மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்க இயலாமல் ‘அறிவு நிரம்பி வழியும்’ பெருங்கூட்டத்தில் இப்படியும் சில ஆசிரியர்கள்!
- மு.சிவகுருநாதன்
சுட்டி விகடனுக்கு அடுத்தபடியாக ‘புதிய தலைமுறை கல்வி’ 05, அக்டோபர், 2015 இதழில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தோழர் செ.மணிமாறன் அவர்களின் செயல்பாடுகள் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தோழர் செ.மணிமாறன் அவர்களின் இதர செயல்பாட்டுடன் ‘கருத்து சுதந்தரப் பெட்டி’ என்ற நடைமுறை இங்கு பாராட்டப்படுகிறது. மாணவர்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பெற்று அதன்மூலம் பள்ளியின் அன்றாடச் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டால் கற்றலின் இனிமை உண்டாகும். நாமும் இவரது தொடர்பணிகளைப் பாராட்டுவோம்.
பள்ளி ஆசிரியர்கள் குறித்து பொதுமக்கள் வைக்கின்ற குற்றச்சாட்டுகளில் குழந்தைகளோடு பழகிப் பழகி இவர்கள் சிறுபிள்ளைகள் போலவே செயல்படுவார்கள் என்பதும் ஒன்று. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதைக் குற்றச்சாட்டாக அன்றி பாராட்டாகவே எடுத்துக்கொள்ள நான் விரும்புகிறேன்.
தாய்மையைப்போல குழந்தைமையும் ஓர் சிறந்த பண்பல்லவா? இதில் என்ன குற்றம், குறை இருக்கமுடியும்? மீண்டும் குழந்தையாகும் ஏக்கம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியப்படாது. ஒருவகையில் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தையாக மாறவும் குழந்தைமையைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு அது.
நம்மில் எத்தனைபேர் அவ்வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோம்? நல்லமுத்து, மணிமாறன் போன்ற சிலர் மட்டுமே இத்தகைய சுகத்தை அடையும் பேறு பெற்றவர்கள். குழந்தைகளாகவே இருங்கள் என இவர்களை வாழ்த்துவோம்.
பெரும்பாலான ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்? இன்றைய வங்கி முறைக் கல்வியின் தூணாக இருக்கிறார்கள். தேர்வுகள், மதிப்பெண்கள் என மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். பாடநூலுக்கு ‘நோட்ஸ்’ போடும் வேலையைச் செய்பவர்கள். ஏன்? எதற்கு? எப்படி? என மாணவர்களை வினாக்கள் கேட்கவைக்க விரும்பாதவர்கள்.
இவைகள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் உள்ள ‘அறிவு நிரம்பி வழியும் தன்மை’ மிகக் கொடூரமானது என்று கருதுகிறேன். எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., பி.எட்., எம்.எட்., எம்.ஃபில்., பி.எச்டி. என்று பல்வேறு பட்டங்கள் பெற்ற காரணத்தாலே தங்களுக்கு அறிவு நிரம்பி வழிவதாக கனவு காணும் இவர்கள் புதிய, மாற்றுச் சிந்தனைகள் எதையும் உள்வாங்க மறுப்பவர்கள். மாணவர்களையும் சிந்திக்கவிடாமல் மழுங்கடிப்பவர்கள்.
இவர்கள் ஒப்பீட்டளவில் அரசுப்பள்ளிகளைவிட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளில் மிக அதிகளவில் காணப்படுகின்றனர். அறிவு, தேர்வு, மதிப்பெண் சார்ந்த இந்நோய் தற்போது அரசுப்பள்ளிகளையும் தொற்றியுள்ளது. அரசுப்பள்ளிகளில் இதைத் தடுப்பது உடனடித் தேவை.
பள்ளி ஆசிரியர்களிடம் காணப்படும் இத்தகைய அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது மிக அவசர அவசியமானதாகும். நமது நாட்டில் மதச்சார்பின்மை, பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, அறிவியல் மனப்பான்மை, மக்களாட்சி, சமூக நல்லிணக்கம் போன்ற பல்வேறு கூறுகள் தழைத்தோங்க கல்விமுறை ஆதாரமல்லவா? எனவே இதற்கு இம்முயற்சிகள் துணைநிற்கும் என்பது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக