-மு. சிவகுருநாதன்
அக்டோபர் 18, 2010 அன்று சென்னை தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் "அ.மார்க்ஸ:- சில மதிப்பீடுகள்" என்ற விமர்சனத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புலம் மற்றும் தோழர்கள் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 30 ஆண்டு காலமாக தலித்தியம், பின்நவீனத்துவம், விளிம்புநிலையினர், பெண்ணியம், சிறுபான்மையினர், மனித உரிமைகள் போன்ற பல்வேறு களங்களில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆளுமையான தோழர் அ.மார்க்ஸ் பற்றிய ஒரு விமர்சனத் தொகுப்பை தோழர் மீனா தொகுத்திருக்கிறார். இந்நூலில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 30 பேர் அ. மார்க்ஸ் பற்றிய விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். (நூல் பற்றிய கருத்தை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்).
இந்நிகழ்விற்கு தலைமையேற்ற ஒடை. பொ. துரையரசன் அ.மார்க்ஸ் உடனான தமது தோழமையை நினைவு கூர்ந்து இந்நூல் வெளிவருவதற்கான சூழல், அ.மா.வின் அனுமதி, மீனாவின் பங்களிப்பு ஆகியவை பற்றி மிகச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.
நூலை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட பொ. வேல்சாமி பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய தோழர் பொ. வேல்சாமி அ.மா. உடனான தமது தோழமைச் செயல்பாடுகளை விவரித்தவுடன் நா தழுதழுக்க ஒரு நிமிடம் கண் கலங்கினார். கூட்டத்தினரும் கண் கலங்கக் கூடியதாக இந்நிகழ்வு அமைந்தது. நிறப்பிரிகையின் பணிகளில் ஏற்பட்ட நெருக்கடிகளைக் குறிப்பிட்டு தற்போது நிறைய இளைஞர்கள் இத்தளத்தில் பணி செய்ய வந்திருப்பது தமக்கு மிகவும் மனநிறைவளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்க செயல்பாட்டாளர் அ. மார்க்ஸ் பற்றி முனைவர் ப.சிவக்குமார் விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அ.மா. எழுதிய இரு கடிதங்களை அரங்கில் படித்துக் காட்டினார். கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் அதற்காக அ.மா. மீது எடுக்கப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.
தமீம் முஸ்தபா தமது உரையில் அ.மா.விடம் இணையும் புள்ளிகள், வேறுபடும் புள்ளிகளை குறிப்பிட்டுப் பேசினார். அ.மா.வின் எழுத்தில் இஸ்லாத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றிய விமர்சனப் பார்வை இல்லை. அ.மா. வேண்டுமென்றே அதைத் தவிர்த்து மெளனம் காக்கிறார் என்றார்.
தலைமையுரையில் பிரபஞ்சன், “காத்திரமான பிரச்சினைகளில் அரசு, இயக்கம், ஊடகங்கள் போன்றவற்றை விமர்சிக்கும் போது கடும் எதிர்ப்புக்கள் வரத் தான் செய்யும். அதையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.” என்ற இந்நூலில் உள்ள அ.மா.வின் நேர்காணலை எடுத்துக்காட்டிப் பேசினார். 76 போலீசார் மாவோயிஸ்ட்களால் படுகொலை செய்யப்படுகிறபோது இதன் விளைவாக ஏற்படும் அரச வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்களே என்று எழுதுகிறார். அதுதான் மார்க்ஸ் என்றார். தலித் இலக்கியத்தின்பால் கரிசனம் கொள்ளும் நடவடிக்கையை குமாரசெல்வா கட்டுரையை சுட்டிக் காட்டிப் பேசினார். திருவள்ளுவர் சமணர் என்று வெளிநாட்டினர் சொல்லும்போது கிடைக்கும் அங்கீகாரம் அ.மா., வேல்சாமி போன்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதும்போது இல்லை என்று ஆதங்கப்பட்டார்.
பேரா. கல்யாணி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாதிக் ஆகியோர் அ.மா.வுக்கு சால்வை அணிவித்தனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் அ.மா.வின் பணிகளுக்கு இன்றளவும் பேருதவியாக இருந்து வரும் ஜெயா மார்க்ஸின் பணிகளைக் குறிப்பிடத் தவறவில்லை. பாரதி புத்தகாலய மேலாளர் சிராஜுதீன் துணைவியார் தோழர் பாத்திமா ஜெயா மார்க்ஸ்க்கு பொன்னாடை கவுரவித்தார்.
பார்வையாளர் தரப்பிலிருந்து பேரா. கே.ஏ. குணசேகரன், தய். கந்தசாமி, கண்மணி போன்றோர் பேசினர்.
பல்கலைக்கழக ஆய்வுகளை எல்லாம் ‘நிறப்பிரிகை’ திரும்பிப் பார்க்க வைத்தது என்று கூறிய கே.ஏ. குணசேகரன் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை பக்கம் பக்கமாக அ.மா. திருத்தம் செய்ததை இன்னும் நான் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன் என்றார்.
தய். கந்தசாமி மன்னார்குடி அரசக் கல்லூரி மாணவர்கள் போராட்டக் காலத்தைப் பற்றியும் மாணவர்களை அ.மார்க்ஸ் அரசியல்படுத்தியதையும் குறிப்பிட்டுப் பேசினார். ஜெயா மார்க்ஸின் அன்பு, அரவணைப்பு, உபசரிப்பு போன்றவற்றை அழுத்தமாக குறிப்பிட்டு பேசிய இவர்கள் அ.மா.வின் தஞ்சை இல்லம் எங்களுக்கெல்லாம் தாய் வீடாக இருந்தது என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டனர்.
இறுதியாக ஏற்புரையில் அ.மார்க்ஸ், நான் மிகவும் நெகிழ்ச்சியுடன் இருக்கிறேன், என்று சொல்லி உ. இராஜேந்திரன், தய். கந்தசாமி போன்றோருடனான நினைவுகளைக் குறிப்பிட்டார். என்னைப் பற்றி வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஒடை. துரையரசனின் விரிவான நேர்காணலில் பதில் சொல்லியிருக்கிறேன். அதிலும் திருப்தியில்லையயன்றால் நான் என்ன செய்ய முடியும் என்றார்.
அரசுக் கல்லூரிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனியார் கல்லூரிகளுக்குப் பணியாற்ற ஓடி அலையும் நபர்களுக்கு மத்தியில் மு. திருமாவளவன், ப. சிவக்குமார், கல்யாணி, கோச்சடை, அ. மார்க்ஸ் போன்ற ஒரு சில ஆளுமைகளின் செயல்பாடுகளுக்கு உரிய சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இவர்களது செயல்பாடுகள் வரும் தலைமுறையினருக்கு பாடமாக அமைய வேண்டும். அந்த வகையில் இக்கூட்டத்திற்கு திரண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்; புதியவர்களும் கூட. இத்தொகுப்பு இவர்களுக்கு முழுமையாக வாசிக்கக் கிடைக்கும் என்றும் சொல்வதற்கில்லை.
அ. மார்க்ஸ் தொடர்பு கொண்டுள்ள பல்வேறு களங்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் கருத்துரையாளர்களைத் தேர்வு செய்வதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சி. மகேந்திரன், அழகியபெரியவன், கோ. சுகுமாரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.
தமீம் முஸ்தபா தனது கட்சி நிலைப்பாட்டில்தான் பேசினாரே தவிர அ.மா.வின் செயல்பாடான சிறுபான்மையினர் ஆதரவு, அதன் காரணமாக அவர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அவதூறுகள் போன்றவற்றைப் பற்றிய பதிவு நிகழ்வில் இல்லாமல் போய்விட்டது. அ. மார்க்ஸ் இன்று தீவிரமாக இயங்கிவரும் மனித உரிமைப் பணிகள் பற்றியும் அதிகம் பேசப்படாத நிலையும் இருந்தது.
கே.ஏ. குணசேகரன், தய். கந்தசாமி போன்ற பங்கேற்பாளர்களின் உரைகள் இல்லையயன்றால் அ.மா.வின் தலித்தியம் சார்ந்த செயல்பாடுகள் அரங்கில் பதிவு செய்யப்படாமல் போயிருக்க வாய்ப்பு உண்டு. மேலும் ஒரு பெண்ணின் கருத்துரை கூட இல்லாதது பெருங்குறையாகும். தொகுப்பில் கூட பெண்களின் கட்டுரை (தொகுப்பாளர் தவிர) இல்லை. தமிழில் பெண்ணியம் சார்ந்த தொடக்க கால ஆய்வுகளுக்கு வித்திட்ட அ.மா. போன்றவர்களைப் பற்றிய விமர்சனப் பதிவில் பெண்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டிருப்பது நன்றாக இல்லை.
அ. மார்க்ஸ் அவர்களின் பல்வேறு பணிகளையும் சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக அ. மார்க்ஸ்க்கு உறுதுணையாக இருந்து வரும் அவரது துணைவியார் ஜெயா மார்க்ஸ் அவர்களின் பார்வையில் அ. மார்க்ஸ் பற்றிய கண்ணோட்டத்தை ஒரு நேர்காணல் மூலமாவது பதிவு செய்து அடுத்த பதிப்பிலாவது இந்நூலில் சேர்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
நூல் தொகுப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான மீனா அரங்கில் இடையிடையே பேசிய சுய புராணங்களை தவிர்த்திருக்கலாம். அது பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களையும் சங்கடப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
அ.மார்க்ஸ் சில மதிப்பீடுகள் தொகுப்பு நூல் வெளியீடு -சில காட்சிகள் :
அரங்க வாசலில்...
நூல் வெளியீட்டு அரங்கில்...
வரவேற்பு : லோகநாதன்
தொகுப்பு :மீனா
தலைமை :ஓடை .பொ. துரையரசன்
நூல் வெளியீடு :பிரபஞ்சன்
முதல் பிரதி பெறுபவர்: பொ. வேல்சாமி
பார்வையாளர்களில் ஒரு பகுதி
தமிம் முஸ்தபா
வே. நெடுஞ்செழியன்
ப. சிவகுமார்
தய்.கந்தசாமி |
ஜெயா மார்க்ஸ் அவர்களுக்கு பாத்திமா சிராஜ் பொன்னாடை
பொ.வேல்சாமி
தலைமை உரை :பிரபஞ்சன்
முன்னாள் துணைவேந்தர் சாதிக் அ.மா.அவர்களுக்கு பொன்னாடை
K .A . குணசேகரன்
அ.மா. அவர்களுக்கு பிரபா.கல்விமணி பொன்னாடை
அ.மார்க்ஸ் ஏற்புரை
அ.மார்க்ஸ் ஏற்புரை
அ.மார்க்ஸ் நூலுடன் ஜெயா மார்க்ஸ் |