ஞாயிறு, டிசம்பர் 03, 2017

பாடத்திட்டம் – பாடநூல் – சுமை குறைய…



பாடத்திட்டம் – பாடநூல் – சுமை குறைய…


மு.சிவகுருநாதன்


(28.11.2017 ‘தி இந்து’ கட்டுரையின் தொடர்ச்சியாக…) 


   கல்விக்கூடங்களைக் கோச்சிங் சென்டர்களாக ஒருபோதும் மாற்ற அனுமதிக்க முடியாது. நாங்கள் முன்பே படித்துவிட்டோம், இனி நீங்கள்தான் படிக்கவேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் முடிவுகட்டிவிட்டது கல்வியின் சாபக்கேடு. பாடநூல்கள் கல்வியின் ஒரு சிறுகருவி மட்டுமே. ஆனால் அதுவே கல்வியை ஆக்ரமிக்க வழிவகை செய்துவிட்டோம். 

    பாடப்புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு சாத்தியப்படாத ஒரு சமூகத்தில் இருக்கின்ற ஒரே கருவியான பாடநூலின் தரத்தைப் பற்றி கவலைகொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. பள்ளியோ, வீடோ பாடநூல் சாராத வாசிப்பிற்கு எவ்வித வாய்ப்பையும் தராத நிலையில் பாடநூல்களிடம் அதிக எதிர்பார்ப்பு உருவாகிவிடுவது இயல்பு. 

   வெறும் தலைப்புகள் மட்டுமே பாடநூலை வடிவமைக்கப் போதுமானதாக இருக்க முடியாது. இருக்கின்ற பாடநூல் வடிவத்தை அப்படியே நகலெடுப்பதும் சரியல்ல. மேம்போக்காக அணுகும்போதுகூட நெருடல்கள் இருக்கின்றன. இவற்றை இன்றைய ஆசிரிய சமூகத்தின் சிக்கலாகப் புரிந்துகொள்ள முடியும். ஆசிரியர்கள் வழமையான பார்வைகளிலிருந்து விடுபடவும் புதிய சூழலுக்குத் தங்களைப் பொருத்திக் கொள்ளவும் விசாலப்பார்வை வேண்டும். இவற்றை ஏற்படுத்த அரசு, கல்வித்துறை, ஆசிரிய இயக்கங்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைத்து தரப்பும் தவறிவிட்டன என்றே சொல்லலாம். 

பாடநூல்களை நெடுங்காலம் மாற்றாமலிருப்பது நல்லதல்ல. ஆண்டுதோறும் பாடங்களில் சேர்க்கை, நீக்கல் நடைபெறுவது இத்தகைய பெரும்சுமையைக் குறைக்கும். பிற பாடத்திட்டங்களை அப்படியே நகலெடுப்பதும் சரியானதாகாது. பன்முகப்பார்வை கொண்ட பாடத்திட்டம், பாடநூல்கள் இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றப்படாத பாடத்திட்டத்தை மாற்றும்போது நிறைய சிக்கல்கள் ஏற்படுவது இயற்கை. இதனால் மாணவர்களுக்கு கூடுதல் சுமை உண்டாகும். இந்தச் சுமையைக் குறைக்க மாற்றுவழிகளை யோசிக்கவேண்டும். 

   11, 12 வகுப்புகளுக்கு இவ்வாண்டு முதல் அகமதிப்பீட்டு 10% மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இது போதாது. 1 முதல் 9 முடிய உள்ள வகுப்புகளுக்கு 40% இருக்கும்போது இங்கு குறைந்தது 25% இருப்பது நலம். மொழிப்பாடங்களுக்கு இரு தாள்கள் சுமை அகற்றப்படலாம். 

   பத்தாம்வகுப்பிற்கு 25% அகமதிப்பீடு மிகவும் அவசியம். 11, 12 வகுப்புகளுக்கு மட்டும் அளித்துவிட்டு பத்தாம் வகுப்பைப் புறக்கணிப்பது நியாயமல்ல.  இப்போதுள்ள தேர்வு முறைகளைச் சீர்திருத்தாமல் வெறும் பாடநூல்கள் கல்வியை மாற்றாது. மீண்டும் மனப்பாடக் கல்வியிடம் சரணடையாமல் இருக்க இம்மாற்றம் தேவை. கல்வித்துறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மாணவர்களுக்கு உண்டாக்கும் மன உளைச்சல்கள் போதாதென்று ஊடகங்களும் ‘ஜெயித்துக் கட்டுவோம்’ என்று மாணவர்களை வதைப்பது நிறுத்தப்படவேண்டும். 


மேலும் சில கருத்துகள்:


  • இருக்கின்ற பாடநூலை அப்படியே முன்மாதிரியாக கருதுவது பலனளிக்காது. அதைத் திருத்தி எழுதும் வேலையும் சரிப்பட்டு வராது. துணை நூல்களின்றி பழைய, பிற பாடநூற்களை மட்டும் கொண்டு பாடத்திட்டத்தை வடிவமைப்பதும் சரியல்ல.
  • அரசு பொதுத்தேர்வை கணக்கில் கொண்டு பாடத்திட்டம், பாடநூல் வகுக்கும் முறை கைவிடப்படவேண்டும். 10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதால் பாடங்கள் எளிமையாக இருக்கவேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதியாக உள்ள நிலை மாறவேண்டும்..
  • வளர்ச்சிக்குரலை மிகையாக ஒலிப்பதை விடுத்து, சூழலியல் பற்றியும் உரிய இடங்களில் பேசவேண்டும்.
  • ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மட்டுமே பாடநூல் எழுதத் தகுதியானவர்களோ போதுமானவர்களோ அல்ல. சூழலியல் பாடங்களை எழுத நன்னிலம் நக்கீரன்,  கோவை சதாசிவம் போன்ற சூழலியல் படைப்பாளிகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
  • கலைப்பாடங்கள் மட்டுமாவது மொழியாளுமை உள்ளவர்களைக் கொண்டு தமிழில் எழுத வேண்டும். பின்னர் ஆங்கிலத்தில் பெயர்ப்பது நல்லது. ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பெயர்க்கும் முறை மாற வேண்டும். இவ்வாறு செய்யும்போது செயற்கையான நெகிழித் தமிழ் உருவாகிறது. இது கற்றலுக்கு ஊறு விளைவிக்கிறது.
  • விடுதலைக்குப் பிந்தைய இந்திய, தமிழ்நாட்டு வரலாறுகளுக்கு இடமே இல்லை. இது நல்லதல்ல.
  • உலகமயத்திற்குப் (1991) பிந்தைய நமது பொருளியல் தாக்கம் உரிய இடங்களில் சொல்லப்பட வேண்டும்.
  • தெளிவான பொருளியல் பாடங்கள் வேண்டும். 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு தேசியப் பங்கு மாற்றகம் (NSE) வெளியிட்ட நூல்கள்  ஒப்பீட்டளவில் சமச்சீரை விட தரமானவை. எளிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளக்காமல் பொருளியல் கோட்பாடுகளையும் வரையறைகளையும் அறிமுகம் செய்வது ஆபத்து. குழந்தைகளின் அறிவு, வயது ஆகியன கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
  • மாணவர்களே செய்யும் வகையிலான செயல்பாடுகள் திட்டமிட வேண்டும். கில்லட்டின் மாதிரியைத் தயார் செய்தல் என்பது போன்ற அபத்தமான கொலைக் கருவிகள் செயல்பாடுகள் தவிர்க்கப் படவேண்டும்.
  •   வரலாற்றைக் காலக்கிரமமாக (Chronological Order) மட்டும் சொல்ல வேண்டும் என்கிற நியதி குழந்தைகளுக்கு அநியாயம் செய்கிறது. எனவே உயர் தொடக்கநிலையிலாவது இந்தக் காலக்கிரமத்தை ஒழித்துக் கட்டினால் நல்லது.
  • பாடநூல் எழுதும்போது ஒரு பக்கச்சார்பாக நின்று எழுதாமல் குறைந்தபட்சம் எவற்றையும் நன்மை, தீமை என இருதரப்பாக அணுகும் நடைமுறை பின்பற்றப்படல் வேண்டும். விவாதங்களுக்கு உரிய இடமளிப்பது அவசியம். அப்போதுதான் மாணவர்களை அறிவு சார் சமூகமாக வளர்த்தெடுக்க முடியும். வெறும் தலையாட்டிப் பொம்மைகளைத் தயாரிப்பது நமது வேலையாக இருக்க முடியாது.
  • சமூக அறிவியல் பாடத்தைச் சுவைபடவும் மாணவர்கள் விரும்பும் வகையிலும் சொல்லித்தரும் வகையில் பாடத்திட்டம், பாடநூல் அமைய வேண்டும்.
  • 11, 12 வகுப்புத்தேர்வுகளைப் போல 10 ஆம் வகுப்புத்தேர்வையும்  வடிவமைக்க வேண்டும். அகமதிப்பீட்டு முறை பாராட்டிற்குரியது. இதை அதிகரிக்க வேண்டும். கலைப் பாடங்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 25 வழங்க வேண்டும்.
  • மொழிப்பாடங்களுக்கு இரு தாள்கள் தேவையில்லை. இரு தாள்கள் 200 மதிப்பெண்கள் என்பதால் மொழித்திறன்கள் வளர்ந்து விடுமென நம்ப இயலவில்லை.
  • 10 ஆம் வகுப்பிற்கு ஒரே தாளில் அகமதிப்பீடு போக ஒவ்வொரு தாளுக்குரிய பகுதிகளிலிருந்து தலா 35 மதிப்பெண்கள் வினா கேட்கலாம். (அகமதிப்பீட்டு மதிப்பெண்கள்: 30) 9 ஆம் வகுப்பிற்கு இரு தாள்களுக்கும் தலா 35 மதிப்பெண்கள் என்று அமையலாம். (இரு தாள்கள் வேண்டுமென்றால்…
  • அனைத்துப் பாடங்களுக்கும் 7 பாடவேளைகள் சாத்தியமில்லை. எனவே தமிழ், சமூக அறிவியல் உள்ளிட்ட 5 பாடங்களுக்கும் தலா 6 பாடவேளைகள் மட்டும் வழங்க வேண்டும். உடற்கல்வி, மதிப்புக் கல்வி, ஓவியம், இசை, கணினி அறிவியல், சூழலியல் கல்வி ஆகியவற்றிற்கு மீதமுள்ள 10 பாடவேளைகளைப் பங்கிடலாம்.
  •   சமூக நீதி, இடஒதுக்கீடு, சமூகத்தில் உள்ள பிரச்சினைகள், சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை அரசியல் அறிவியல் பகுதியில் தெளிவுபடுத்த வேண்டும்.
  • உள்ளாட்சிகளின் செயல்பாடுகள், மக்கள் உரிமைகள், கிராம சபாக் கூட்டம், காவல்துறை, நீதிமன்றச் செயல்பாடுகள், சாலை விதிகள் ஆகியவற்றை பாடநூல் கொண்டிருக்க வேண்டும். இதுவரையில் இல்லை. இனியாவது நடந்தால் கல்வி செழிக்கும்.

     அறிவியல் பூர்வமான அணுகுமுறை, சிந்தனையைத் தூண்டும் பாடங்கள், குழந்தை உரிமைகள், மனித உரிமைகள், மத நல்லிணக்கம், பன்மைத்துவ பார்வை, படைப்பாற்றல் வளம் மிக்க மொழிநடை, புனைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள் புராணக் கதைகள் ஆகியவற்றைத்  தவிர்த்தல். அடித்தட்டு, விளிம்பு நிலை மக்கள் வாழ்வியலுக்கு இடம், புறக்கணிக்கபட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்புதல், சாதி, சமய, பாலினச் சார்பற்ற பாடத்திட்டம், பாடநூல், கல்விமுறை ஆகியவை உரிய கவனம் பெறல் வேண்டும். நிலைப்பாட்டு அறிக்கையை நன்கு உள்வாங்கி பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டால் சிறப்பான பாடநூல் உருவாகும் என்பதில் அய்யமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக