செவ்வாய், ஏப்ரல் 11, 2017

அரசியல், மத ஆதிக்கங்களை ஒழுக்கங்கெட்டவர்களும், குற்றவாளிகளும் நடத்துகிறார்களா?அரசியல், மத ஆதிக்கங்களை ஒழுக்கங்கெட்டவர்களும், குற்றவாளிகளும் நடத்துகிறார்களா?


(மூத்த வழக்கறிஞர் திரு பொ.இரத்தினம் அவர்கள் வெளியிட்ட துண்டறிக்கை.)    “நானும் தமிழந்தான், தமிழ்நாட்டு அரசை  பெங்களூரு சிறைத்தண்டனைக் கைதி இயக்குகிற கொடுமை நடக்கிறது. தமிழர்கள் ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள்? நான் நாடு திரும்பியதும் தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் இருந்து செயல்பட உள்ளேன்”, 

இந்தியத் தலைமை நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு மார்கண்டேய கட்சு.

     இப்படி நல்லவர்கள் பலர் தமிழ்நாட்டின் அரசியல் போக்கு கண்டு வேதனைப் படுகிறார்கள். அரசியல் நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பயனற்ற செல்லாக் காசாக்கி விட்டன. அனைத்து அதிகார மையங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குற்ற மனப்பான்மையுள்ளவர்கள், குற்றச் செயலில் அம்பலமானவர்கள், கட்சி அரசியலில் காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகளில் ஈடுபடுவது நாளுக்கு நாள் கூடிவருகிறது. எனவேதான் மக்களாட்சியில், அரசியல் சட்ட நோக்கங்களில் அக்கறை உள்ளவர்கள் ஒருங்கிணைந்து மக்கள் சக்தி வலுவாவதற்கான முறையான முயற்சிகளைக் கடைபிடிக்க முன்வருகின்றனர். இதனை ஒருங்கிணைத்து முன்னோக்கிப் பயணிக்கவே ‘சமத்துவ மக்கள் படை’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்.


     “மகாபாரதம் பெண்களை இழிவுபடுத்தும் நூல்”, என நடிகர் கமல் விமர்சனம் செய்துள்ளார். “அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கிளம்பியுள்ளார் கர்நாடக பரமேஸ்வர மடத்தின் மடாதிபதி பிரணவானந்தா.

    இந்தியாவில் தொடர்ந்து இந்து சாமியார்கள் மற்றும் இந்துத்துவ வெறியர்கள் அருவெறுப்பான, மத நம்பிக்கைகள் என்ற காட்டுமிராண்டித்தனமான மூடத்தனங்களை பரவலாக்கி வருகின்றனர். சபரிமலைக்கு 10 வயது  முதல் 50 வயதுள்ள பெண்கள் வரக்கூடாது என தாய்மையைப் பழிக்கும் அநாகரிக முரடர்கள் ஆதிக்கம் செய்வது தொடர்கிறது. அங்கு காட்டப்படும் தீபம் செயற்கையானது. கேஸ் சிலிண்டர் மூலம் தீயை மூட்டி எரியவிட்டு ஆன்மீக தீபம் என்ற பித்தலாட்டத்தை மாநில அரசு தயங்கித் தயங்கி உறுதி செய்துள்ளது. ஆனாலும் பித்தலாட்டக் கும்பல் தனது காட்டிமிராண்டிச் செயலை விடாமல் மூடநம்பிக்கைகளை வலுவாக்கத் துடிக்கிறார்கள்.

     தீண்டாமை, படிநிலைச் சாதியத்தின் பாசிசக் கொடுமைதானே. இதனை ஒழிக்க வேண்டும் என்பது போல் பாசாங்கு செய்து மாமனிதர் அம்பேத்கரின் நினைவகம் போன்றவற்றிற்கு ஏராளமான பணத்தை ஒதுக்கி மோடி அரசு ஆரிய சூழச்சிக்கு வலு சேர்ப்பதும் நடக்கிறது. இத்தகையச் செயல்பாடுகளால்தான் 1937 –ல் அம்பேத்கர் தான் சாகும்போது இந்துவாகச் சாகமாட்டேன் எனச் சபதமெடுத்தார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் நாக்பூரில் லட்சக்கணக்கான மக்களுடன் புத்தம் தழுவினார். 

  அம்பேத்கர் நாக்பூரில் ‘சமத்துவ சமூகப் படை’ என்ற  விடுதலை உணர்வை வலுப்படுத்தும் அமைப்பை ஏற்படுத்தினார். புத்தம் தழுவிய நிகழ்ச்சியின்போது இந்தப் படை இளைஞர்களைக் கொண்டு மேடையைச் சுற்றி அரண் அமைத்து அம்பேத்கருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காந்தியாரைக் கொன்ற காட்டுமிராண்டிக் கும்பல் அம்பேத்கரை இந்துத்துவத்தின் முதல் எதிரியாகத்தானே கணித்திருந்தது. ஆனாலும் மிகக் கவனமாக எதிரி முகாம்களின் திட்டங்களை உளவு கண்டு  பாதுகாப்பு முறைகளைக் கடைபிடித்தனர் அம்பேத்கர் பற்றாளர்கள்.

   சேது சமுத்திரத் திட்டத்தை அறிவித்தவுடன் ராமர் பாலம் எனச்சொல்லி கதையளந்த கும்பல், அது மதம் சார்ந்த நம்பிக்கை, அங்கே அறிவியல் ரீதியான கேள்விகளுக்கு இடமில்லை என்ற முழுப் பித்தலாட்டத்தைப் பரப்பினர். தலைமை நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மத்திய நிபுணர் குழுவை அமைத்து ராமர் பாலம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க ஏற்பாடானது. அக்குழுவும் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது. அங்கு  அமைந்துள்ளது பாலம் அல்ல, இயற்கையாக ஏற்பட்ட மணல்திட்டு என்று அறிவியல் ரீதியான அறிவித்தது அக்குழு. அக்குழுவைச் சார்ந்த நிபுணர்கள் மீது வேறு பொய்க் காரணங்களை உருவாக்கி தற்காலிக பதிவி நீக்கம் செய்தது அரசு. இப்படி அரசியல் சட்ட உறுதிமொழிகளை முழுமையாக வேரறுக்கும் கொடூரக் கும்பலாகத்தான் இந்துத்துவ வெறியர்கள் ஆட்சியிலும் செயல்படுகிறார்கள். 

    ‘சமத்துவ மக்கள் படை’ அரசியல் கட்சிபோல்  செயல்படாது. அரசியல் சட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட மக்கள் இயக்கமாக செயல்படும். தேர்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது. இந்த அமைப்பிற்கான கொடி சிவப்புநிறத்தைக் கொண்ட நடுவில் நீல நிறத்தில் முக்கோணத்துடன் அமையும். மாமனிதர் அம்பேத்கர் அடையாளப்படுத்தியுள்ள புத்த அணுகுமுறையான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் அடித்தளமாகிறது.


அக்கறையாளர்களைத் தளர்வின்றி ஒருங்கிணைப்போம்!

மூட நம்பிக்கைகளின் தளங்களை நொறுக்குவோம்!!

ஆதிக்கமில்லா சமத்துவ சமூகத்தைக் கட்டமைப்போம்!!!

தொடர்பு முகவரி:

அமைப்புக்குழு,

சமத்துவ மக்கள் படை,

87, சுபாஷ் சந்திரபோஸ் நகர்,

எருமாபாளையம் – அஞ்சல்,

சேலம் – 636015.

அலைபேசி:

94434 58118 / 98427 71751 / 94862 65265


நன்றி: வழக்கறிஞர் திரு பொ.இரத்தினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக