புதன், ஏப்ரல் 23, 2014

மக்களவைத் தேர்தல் 2014

மக்களவைத் தேர்தல் 2014     -மு.சிவகுருநாதன்

        மக்களவைத் தேர்தல் 2014 நாளை (24.04.2014) நடைபெறவிருக்கிறது. இந்திய - மற்றும் தமிழக அளவில் கணிக்கமுடியாத குழப்பமான சூழலே நிலவுகிறது. தொங்கு மக்களவை அமையாலாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்நிலையில் மோடியோ ராகுலோ பிரதமராக வாய்ப்பில்லை என்பதுதான் யதார்த்தம். 

         தமிழகத்தின் 39 தொகுதிகளைப் பொருத்தவரையில் திமுக அணி, அஇஅதிமுக ஆகிய இரண்டும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இடதுசாரிகள், ஆம் ஆத்மி போன்றவற்றின் வாக்குப் பிரிப்புகள் பாஜக அணிக்குச் சாதகமாக அமையப் போவதில்லை. மாறாக முதலிரண்டு அணிகளுக்குத்தான் சாதகமாக அமையப்போகிறது. பார்க்கலாம்.

        இவை குறித்த கொஞ்சம் விரிவான பதிவு பின்னர்...

செவ்வாய், ஏப்ரல் 22, 2014

போகாத ஊருக்கு வழி!

போகாத ஊருக்கு வழி!
                         -மு.சிவகுருநாதன்

    நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன்  ஏற்கனவே மூன்று தடவை இத்தொகுதியில் வெற்றிபெற்று 15 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மீண்டும் போட்டியிடும் இவர் வாக்காளர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். 10 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களில் பாதிப்பேருக்கு கடிதம் அனுப்பியதாக வைத்துக்கொண்டாலும் 5 லட்சம் பேருக்கு தலா ரூ 5 எனக்கொண்டால் ரூ 25 லட்சம் ஆகிறது. மக்களவைத்தொகுதி வேட்பாளரின் செலவு வரம்பு ரூ 70 லட்சம். தேர்தல் ஆணையம்தான் இவற்றைக் கவனிக்கவேண்டும்.
   
   இவர் தான் மீண்டும் வெற்றிபெற்றால் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக ரயில்பாதை அமைத்திட முயற்சி செய்வேன் என்று உறுதிமொழி அளித்துள்ளார். ஆனால் 15 ஆண்டுகள் நடந்தது என்ன? திருவாரூர் காரைக்குடி அகலப்பாதைப் பணிகள் இன்னும் பட்டுக்கோட்டை வரை தொடங்க நிதி ஒதுக்கப்படவில்லை. திருத்துறைப்பூண்டி கோடியக்கரை அகலப்பாதைப் பணிகள் கிட்ட்ததட்ட கைவிடப்பட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும். திரு. திமுக தலைவர் மு.கருணாநிதி பிறந்த திருக்குவளை வழியாக வேளாங்கண்ணி திருத்துறைப்பூண்டிக்கு புதிய பாதை போடப்போவதாக சொல்லி நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

   நாகப்பட்டினம் மைசூரு தேசிய நெடுஞ்சாலையின் (NH 67) நான்கு வழிப்பாதைப் பணிகள் தஞ்சாவூரைத் தாண்டவில்லை. இவ்வளவும் நாகை தொகுதிக்குட்பட்டதுதான் என்பது இவருக்கு நினைவுக்கு வரவில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

   ரயில்வே நிலைக்குழுத் தலைவராக இருந்த டி.ஆர். பாலு தஞ்சை தொகுதியில் போட்டியிடுவதற்காகவும் தனது வடசேரி சாராய மற்றும் கெமிக்கல் ஆலைகளை மேம்படுத்துவதற்காகவும் மன்னார்குடிக்கும் அதன் வழியே வடசேரி பட்டுக்கோட்டை காரைக்குடிக்கும் பாதையமைக்க மேற்கொண்ட முயற்சியை  திமுக தலைவர் மு.கருணாநிதியால் கூட தடுக்கமுடியவில்லை. திருக்குவளையை டி.ஆர். பாலுவிற்காக கைகழுவிட மு.கருணாநிதி தயாராக இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றும் மன்னார்குடிக்கு பெட்டிக்கு ஒன்றிருவரை மட்டும் ஏற்றிக்கொண்டு ரயில் செல்வதைப் பார்க்கும்போது யாரும் அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.

  கிழக்குக் கடற்கரை சாலை பற்றி பல்முறை எழுதியாகிவிட்டது. வேதாரண்யம் கடற்கரையை விட்டு 40 கி.மீ. தொலைவிலிருக்கும் திருத்துறைப்பூண்டி வழியாக செல்லும் சாலைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும். அது கடற்கரை சாலையாக இருக்கமுடியாது. இந்தச் சாலை வழியாக ரயில் விடுவதற்கு முன்பாக இருக்கின்ற பாதைகளை அகலமாக்க ஏதெனும் செய்யமுடியுமா என்று பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் வாக்காளர்கள் காதில் பூசுற்றுவதையும் மனச்சாட்சியோடு யோசிக்கவேண்டும்.

   கிழக்குக் கடற்கரை சாலை வேதாரண்யம் வழியாகவே இருக்கவேண்டும். இருப்புப்பாதையும் அவ்வழியாக அமைதல் கடலோரப் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது. கடற்கரை சாலையும் ரயிலும் கடற்கரை வழியாக செல்வது பற்றித்தான் யோசிக்கவேண்டுமே தவிர திருவாரூர் மாவட்டம் வழியாக செல்கிறதா என்று பார்க்கக்கூடாது.

  இச்சாலையில்தான் போகாத ரயில்பாதைக்கு திருத்துறைப்பூண்டியில் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டிப்பதை உலக அதிசயமாக வேண்டுமானால் அறிவிக்கலாம்.


   இது தொடர்பான எனது பழைய பதிவுகள் இதோ. 


ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

வாழ்வின் துயரச்சம்பவம் எனும் காற்று வீசிய நாள்...

வாழ்வின் துயரச்சம்பவம் எனும் காற்று வீசிய நாள்...
(காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்க்கு அஞ்சலி
                                    - மு.சிவகுருநாதன்

     லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் 1990 களில் தமிழ் சிறுபத்தரிக்கைகள் மொழிபெயர்ப்பில் பலர் தேடித்தேடி வாசித்தனர். தமிழ் இலக்கியப் பரப்பில் இவ்வெழுத்துக்கள் பெரும் தாக்கத்தை உண்டுபண்னியது. நான் தொண்ணூறுகளின் மத்தியில்தான் பள்ளிப்படிப்பை முடித்து இவற்றையெல்லாம் வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டது. இன்றுவரை அவரது படைப்புகளை மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளைத் தேடி வாசிப்பது தொடர்கிறது. இவரது எழுத்துமுறையால் உந்தப்பட்டு தமிழில் எழுதத் தொடங்கியவர்கள் ஏராளம்.

   கல்குதிரை 12 –வது இதழ் செப்டம்பர் 1995 இல் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் சிறப்பிதழாக மலர்ந்தது. அந்த  உயரிய படைப்பாளியான    காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் இன்று மரணமடைந்துவிட்டார்.  ஓர் படைப்பாளி உலகமெங்கும் வாசிக்கப்பட்டுவதும் நினைவு கூறப்படுவதும் உலகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படுவதும் சிறப்புமிக்கது.  காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்க்கு நமது கண்ணீர் அஞ்சலிகள்.


     (களங்கமற்ற எரிந்திரா குறுநாவலில் வரும் மேற்கண்ட வாசகந்தான் இந்த அஞ்சலிக்கு தலைப்பாகியது.)