ஞாயிறு, ஏப்ரல் 30, 2017

‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை!



‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை!   

  முசிவகுருநாதன் 


      பொதுவாகவே தேர்வு என்றாலே அது வன்முறைதான்! மாணவர்களுக்குத்தானே தேர்வு, ஆசிரியர்களுக்கு ஏன் தேர்வு? என்று கேள்வி கேட்கும் ஆசிரியர் சமூகத்திற்கு நடந்த தேர்வு வன்முறை குறித்தும் பேசவேண்டியுள்ளது ஒரு நகை முரண். தேர்வுகளை நியாயப்படுத்தும் எவருமே கூட இந்த வன்முறைகளை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. 


    ஆண்டுக்கு இருமுறை ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளை நடத்துவதாகச் சொல்லி, பல ஆண்டுகள் நடத்தாமல் வெறுமனே இருந்துவிட்டு, தற்போது திடீரென அறிவித்து ஏப்ரல் 29, 30 2017 ஆகிய நாட்களில் நடத்தி முடித்திருக்கிறார்கள். தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை என்பதையும் அதே நாளில் வேறு தேர்வுகள் இருக்கிறது என்கிற பல்வேறு கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 


      இதை எழுதும் பலர் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கொத்தடிமை ஊழியம் செய்பவர்கள். மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தாத அரசுகள், இந்த ஆசிரியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்யுமா? பள்ளிகள் விடுமுறை விட்ட பிறகு  மே இறுதியில் நடத்தினால் வசதியாக இருக்கும் என்ற கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாததும் ஒரு வகையான வன்முறையே! பிறகென்ன மக்களாட்சி வேண்டிக் கிடக்கிறது?


       போட்டித்தேர்வுகளும் முறைகேடுகளும் பிரிக்க இயலாதவை. வினாத்தாள் வெளியாதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் எப்பொதும் உண்டு. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக இம்முறை தேர்வர்களை கடும் வன்முறைக்குள்ளாக்கி அதன் மூலம்  ‘டெட்’ தேர்வுகள் நியாயமாக நடைபெறுவதாக ஒரு தோற்றத்தை உண்டுபண்ணுவது ரொம்பவும் அபத்தம். அதில் ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம். 

கர்ச்சிப் வைத்துகொள்ளக்கூடாது. 

    கொளுத்தும் வெயிலில் வேர்வையை எதில் துடைப்பது? கர்ச்சிப்பில் இதுவரையில் காப்பியடிக்கும் முறைகேடுகள் நடைபெற்றனவா? தேர்வு வாரியமே தேர்வர்களுக்கு கர்ச்சிப் விநியோகித்து விடலாம்! இதைப் போல பெல்ட்டில் பிட் வைத்து இந்தப் போட்டித்தேர்வுகளை எழுத முடியுமா என்ன? 

தண்ணீர்ப் பாட்டில் கூடாது. 

     குடிநீர் பாட்டிலில் என்ன வகையான முறைகேடுகள் நடைபெற முடியும்? உடல்நலம் குன்றியவர்கள் கூட தாங்கள் கொண்டு வந்த நீரை பருக அனுமதிக்காததை விட வேறு கொடுமை இருக்க முடியுமா? எல்லாரும் ‘பாத்ரூம்’ பிளாஸ்டிக் வாளிகளில் வைக்கப்பட்ட சுகாதாரமற்ற நீரைக் குடிக்க வேண்டிய கொடுமையை என்னவென்பது? தேர்வறைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்காமலும் அவர்கள் கொண்டு வந்த நீரையும் அனுமதிக்காமல் இருப்பது வன்முறையன்றி வேறென்ன?

சாதாரண கைக்கடிகாரங்கள் கூட கூடாது.

பொதுவாக தேர்வுகளில் எலெக்ட்ரானிக் பொருள்கள் (செல்போன், கால்குலேட்டர், எலெக்ட்ரானிக் வாட்ச் போன்றவை.) கொண்டுவருவதைத் தடுப்பது என்பது வேறு.  நேர மேலாண்மைக்காக சாதாரண கைக் கடிகாரங்களை அனுமதிக்காததை விட வன்செயல் இருக்க முடியாது. இதில் எப்படி முறைகேட்டில் ஈடுபடமுடியும் என்பதைத் தேர்வு வாரியம் விளக்கினால் நல்லது. ஒவ்வொரு தேர்வறைகளிலும் ஒரு சுவர்க்கடிகாரத்தை மாற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு அரை மணிக்கு ஒருமுறை மணியடிக்கப்படுவது என்பது போதுமானதல்ல.


  தேர்வரின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் இவ்வாறான முடிவுகள் எப்படி, எங்கு, யாரல் எடுக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை. எதற்கும் நீதிமன்றத்தை நாடித்தான் பெறவேண்டும் என்கிற நிலை மக்களாட்சியை மதிப்பிழக்கச் செய்யும்.  தவறான வினாவிற்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றங்களைகளையே நாடவேண்டியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு விலங்கியல் பாடத்திற்கு இவ்வாறு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


    இனி வரும் தேர்வுகளில் இம்மாதிரியான கொடிய, ஆனால் தேர்வு முறைகேடுகளுக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லாத செயல்களை முற்றிலுமாக நிறுத்திக்கொள்வது அழகு. இல்லாவிட்டால் நீதிமன்றங்களை தேர்வர்கள் நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக