செவ்வாய், ஏப்ரல் 18, 2017

சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!.

மு.சிவகுருநாதன்

     சில நாள்களுக்கு ((ஏப்ரல் 08, 2017) முன்பு டாஸ்மாக் நன்றி சுவரொட்டிகள் பற்றிய பதிவிட்டிருந்தேன். இது தொற்று வியாதியாகத்  தொடர்கிறது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைகள் தவிர்த்து குக்கிராம மூலை முடுக்குகளில் திறந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்கு நன்றி சொல்ல அபார துணிச்சல் வேண்டும்; மாறாக மனச்சாட்சிதான் தேவையில்லை.    நகரங்களில் உள்ள கடைகளை மூடிவிட்டார்களாம்! ஏதோ இவர்களாக மக்கள் நலன் கருதி மூடியதாகச் சொல்வது எவ்வளவு கொடூரம்? நகரத்துக் குப்பைகளை வெளியே கொட்டுவது போல் டாஸ்மாக் கடைகளைப் புறநகரில் திறக்கும் கொடுமைக்கு நன்றி ஒரு கேடா?
   திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பெயரால் இப்போது நகரமெங்கும் சுவரொட்டிகள் முளைத்துள்ளன. மாவட்டந்தோறும், ஏன் தமிழகமெங்கும் போர்க்கால வேகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க முயலும் நிர்வாகத்திற்கு நன்றி சொல்வதைவிட வேறு இழிவு இருக்க முடியுமா?    இவர்கள் நன்றி சொல்வதை விட்டுவிட்டு அருகே நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு ஏதேனும் செய்ய முயற்சித்தது உண்டா? திருவாரூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் காட்டூர் விளாகம் கடையை அகரத்திருநல்லூரில் திறக்க பெருமுயற்சி செய்யப்படுகிறதே! இதில் இந்த நன்றிக்குரியவர்களின் பங்கு என்ன? அடிப்படை வாழ்வாதாரமான தினக்கூலி வேலைகளுக்குக் கூட செல்லாமல் மக்கள் வாரக்கணக்கில் போராடுகிறார்களே! அவருக்கு நன்றி சொல்ல, ஆதரவளிக்க, இந்த கனவான்கள் ஏதேனும் செய்ததுண்டா?

    அருகே நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் அண்ணாப்பேட்டையில் வேதாரண்யம் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற பெண்களும் இடதுசாரி இயக்கங்களும் நீண்ட நாட்களாகப் போராட்டம் நடக்கிறது. அது மாநில நெடுஞ்சாலை இல்லையாம்! எனவே கடை இன்னும் அகற்றப்படவில்லை. இவர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் கனவான்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக