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2025 முடிய 12 மாதங்கள் ‘பொம்மி’ – சிறுவர் மாத இதழில் “வரலாறும் தொன்மமும்” என்ற பெயரில் வந்த தொடர் இக்கட்டுரையுடன் நிறைவடைந்தது. ஆதரவளித்த ‘பொம்மி’ ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் நன்றி.)
நன்றி: ‘பொம்மி’ – சிறுவர் மாத இதழ் டிசம்பர் 2025





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக