புதன், மார்ச் 29, 2017

த. பிரிட்டோ எனும் தீவிர வாசகன்



த. பிரிட்டோ எனும் தீவிர வாசகன்

மு.சிவகுருநாதன்


மணலி அப்துல்காதர், அ.மார்க்ஸ், மு.சிவகுருநாதன், பா.ரவிக்குமார், த.பிரிட்டோ


     கீழத்தஞ்சையில் திருத்துறைப்பூண்டி என்னும் சிறு நகரத்தில் இருந்துகொண்டு நிறப்பிரிகை, கல்குதிரை என இலக்கிய, அரசியல் இதழ்களையும் படைப்புகளையும் தேடி வாசிக்கும் தீவிர இலக்கிய வாசகனாகவும் கூர்ந்த திறனாய்வாளாகவும் படைப்பாளியாகவும்  இருந்த த. பிரிட்டோ 25.03.2017 பிற்பகல் கல்லீரல் பாதிப்பு – மஞ்சள் காமாலையால் மரணடைந்தார். 

    தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய, அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியாக இது இருப்பினும் பி.எஸ்.ஆர், மணலி கந்தசாமி, ஏ.ஜி.கே. போன்ற ஆளுமைகளால் சுயமரியாதை, எழுச்சி பெற்ற பகுதி என்பதாலும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய கருத்தியல் பின்புலமும்  மாற்றுச் சிந்தனைகளும் வாசிப்பு மற்றும் இலக்கிய அமைப்புகளும் நிறைந்த பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. 

   இப்பகுதியில் இடைநிலை ஆசிரியராக பணி செய்த பிரிட்டோவின் வாசிப்பு மற்றும் படைப்புத்திறன் தனித்துவமிக்கது. ஆனால் அது சரிவரப் பயன்படாமல் மடைமாற்றம் செய்யப்பட்டதால் தமிழுக்கு ஒரு அரிய படைப்பாளி கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அ.மார்க்ஸ், கல்யாணி, கோ.சுகுமாரன் உள்ளிட்ட ஆளுமைகளின் தோழமை இவருக்கு உண்டு. புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம் என களச் செயல்பாட்டாளராகவும் இவரது பணி தொடர்ந்தது. கவிஞர் சுதாவுடன் காதல் திருமணம்; யதார்த்தன் என்றொரு மகன். 

   எழுத்தாளர் அசோகமித்ரன் மீது இவருக்கு தனித்த ஈடுபாடு. சிறு பத்தரிக்கை தொடங்க முடிவு செய்து, அதை அசோகமித்ரனிடம் சொல்லி படைப்பு கேட்டபோது, “பார்ப்பானைத் திட்டத்தானே பத்தரிக்கை ஆரம்பிக்கிறீர்கள்”, என்று கடிந்துகொண்ட நிகழ்வும் ஒருமுறை நடந்தேறியது. அசோகமித்ரன் எண்பதுகளிலும் இவர் ஐம்பதிலும் இறந்தது பெரும்சோகம். 

அ.மார்க்ஸ் வலப்புறம் நிற்பது பிரிட்டோ


    த. பிரிட்டோவுடன்  மணலி அப்துல்காதர், ச.பாண்டியன், ராயநல்லூர் பாண்டியன், தய். கந்தசாமி, பா.ரவிக்குமார், விவேக், செல்லப்பா, இளம்பிறை என்று தீவிர இலக்கிய வாசிப்புக்கென நண்பர்கள் குழாமே உண்டு. நகுலன், பிரமிள், லா.ச.ரா., கோணங்கி மட்டுமல்லாது மார்க்வெஸ், போர்ஹே  என ஆழ்ந்து வாசிக்கும் தன்மை மிக்கதாக இக்கூட்டம் இருந்தது. ‘கவிதைக்காக’, ‘தகழி’ என்ற இரு சிறுபத்தரிக்கைகளை பிரிட்டோ நடத்தினார். பின்னாளில் மணலி அப்துல்காதர் நடத்திய ‘கிழக்கு’ என்னும் இதழில் அவருடைய கைவண்ணம் இருந்தது. யோனிகா என்னும் புனைப்பெயரில் படைப்புகள் எழுதினார். 

