திங்கள், செப்டம்பர் 14, 2015

கல்விக் குழப்பங்கள் - தொடர் (பகுதி 21 முதல் 25 முடிய)


  கல்விக் குழப்பங்கள் - தொடர்  (பகுதி 21 முதல் 25 முடிய)


                                                                                      - மு.சிவகுருநாதன்

21. களப்பிரர் காலம் இருண்ட காலமா?                                 
                                                
 
     கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார் போன்ற எந்த வரலாற்று அறிஞராகட்டும், தமிழறிஞராகட்டும் களப்பிரர் போல் இவ்வளவு வெறுப்பு உமிழப்பட்ட அரச வம்சம் இருக்க வாய்ப்பில்லை. இவர்களது மிதமிஞ்சிய சைவப்பற்று மற்றும் சோழப்பெருமை ஆய்வுக் கண்ணோட்டத்தையே சாகடித்தது வரலாற்றெழுதியலின் மாபெரும் அவலம். 

   இவர்களும் இவர்களைப் பின்பற்றி வரலாறு எழுதிய பலரும் களப்பிரர்களையும் அவ்வம்சத்து அரசர்களையும் இருண்ட குலம், இருண்ட காலம், இருள் படர்ந்த காலம், காட்டுமிராண்டிகள், கொள்ளைக்காரர்கள், கொடுங்கோலாட்சி செய்தவர்கள், நாகரீகத்தின் எதிரிகள், கலியரசர்கள், கொடிய அரசர்கள், நாடோடிகள், தமிழ் வாழ்வை – மொழியைச் சீரழித்தவர்கள், மக்களைக் கொன்று செல்வங்களைச் சூறையாடியவர்கள், தமிழ் மொழி – பண்பாட்டை அழித்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தனர். மாறாக ஜனநாயகத் தன்மையோடு களப்பிரர்கள் அரச பாரம்பரியமற்றவர்கள்; இவர்களால் மொழிக்கும் பண்பாட்டிற்கும் எவ்வித பங்களிப்பையும் செய்ய இயலாது என்ற பொய்மையை தோலுரித்தார்.

   இங்குள்ள சைவ, வைணவ ஆதரவு மற்றும் சமண, பவுத்த எதிர்ப்புப் பார்வைகளைக் கொண்ட வரலாற்றாசிரியர்கள் அனைவரும் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்றொரு கற்பனையை கட்டமைத்தனர். பின்னாளில் சங்கம் என்ற பவுத்த கோட்பாட்டை தமிழில் ஏற்றி சங்கம் மருவிய காலம் என்றனர். இதன் பின்னுள்ள அரசியல் வெளிப்படையானது. 

  மயிலை.சீனி.வேங்கடசாமியின் நூற்கள், அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதால் நிறைய பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலை விடியல் பதிப்பகம், கோவை அ.மார்க்ஸ் அவர்களின் நீண்ட ஆய்வுரையுடன் வெளியிட்டுள்ளது. 

      “களப்பிரரின் ‘இருண்டகாலம்’  இந்நூலினால் ‘விடியற்காலம்’ ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானல் களப்பிரர் வரலாற்றில் பகற்காலத்தைக் காணக்கூடும்.” என்று மயிலையார் முகவுரையில் குறிப்பிடுகிறார். 

    அ.மார்க்ஸ்,  மயிலையார் வந்தடைந்த முடிவுகளைத் தாண்டி பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ன் ஆய்வுகளையும் இணைத்து களப்பிரர் ஆய்வில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறார். (பார்க்க: களப்பிரர் ஆட்சியில் தமிழகம், வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை 614015)

   தனது ஆய்வுரையில் இறுதியாக அ.மார்க்ஸ் குறிப்பிடும் பின்வரும் கருத்துக்கள் களப்பிரர் தொடர்பான ஆய்வை மேலும் கூர்மையாக்கும். 

   “களப்பிரர் காலம் குறித்து மேலும் விளக்கங்கள் பெறவேண்டுமானால், அக்காலத்தில் எழுதப்பெற்ற பாலி மற்றும் பிராகிருத மொழியிலான நூற்களை விரிவாக ஆராயவேண்டும்.
 
  சங்க இலக்கியங்களை முற்றிலும் புதிய மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டும். அன்றைய சாகுபடி முறைகள், சீறூர் மன்னர்கள், இதர இனக்குழு மக்களின் வாழ்க்கைகள் முதலியன மறுபார்வைக்குள்ளாக்கப் படவேண்டும்.  

   சைவத்தையும் வைணவத்தையும் இயற்கையானதாகவும், உள்நாட்டினதாகவும் இவையல்லாத ஏனைய மரபுகளை, குறிப்பாக அவைதீக மரபுகளை அயல்நாட்டினதாகவும், எதிரியாகவும் கட்டமைக்கிர வரலாற்றுப் பார்வையிலிருந்து நாம் விடுபடவேண்டும்.

   தமிழகம் போன்ற வேறுபட்ட புவியியற் பகுதிகளை உள்ளட்டக்கிய ஒரு நாட்டினது பண்பாட்டின் பன்மைத் தன்மைகளைப் புறக்கணிக்கும் வன்முறைக்கு வரலாறெழுதியலில் இடமளிக்கலாகாது.

   அறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிற தலையாய பாடம் இதுவே.” (அ.மார்க்ஸ், மேற்குறித்த நூலில்.)

22. நவீன வேளாண் முறைகளால் தீமைகளே இல்லையா?                                 

         தமிழ்நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த முறைகள் மெதுவாகப் பாரம்பரிய விவசாய முறைகளை இடம்பெயரச் செய்துள்ளது.” (9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் – புவியியல்  முதல் பருவம்) என்று உண்மையைச் சொல்கிறார்களே என வியப்படையும் முன்பே அடுத்த வரிகளில் பாதாளத்தில் வீழ்கிறார்கள். அடுத்தவரி இதோ, “தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும், தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும் இவ்வகை முயற்சியில் நிலைத்த முன்னேற்றம் அடைய வழிவகுக்கின்றன.” 

     வேளாண்மை பற்றி பேசும்போதெல்லாம் இங்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் மெய்கீர்த்திகளும் புராணங்களும் மட்டுமே பாடப்படுகின்றன. பசுமைப் புரட்சி, உயிரி தொழில்நுட்பம், நவீன விவசாயம் ஆகியவற்றைப் பேசும் சமயங்களில் இவற்றின் நன்மைகள் மட்டும் பட்டிலிடப்படுகின்றன. இதனுடைய மறுபக்கத்தைப் பேச மறுக்கிறார்கள். ஆனால் சூரிய சக்தி, காற்று சக்தி, ஓத அலை சக்தி என மரபு சாரா, புதுப்பிக்கத்தக்க, மாற்று எரிசக்தி குறித்துச் சொல்லும்போது இல்லாத இடர்பாடுகள் பட்டிலிடப்படுவதையும் இங்கு ஒப்புநோக்க வேண்டும்.

   பசுமைப் புரட்சியின் அன்றைய காலத்தேவை, பயன்பாடுகளை ஏற்றுக்கொள்வதில் நமக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் இன்று அவற்றில் விளைவுகளையும் கணக்கில் கொள்ளவேண்டிய தேவை இருப்பதை மறுக்க முடியாது. எந்தக் கேள்விகள் இல்லாமல் நவீன வேளாண்மையின் புகழையும் எம்.எஸ்.சுவாமிநாதன் புகழையும் பாடுவது என்ன நியாயம்? இதன் மறுபுறத்தில் உண்மையான விஞ்ஞானிகள் புறக்கணிப்பிறகு உள்ளாக்கப்படுவதையும் நாம் அவதானிக்கலாம். 

   பசுமைப்புரட்சி என்ற பெயரில் நிகழ்ந்த கொடுமைகளை, பன்னாட்டு விதை, உரம், பூச்சிக்கொல்லி கம்பெனிகளின் வர்த்தக நலன்களை பலரும் பேசி வருகின்றனர். இன்றைய சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு இவை முதன்மைக்  காரணமாக இருப்பது  இன்று வெளிப்படையாகியுள்ளது. இவற்றை மாணவர்களிடம் மறைத்து இதன்மூலம் யாருக்கு சாதகம் செய்ய இவர்கள் முயல்கிறார்கள்? (மேலும் விரிவான வாசிப்பிற்கு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள சங்கீதா ஶ்ரீராம் எழுதிய பசுமைப்புரட்சியின் கதை நூலைப் பார்க்க.) 

  அப்துல்கலாமைப் போல அனைத்து தரப்பு அரசியல்வாதிகளால் பெரிதும் பாராட்டப்படுகிற எம்.எஸ். சுவாமிநாதனின் அறிவியல் கண்டுபிடுப்புப் புரட்டுக்களை எஸ்.என். நாகராஜன் தனது ‘கீழை மார்க்க்சியம் வரலாறு – அரசியல் – மெய்யியல்’ நூலில் அம்பலப்படுத்துவார். (வெளியீடு: காவ்யா, சென்னை.) கோதுமையில் வீரிய வித்து எப்படி மோசடியாக உருவாக்கப்பட்டது, அதனைக் கண்டுபிடித்த போர்லாக் உள்ளிட்டோரின் வாய் எவ்வாறு அடைக்கப்பட்டது, இதனால் அப்பாவிகள் தற்கொலைகள், அமெரிக்க உரக்கம்பெனிகளின் செயல்பாடுகள் போன்றவை இதில் விளக்கப்படுகின்றன. 
 
  உயிரி தொழில்நுட்பத்தின் (Bio Technology) நன்மைகளாக பாடநூலில் கீழ்க்கண்டவை பட்டிலிடப்படுகின்றன. (10 ஆம் வகுப்பு புவியியல்)


  • உயிரி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பாக வைக்க உதவும்.
  • விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவைக் குறைக்கமுடியும்.
  • பயிர்களுக்கு நீர் தேவையைக் குறைக்கமுடியும்.
  • இதைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களுக்கு பூச்சிகளினால் ஏற்படும் நோய்களையும் தடுக்கமுடியும்.
  • பயிர் உற்பத்தி அளவை அதிகரிக்க முடியும்.
  • விவசாயிகள் அதிக வருமானத்தை இத்தொழில்நுட்பத்தின் மூலம் பெறமுடியும்.


   இத்தகைய நன்மைகள் எப்படி வருகின்றன என விளக்கவேண்டுமல்லவா? இதில் தீமைகளே இல்லை என்று கூறமுடியுமா? இருந்தால் அதை மாணவர்களுக்குத் தெரிவிப்பதில் என்ன சிக்கல்? மரபு சாரா மின்னுற்பத்திக்கு மட்டும் கணக்கிலடங்காத இடர்பாடுகள் தோன்றுவதெப்படி?

  வீரிய விதைகள் (!?), பூச்சிக்கொல்லிகள், வேதியுரங்கள், மரபணு மாற்றம், திசு வளர்ப்பு, மரபுப் பொறியியல் போன்ற எந்த உயிர்தொழில்நுட்பங்களினால் உண்டாகும் பின்விளைவுகள் கண்டுகொள்ளாமல் விடப்படுவதன் பின்னணியை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். 

  வீரிய விதைகள் என்று சொல்லப்படும் மலட்டு விதைகளை நமது பாரம்பரிய அறிவுசார் சொத்துரிமைப்படி மறு உற்பத்தி செய்யமுடியாது. 

    பாரம்பரிய ரகங்களைவிட இவற்றில் பூச்சுத்தாக்குதல் அதிகமிருக்கும். இதற்கு அவர்களே தயாராக பூச்சிக்கொல்லிகளை வைத்திருப்பார்கள். அவற்றைத்தான் பயன்படுத்தவேண்டும். மாண் சான்ட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை இதுதான். 
 
  பி.டி.கத்தரி, பி.டி.பருத்தி போன்று மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் மனிதர்களுக்கு உண்டாகும் பரபணுக்குறைபாடுகள், நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியன பற்றி எப்போது நாம் வாய்திறக்கப் போகிறோம்?

  சூரியகாந்தி, தக்காளி, கத்தரி, சோளம், கடுகு போன்ற உணவுப்பயிர்களில் செய்யப்படும் மரபணுமாற்றத் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமானவை. 

  இதன் விளைவுகளின் பட்டியல் நீண்டிருக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், செலவு குறைவு, நீர் குறைவு, உற்பத்தி அதிகம், வருமானம் அதிகம் என பொய்களையும் கற்பனைகளையும் மட்டும் அடுக்கிக் கொண்டே செல்வதன் நோக்கம் சந்தேகத்திற்குரியது. 

   காற்றாலை மின்னுற்பத்தி செய்ய அதிக செலவாகிறது, காடுகள் அழிக்கப்படுகிறது என்றெல்லாம் அழுது புலம்பியவர்கள் அணு மின்சக்திக்கு ஆகும் செலவைப் பற்றி வாய் திறப்பதில்லை என்பதையும் இங்கு நீங்கள் கவனிக்கவேண்டும்.

   சமூக அறிவியல் பாடத்தில் இது போதும். அறிவியல் பாடங்களில் இது குறித்து விளக்கமாக பேசப்படும் என்று கூட நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 

  8 ஆம் வகுப்பு அறிவியல் (முதல் பருவம்) பாடநூலில் வேளாண் தொழிலில்  உயிர்த் தொழில்நுட்பம், மரபுப்பொறியியல், மரபணு மாற்றம் ஆகியனவற்றை விரிவாக சொன்னபிறகு இறுதியாக ‘மரபுப்பொறியியலின் நெறிமுறைகள்’ என்கிற தலைப்பில் உள்ளவற்றை அப்படியே கீழே தருகிறேன்.

“எண்ணற்ற நன்மைகள், பெறப்பட்டாலும் சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ற மரபணுத் தொழில்நுட்பங்களுக்குக் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் காணும்போது, எதிர்பாரா வகையில் உயிர்க்கொல்லி நோய்கள் அல்லது மரபணு ராட்சத தன்மைக்கு காரணமான சில புதிய விஷக்கிருமிகள் உருவாகக்கூடும்.” 

   இது என்ன மரபுப்பொறியியலின் நெறிமுறைகள்? தீமைகள், விளைவுகள், இடர்பாடுகள் என்று சொல்வதில் என்ன சிக்கல்? ‘சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ற மரபணுத் தொழில்நுட்பத்தில்’ என்று பீடிகை போடும் இவர்களால் எப்படி குற்றம், குறைகளைக் காணமுடியும்? இங்கு அறிவியல் கூட அறிவை மழுக்கடித்து அதிகாரவர்க்கங்களுக்கு ஏற்றமாதிரி தகவமைக்கப் பட்டிருப்பதைப் பாருங்கள்.


23. இந்தி - இந்தியாவின் ஆட்சிமொழியா அலுவல் மொழியா?                                 

    பழைய பாடநூற்களில் இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்றே தொடர்ந்து சொல்லி வந்தார்கள். அதை யாரும் கேள்விக்குட்படுத்தவே இல்லை. தற்போது இந்தியை அலுவல் மொழி என்று குறிப்பிடுகிறார்கள். வரலாற்றில் ஆரியர் வருகை, முகலாயர் படையெடுப்பு என்ற வெறுப்பு அரசியல் முகலாயர் வருகை என மாற்றம் பெற்றதைப் போல  வரவேற்கத்தக்க மாற்றமே. இருப்பினும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. அலுவல் மொழி என்று சொல்லிவிட்டாலும்  எங்காவது ஓரிடத்தில் ஆட்சிமொழி என்று சொல்லாவிட்டால் இவர்களுக்கு தூக்கம் வராது போலும்! 

    எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் குடிமையியல் பகுதியில் தேசிய ஒருமைப்பாடு என்கிற பாடம் இருக்கிறது. அதில் “தேவநாகரி வடிவிலான இந்தி எழுத்து இந்தியாவின் அலுவல் மொழியாக உள்ளது” என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் பயிற்சி வினாக்களில் “இந்தியாவின் தேசிய மொழி ------------ ஆகும்.” எனக்கேட்டு ஆங்கிலம், தமிழ், இந்தி என்று பல்விடை சொல்லி இந்தியை தேசிய மொழியாக்கும் வேலை நடந்தேறுகிறது. இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்ற ஆண்டு அறிக்கை ஒன்று வெளியீட்டு திருத்தச் சொன்னார். ஆனால் வழக்கம்போல எதுவும் நடக்கவில்லை. (இம்மாதிரி விடயங்களுக்காவது அரசியல்வாதிகள் பாடநூல்களை கவனிப்பது வியப்பூட்டுவது.)

  எட்டாம் வகுப்பைப் போன்று பத்தாம் வகுப்புப் பாடநூலிலும் இந்தி அலுவல் மொழி, ஆங்கிலம் இணைப்பு மொழி என்றும் சொல்லப்படுவதை வரவேற்போம். ஆனால் பயிற்சி வினாவில் உள்ள தவறு சரி செய்யப்பட வேண்டும்.

   இதில் ஏன் குழப்பம்? இந்திய அரசியல் சாசனமோ அல்லது வேறு எந்தச் சட்டமோ இந்தியை ஆட்சி மொழியாக வரையறுக்கவில்லை. இந்தி அலுவல் மொழியாகவும் ஆங்கிலம் துணை அலுவல் மொழியாகவுந்தான் சொல்லப்படுகிறது. 

  நாடு குடியரசானதிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலப் பயன்பாட்டை முற்றிலும் விலக்கிவிட்டு இந்தி போன்ற வெறொரு மொழியை ஆட்சிமொழியாக நாடாளுமன்ற ஒப்புதலின் பேரில் சட்டம் இயற்றலாம் என்பதே அரசியல் சாசனத்தின் விருப்பம். 

   ஆனால் இந்தியை தேசியமொழியாக்க தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் எதிர்த்ததால் இம்முயற்சி 1967 இல் கைவிடப்பட்டு ஆங்கிலம் தொடரலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றம் அலுவல்மொழிகள் சட்டம் 1963, அலுவல் மொழிகள் விதிகள் 1976 ஆகியவற்றின் கீழ் இவற்றைத் தெளிவுபடுத்தியது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த பிறகு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழியும் முக்கியத்துவம் பெற்றது.

  இதைப்போலவே நீதிமன்றங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாக உள்ளது. இதை அந்தந்த வட்டார மொழிகளில் நடைபெறவேண்டும் என்ற கோரிக்கையும் நெடுங்காலமாக இருந்து வருகிறதுனிந்தியை திணிக்க தயாராக இருக்கும் மைய அரசு இதர மொழிகளை ஏற்கக் கூட தயாராக இல்லை. 

  மாநிலங்கள் தங்களுக்கான அலுவல் மொழிகளை தனது சட்டமன்றம் மூலம் நிறைவேற்றிக்கொள்ள அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமுல் இல்லை. மிசோரமில் மிசோ (Mizo), திரிபுராவில் கோக் பராக் (Kok Barak), மேகலாயாவில் காசி (Khasi), காரோ (Garo), சைந்தியா (Jaintia), புதுச்சேரியில் பிரஞ்ச் (French) என எட்டாவது பட்டியலில் இல்லாத மொழிகள் கூட மாநில அலுவல் மொழியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எட்டாவது அட்டவணையில் சேர்க்க மிசோ, போஜ்புரி, சம்பல்புரி, நாக்புரி, குஜ்ஜாரி, சட்டீஸ்கரி, ஹோ, மகதி, காசி, துளு, பாலி, ராஜஸ்தானி, கோசலி, கொடவா (கூர்க்), பந்தல்கண்டி போன்ற  38 இதர மொழிகள் சார்பாக கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. 

  இந்த 8 வது பட்டியல் எப்போது உருவாக்கப்பட்டது?  நமது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது அதில் கீழ்க்கண்ட 14 மொழிகள் இந்த அட்டவணையில் இருந்தன. 


  • அஸ்ஸாமி
  • பெங்காலி
  • குஜராத்தி
  • இந்தி
  • கன்னடம்
  • காஷ்மீரி
  • மலையாளம்
  • மராத்தி
  • ஒடியா
  • பஞ்சாபி
  • சமஸ்கிருதம்
  • தமிழ்
  • தெலுங்கு
  • உருது


   பின்னர் 1967 இல் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது. கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி ஆகியன 1992 இல் இணைக்கப்பட்டன. 2003 இல் செய்யப்பட்ட 92 வது சட்டத்திருத்தத்தின் மூலம் போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு 22 மொழிகள் கொண்ட பட்டியல் உருவானது.

   முதல்கட்டமாக 22 மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவித்து அனைத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதே தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்கான முதற்படியாக இருக்கமுடியும். ஆனால் இங்கு நடப்பது என்ன? 

   ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பான்மையை இதுவரை வலியுறுத்தி வந்த இந்தியா யோகாவிற்கான அங்கீகாரத்தை அடுத்து ஐ.நா. வின் ஆறாவது அலுவல் மொழியாக இந்தியை ஆக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே ஐ.நா.வின் அலுவல் மொழிகளாக அராபிக், சைனீஷ், ஆங்கிலம், பிரஞ்ச், ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகியன இருப்பது குறிப்பிடத்தக்கது. 

   இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றைத் தவிர வேறு மொழிகளைப் புறக்கணிக்கும் இந்திய அரசு இங்கு இந்தியை முதன்மைப்படுத்த முடியாமல் தோல்வியடைந்து ஐ.நா.சபையைப் பயன்படுத்தியாவது இந்தி திணிப்பை நடத்தப் பார்க்கிறது. பாருங்கள் ஐ.நா. சபையில் இந்தி அலுவல் மொழியாகிவிட்டது என்று சொல்லி இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி விடலாம் என்று பகற்கனவு காணுகிறது. 

  தமிழ்ப்பெருமை, இனப்பெருமை, குலப்பெருமை கூடவே சாதிப்பெருமை ஆகியவற்றை மட்டுமே பேசிவரும் இன்றைய திராவிட இயக்கம் தயாரிக்கும் பாடநூற்களில் மொழி பற்றிய தெளிவு இல்லாததை என்னவென்பது?

  இந்திப்பெருமை பேசுபவர்களுக்காக ஓர் தகவல். இமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே இந்தி ஒன்றே அலுவல் மொழி. உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்தர்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்தியுடன் சேர்த்து முறையே உருது, ராஜஸ்தானி, சந்தாலி, உருது - ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம், பஞ்சாபி ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா என்றால் இந்து-இந்தி என்று ஏகத்துவ பாசிசச் சொல்லாடல்கள் இங்கு சாத்தியமில்லை என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்.

24. மரபு சாரா எரிசக்தியும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும்.                                 

    பல்லாண்டுகளாக நாம் பயன்படுத்திவரும் அனல் மின்சக்தி, புனல் (நீர்) மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியவற்றை மரபு சார் மின்சக்தி (Traditional  energy) எனச் சொல்கிறோம். மற்றொரு வகையில் இவற்றைப் புதுப்பிக்க இயலாத சக்திவளங்கள் (non – renewable energy sources) என்றும் வரையறை செய்கிறோம். கனிம வளங்கள், நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை வற்றும் / தீர்ந்துபோகும் வளங்களுக்கு  உதாரணங்களாகும்.

  இவற்றிற்கு மாற்றாக சூரியன், காற்று, கடல் அலைகள், ஓத அலைகள், புவி வெப்பம், உயிர் எரிபொருள், கரும்புச்சக்கை, குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சக்தி புதுப்பிக்கக்கூடிய சக்திவளங்கள் (renewable energy sources) அல்லது பசுமை எரிசக்தி அல்லது மரபு சாரா எரிசக்தி என்றெல்லாம் வரையறுக்கப்படுகிறது. 

   ஆனால் நீர்மின் சக்தி புதுப்பிக்கக் கூடிய சக்தி வளந்தானே! இதை எப்படி  புதுப்பிக்க இயலாத சக்திவளம் என்று சொல்லமுடியுமா? நிலத்தடி நீரை வேண்டுமானால் குறைந்து வருவதால் தீர்ந்து போகும் அல்லது வற்றிப்போகும் வளம் என்று சொல்லலாம். ஆறுகளில் வரும் மழை நீரை அணைகளில் தேக்கி நீர் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதை புதுப்பிக்கக் கூடிய மின்சக்தி என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கமுடியும்.

  ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் புவியியல் பகுதியில் புதுப்பிக்க இயலும் வளங்களாக கீழ்க்கண்டவைப் பட்டியலிடப்படுகின்றன. 


  • சூரியனிலிருந்து பெறப்படும் வெப்பம், எரிசக்தி.
  • காற்றின் சக்தி.
  • நீர் ஆதாரங்களான ஏரிகள், ஆறுகள், கடல்கள்.
  • புவியோட்டில் உண்டாகும் மண்.

     ஆனால் பாட இறுதியில் பயிற்சி வினாக்களில் “மண் ஓர் புதுப்பிக்க இயலாத வளம் ஆகும் – விளக்குக.” எனக் கேள்வி கேட்கப்படுகிறது. கனிமங்கள், நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவற்றுக்குப் பதிலாக மண் என்று தவறுதலாக இங்கு சொல்லப்படுவதாகக் கருதவேண்டியுள்ளது.

  ஒரு செமீ மண் உற்பத்தியாவதற்கு 100 ஆண்டுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பில் சொல்லப்படுகிறது. இதில் ஒரு ச.செ.மீ. என்று சொல்வதுதான் பொருத்தமானது. 

  இயற்கை வளம், சுற்றுச்சூழல் என வரும்போது நாம் சில மரபார்ந்த கருத்துகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவையிருக்கிறது. 

   நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியன உருவாவதற்கு பல மில்லியன் ஆண்டுகள் ஆகும்; மண் உருவாவதற்கு சில ஆயிரமாண்டுகள் ஆகலாம். மண்ணில் உள்ள கனிமங்களுக்காக இவை கொள்ளை போகலாம். எனவே இவற்றைத் தீர்ந்து போகாது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியுமா?

  நதிநீர் இணைப்பு, கடலில் கலந்து வீணாகும் நீர் என்பது போன்ற கருத்துகள் மறுபரிசீலனை செய்யப்படவேண்டியது மிக இன்றியமையாதது. 

   ஆறுகளின் போக்கை மாற்றுவதன் மூலம் ஏற்படும் பல்வேறு சுழலியல் பாதிப்புக்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். நமது நிலவியல் அமைப்பு வடக்கையும் தெற்கையும் இணைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகிறது. வெறும் முழக்கம் மற்றும் அரசியல் / சுய  லாபங்களுக்காக இந்தக் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இவர்களது புவியியல் அறிவு குறித்து நாம் ஐயுறவேண்டியுள்ளது. 

  மழைநீர் மற்றும் ஆறுகளில் ஓடிவரும் நீரை உச்சபட்ச அளவிற்கு பயன்படுத்த தடுப்பணைகள் கட்டுவது, நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க நீர்நிலைகளில் தண்ணீரைத் தேக்குதல் போன்றவற்றை வலியுறுத்தலாமே தவிர பயன்படுத்தாமல் கடலில் கலக்கும் நீர் வீணாவதாக சொல்வது அபத்தம். இன்றைய சூழலியல் புரிதல் இன்னும் விரிவடைய வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது.

25. சமஸ்கிருதம் மட்டுந்தான் வடமொழியா?                                 


       வடமொழிகள் யாவை? எனக்கேட்டால் வடமொழி எது? என்றுதானே கேட்கவேண்டும், ஒரு மொழியை எப்படி பன்மையில் வினவலாம் என்கின்றனர். சமஸ்கிருதத்தை மட்டுமே வடமொழி என்று சொல்லிவிட முடியுமா என்ன? ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது. இதில் பாடநூற்கள், தமிழறிஞர்கள் விலக்கல்ல.

“வடசொற்  கிளவி  வடவெழுத்  தொரீஇ
எழுத்தொடு  புணர்ந்த  சொல்லா  கும்மே” 

    என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியோர் வடசொல்லை சமஸ்கிருதம் என்கிற ஒற்றை மொழியாக கட்டமைத்துள்ளனர். இதையே அனைவரும் வழிமொழிகின்றனர். 

   வேத மொழி, ஆரிய மொழி என்றல்லாம் சொல்லப்படும்   சமஸ்கிருதம் என்றும் மக்கள் மொழியாக இருந்ததில்லை. அன்று மக்கள் மொழியாக வழக்கில் இருந்ததும் சமண, பவுத்த மொழியாக இருந்ததும் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளாகும். இதை தெ.ப.மீனாட்சிசுந்தரனார் போன்ற ஒருசில தமிழறிஞர்கள் மட்டுமே வலியுறுத்துகின்றனர். 

    சமகாலத்தில் வழங்கிவந்த பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய பலவற்றில் ஒன்றை மட்டும் முன்னிருத்தும் அரசியல் பின்னணி மிக எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. திராவிடம் - ஆரியம்,  தமிழ் -  சமஸ்கிருதம், வேத மதம் – சைவ மதம் என்பதாக மிக எளிமையான முரண் எதிர்வுகள் இங்கு கற்பிதங்களாக உருவாக்கப்படுகின்றன. 

  வடமொழி ஒன்றாக இருக்கவேண்டிய கட்டாயம் என்ன? தமிழுக்கும் ஏனைய திராவிட மொழிக்குடும்பத்திற்கும் தொடர்பில்லாத மொழிகள் அதாவது வடக்கிலிருந்து வந்த மொழிகளை வடமொழிகள் என்று வரையறுக்கலாம். இதில் சமஸ்கிருதத்தை மட்டும் குறிப்பிடுவது அறியாமையாகும். 

   உருது, பார்சி, அரபு சொற்களும் ஒரு காலகட்டத்தில் இங்கு நுழைகின்றன. பிற்காலத்தில் ஸ்போர்ச்சுகீஸ், டச்சு, பிரஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தமிழ் உள்ளிட்ட அனைத்து திராவிட, இந்திய மொழியிலும் கலக்கின்றன. 

  இந்த மொழிகளைத் தமிழில் ஒலிபெயர்த்து எழுதுவதற்கு ஏதுவாக பிராமி, கிரந்தம் போன்ற எழுத்துமுறைகள் இங்கு நிலவி வந்துள்ளது. பிராமி பழங்காலத்தைச் சேர்ந்தது; கிரந்தம் பிற்காலத்தைச் சேர்ந்தது. அசோகர் காலத்தில் பிராமி எழுத்துமுறையும் பல்லவர்கள் கலத்தில் கிரந்தமும் நடைமுறையில் இருந்தன. இவற்றில் தமிழுக்குரித்தான தமிழ் பிராமி, தமிழ் கிரந்தம் போன்றவையும் இருந்திருக்கின்றன. 

   பிராமி, கிரந்தம் ஆகிய எழுத்துக்கள் சமஸ்கிருத ஒலியன்களை எழுதுவதற்காகவே ஏற்பட்டது என்ற தவறான புரிதலும் உள்ளது. பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அனைத்துமே வடமொழிகள் என்கிற புரிதலின்றி ஒற்றை மையச் சொல்லாடலுக்குள் இதனையும் இணைத்துக்கொண்டுள்ளனர். 

  பிராமி இந்தியாவின் பழங்கால எழுத்துமுறை. பாலி, பிராகிருதம் போன்ற பழங்கால மக்கள் மொழிக் கல்வெட்டுக்களில் நாம் இவற்றைக் காணலாம். சமஸ்கிருதம் பிற்காலத்தில் பிராமியில் எழுதப்பட்டதால் சில சமஸ்கிருத ஒலியன்களுக்கு பிராமியில் எழுத்துவடிவங்கள் இல்லை. வட்டெழுத்து, கிரந்தம் ஆகியன பிராமி வரி வடிவங்களிலிருந்து தோன்றியவையே. 

  கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திதான் இன்று நாம் சூட்டும் தமிழ்ப் பெயர்களை எழுதமுடியும். நம்மவர்களுக்கு வெற்று தமிழ் முழக்கங்கள் மட்டும் போதும்.  இவற்றை சமஸ்கிருதத்துடன் மட்டும் இணைப்பதால் இதை நச்செழுத்து என்று தனித்தமிழ் விரும்பிகள் சாடுகின்றனர். இவ்வாறு சொல்வது கூட ஒருவகையில் சமஸ்கிருத மேலாண்மையை ஏற்றுக்கொள்வதைப் போன்றதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக