சனி, ஏப்ரல் 08, 2017

யாருக்கு நன்றி சொல்வது?



யாருக்கு நன்றி சொல்வது? 

  மு.சிவகுருநாதன்




    திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம் அமைந்துள்ள தண்டலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் “டாஸ்மாக் இல்லாத தண்டலை ஊராட்சியாக மாற்றிக்கொடுத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் டாஸ்மாக் மேலாளர் அவர்களுக்கும் நன்றி… நன்றி… நன்றி…”, என சுவரொட்டிகள் ஒட்டப்படுள்ளன. தண்டலை ஊராட்சி கிராமவாசிகள் மற்றும் அனைத்து மகளிர் குழு, சேவை சங்கங்கள் என்கிற போர்வையில் இவர்கள் தங்களுக்கு தாங்களே இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்! 

   இது மிகவும் அபத்தமானது மட்டுமல்ல; இழிவாகவும் உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதில் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோரின் பங்கு என்ன? இவர்கள் நன்றிக்கு உரியவர்களா? இவ்வாறு சுவரொட்டி ஒட்டியவர்கள் மீதும் செய்யத் தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இவர்கள் இருவரும் இது குறித்து விளக்கமளிக்கவேன்டும். 

    உண்மையில் நன்றிக்குரியவர்கள் யார்? மதுக்கடைகள் மூட தொடர்ந்து போராடும் இடதுசாரிகள், தலித் அமைப்புகள், பா.ம.க. போன்ற கட்சிகள், பொதுமக்கள், மதுவிலக்குப் பரப்புரையை தீவிர இயக்கமாக முன்னெடுத்த மக்கள் அதிகாரம் (ம.க.இ.க) போன்ற அமைப்பினர், ராஜூ, பாலு போன்ற பல வழக்கறிஞர்கள், போராடி மரணமடைந்த சசிபெருமாள், குமரி அனந்தன், நந்தினி போன்றோர் இதனால் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்ட பாடகர் கோவன், பள்ளிக் குழந்தைகள் என பலருக்கு நன்றி சொல்ல இந்த சமூகம் கடமைப்பட்டுள்ளது. 

   மேலும் இதற்காக நீதிப்போராட்டம் நடத்திய ஹர்மான் சித்து (சண்டிகர்), ஆந்திரப் பிரதேச சாலைப் பாதுகாப்பு மன்றத் தலைவராக இருந்த பி.புல்லாராவ், தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற  நீதிபதிகள் கேஹர், சந்திரசூட், நாகேஸ்வரராவ், வழக்காடிய வழக்கறிஞர்கள் (நெடுஞ்சாலை கடைகளுக்கு ஆதரவாக பெரும் பணமுதலை வழக்கறிஞர்கள் வாதாடினர்.) ஆகிய பலருக்கு நன்றி சொல்லவேண்டும். (இந்தப்பட்டியல் முழுமையானதல்ல; இதில் பங்கேற்றவர்கள் எண்ணற்றோர்.) 

  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,672 டாஸ்மாக் மதுக்கடைகளில் 3,316 கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சாதனைகளுக்கு யாருக்கு நன்றி சொல்வது? இந்த கடைகளை வேறு எங்காவது திறந்திட தீவிர முனைப்பு காட்டும் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் போன்ற அதிகார வர்க்கத்திற்கு நன்றி சொல்வதைவிட இழிவு வேறு இருக்க முடியுமா? இத்தகைய திசை திருப்பு உத்திகள் முறியடிக்கப்படவேண்டும். 

   நீதிமன்ற உத்தரவை வேறு வழியின்றி செயல்படுத்திய அரசு அலுவலர்களுக்கு இந்த நன்றிகள் எப்படி பொருந்தும்? இவர்கள் ஊதியம் வாங்காமல் சேவை செய்கிறார்களா? மாநில நெடுஞ்சாலைகளை மாவட்டச் சாலைகளாக மாற்றி மீண்டும் அங்கு மதுக்கடைகளைத் திறக்கத் துடிக்கும் அதிகார வர்க்கத்திற்கு நன்றி சொல்வதும் அவர்களே சுவரொட்டி அச்சிட்டு விளம்பரம் செய்வது கடும் கண்டனத்திகுரியது. 

      தண்டலை ஊராட்சி டாஸ்மாக் கடைகள் பலவகைகளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால் நீங்கள் வியப்படையக்கூடும். மூடப்பட்ட கடைகளில் இரண்டு நாகப்பட்டினம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலை 67 –ல் இருந்தவை.  இவையிரண்டும் முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பின்பு முன்புற ஷட்டரை முடிவிட்டு பின்புறம் சுவரை இடித்து வாயில் அமைத்து மதுக்கடையாக இயங்கி வந்தவை. தமிழகம் முழுதும் இதுதான் நிலை என்கிறீர்களா? இன்னொன்றும் இருக்கிறது.

   இந்த இரண்டில் ஒரு மதுக்கடைதான் இதே தண்டலை ஊராட்சிக்குட்பட்ட விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் கவுசிகனுக்கு பியர் போத்தல் விற்பனை செய்தது. பள்ளி மதிய உணவு இடைவேளையில் (27.02.2012) அம்மாணவன் பள்ளிச்சீருடையில்தான் பியர் பாட்டில் வாங்கிக்கொண்டு சைக்கிளில் செல்லும்போது வெடித்துச் சிதறி உயிரிழந்தான். அப்போதைய மாவட்ட ஆட்சியர் இந்த கடைமீதும் ஊழியர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விற்பனை இலக்கு குறைந்தால்தானே நடவடிக்கை? இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று கேட்கலாம். குழந்தைகளுக்கு மது, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதா என்ன? 

   தங்களின் பார்வைக்காக இது குறித்து எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகளின் இணைப்பைக் கீழே தருகிறேன்.

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்

http://musivagurunathan.blogspot.in/2012/02/blog-post_29.html

டாஸ்மாக் தமிழகம் 

http://musivagurunathan.blogspot.in/2012/12/blog-post_31.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக