திங்கள், ஜனவரி 22, 2018

வரையறைகள் தேவைதானா?



வரையறைகள் தேவைதானா?


மு.சிவகுருநாதன்


      புதிய பாடம் அல்லது தலைப்பை அறிமுகம் செய்யும்போதும் அறிஞர்களின் வரையறைகளை அளிப்பது இங்கு வழக்கமாக உள்ளது. தொடக்க நிலைகளில் இது அவசியமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. வரலாறு பற்றி ஹெரோடொட்டஸூம் புவியியல் பற்றி அரிஸ்டாட்டிலும் மக்களாட்சி பற்றி ஆப்ரகாம் லிங்கனும் பொருளியல் பற்றி ஆடம் ஸ்மித்தும் லயனல் ராபின்ஸூம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று நமது குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

   8, 9 ஆகிய வகுப்புகளுக்கு தேசியப் பங்கு மாற்றகம் (NSE – National Stock Exchange) வெளியிட்டுள்ள பொருளியல் அறிமுக நூல்கள் ஒப்பிட்டளவில் சமச்சீர் புத்தகங்களை விட சிறப்பானவை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். நடைமுறை வாழ்விலிருந்து உழைப்பு, உற்பத்தி, வருவாய், விற்பனை, வணிகம் போன்றவற்றை விளக்க முடியாதா என்ன?

      இவைகள் இல்லாமல் இப்பகுதிகளை அறிமுகம் செய்ய முடியாதா? அறிந்தவற்றிலிருந்து அறியாத ஒன்றை மிக எளிமையாக அறிமுகம் செய்ய வாய்ப்பிருந்தும் வழக்கமான இவ்வுத்தியைக் கையாள்வது மிகவும் சலிப்பைத் தருவதாக உள்ளது. வரையறைகளையாவது சொல்லித் தொலைத்துவிட்டுப் போங்கள்! ஏன் மொழியை இப்படித் திருகி இளம்பிஞ்சுகளை ஏன் வதைக்கிறீர்கள்? 

    பொதுவாக முதல் வகுப்பாக இருந்தால் கூட பாடநூலை ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழில் பெயர்க்கும் நடைமுறையே காலம் காலமாகப் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் மிக அபத்தமான தமிழ் வடிவம் ஒன்று கிடைக்கிறது. இதையே படித்துத் தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் நமது குழந்தைகள் இருக்கின்றனர். இதை வரிக்குவரி வேதமாக ஒப்பிப்பது நமது ஆசிரியப் பெருந்தகைகளில் பணியாகவும் உள்ளது.  

    இலயனல் ராபின்ஸ் (Lionel Robbins) அவர்களின் பொருளியல் விளக்கம் இவ்வாறு தரப்படுகிறது. ‘லயனல்’ என்று சொல்வது தமிழ் மரபல்லவே; எனவே ‘இலயனல்’ ஆவதைக் கவனிக்க! இதைப்போலவே ‘ரப்பர்’ என்பது ‘இரப்பர்’ ஆவதையும் கண்டு ரசிக்கலாம்! இந்த விக்கிபீடியா பாணி மொழிபெயர்ப்பு எரிச்சல் தரவல்லது. அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று ‘இலயனல் இராபின்சு’ என்பர். “விருப்பங்களோடும், கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயிலுகின்ற அறிவியல் பொருளியலாகும்”, (பக். 216, ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவம் – தமிழ் வழி)

   ஆங்கில வழியில் கீழ்க்கண்டவாறு உள்ளது. “Economics is the science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses”, (page: 52, Social Science, VII th Text book) 
  
   Scarce, scarcity ஆகிய சொற்களுக்கு பற்றாக்குறை என்ற எளிய மொழிபெயர்ப்பிருக்க ‘கிடைப்பருமை’ என்ற சொல் ஏன்? கிடைப்பதற்கு அரிய/ அருமையான என்ற பொருளில் ‘கிடைப்பருமை’ என்று குழந்தைகளுக்கு வழங்குவதன் நோக்கம் விளங்கவில்லை. எத்தனை ஆசிரியர்கள் இதன் பொருளை மாணவர்களுக்கு உணர்த்தினார்கள் என்ற அய்யமும் கூடவே எழுகிறது. 

   உழைப்பு பற்றிச் சொல்லும்போது, “அந்த உழைப்பு உடல் உழைப்பாகவோ, மன உழைப்பாகவோ இருக்கலாம். ஒரு சமையல்காரரின் உழைப்பு உடல் உழைப்பு ஆகும். ஒரு ஆசிரியரின் உழைப்பு மன உழைப்பு ஆகும். இன்பத்திற்காகச் செய்யப்படும் எந்த வேலையும் உழைப்பாகாது. உற்பத்திக் காரணியான உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி கூலி ஆகும்”, (பக். 219, மேலே குறிப்பிட்ட அதே பாடநூல்.)

   மேற்கண்ட பத்தி உணர்த்த வருவது என்ன? சமையற்காரரின் உழைப்பு வெறும் உடல் உழைப்பு மட்டுந்தானா? அதில் மனம் / மூளை / அறிவு செயல்படுவதே இல்லையா? உடலோ, மனமோ ஒத்துழைக்காமல் உழைப்பு சாத்தியமா? 

    ‘உற்பத்திக் காரணிகள்’ என்னும் இந்தப் பாடத்தில் உழைப்பு, மூலதனம் குறித்து பக்கம் பக்கமாக பேசப்படுகிறது. மருந்துக்குக் கூட கார்ல் மார்க்ஸ் பெயர் இல்லை. ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் ‘குடியரசு’ என்றொரு பாடம். கிரிக்கெட், கால்பந்து ஆட்டங்களைப் போல நமது அரசு இயங்க விதிமுறைகள் உண்டு. அதுவே அரசியல் அமைப்புச் சட்டம் என்றெல்லாம் விளக்குவார்கள். அம்பேத்கர் என்ற பெயர் எங்கும் இருக்காது. கார்ல் மார்க்ஸ் இன்றி மூலதனம் பற்றியும் அம்பேத்கர் இன்றி அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் பேசும் விளக்கும் நம்மவர்களின் திறமை மெச்சத்தக்கது! நரேந்திர மோடி, அருண் ஜேட்லி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அனுவாலியா போன்றோர் பொருளியல் அறிஞர்களாகத் தெரிகின்றபோது  அமர்த்யா சென் போன்றோர் பொருளியல் அறிஞர்களாக எப்படித் தெரியமுடியும்?

1 கருத்து:

Unknown சொன்னது…

நன்று .... உங்களின் பார்வையில் சிறந்த 10 வரலாற்று நூல்கள் கூறுங்கள்..

கருத்துரையிடுக