சமூக நல்லிணக்கமே இந்திய அடையாளம்
மு.சிவகுருநாதன்
வாட்ஸ் அப்பில் சில படங்களைப்
போட்டு கீழ்க்கண்ட செய்தியுடன் வலம் வருகிறது.
this place is called surya kund.
It is in mehsana district in gujarat state. It was built by raja bheema-1 in
1027-1028 Ad. An architectural marvel still unexplored. Even Taj mahal is
nothing compared to this. Enjoy....
இம்மாதிரிச்
செய்திகள் வந்தவுடன் அவற்றைப் பற்றி புரிதல் ஏதுமற்றுப் பகிர்வதையேத் தொழிலாகக் கொண்ட
பலர் இங்குண்டு. வகுப்புவாதிகள், மதவெறியர்கள் இன்று பெருமளவு சமூக ஊடகங்களைக் கைப்பற்றி,
இம்மாதிரியான நச்சு விதைகளைப் பரப்பி வருகின்றனர்.
அனைவரையும் உள்ளடக்கிய புவியியல் தேசியங்கள் அடங்கிய
பன்மைத்துவ நாடான இந்தியாவை, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்று சொல்லி இந்துக் கலாச்சாரத்
தேசியமாக்கும் முயற்சியில் சில சக்திகள் மிகவும் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளன. மத்தியில்
ஆட்சியதிகாரத்தில் இருப்பது இப்பணியை விரைவாகச் செய்ய வழி வகுக்கிறது.
புதுதில்லியில் அவுரங்கசீப் மார்க் (சாலை) அப்துல்
கலாம் மார்க்காக மாற்றப்பட்ட கதை நாம் அறிந்ததுதான். இன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில்
பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலிருந்து நீக்கியுள்ளது. அதன்
தொடர்ச்சியே இம்மாதிரியான பதிவுகள். இதை ஒரு பெருங்கூட்டமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவெங்கும் பல்வேறு கட்டடக் கலை சிறப்புகள்
இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் சிறப்பு மிக்கவையே. அவைகளில் பின்னால் ஒளிந்திருக்கும்
சாமான்ய மக்களின் வேதனைகள் பேசப்பட வேண்டியவை. உலக அதிசயமாகக் கொண்டாடப்படும் தாஜ்மஹாலுடன்
ஒப்பிட்டு, இது பெரிதா, அது பெரிதா என்று விவாதிக்கும்போது இவர்களது உண்மை முகம் வெளிப்பட்டு
விடுகிறது. அதானால்தான் இந்தக் கலாச்சாரவாதிகளிடம் விலகியிருக்க வேண்டுகிறோம்.
இந்த இரண்டு வரிச் செய்திகளில் பின்னணியையும்
கொஞ்சம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சாளுக்கிய வம்ச வழித்தோன்றல்களுள் சோலங்கி மரபும் ஒன்று. இந்த மரபில் வந்த முதலாம்
பீமதேவன் (கி.பி. 1022 – 1063) சோமநாதபுரம்
சிவன் கோயிலைப் புதுப்பித்தார். குஜராத் மேகசானா மாவட்டம் மோதேராவில் தன் குலக் கடவுளான
சூரியனுக்கு கோயிலையும் (கி.பி.1026) இவர் கட்டியதாகக் கூறப்படுகிறது.
அவரது மறைவுக்குப் பிறகு மனைவி உதயமதி, மகன் இரண்டாம்
பீமதேவன் ஆகியோர் ஆயிரங்கணக்கான படிகள், 800 க்கு மேற்பட்ட சிற்பங்கள் மற்றும் அழகிய
வேலைப்பாடுகளுடன் கூடிய குளத்தைக் (கி.பி. 1063 – 1068) கட்டினர். ராணி குளம் (படிக்கிணறு) என்றழைக்கப்படும்
இவற்றில் படிக்கட்டுகளில் மாமல்லபுரத்தைப் போன்று பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்கப்
பட்டுள்ளன. நீர் சேமிக்கும் இடமாகவும் வழிபாட்டுத் தலமாக இது விளங்கியது.
இந்தப் படங்கள் அனைத்தும் சேர்த்தே முதலாம் பீமதேவனால்
கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். சோலங்கி மரபினர்
இந்து மதத்தை மட்டுமல்ல; சமண மதத்தையும் ஆதரித்தனர்.
இம்மரபின் பேரரசனான விளங்கிய குமாரபாலன் தில்வாரா
கோயிலைக் கட்டினார். இக்கோயில் 24 சமணத் தீர்த்தங்கரர்களுக்கானது. ராணி குளத்தில் படிகளில்
சமண, பவுத்த சிற்பங்களும் உண்டு. இதுதான் இந்தியாவின் கலாச்சாரம். பிளவுபடுத்துபவர்கள்
அனைவரும் அறியவேண்டிய செய்தி இது.
1 கருத்து:
சரியான புரிதலைத் தந்த பதிவு. நன்றி.
கருத்துரையிடுக