   1990 களின் மத்தியில் ‘நிறப்பிரிகை’  ஒழுங்கு செய்த புதுமைப்பித்தன் கருத்தரங்கில்தான் பேரா. அ.மார்க்சை நேரில் சந்தித்தேன். அதே நிகழ்வில் இந்தத் திருத்துறைப்பூண்டி நண்பர்கள் பிரிட்டோ, மணலி அப்துல்காதர், கொளப்பாடு ச.பாண்டியன், பா.ரவிக்குமார் போன்றோரையும் சந்திக்க நேரிட்டது. அதன்பிறகு பல்வேறு மாலை சந்திப்புகள் திருத்துறைப்பூண்டியில் அடிக்கடி நிகழும். 

   அதன்பிறகு ‘சுபமங்களா’வுக்காக குடந்தையில் அ.மார்க்சின் நேர்காணலை எடுத்தோம். பிரிட்டோ, மணலி அப்துல்காதர், மு.சிவகுருநாதன் ஆகிய மூவரும் எடுத்த அந்த நேர்காணலுக்கு எழுத்து வடிவமளித்தது பிரிட்டோவே.

    குமுதம் சிறுகதைப்போட்டியில் பரிசும் பெற்றார். ஆனால் அதிகம் எழுதுவதில்லை. பின்பு திண்டுக்கல்லில்  நடைபெற்ற பாரதிராஜா படைப்புகள் குறித்த ஆய்வரங்கப் போட்டியில் இவரது கட்டுரை இரண்டாவது பரிசு (தங்கச் சங்கிலி)  பெற்றது. அதன்பிறகு இவரது சாய்வு சினிமாவை நோக்கியாதாக மாறியது. 

   அதன்பொருட்டு  இருவரும் திருத்துறைப்பூண்டியிலிருந்து பொன்னேரிக்கு மாறுதல் பெற்றனர். அதன் பிறகு தொடர்பு அறுந்தது. அ.மார்க்ஸ். பாண்டியன், காதர் போன்ற தோழமைகளுடன் எப்போதாவது திடீரென்று தொடர்பில் வருவார்; பிறகு சிலகாலம் காணமற் போய்விடுவார். எல்லாக் குடும்பங்களிலும் ஏற்படுவதைப் போன்றே அவருக்கும் சிக்கல்கள், பிரிவுகள். இறுதியில் எல்லாம் சரியாகிவிட்டதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். 

   சுமார் 20 ஆண்டுகள் சென்னை வாழ்க்கை இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருமுறை நானும் கொளப்பாடு பாண்டியனும் ஆட்டோவில் பிரிட்டோவைத் தேடி அரைநாள் அலைந்து திரிந்து சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். அவ்வப்போது நண்பர்களிடம் தொடர்பில் இருந்ததே வியப்பான செய்தி.  ஊரில் அப்பா இறந்ததற்கு பிரிட்டோ வரவில்லை என்ற செய்தி வியப்புக்க்குரியதாக இல்லை. ஏனெனில் அவருக்குள் கலகமனம் உண்டு. இந்த கலகத்தன்மையோடு சினிமாவில் இயங்குவது முடியாத செயல் என்று கருதலாம். 


    முரளி நடித்த ‘ஊட்டி’ என்ற படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். அதன் பின்னர் வேறு  சில படங்களிலும் பணி செய்தார். ஆனால் இயக்குநராகும் எண்ணம் கடைசி வரியில் ஈடேறாமல் போய்விட்டது. ஆனால் பிரிட்டோ நினைத்திருந்ததால் நல்ல படைப்பாளி மற்றும் விமர்சகனாக ஆகியிருக்க முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக