சனி, செப்டம்பர் 16, 2017

தமிழில் இடைநிலை இதழ்கள்

தமிழில் இடைநிலை இதழ்கள் 


                                                                 மு.சிவகுருநாதன்

          ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி அச்சு ஊடகங்கள் காத்திரமான பதிவுகளை, கட்டுரைகளை வெளியிடும்போது தமிழ் அச்சு ஊடகங்கள் வேறு உலகில் சஞ்சாரிக்கின்றன. இவைகளில் தேடல் சினிமா, மொழுதுபோக்கு, கேளிக்கை என்பதாகவே இருக்கிறது. Frontline, EPW, Outlook, Tehelka போன்று தமிழில் ஏன் இதழ்கள் இல்லை? மலையாள ‘மாத்ரு பூமி’க்கு இணையான இதழ் இங்கு ஏன் இல்லை? ஏனிந்த ரசனைக் குறைவு?



         தமிழ் நாளிதழ்கள் ஒன்றிரண்டில் வெளிவரும் நடுப்பக்க, தலையங்கக் கட்டுரைகளைப் படிப்பதில்லை என்பதைப் பெருமையாக பேசுவோர் இங்குதான் உண்டு. சமூக ஊடகப் பெருக்கத்தினால் திருக்குறளை படிக்காதவர்கள் கூட ‘ட்விட்’களை விரும்பும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய சமூக ஊடகங்களில் காத்திரமாக இயங்வோரும் உண்டு. அவர்களை பெரும்பாலானோர் வாசிப்பதில்லை. நாளிதழ்களில்கூட The Hindu வின் தரத்திற்கு கொஞ்சமும் இணையானதல்ல ‘தி இந்து’ வின் தரம். இது ஏன் என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். தமிழில் இது போதும் என எதன் பொருட்டு அவர்கள் முடிவு செய்கிறார்கள்?

         தமிழில் ‘சீரியஸ்’ எழுத்து மற்றும் படைப்புகளுக்கு பலகாலம் சிறுபத்தரிக்கைகளையே நாடவேண்டிய நிலை இருந்தது. அந்நிலை சிறிது மாற்றம் பெற்றுள்ளது. சிறுபத்தரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாறாக அவ்விடத்தை இடைநிலை இதழ்கள் ஆக்ரமித்துள்ளன. நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

        தமிழில் இன்று எண்ணற்ற இடைநிலை இதழ்கள் வெளிவருகின்றன. கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’ இதற்கு முன்னோடியாக உள்ளது. அவைகளுக்கென்று தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கின்றன. இவைகளனைத்தும் சொந்தமான பதிப்பகங்களை உடையதாக இருப்பது இங்கு அவதானிக்கத்தக்கது. இவற்றில் ஒன்றிரண்டை மட்டும் வாசித்துவிட்டு, அவற்றை உன்னதமாகக் கருதுவது ரொம்பவும் அபத்தம். அனைத்தையும் வாசிப்பதும் அவற்றின் அரசியலைப் புரிந்துகொள்வதும் அவசியமானதாகும்.

         வெகுஜன இதழ்களுக்கும் அரசியல் உண்டு; அரசியல் இல்லாத எதுவுமில்லை. இருப்பினும் சூழலைப் புரிந்துகொள்ள இவற்றை வாசிப்பது கட்டாயமாகிறது. வணிக இதழ்கள் நடத்தும் குமுதம் குழுமம் ஜூன் 2002 லிருந்து 15 ஆண்டுகளைக் கடந்தும் ‘தீராநதி’ என்னும் இடைநிலை இதழையும் விகடன் குழுமம் ‘விகடன் தடம்’ என்னும் இதழையும் கொண்டு வருவது சற்றே வியப்பான செய்தி. குமுதத்தை அறிந்தவர்கள் ‘தீராநதி’யை அறிந்திருக்கவில்லை என்பதே தமிழ் அறிவுச்சூழலை வெளிச்சமிட்டுக் காட்டும்.

