திங்கள், அக்டோபர் 14, 2013

வாக்ரிகளின் வதைபடும் வாழ்வு

வாக்ரிகளின் வதைபடும் வாழ்வு  - மு. சிவகுருநாதன்



ஒரு முன் குறிப்பு:
         குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்று சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்படும் நாடோடிக் கூட்டத்தினர் (Gypsies) தங்களை நெறிக்குறவர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர் (உபயம்: மு. கருணாநிதி).  இவர்கள் பேசும் மொழி 'வாக்ரி போலி'. ' வாக்' என்றால் மராத்தியில் 'புலி' என்று பொருள்; 'வாக்ரி' என்றால் 'புலியினத்தவ'ர் என்றும் பொருள்.  மொழியடிப்படையில் மக்களை அடையாளப்படுத்தும் மரபின்படி இச்சமூகத்தை 'வாக்ரிகள்' என்றழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்க முடியும்.  இனி பிறர் சொல்லுமிடத்தைத் தவிர்த்து  நாமும் இவ்வாறே பயன்படுத்துவோம்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு (2009) ஒரு சாலை வழிப் பயணத்தின் ஊடாக விழுப்புரம் - கோலியனூர் கூட்டு ரோட்டில் வாக்ரியார் காலனியும், அவர்களது உண்டு உறைவிடப் பள்ளி பெயர்ப் பலகையும் கண்ணில்பட்டது.  அங்கு சென்று திரு. மா. சங்கரின் தொண்டு நிறுவன உண்டு உறைவிடப் பள்ளியைப் பார்த்து அங்குள்ள மாணவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டுத் திரும்பினேன்.  நாகப்பட்டினத்தில் கவிஞர் ப்ரேம ரேவதி இக்குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வருவதையும்  அறிய முடிந்தது. 

Tribal Society நடத்தி வரும் வாக்ரி குழந்தைகளின் உண்டு உறைவிடப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயிலுகின்றனர்.  இக்குழந்தைகள் ஆடல் பாடல்களுடன் என்னுடன் ஒரு மணி நேரம் பொழுதைக் கழித்தனர்.  அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் மற்றவர்களால் கேலி, கிண்டலுக்குள்ளாவதால் படிப்பைத் தொடர முடியாமற் பாதியில் திரும்பி விடுவதை அங்குள்ளவர்கள் விவரித்தனர்.  
இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து தற்போது அஞ்சல் வழியில் இளங்கலைப் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு வாக்ரி இனப் பெண்ணும் அருகேயுள்ள ஊரிலிருந்து வரும் ஒரு தலித் பெண்ணும் இக்குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக செயல்படுகின்றனர்.  இவர்களுக்கு முறையான ஆசிரியப் பயிற்சி இல்லையென்ற போதிலும் வேறு எவரும் வாக்ரி குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க முன் வருவதில்லை என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.


கோலியனூர் வாக்ரி குழந்தைகள்


சென்ற ஆண்டில் (2011) நண்பர் ச. பாண்டியனுடன் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் வாக்ரிகள் குடியிருப்பில் சங்கப் பொறுப்பாளர்கள் திரு. டி. செல்வம், திரு. கே. நாகூரான் ஆகியோரைச் சந்தித்தோம்.  சாலை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அக்குடியிருப்பு தனித் தீவாக காட்சியளித்தது.

திருத்துறைப்பூண்டி வாக்ரி காலனியில்...

நாங்கள் இப்பகுதிக்குச் சென்ற போது ஒரு பெரிய சாரைப் பாம்பை உயிருடன் பிடித்து வாக்ரிக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அக்குடியிருப்புக்குச் செல்வதற்கு சாலைகள் இல்லை.  சாலை அமைக்க நகராட்சி நிதி ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இங்கு பிடிபட்ட பாம்புடன் வாக்ரி குழந்தைகள்

எவ்வித அடிப்படை வசதியுமற்ற தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசைகளில் அவர்கள் தங்கியுள்ளனர்.  வீட்டிற்கு மின் விளக்கு வசதியோ தெரு விளக்கு வசதியோ இல்லை.  பாம்புகள், பூச்சிகளுடந்தான் எங்கள் குழந்தைகளை வளர்க்கிறோம் என்றனர் வாக்ரி இனப் பெண்கள். இம்மாதிரியான குடிசைகள் கூட பல குடும்பங்களுக்கு இல்லை. அவர்கள் பேருந்து நிலைய திறந்த வெளியையே வீடாகக் கொண்டுள்ளனர்.

வாக்ரி காலனியின் நிலை

தங்கள் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.  எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை.  சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கப்படுவதில்லை.  நலவாரியம் இருந்தாலும் சுய தொழில் தொடங்க, கடைகள் வைக்க வங்கிகள் கடனளிப்பதில்லை.  கடனுக்கு பிணையளிக்க எங்களால் இயலுவதில்லை.  எங்கள் குழந்தைகள் படிக்க வசதியில்லை என்பது போன்ற பல தேவைகளை அவர்கள் வலியுறுத்திக் கேட்கின்றனர். இவர்களின் நிலைமை என்று மாறுமோ என்ற ஏக்கத்துடனே அங்கிருந்து நாங்கள் கிளம்பினோம்.

கோலியனூர் வாக்ரி குழந்தைகள்

கோலியனூர் வாக்ரி குழந்தைகள்

பாட்டு பாடும் குழந்தை

நடனமாடும் குழந்தை

பாட்டு பாடும் குழந்தைகள்

"நரிக்குறவர்களை, நல்ல நெறிக் குறவர்கள் என்று அழைத்து, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து திரியாமல், ஓரிடத்தில் இருந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கென தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் தேவராயநேரி என்னும் இடத்தில் கட்டப்பட்ட 140 குடியிருப்புகளை 13.03.1975 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.  இருப்பினும் நரிக்குறவர்கள் இன்றும் நாடோடிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்". - தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை 27.05.2008-ல் வெளியிட்ட அரசாணை (நிலை) எண்: 60 இப்படிச் சொல்கிறது. 

ஆ. குழந்தை அவர்களின் 'வாக்ரிகளின் வாழ்வியல்' (2011) என்ற நூலில் கண்டுள்ளபடி தமிழகத்திலுள்ள வாக்ரி குடும்பங்களின் எண்ணிக்கை 7649; மொத்த மக்கள் தொகை 28356 (கணக்கெடுப்பு : Tribal Society மற்றும் தமிழ்நாடு பழங்குடி வாக்ரிவேல் தொழிலாளர் சங்கம் - 2008)

1975-ல் வாக்ரிகளின் மக்கள் தொகை 5000 இருந்திருக்கும் எனக் கொண்டாலும் இவர்கள் திறந்து வைத்த 140 குடியிருப்புகள் மூலம் வாக்ரிகளின் நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வருமென எப்படி இவர்களால் கனவு காண முடிந்தது.  அப்துல்கலாம் தோற்றார் போங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் சட்டமன்றத்தில் வாக்ரிகள் பற்றி பேசினார்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வாக்ரிகளின் மாநாட்டில் பங்கு பெற்றார்.  தமிழக அரசும் இவர்கள் மீது கரிசனம் இருப்பதாகக் காட்டிக் கொண்டு வெளியிட்ட மேற்கண்ட அரசாணை மூலம் தமிழ்நாடு 'நரிக்குறவர் நல வாரியம்' அமைக்க உத்தரவிட்டது
இவர்களது கோரிக்கைகளுக்கு பலரும் அழுத்தம் கொடுக்காமை, வாக்ரிகள் பெரும் அமைப்பாக திரளாத நிலைமை, தங்களை ஓட்டு வங்கியாக மாற்றி அரசியல் கட்சிகளுடன் பேரம் பேச முடியாத நிலை, சமூக ஒதுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இவர்கள் நலன் சார்ந்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் விளிம்பு நிலை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர்.  

வாக்ரிகள் ஆரவல்லி மலைப்பகுதி, குஜராத், மேவார் ஆகிய பகுதிகளிலிருந்து நாடோடிகளாக தமிழகம் வந்தவர்கள்.  இவர்களது இனப்பிரிவுகள் அவற்றை உணர்த்துகின்றன.  எருமைகளைப் பலி கொடுக்கும் குதிரத்தோ, சோகன், சேளியோ என்ற பிரிவுகளும் ஆடுகளைப் பலியிடக் கூடிய மேவாடோ, ஃடாபி என்னும் பிரிவுகளும் வாக்ரிகளில் உள்ளனர்.

மராட்டிய சிவாஜியின் படை வீரர்களாக இருந்த வாக்ரிகள் மொகலாயர்களுடன் ஏற்பட்ட போர்த் தோல்வியால்  100 - 150 ஆண்டு காலம் மொகலாயர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து, பின்பு அதனை மறுத்து காடுகளில் நாடோடிகளாக வாழத் தொடங்கியவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற மறுத்து தமிழகப் பகுதிகளில் குடியேறியவர்களாக இருக்கலாம் என்று வாக்ரி போலி அகராதி வெளியிட்ட சீனிவாச வர்மா கணிக்கிறார்.  ஆனால் இவற்றை ஏற்க  முடியுமா என்று தெரியவில்லை.

வாக்ரிகளின் கலாச்சாரத்தை இந்து மதக் கலாச்சாரம் என்றோ அல்லது இஸ்லாமிய எதிர்ப்புக் கலாச்சாரம் என்றோ முடிவு கட்ட முடியாது.  இவர்கள் மைய நீரோட்ட இந்துப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகிய நாடோடிக் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்.  இவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறுத்துவதும் இந்துப் பேரடையாளத்தை இவர்கள் மீது சுமத்துவதும் எப்போதும் இங்கு நடக்கும் வேண்டாத வேலையாகத்தான் படுகிறது.
குஜராத்தி, மராத்தி, உருது, தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற பல்வேறு மொழிச் சொற்களை வாக்ரிகள் கலந்து பேசுகின்றனர்.  இவர்கள் பேசும் மொழி 'வாக்ரிபோலி' எனப்படுகிறது.  இம்மொழி இந்தோ - ஆரிய மொழியாதலால் தமிழுக்கு புரியாத மொழியாகவும் இந்தி, உருது, குஜராத்தி மொழி பேசுவர்களுக்கு ஓரளவு புரியும்படியாக உள்ளதாக 'வாக்ரிபோலி அகராதி'யைத் தொகுத்த ஜி. சீனிவாச வர்மா குறிப்பிடுகிறார்.  இவர் வாக்ரி போலி - தமிழ் - இந்தி - குஜராத்தி  - ஆங்கிலம் ஆகிய மொழிகளடங்கிய 'வாக்ரி போலி பன்மொழி அகராதி' ஒன்றை வெளியிட்டுள்ளார்.  (Rs. 250 National Folklore support centre, Chennai - 34) 

சமூகத்தில் 'வாக்ரிகள்' எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உதாரணமாக சில:
01. பிறர் வாக்ரிகள் மீது கொண்டுள்ள இழிவான எண்ணங்கள்.  இவர்களை சம மனிதர்களாக மதிக்காத போக்கு  நின்றபாடில்லை.
02. பேருந்து மற்றும் தொடர்வண்டிப் பயணங்களில் கேலி, கிண்டலுக்குள்ளாதல்; அவமரியாதை செய்யப்படுதல்.
03. குழந்தைகள் பிற குழந்தைகளால் கேலி, கிண்டல் செய்யப்படுதல்.  பள்ளிகளின் மற்ற குழந்தையுடன் இணைந்து படிக்க முடியாத நிலை.
04. தங்களுடைய மொழியைப் படிக்க முடியாத நிலை ; தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கட்டாயமாக படிக்க வேண்டிய அவலம்; தாய்மொழி வழிக்கல்வி மறுக்கப்படல்.
05. மிகுந்த சிரமங்களுக்கிடையே படித்தாலும் பழங்குடியினருக்குண்டான சலுகைகள் மறுக்கப்பட்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் (MBC) வகுப்பில் இருப்பதனால் வன்னியர், மறவர், அம்பலக்காரர், இசை வேளாளர், மருத்துவர் போன்ற மிகப்பிற்படுத்தப்பட்ட(MBC) சாதியினரோடு போட்டி போட முடியாத நிலைமை. 
07. சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள் வாக்ரிகளை மிக இழிவாக சித்தரிக்கும் போக்கு.
08. பொதுமக்களோடு திரையரங்கு, பொருட்காட்சி போன்றவற்றில் பங்கேற்க இயலாமை.
09. தமிழக, புதுவை அரசுகளின் பாரா முகம்.
10. சுயதொழில் தொடங்க அரசு, வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் உதவி செய்யாத நிலையில் கந்து வட்டிக் கொடுமைகளுக்கு ஆளாதல்.  வங்கிகள் பிணை கேட்கும்போது இவர்களிடம் எதுவும் இருப்பதில்லை.
11. பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதல்.  அவர்கள் உயிர்வாழ அடிப்படை மனித உரிமைகள் கூட தரப்படாமை.
12. தேவதாசிகளின் பரதக் கலையை உயர்த்தப்பட்ட சாதியினர் கைப்பற்றிக் கொண்டதைப் போல வாக்ரிகளின் பச்சைக் குத்துதல், பாசி மணி விற்றல் போன்றவை மிக நவீனமான கடைகள் மூலம் பலர் இந்த தொழிலுக்கு வந்துவிட்டதால் இவர்களது பிழைப்பில் மண் விழுந்துள்ளது.
13. இவர்களது மூலிகை வைத்தியம் முறையான கவனிப்பைப் பெறாது உள்ளது.
முன்னாள் மத்திய புலனாய்வு (CBI) அதிகாரி ரகோத்தமன், சென்னை வேளச்சேரி போலி மோதல் படுகொலை தொடர்பாக 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு பெற்ற போது போலீசாரிடம் துப்பாக்கிகள் இருந்தால் சுடத்தான் செய்வார்கள்.  எனவே, துப்பாக்கிகளைத் திரும்ப பெறுங்கள் என்று விதண்டாவாதம் செய்தார்.  கூடவே எவ்வித சம்மந்தமும் இல்லாம் குருவிக்காரனிடம் துப்பாக்கி இருக்கிறது. அவன் உங்களையும் என்னையும் சுடுவான் என்றார்.  இந்த மாதிரியான கேவலப்போக்கு படித்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்களின் பொதுப் புத்தியில் இருப்பது மிகவும் மோசமானது.  எங்காவது இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்திருப்பதை ரகோத்தமனால் எடுத்துக்காட்ட முடியுமா? அத்துடன் இதில் பங்கேற்றவர்கள் இது குறித்து எவ்வித எதிர்வினையும் நிகழ்த்தவில்லை.

குற்றவாளிப் பழங்குடிகள் சட்டங்கள் (Criminal Tribes Act of 1871, Act 3 of 1911 and Act 6 of 1924)மற்றும் பஞ்சாப் ராணுவ போக்குவரத்துச் சட்டம் (Punjab Transport Act 1903) போன்றவற்றின் மூலம் பழங்குடி நாடோடி வாழ்க்கை முடக்கப்பட்டது. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் இவர்கள் வேட்டையாடுவதைத் தடை செய்தது.  அதன்படி இவர்களுக்குத் துப்பாக்கி உரிமம் வழங்குவது கூட குறைக்கப்பட்டது.  மேலும்இவர்கள் வேட்டையாடுவது உணவிற்காகத் தானே தவிர பெரும் பொருளீட்டவும் கடத்தவும் அல்ல என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.  சிங்கம், புலி, யானை, மயில் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளை இவர்கள் பணத்திற்காக வேட்டையாடுவதில்லை.  இதுவும் ஆளும் வர்க்கத்திற்கு தெரியும்.  இருப்பினும் இவர்களுக்கெதிரான ஆளும் வர்க்க கருத்தியல் பெரும்பான்மையோரின் பொதுப்புத்தியில் செருகப்பட்டுள்ளது.

வாக்ரி இனக்குழுக்களிடையே எருமை, ஆடுகளை வெட்டிப் பலி கொடுக்கும் வழிபாட்டு முறை வழக்கிலுள்ளது.  இவ்விலங்குகளைப் பலியிட்டு ரத்தம் குடிக்கும் நிகழ்வுகள் சாதி இந்துக்களின் பலியிடல் சடங்குகளைப் போன்றவையே.  இருப்பினும் இவற்றை மிகக் கொடூரமானதாகவும் அருவெறுப்பானதாகவும் தமிழ் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. கலைஞர் தொலைக்காட்சிச் செய்திகளில் சிறப்புப் பார்வையாக  இந்நிகழ்வு ஒளிபரப்பப்பட்டு வாக்ரிகளுக்குக்கெதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சமத்துவபுரத்தில் வாக்ரிகள் காளிக்கு எருமை மாட்டை பலிகொடுத்து ரத்தம் குடித்ததை காட்டுமிராண்டித் தனம் என்று விடுதலை நாளிதழ் பதிவு செய்தது.  குதிரைகளைப் பலியிட்டு நடத்தப்பட்ட அசுவமேத யாகத்தைப் போன்று நாடோடிப் பழங்குடி கலாச்சார பலியிடல் நிகழ்வுகளை பகுத்தறிவு கொள்கை கொண்டு பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று.

நமது சமூகத்தில் வாக்ரிகள் பேருந்து மற்றும் தொடர்வண்டிப் பயணங்கள் செய்ய முடியாத சூழல் உள்ளது.  இது மட்டுமல்ல திரையங்குளில் திரைப்படம் பார்க்க விடாமல் திருப்பியனுப்பப்பட்ட நிகழ்வுகள் கூட அடிக்கடி நடந்தேறுகின்றன.

      தொழில் நுணுக்கம் நிரம்பப் பெற்ற வாக்ரிகள் சுயதொழில் முனைவோராக அரசும் வங்கிகளும் கேட்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து கடன் பெறுவது இயலாத காரியமாக உள்ளது. வேட்டையாடுதல், நாட்டு வெடி மருந்து தயாரித்தல் இன்றைய நிலையில் சாத்தியமில்லை.  தேனெடுத்தல் போன்றவைகள் மூலம் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்க வாய்ப்பில்லை.

இடுமுடி, கோணி ஊசி, சீப்பு, ஸ்டிக்கர் பொட்டு, வளையல், குங்குமம் போன்ற பேன்ஸி பொருட்கள் விற்பனை இன்று முற்றிலும் பெரும் முதலீட்டுக் கடைகள் மூலம் வியாபாரம் செய்யப்படுகின்றன.  இவற்றைப் பேருந்து நிலையங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றில் விற்பனை செய்து பொருளீட்டுவது வாக்ரிகளுக்கு மிகச் சிரமமானதாகவே உள்ளது.  வேறு வகையான பணிகளைச் செய்ய இவர்களால் முடிவதில்லை. 

வாக்ரி குழந்தைகளின் கல்வி நிலை மிக மோசமாக உள்ளது.  வாக்ரி போலி மொழிக்கு  வரி வடிவம் இல்லாததாலும் இங்குள்ள தமிழ் வழிப் பள்ளிகளில் இரு மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் வாக்ரி குழந்தைகளோடு இணையாத கல்வி முறையும் பிற குழந்தைகளின் கேலி கிண்டல் சீண்டல்கள் இக்குழந்தைகளை அரசுப் பள்ளிகளை விட்டு அந்நியப்படுத்துகின்றன. 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டு ரோட்டில் உள்ள வாக்ரியார் காலனியில் நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளியை பார்வையிட்ட போது 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் அக்காலனியில் இருப்பது தெரிய வந்தது.  எப்போதோ கட்டப்பட்ட அக்காலனி வீடு மிகவும் சிதலமுற்றுள்ள நிலையில் அவற்றின் முன்புறம் ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை போடப்பட்ட பகுதிதான் வாக்ரிகளின் உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்படுகிறது.  இங்கிருந்து சில மீட்டர் தொலைவில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையம் கட்டிடம் மிளிர்கிறது. எனக்குத் தெரிந்த வகையில் வெறும் மூன்று மாணவர்களுக்காக இயங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தில் நிறைய இருக்கின்றன.  இவற்றில் தலைமையாசிரியர், மற்றுமொரு ஆசிரியர் என இரு பணியிடம் உண்டு.  இவர்களுக்குப் பயிற்சியளிக்க ஒன்றியந்தோறுமுள்ள ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் சுமார் 20 ஆசிரியப் பயிற்றுநர்களும் ஒரு மேற்பார்வையாளரும் பணி செய்கின்றனர்.   இவர்கள் மூலம் கணக்கெடுத்து அரசு சொல்லும் தகவல்: பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் இல்லை.

திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம், அதன் அருகிலுள்ள வாக்ரியார் காலனியில் சுமார் 100 குழந்தைகள் இருக்கிறார்கள்.  இவர்களில் ஒரு சில குழந்தைகள் மட்டும் பொதுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.  இங்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளியும்  இல்லை.  இங்குள்ள வாக்ரிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, நலவாரிய அட்டை எல்லாம் உண்டு.  ஆனால் இக்குழந்தைகளுக்கு கல்வி சுத்தமாக இல்லை.  இக்குழந்தைகள் தங்கள் தாய் தந்தையருடன் பேருந்து நிலையத்திலேயே சுற்றி வருகின்றனர்.  அனைவருக்கும் தொடக்கக் கல்வி தீவிரமாக அமலில் இருக்கும் தமிழகத்தில்  இப்பகுதியிலும் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் இல்லை என்பதே நமது அதிகார வர்க்கப் புள்ளி விவரம். 

வாக்ரிகள் எப்போதும் கூட்டமாக வாழும் இயல்புடையவர்கள்.  அவர்கள் வாழும் பகுதியில் கண்டிப்பாக 50 குழந்தைகள் இருக்கும்.  இவர்கள் பொதுப் பள்ளிக்குப் படிக்க வரமாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து இப்பகுதிகளில் வாக்ரிகளுக்க தனிப் பள்ளியை அரசு ஏன் நடத்தக் கூடாது?  இதற்கு மட்டும் தொண்டு நிறுவனங்களை கைகாட்டி விடும் அரசு ஒரு சில குழந்தைகளுக்காக பள்ளிகளை நடத்திக் கொண்டுதானே இருக்கிறது? அரசு - தனியார் கூட்டு என்று சொல்லி அரசு தன் கடமையிலிருந்து விலகிக் கொள்கிறது. 

விழுப்புரம் கோலியனூர் கூட்டு ரோட்டில் உள்ள Tribal Society-ம் தமிழ்நாடு பழங்குடி வாக்ரிவேல் தொழிலாளர் சங்கமும் தமிழகம் மற்றும் புதுவையில் வாக்ரிகள் மக்கள் தொகையை 2008-ல் கணக்கெடுத்தன.  அதன்படி தமிழகத்தின் 28 மாவட்டங்கள், 91 வட்டங்கள், 170 கிராமங்களில் பரவியுள்ள வாக்ரி குடும்பங்களின் எண்ணிக்கை 7649; ஆண்கள் 14737; பெண்கள் 13619; மொத்தம் 28356.  புதுச்சேரியிலுள்ள வாக்ரிகளின் எண்ணிக்கை 588 
( ஆண்கள் 289, பெண்கள் 299) 
தமிழகம்
பள்ளி செல்லும் குழந்தைகள் ( 1 - 15 )   1411 + 1124 = 2535
இடைநிற்றல் 611 + 458 =      1069
பள்ளிக்குச் செல்லாதவர்கள்                    2376 + 2248    = 4624
                            
புதுச்சேரி
பள்ளி செல்பவர்கள்    ( 1 - 15 )                 30 + 17 = 47
இடைநிற்றல் 2 + 2 = 4
பள்ளிச் செல்லாதோர்           72 + 60 = 132
 இதைத் துல்லியமான கணக்கீடு என்று சொல்ல முடியாவிட்டாலும் இன்று சுமார் 40000 வாக்ரி மக்கள் தமிழகத்தில் இருப்பதை ஒருவாறு அவதானிக்கலாம்.  இவர்களில் சுமார் 10000 ( 1 - 18 வயது) குழந்தைகள் கல்வி வாய்ப்பின்றி தமிழகத்தில் வளர்வது எவ்வளவு பெரிய கொடுமை?
இப்போதுள்ள சூழலில் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவைக் காரணம் காட்டி ஒரு பள்ளியை அவ்வளவு எளிதில் இழுத்து மூட முடியாது.  அப்போது அரசு பல்வேறு போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.  ஆனால் அமைப்பாகத் திரளாத வாக்ரிகள் இருப்பிடத்தில் தனிப் பள்ளிகள் தொடங்கவும் அவர்களில் கல்வி பற்றி பேசவும் நம் சமூகம் மறுக்கிறது.

வாக்ரிகள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை.  அதனால் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்வதில்லை.  இவர்கள் எந்த ஊரில் தங்கியிருக்கிறார்களோ அங்கு பிறந்த குழந்தைக்கு அவ்வூரின் பெயரை வைக்கும் பழக்கம் உண்டு.  தற்போது சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை விரும்பி வைக்கிறார்கள்.  குடி, ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என பணம்,  பொருள் எவற்றையும் சேமிக்காத வாழ்க்கை முறை இவர்களுடையது.  இந்த நாடோடித்தன்மையுடன் கூடவே பழங்குடி இனக் குழு பண்புகளை நிரம்பப் பெற்றவர்கள் வாக்ரிகள்.

குஜராத், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாக்ரிகள் அட்டவணைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஆனால் தமிழகத்தில் வாக்ரிகள் மிகப் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் உள்ளனர்.  இது எவ்வளவு பெரிய கொடுமை?  இது உள் ஒதுக்கீட்டுக் காலம்.  பிற்பட்டோரில் இஸ்லாமியருக்கும் தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  இதை அனைத்து தரப்பிற்கும் விரிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.  புதுச்சேரியில் மிகக் குறைவான எண்ணிக்கையிலுள்ள வாக்ரிகளுக்கு எவ்வித ஒதுக்கீடும் இல்லை.  

மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC) ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றிரண்டு சாதிப் பிரிவுகளைத் தவிர மருத்துவர் உள்ளிட்ட உண்மையில் மிகவும் பின்தங்கிய பிரிவினர் போட்டி போடுவதற்கு வாய்ப்பில்லை.  இந்நிலையில் இதுவரை கல்வி வேலை வாய்ப்புகளில் எவ்விதப் பங்கும் பெறாத வாக்ரிகளை இவர்களுடன் போட்டி போட வைப்பது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை.  வாக்ரிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசிற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.  வாக்ரிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய - மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்ரிகளின் வில் - அம்புகளைக் கொண்டு வேட்டையாடுந்திறன், துப்பாக்கிகளைக் கையாளும் லாவகம் போன்றவற்றில் கவரப்பட்ட ஆங்கிலேயர்கள் இவர்களைப் பயன்படுத்தி எதிரிப்படையைத் தாக்கியுள்ளனர்.  கரடு முரடான இடங்களில் கூட வேட்டைக்காக விலங்குகளோடு ஈடு கொடுத்து ஓடக் கூடிய திறமை, வனம் சார்ந்த இவர்களது அறிவுக் கூர்மை போன்றவற்றை நமது அரசுகள் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றன.  இவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வனத்துறை - ராணுவத்தில் பணி, விளையாட்டுத் துறையில் குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல், வில் வித்தைப் போட்டிகள் போன்றவற்றில் ஈடுபடுத்தி இவர்களது திறமைகளை பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பது வேதனையளிக்கக் கூடியது.

    எலிக்கிட்டி வைத்து எலிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்ரிகளுக்கு  வேளாண்துறை உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.  இவர்களது இந்தப் பணிகளுக்கு அரசு வேளாண்துறையின் மூலம் கடன், மானியம் போன்ற உதவிகள் வழங்க வேண்டும்.

சீப்பு, பாசி மணி, ஊசி, முள் வாங்கி போன்ற பல்வேறு கைவினைப் பொருட்களை வாக்ரிகள் உற்பத்தி செய்கின்றனர்.  இவற்றைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. அரசு கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இவர்களது தயாரிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து காட்சிப்படுத்த வேண்டும்.  அரசின் பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகத்தில் இவர்களது தயாரிப்புகள் வாங்கப்பட்டு சந்தைப்படுத்த வேண்டும்.
வாக்ரிகளின் மூலிகை மருத்துவம் மிகப் பிரசித்தம்.  நாடி பார்த்து நோய்களைக் கண்டறியும் இவர்கள், பல்வேறு மூலிகைப் பொடிகளைக் கொண்டு நாள்பட்ட பல நோய்களுக்க மருத்துவம் செய்கின்றனர்.  தமிழ் மருத்துவம் என்று பெருமை பேசுபவர்கள் வாக்ரிகளின் மூலிகை மருத்துவ அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாதது வியப்பளிக்கக் கூடியது அல்ல.  தமிழக அரசுகள் இரு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மூடு விழா நடத்தத் துடிக்கும் போது இந்த மருத்துவ முறையை மேம்படுத்த வாக்ரிகளின் மூலிகை அறிவைப் பயன்படுத்தக் கோருவதுகூட நகைப்பிற்குரியதுதான்.

இறுதியாக, மத்திய - மாநில அரசுகள் செய்ய வேண்டியன:

01. பழங்குடி கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட வாக்ரிகள் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்த்தல்.  இதன் மூலம் கல்வி - வேலை வாய்ப்பில் வாக்ரிகளுக்க உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புண்டாகும்.

02. ஒவ்வொரு வாக்ரி வாழும் பகுதியிலும் அரசே தனிப் பள்ளிகளை நடத்த வேண்டும்.  அதில் வாக்ரிகளின் தாய்மொழிக் கல்வியோடு அவர்களது வாழ்க்கையோடு இணைந்த கல்வி முறை இருக்க வேண்டும்.

03. பிற சமூக மக்கள் வாக்ரிகளை கேலி - கிண்டல் செய்வது தடுக்கப்பட்டு, பிற சமூகத்துடன் நல்லிணக்கம் ஏற்பட ஊடகங்கள், சினிமா, தொலைக்காட்சி போன்றவை உதவ வேண்டும்.  இவர்களைக் கேலி செய்யும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. வாக்ரிகளின் துப்பாக்கிச் சுடும் திறமைக்கேற்றவாறு ராணுவத்தில் பணியமர்த்த வேண்டும்.  வில்வித்தை, துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் விளையாட்டுத் துறை முன்னுரிமை வழங்கி தேசிய அளவிலும், காமன்வெல்த், ஏசியாட், ஒலிம்பிக் போன்றவற்றில் கலந்து கொள்ள வழி வகுக்க வேண்டும்.

05. வேட்டையாடுதல் மற்றும் வனம் சார்ந்த நுணுக்கங்கள் கைவரப்பெற்ற வாக்ரிகளை  வனத்துறைப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

06. இவர்களின் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் திறனை ஊக்குவித்து உரிய முறையில் பலனடைய வழி வகுக்க வேண்டும்.

07. இவர்களது மூலிகை அறிவை தமிழ்ச் சித்த மருத்துவத் துறையை மேம்படுத்தப் பயன்படுத்த வேண்டும்.

08. அரசு நேரடியாகவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் சுய தொழில் தொடங்க எவ்வித முன் நிபந்தனையுமின்றி கடனுதவி வழங்க வேண்டும். இவற்றில் பெரும்பங்கு மானியமாக வழங்க வேண்டும். 

09. கல்வி உதவித் தொகைகள், மேற்படிப்பிற்கான முழுச் செலவையும் அரசே ஏற்றல் வேண்டும்.  இல்லாவிட்டால் 100% மானியத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்க வேண்டும். 

10. இவர்களது கைவினைப் பொருட்கள் விற்பனையகங்களை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இலவசக் கடைகள் அமைத்துத் தர வேண்டும்.

11. வாக்ரிகள் தொழில் மற்றும் பணி நிமித்தம் குடியிருக்கும் இடங்களில் வீடுகள் கட்டித் தருவதோடு அப்பகுதிக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் இணைப்பு, மின் விளக்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

12. வாக்ரிகளுக்கு சமத்துவபுரக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.  வாக்ரிகள் என்பதற்கான இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

13. இவர்கள் வாழும் பகுதியில் பிரத்யேக மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும்.  அவை முழு நேரமும் இயங்க வழி செய்யப்படுதல் வேண்டும்.

14. குடியிருப்பு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.  அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இவர்களைச் சென்றடைய தனிக் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.  மாவட்ட அளவில் ஏற்படுத்தப்படும் இவ்வமைப்புகளுக்கு வாக்ரிகளுக்க உறுப்பான்மை வழங்க வேண்டும்.

15. கிப்ட் சிரோமணி, சீனிவாச வர்மா ஆகியோரின் முயற்சிகள் முழு வெற்றியடைய வாக்ரிபோலிக்கு வரி வடிவம் அமைக்க அவர்களுக்குரிய பாடத்திட்டங்கள் வகுக்க, அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உரிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் ஒரு சிறுபகுதி மட்டுமே.   விளிம்பு நிலையிலுள்ள வாக்ரி சமூகத்தின் தேவைகளை, அச்சமூகத்தின் பிரதிநிதிகள், மானுடவியல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் போன்றோரடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்து கண்டுணர வேண்டும்.  அதற்கேற்றவாறு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  இவர்களைப் போல விளிம்பு நிலை வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் அரவானிகள் போன்ற பல்வேறு விளிம்பு நிலை சமூகங்களுக்கும் இத்தகைய சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகள் சாத்தியப்பட வேண்டும்.

உதவியவை: 

01. நரிக்குறவர்கள் இனவரைவியல் - கரசூர் பத்மபாரதி - தமிழினி வெளியீடு 
( 2004 )
02. வாக்ரிகளின் வாழ்வியல் - ஆ. குழந்தை - பயணி வெளியீடு ( 2011 )
03. விழுப்புரம் கோலியனூர் கூட்டு ரோட்டில் வாக்ரிகள் உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியைகள்,வாக்ரிகள்,  குழந்தைகளுடன் நடத்தப்பட்ட உரையாடல்
04. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய வாக்ரிகள் காலனியில் வாக்ரி இன மக்களுடன் நடத்தப்பட்ட உரையாடல்.  இப்பகுதி வாக்ரி தலைவர்கள் திரு. டி. செல்வம், திரு. கே. நாகூரான் ஆகியோருடன் உரையாடி பெற்ற செய்திகள்
05. Vaagri boli - a multilingual Dictionary  Vaagri boli - Tamil - Hindi - Gujarati - English     G.Srinivasa Varma & A.Mubarak Ali
(Rs. 250 National Folklore support centre, Chennai - 34)
06.Vagri Material Culture (2009)
S.Bhakthavatsala Bharathi

ஓர் பின் குறிப்பு:
                அண்மையில் ஜெ.ஜெயலலிதா, மு.கருணாநிதி இருவரும் ஒரே நேரத்தில் வாக்ரிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்திருப்பதும் மத்திய அரசும் விரைவில் அதை செயல்படுத்தலாம் என்பதெல்லாம் நல்ல செய்திகள் இந்த சமயத்தில் அனைவருக்கும் நன்றி சொல்வோம். ஆனால் வாக்ரிகளின் முன்னேற்றத்திற்கு இது மட்டும் தீர்வாகாது. பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைககள் எடுக்கப்படவேண்டியது அவசியம். மிகவும் காலதாமதமான இப்பதிவிற்கு மன்னிக்கவும்.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இவர்களும் மனிதர்கள்தானே. இனியாவது நல்லது நடக்கட்டும்.

cjram சொன்னது…

MS a symbol of revolution and a soldier for to fought against the evil doings and to make it positive like a partiot. urs seejaeram

கருத்துரையிடுக