செவ்வாய், நவம்பர் 28, 2017

தெரிந்தவற்றில் இருந்தே தெரியாததைக் கற்றுக்கொள்ள வேண்டும்!



தெரிந்தவற்றில் இருந்தே தெரியாததைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

மு.சிவகுருநாதன்

(இன்றைய - 28.11.2017 – ‘தி இந்து’ நாளிதழின் ‘புதிய பாடம் புதிய பாதை’ என்னும் தொடரில் இரண்டாவதாக வெளியான எனது கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.) 

     நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதே பாடத்திட்டத்தின் நோக்கம் என்ற எண்ணமே கல்விசார் சமூகத்தை ஆட்கொண்டிருக்கிறது. இத்தகைய எண்ணங்கள் கல்வியின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராகிவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது என்பதைப் பாடத்திட்டக் குழுவுக்குப் பொறுப்பாகவுள்ள பள்ளிக்கல்விச் செயலர் உதயச்சந்திரன் உணர்ந்திருக்கிறார். சமூக அறிவியல் பாடத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிகளை உள்ளடக்கிய நிலைபாட்டு அறிக்கையே அதற்குச் சான்று.

    மாணவர்களிடம் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டு அறிக்கை பாராட்டுக்குரியது. கற்றல் செயல்பாடுகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் சிறப்பானது.பாடத்திட்டத் தலைப்புகளை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது என்றபோதிலும் அறிவியல், கணிதவியல் பாடங்களைக் காட்டிலும் மொழி, கலைப் பாடங்கள் எழுதப்படும்போது தொனி மாறவும் வாய்ப்புண்டு

     எனவே, விரிவான வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும். உதாரணமாக பவுத்தம், சமணம் என்ற ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதில் என்ன நோக்கங்கள், கருத்துகள் எழுதப்படும் என்பதையும் அவதானிக்கவே விரிவான பாடத்திட்டம் தேவை. நோக்கங்களுக்கு எழுத்து வடிவம் எப்படிக் கொடுக்கப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய சவால். பழைய உதாரணங்கள் நம்பிக்கை கொள்ளும்படியாக இல்லை.

தமிழில் வெளியிடுக!

     பாடத்திட்டங்கள் தமிழில் வெளியிடப்படாதது பெருங்கேடு. தமிழில் வெளியிடாத போது சாதாரண மக்கள் இவற்றைப் பார்க்கவோ கருத்துரைக்கவோ இயலாமல் போகும். எல்லா வகுப்புகளிலும் மாணவர்களை வடிகட்டும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். கல்வித் துறையும் அலுவலர்களும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மூலம் திணிக்கும் மன உளைச்சல்களும் தற்கொலைகளும் நிகழாவண்ணம் தடுக்கப் பட வேண்டியது கட்டாயம்.
     அறிவியல் பாடங்களில் சமகாலக் கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதில் இருக்கும் ஆர்வம் மொழி மற்றும் கலைப் பாடங்களில் சமகால வரலாறு, இலக்கிய வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு சேர்ப்பதில் இல்லை. குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலைச்சர்களைப் பட்டியலிடுவது மட்டுமே சமகால வரலாறு அல்ல. அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு செய்வது சமூகத் துரோகம். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வாக்களிக் கத் தகுதியுடையவராகும் இந்த இளைய சமூகத்துக்குப் பாடநூல்கள் எத்தகைய அரசியல், சமூக, பொருளியல் விழிப்புஉணர்வை ஊட்டியிருக்கின்றன எனக் கேட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

எளிமையாகவே சொல்லிக்கொடுக்கலாம்

    போட்டித் தேர்வுகள் மையமான கல்விச் சிந்தனை குழந்தைகளைத் தூரப்படுத்துகிறது. குழந்தை மையமானதெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றுக்குபோன்ற போக்குகளை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக்கொள்வதும் மிக மோசமானது. குறிப்பாக, வரலாற்றின் காலவரிசை முறைப்படி ஆறாம் வகுப்பில் பண்டைய கால வரலாறு, ஏழாம் வகுப்பில் மத்தியகால வரலாறு என அம்மாணவர்களின் வயதுக்கு ஒவ்வாத செய்திகளையும் தத்துவங்களையும் திணிப்பதை விடுத்து, கால வரிசைகளற்ற முறையில், எளிமையான முறையில் சொல்லிக் கொடுக்க முயல்வது நன்மை பயக்கும்.

    பாடநூல்கள் ஐந்திலிருந்து ஆறும் பத்திலிருந்து பதினொன்றும் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் பெரும் இடைவெளியாகவும் அமைகின்றன. இவற்றைக் குறைக்க உயர்தொடக்க வகுப்புகளுக்கு (6-8) சமூக அறிவியலின் நான்கு பிரிவுகளை ஒன்றாக இணைத்து கருத்து (thematic) அணுகுமுறையுடன் பாடத்திட்டங்களை வடிமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாதிரியான எளிமையாக்கம் குழந்தைகளை மையம் கொண்டதாக அமையும்.

    பள்ளிகள் சிறைச்சாலைகள் அல்ல; மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டியவர்களும் அல்லர். மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து கல்வி கற்கும் இருவழிப் பாதையே இன்றைய தேவை.

     ஆசிரியருக்கான கையேடுகள், பயிற்சிகள், பள்ளி நூலகத்தைத் தரப்படுத்துதல், ஆசிரியர்களையும் வாசிக்கச் செய்தல் என்னும் பெருந்தடைகளைத் தாண்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர் கல்விப் பாடத்திட்டங்களும் கற்பிக்கும் முறைமைகளும் உடனடியாக மாற்றப்படுவது காலத்தின் கட்டாயம்.

- மு.சிவகுருநாதன், ‘கல்விக் குழப்பங்கள்நூலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: musivagurunathan@gmail.com

நன்றி: தி இந்து

புதன், நவம்பர் 08, 2017

சமூக நல்லிணக்கமே இந்திய அடையாளம்



சமூக நல்லிணக்கமே இந்திய அடையாளம்




மு.சிவகுருநாதன்


         வாட்ஸ் அப்பில் சில படங்களைப் போட்டு கீழ்க்கண்ட செய்தியுடன் வலம் வருகிறது. 

      this place is called surya kund. It is in mehsana district in gujarat state. It was built by raja bheema-1 in 1027-1028 Ad. An architectural marvel still unexplored. Even Taj mahal is nothing compared to this. Enjoy....

        இம்மாதிரிச் செய்திகள் வந்தவுடன் அவற்றைப் பற்றி புரிதல் ஏதுமற்றுப் பகிர்வதையேத் தொழிலாகக் கொண்ட பலர் இங்குண்டு. வகுப்புவாதிகள், மதவெறியர்கள் இன்று பெருமளவு சமூக ஊடகங்களைக் கைப்பற்றி, இம்மாதிரியான நச்சு விதைகளைப் பரப்பி வருகின்றனர். 




    அனைவரையும் உள்ளடக்கிய புவியியல் தேசியங்கள் அடங்கிய பன்மைத்துவ நாடான இந்தியாவை, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்று சொல்லி இந்துக் கலாச்சாரத் தேசியமாக்கும் முயற்சியில் சில சக்திகள் மிகவும் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பது இப்பணியை விரைவாகச் செய்ய வழி வகுக்கிறது. 

   புதுதில்லியில் அவுரங்கசீப் மார்க் (சாலை) அப்துல் கலாம் மார்க்காக மாற்றப்பட்ட கதை நாம் அறிந்ததுதான். இன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலிருந்து நீக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியே இம்மாதிரியான பதிவுகள். இதை ஒரு பெருங்கூட்டமே திட்டமிட்டு செயல்படுத்தி  வருகிறது. 




    இந்தியாவெங்கும் பல்வேறு கட்டடக் கலை சிறப்புகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் சிறப்பு மிக்கவையே. அவைகளில் பின்னால் ஒளிந்திருக்கும் சாமான்ய மக்களின் வேதனைகள் பேசப்பட வேண்டியவை. உலக அதிசயமாகக் கொண்டாடப்படும் தாஜ்மஹாலுடன் ஒப்பிட்டு, இது பெரிதா, அது பெரிதா என்று விவாதிக்கும்போது இவர்களது உண்மை முகம் வெளிப்பட்டு விடுகிறது. அதானால்தான் இந்தக் கலாச்சாரவாதிகளிடம் விலகியிருக்க வேண்டுகிறோம்.

    இந்த இரண்டு வரிச் செய்திகளில் பின்னணியையும் கொஞ்சம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

     சாளுக்கிய வம்ச வழித்தோன்றல்களுள்  சோலங்கி மரபும் ஒன்று. இந்த மரபில் வந்த முதலாம் பீமதேவன் (கி.பி. 1022 – 1063)  சோமநாதபுரம் சிவன் கோயிலைப் புதுப்பித்தார். குஜராத் மேகசானா மாவட்டம் மோதேராவில் தன் குலக் கடவுளான சூரியனுக்கு கோயிலையும் (கி.பி.1026) இவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. 

    அவரது மறைவுக்குப் பிறகு மனைவி உதயமதி, மகன் இரண்டாம் பீமதேவன் ஆகியோர் ஆயிரங்கணக்கான படிகள், 800 க்கு மேற்பட்ட சிற்பங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குளத்தைக் (கி.பி. 1063 – 1068)  கட்டினர். ராணி குளம் (படிக்கிணறு) என்றழைக்கப்படும் இவற்றில் படிக்கட்டுகளில் மாமல்லபுரத்தைப் போன்று பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. நீர் சேமிக்கும் இடமாகவும் வழிபாட்டுத் தலமாக இது விளங்கியது. 

   இந்தப் படங்கள் அனைத்தும் சேர்த்தே முதலாம் பீமதேவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். சோலங்கி மரபினர் இந்து மதத்தை மட்டுமல்ல; சமண மதத்தையும் ஆதரித்தனர். 

    இம்மரபின் பேரரசனான விளங்கிய குமாரபாலன் தில்வாரா கோயிலைக் கட்டினார். இக்கோயில் 24 சமணத் தீர்த்தங்கரர்களுக்கானது. ராணி குளத்தில் படிகளில் சமண, பவுத்த சிற்பங்களும் உண்டு. இதுதான் இந்தியாவின் கலாச்சாரம். பிளவுபடுத்துபவர்கள் அனைவரும் அறியவேண்டிய செய்தி இது.