       சிறுபத்தரிக்கைகளின் விற்பனை வாய்ப்பு சில நூறுகள் என்றால், இடைநிலை இதழ்களுக்கு சில ஆயிரங்கள் மட்டுமே. இருப்பினும் பெரிய லாபமின்றி இவை தொடர்ந்து இயங்குவது பாராட்டுக்குரிய ஒன்று. மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் உடைய சில இதழ்கள் இருந்தாலும் சில அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

       தனிப்பட்ட ஒருவரின் நூலை வாசிப்பதைவிட ஒரு இதழை வாசிப்பது சிறப்பானது என்று நான் கருதுகிறேன். ஒற்றைத் தன்மை தவிர்த்து பல்குரல் தன்மை இவற்றில் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றில் இடம் பெறும் படைப்புகளில் சில தொகுக்கப்படாமல் போக வாய்ப்புள்ளதால் அவற்றை மீண்டும் படிக்கும் சூழல் இல்லாமற்போகும் நிலையில் இதழ்களின் வாசிப்பின் முக்கியத்துவம் விளங்கும்.

       இங்கு நான் வாசிக்கும் மாதந்தோறும் வரும் சில இடைநிலை மாத இதழ்கள் பட்டியலிடப் படுகின்றன. அவற்றைப் பற்றிய சுருக்கமான அறிமுகமும் இங்கே.

1. குமுதம் தீராநதி

2. விகடன் தடம்

3. கணையாழி

4. காலச்சுவடு

5. உயிர்மை

6. உயிர் எழுத்து

7. புதிய புத்தகம் பேசுது

8. உங்கள் நூலகம்

9. அம்ருதா

10. காக்கைச் சிறகினிலே…

11. பேசும் புதிய சக்தி

12. புதிய ஜனநாயகம்

13. இனிய உதயம்



01. குமுதம் தீராநதி




        இது குமுதம் குழும இதழ். ஜூன் 2002 லிருந்து வெளிவருகிறது. இதுவரையில் 184 இதழ்கள் வெளிவந்துள்ளது. இடைநிலை இதழ்களில் இதற்கு சிறப்பான இடமுண்டு. குமுதம் இதழில் வருபவற்றுக்கு பாவமன்னிப்பாக இந்த இதழ் அமைந்துள்ளது. ஆனால் விற்பனை சொல்லிக்கொள்ளுபடியாக இல்லை. குமுதம் கிடைக்கும் கடைகளில் எல்லாம் இது கிடைப்பதில்லை. பெருநகரங்களில் எளிதாகக் கிடைக்கும் இதழ் சிறுநகரங்களில் கிடைப்பதேயில்லை. செப்டம்பர் இதழ் இன்னும் கிடைக்கவில்லை. இனி சந்தா செலுத்தி வாங்க வேண்டியதுதான்!

தனி இதழ் ரூ.25;

ஓராண்டு சந்தா ரூ.300.

முகவரி:

குமுதம் தீராநதி,

குமுதம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,

தபால்பெட்டி எண்:

2592, சென்னை – 600031.

தொலைபேசி: 044-26422148

இணையம்: www.kumudam.com



02.விகடன் தடம்




        தற்போது வெளிவரும் ஆனந்த விகடன் தொடக்கக் காலத்தைப் போல நல்ல படைப்புகளையும், கட்டுரைகளையும் வெளியிடுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சீரியஸ் எழுத்தின் மீது ஆர்வம் வந்திருப்பது வியப்பூட்டுவது. இன்றுள்ள சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்துதல் என்கிற தன்மையையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றின் விற்பனை மிகவும் குறைவு என்பதையும் ஒத்துக்கொண்டேயாக வேண்டும். இம்முயற்சி தமிழின் வாசிப்பு வறட்சியைப் போக்கினால் மகிழலாம். இதுவரையில் 15 இதழ்கள் வெளிவந்துள்ளன.

தனி இதழ்: ரூ. 50

சந்தா தொடர்பிற்கு:

ஆனந்த விகடன்,

757, அண்ணாசாலை,

சென்னை – 600002.

பேச: 044-66802901

இணையம்:

www.vikatan.com



03. கணையாழி



      பத்தரிக்கையாளர் கஸ்தூரிரெங்கனால் புதுதில்லியில் தொடங்கப்பட்ட இலக்கிய இதழ். 52 ஆண்டுகளாக அவ்வப்போது இடைவெளிவிட்டு வந்துகொண்டுள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை இந்திரா பார்த்தசாரதி இவ்விதழில் எழுதிக் கொண்டிருக்கிறார். மேட்டிமைத் தன்மை கொண்ட இவ்விதழ் சிலகாலம் நின்று போனது. இந்த இதழ் பலரது கைகள் மாறி இன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராஜேந்திரன் ஆசிரியப் பொறுப்பில் வெளியாகிறது. சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தரும் இதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது. இவற்றில் தரத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தனி இதழ்: ரூ. 20

ஆண்டு சந்தா: ரூ. 275

முகவரி:

கணையாழி,

H58/F4, மருதம்,

திருவள்ளுவர் நகர்,

திருவான்மியூர்,

சென்னை – 600041.

மின்னஞ்சல்:

kanaiyazhi2011@gmail.com

இணையம்: www.magzter.com

மின்னிதழ்: http://kanaiyazhi.emagaz.in



04.காலச்சுவடு




     எழுத்தாளர் சுந்தரராமசாமியால் சிறுபத்தரிக்கையாக தொடங்கப்பட்டு, 9 வது இதழிலிருந்து காலாண்டிதழாக அவரது மகன் கண்ணன் மற்றும் மனுஷ்யபுத்திரன், லஷ்மி மணிவண்ணன் குழுவினரால் கொண்டுவரப்பட்ட காலாண்டிதழ், இன்று மாத இதழாக மாறியுள்ளது. காலச்சுவட்டின் (கண்ணன்) அரசியல் உலகறிந்தது. இலக்கிய தரத்திற்கான அக்மார்க், ஐஎஸ்ஐ முத்திரைகளாக தங்களை நிறுவிக்கொள்ள எந்த எல்லையையும் தொடக்கக்கூடிய நிலையில் உள்ளது. இதில் எழுதுவோர் அனைவரும் இவற்றின் அரசியலை உணர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. இவர்களின் அரசியல் செயல்பாடுகளை உணர்ந்து கொள்ள இதையும் வாசிக்க வேண்டியது அவசியம். செப்டம்பர் 2017 காலச்சுவடின் 213 வது இதழ்.

தனி இதழ்: ரூ. 40

ஆண்டு சந்தா: ரூ. 350

முகவரி:

காலச்சுவடு,

669, கே.பி.சாலை,

நாகர்கோவில் – 629001.

மின்னஞ்சல்:

nagercoil@kalachuvadu.com

இணையம்: www.kalachuvadu.com





05. உயிர்மை



     காலச்சுவட்டிலிருந்து உயிர்மையும் உயிர்மையிலிருந்து உயிர் எழுத்தும் உருவானது, ஒருவகையில் தமிழுக்கு நல்ல செய்திதான். இதுவும் காலாண்டிதழாக இருந்து மாத இதழாக மாறியவை. இவை மூன்றும் இன்று வெவ்வேறு தன்மைகளில் மிளிர்கின்றன. கவிஞர் மனுஷ்யபுத்திரனின் இதழ் உயிர்மை. அரசியல் கவிஞராக அறியப்படும் மனுஷ் தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.க. காரராக மிகவும் சலிப்பூட்டுகிறார். ஆனால் கவிதைகளில்தான் அவரது உண்மை முகம் தெரிகிறது. இந்த அரசியல் முகமூடி அவருக்கு பொருந்தவில்லை. இதை ஏன் சுமக்கவேண்டும் என்பதை அவர் யோசிப்பது நலம். இதுவரையில் உயிர்மை 169 இதழ்களை வெளியிட்டுள்ளது.

தனி இதழ்: ரூ. 25

ஆண்டு சந்தா: ரூ. 275

முகவரி:

உயிர்மை,

11/29, சுப்பிரமணியம் தெரு,

அபிராமபுரம்,

சென்னை – 600018.

பேச: 044-249934448

மின்னஞ்சல்:

uyirmmai@gmail.com

இணையம்: www.uyirmmai.com



06. உயிர் எழுத்து 



     உயிர்மையிலிருந்து பிரிந்த கவிஞர் சுதீர் செந்திலின் இதழ் இது. திருச்சியிலிருந்து வெளிவரும் இவ்விதழ் சிறுகதைகளுக்கு அதிக பக்கங்களை ஒதுக்குகிறது. அவற்றின் தரமும் முக்கியமல்லவா! இவ்விதழின் சிறப்பு மார்க்சிய, பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை. இவரது பல நீண்ட கட்டுரைகளை உயிர் எழுத்தில் மட்டுமே காணமுடியும். இவ்விதழ் 11 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

தனி இதழ்: ரூ. 40

ஆண்டு சந்தா: ரூ. 480

முகவரி:

உயிர் எழுத்து,

9, முதல் தளம்,

தீபம் வணிக வளாகம்,

கருமண்டபம்,

திருச்சி – 620001.

பேச: 0431-2483229,

9942764229, 7373641945

மின்னஞ்சல்:

uyirezhutthu@gmail.com



07. புதிய புத்தகம் பேசுது



     தமிழில் நூல் விமர்சனங்களுக்கான இதழ் இல்லையென்ற குறையைப் போக்கும் இவ்விதழ் பாரதி புத்தகாலய வெளியீடாக வருகிறது. தங்கள் பதிப்பக நூல்களை மட்டுமல்லாது நல்ல நூல்களை அறிமுகம் செய்து வருகிறது. 15 ஆண்டுகளைக் கடந்து இப்பணி தொடர்கிறது. Tabloid செய்தித்தாள் வடிவில் வந்த இந்த இதழ் வண்ண மாத இதழாக உருமாறியிருக்கிறது. குழந்தை இலக்கிய வறட்சியைப் போக்க ‘வண்ணநதி’ என்னும் சிறுவர் பகுதி இணைக்கப்பட்ட இதழாக இன்று இவ்விதழ் கிடைக்கிறது. வாசிப்பை இயக்கமாக்கும் தொடர் புத்தகக் காட்சிகள், சிறப்புத் தள்ளுபடிகள் என பாரதி புத்தகாலயத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த இதழும் உள்ளது.



தனி இதழ்: ரூ. 20

ஆண்டு சந்தா: ரூ. 240

பாரதி புத்தகாலயம்,

7 இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்:

thamizhbooks@gmail.com

இணையம்:

www.thamizhbooks.com





08. உங்கள் நூலகம்



      நூல் விமர்சனத்திற்காக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழிது. விரைவில் பத்தாம் ஆண்டைத் தொடவிருக்கும் இவ்விதழ், தங்கள் நூல்களை மட்டும் அறிமுகம் செய்யாமல் பிற குறிப்பிடத்தகுந்த நூல்களை அறிமுகம் செய்வது சிறப்பானது. ‘படித்துப் பாருங்களேன்…’ பகுதியில் சிறந்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை ஆ.சிவசுப்பிரமணியன் தொடர்ந்து விரிவாக அறிமுகம் செய்கிறார்.

தனி இதழ்: ரூ. 30

ஆண்டு சந்தா: ரூ. 360

முகவரி:

நியூ செஞ்சுரி வாசகர் சங்கம்,

16 (142) ஜானி கான் கான் சாலை,

ராயப்பேட்டை,

சென்னை 600014.

பேச: 044-26251968, 26258410.

மின்னஞ்சல்:

ungalnoolagam@gmail.com

இணையம்:

www.ncbhpublisher.in

www.keetru.com



09. அம்ருதா



     எழுத்தாளர், முன்னாள் காவல் அதிகாரி, அண்மையில் தேர்தல் அரசியலில் இணைந்த என பல பரிணாமங்களைக் கொண்ட திலகவதியை கௌரவ ஆசிரியராகவும் அவரது மகன் பிரபு திலக்கை ஆசிரியராகவும் கொண்டு வெளியாகும் இதழ் இது. இதுவரையில் 134 இதழ்களை வெளிவந்துள்ள அம்ருதா, தொடக்கத்தில் சாதாரணமாக இருந்தாலும் பிற்காலத்தில் சீரியஸ் எழுத்தின்பால் கவனத்தை செலுத்தி வருகிறது. அறிஞர் பொ.வேல்சாமி போன்றோரின் ஆய்வுக் கட்டுரைகளையும் இது வெளியிடுகிறது.



தனி இதழ்: ரூ. 25

ஆண்டு சந்தா: ரூ. 275

முகவரி:

அம்ருதா,

1, கோவிந்த ராயல் நெஸ்ட் அடுக்ககம்,

12, மூன்றாவது முக்கியசாலை 2 வது விரிவாக்கம்,

சி.ஐ.டி. நகர் கிழக்கு,

நந்தனம்,

சென்னை – 600035.

பேச: 7338757878, 9444070000

மின்னஞ்சல்:

info.amrudha@gmail.com

இணையம்: www.amrudhamagazine.com



10. காக்கைச் சிறகினிலே…



     ஏழாம் ஆண்டை நிறைவு செய்யும் காக்கைச் சிறகினிலே… இதழ் தமிழ் தேசியத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது. அரசியல், கல்வி, புலம் பெயர் இலக்கியம் என இதன் பாதை மேலும் விரிவடைகிறது.

தனி இதழ்: ரூ. 25

ஆண்டு சந்தா: ரூ. 275

முகவரி:

காக்கை,

288, டாக்டர் நடேசன் சாலை,

திருவல்லிக்கேணி,

சென்னை – 600005.

மின்னஞ்சல்:

kakkaicirakinile@gmail.com

செல்: 9841457503

தொலைபேசி: 044-28471890





11. பேசும் புதிய சக்தி



       திருவாரூர் போன்ற சிறு நகரிலிருந்து இந்த இடைநிலை இதழ் வெளிவருகிறது. இம்மாத இதழ் மூன்றாண்டுகளைத் தாண்டி பல்வேறு மாற்றங்களுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சீரியஸ் எழுத்தின் வழியில் இதழ் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பெரிய அளவிலான பின்புலம் ஏதுமற்ற நிலையில் இதழைத் தொடர்ந்து வெளியிடும் முயற்சி பாராட்டிற்குரியது. இவ்விதழ் பற்றிய அறிமுகம் முகநூல் மற்றும் வலைப்பூவில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.



தனி இதழ்: ரூ. 30

ஆண்டு சந்தா: ரூ. 350

முகவரி:

பேசும் புதிய சக்தி,

52/13, ஏ.என்.ஆர். காம்ப்ளெக்ஸ்,

தெற்கு வீதி,

திருவாரூர் – 610001.

மின்னஞ்சல்:

pesumpudhiyasakthi@gmail.com


செல்: 9688227772, 9600519442, 9489773671

தொலைபேசி: 04366-244345



12.புதிய ஜனநாயகம் 



      மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மார்க்சிய – லெனினிய அரசியல் மாத இதழாக புதிய ஜனநாயகம் வெளிவருகிறது. தங்களைத் தவிர அனைத்து இடதுசாரிகளையும் மோசமானவர்களாக விமர்சிக்கும் போக்கு இதில் உள்ளபோதிலும் இந்துத்துவ, முதலாளித்துவ நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள இம்மாதிரியான இதழ்கள் உதவி புரியும். புதிய கலாச்சாரம் என்றொரு இதழையும் முன்பு வெளியிட்டனர். தற்போது வினவு இணையதளம் உள்ளதால் கட்டுரைகள் அதில் பதிவேற்றப்படுகின்றன.



தனி இதழ்: ரூ. 15

ஆண்டு சந்தா: ரூ. 180



தொடர்பு முகவரி:

புதிய ஜனநாயகம்,

110, இரண்டாம் தளம்,

63, என்.எஸ்.கே. சாலை,

(அ.பெ.எண்: 2355)

கோடம்பாக்கம்.

சென்னை – 600024.

செல்பேசி: 9444632561

மின்னஞ்சல்:

puthiyajanayagam@gmail.com



13.இனிய உதயம்




      நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் மாத இதழ் இனிய உதயம். புத்தக அளவிலிருந்து பெரிய சைஸுக்கு மாறியுள்ள இவ்விதழ் சுராவின் மலையாள மொழிபெயர்ப்புக் கதைகளுக்காக புகழ் பெற்றது. நாவல், குறுநாவல் என்கிற நிலையிலிருந்து சிறுகதைகள் மட்டுமே தற்போது மொழிபெயர்க்கப்படுகிறது. இதர கட்டுரைகள், கவிதைகள் ஆகியன உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எழுதுவதைப் போன்றுள்ளது. இதில் இடம்பெறும் தமிழாசிரியர்களின் கட்டுரைகள் மிகச் சாதாரணமானவை. இவைகளை வெளியிட இதழ் ஒன்று தேவையா என்று கேட்கத்தோன்றுகிறது.



தனி இதழ்: ரூ. 20

ஆண்டு சந்தா: ரூ. 240

இனிய உதயம்,

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,

105, ஜானி ஜான் கான் சாலை

ராயப்பேட்டை,

சென்னை – 600014.

தொலைபேசி: 044 43993000

மின்னஞ்சல்:

www.iniyaudhayam@nakkheeran.in

இணையம்:

www.nakkheeran.in

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இப்பதிவு மூலமாக பல இதழ்களைப் பற்றிய ஒரு அருமையான மதிப்பீட்டினைக் காண முடிந்தது. நன்றி.

கருத்துரையிடுக