சனி, பிப்ரவரி 09, 2019

புள்ளிவிவரக் குவியல்கள் மட்டும் பொருளியலாகி விடுமா?




புள்ளிவிவரக் குவியல்கள் மட்டும் பொருளியலாகி விடுமா


 (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 03)

மு.சிவகுருநாதன்


 (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் -  பொருளியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள். ஆறாம் வகுப்பில் மூன்றாம் பருவத்தில் பொருளியல் பாடங்கள் இல்லை.)




   

    மணிலாவேர்க்கடலை (பக்.156, 9 பொருளியல்) என்று கலைச் சொல் பட்டியலில் இருக்கிறது. மணிலாவிற்கு வேருக்கும் தொடர்பில்லை; நிலக்கடலைதான்! வேர்க்கடலை அல்ல. ஆங்கில வழியில் 'ground nut' ((பக்.136) என்றுதானே எழுதுகிறார்கள். பழைய, புதியப் பாடநூல்களிலும் இப்பிழை தொடர்வது சரியல்ல.

    பாசன நீராதாரங்களில் கிணறுகள் 62% (பக்.155, 9 பொருளியல்) என திறந்த வெளிக் கிணறு படத்துடன் சொல்லப்படுகிறது. ஆழ்துளைக் கிணற்றையும் சேர்த்துதான் 62%. படம் போடும்போது இவற்றையும் கணக்கில் கொண்டாக வேண்டும்

    நிலத்தடி நீரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ எடுக்கும் அளவு கூடக்கூட நீர்மட்டம் கீழே செல்லும். ஒன்று நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறவும் வாய்ப்புண்டு”, (பக்.154) என்று சொல்லப்படுகிறது. ‘பாசனத்திற்கு உதவாத நீரைச் சற்று விளக்கினால் நன்று. நிலத்தடி நீர்மட்டம் குறையும்போது கடல்நீர் உட்புகுதல் நிகழ்கிறது. அதனால் நிலத்தடி குடிக்கவும் வேளாண்மைக்கும் பயன்படாத உவர்நீராக மாறுகிறது என்பதைச் சொல்லத் தயக்கமேன்

  மறைநீர் (பக்.154) கருத்தாக்கம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுப் பாராட்டலாம். உணவு, பணம் மற்றும் பானப் பயிர்களுக்கான மறைநீர் மற்றுமே இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. கார்கள் போன்ற எந்திர உற்பத்திகள், கோழிப்பண்ணைகள், நூற்புநெசவாலைகள், பின்னலாடைகள், தோல் பதனிடுதல் போன்றவற்றின் மறைநீர்ப் பயன்பாட்டைச் சுட்ட மறுப்பது என்ன வகையான அரசியல் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை

   பொதுவாக நெல் போன்ற பயிர்களுக்கு அதிக நீர் தேவையாக இருப்பதால் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய இங்கு பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் மறுபுறம் தொழிலக நீர்ப் பயன்பாடு குறித்த கள்ள மவுனமேவளர்ச்சிக் கொள்கையாகநிலைநாட்டப்படுகிறது. அதற்கு ஆதரவாகத்தானே பாடநூல்கள் இருக்க வேண்டும் என்கிற நியதி அறிவை மழுங்கடிக்கும் வேலை.  ‘வளம் குன்றா வேளாண்மையை (பக்.154) வலியுறுத்துவதில் உள்ள அக்கறை வளம் குன்றா வளர்ச்சியில் இல்லை என்பதையும் இங்கு உணரலாம்.

  “தஞ்சாவூர் எந்தப் பயிருக்குப் பெயர் பெற்றது? ஏன்? ஆராய்கஎன்றும்தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தின் நெல் விளைச்சல் குறித்தத் தரவுகளை சேகரிக்கவும்”, (பக்.158) என்றும் அடுத்தடுத்து ஒரே மாதிரியான செயல்பாடுகள் அளிக்க வேண்டிய தேவை என்ன
 
வேளாண் பயிர்களை உணவுப்பயிர்கள் மற்றும் உணவல்லாத பயிர்கள் எனப் பிரிக்கிறார்கள். இந்த வகைப்பாட்டைப் புரிந்து கொள்வோம். ஆனால் இரண்டு வகைகள் என்று சொல்லிவிட்டு பருப்பு வகைகள் என்று தனியே சொல்வது ஏன்?  முதலில் தெளிவான வகைப்பாட்டை உணர்த்திவிட்டல்லவா பிறகு விளக்க வேண்டும்? “தமிழகத்தின் முக்கிய உணவுப்பயிர்கள் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு. உணவல்லாத பயிர்களின் தென்னை முதலிடம் வகிக்கிறது”, (மீள் பார்வை: பக்.157)  இதனையொட்டி பயிற்சிகளில்இவற்றுள் உணவல்லாத பயிர் எது? () கம்பு () கேழ்வரகு () சோளம் () தென்னை”  (பக்.157) என்று வினா கேட்கப்படுகிறது. இது மாணவர்களிடம் என்ன வகையானப் புரிதலை ஏற்படுத்தும்? தானியங்கள் மட்டுமே உணவுப்பயிர்களா? தானியங்கள் தவிர்த்த பருப்பு வகைகள், எண்ணைய் வித்துகள் போன்றவை உணவல்லாத பயிர்கள் பட்டியலில்தான் வருமா

   “நெல் சாகுபடி தான் பெரிய அளவில் 30 விழுக்காடு மேற்கொள்ளப்படுகிறது. இதர உணவுப் பயிர்கள் 12 விழுக்காடு பரப்பிலும் பயிரிடப்படுகின்றன. சிறுதானிய சாகுபடி குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. கோளம் 7 விழுக்காடு நிலப்பரப்பிலும் கம்பு ஒரு விழுக்காடு பரப்பிலும் கேழ்வரகு 1.7 விழுக்காடு பரப்பிலும் இதர சிறுதானியங்கள் 6 விழுக்காடு பரப்பிலும் 2014 – 15 ஆண்டில் பயிரிடப்பட்டன”,   (பக்.154 & 155)  மேலே உள்ள பத்தியை விளக்கப்படமாக அளிக்க வேண்டிய தேவை ஒருபுறமாக இருக்க, இவைகளில் உள்ள குளறுபடிகளையும் களைய வேண்டியதும் அவசியம். இதர சிறு தானியங்கள் 12% என்கிறார்கள். பின்னால் சொல்லப்படும் சிறுதானியப் பரப்புகளின் கூடுதல் 15.7% வருகிறது

  இன்னும் ஒருபடி மேலேபோய் கலைச் சொல் பட்டியலில் சிறுதானியங்களுக்குவரகு, சாமை போன்ற தானியங்கள்’ (பக்.156) என்று விளக்கமளிக்கப்படுகிறது. ஏனிந்த குழப்பங்கள்? பாடத்தில் சொல்லப்படாத இந்த இரு சிறு தானியங்களைக் குறிப்பிட்டு எஞ்சியவை சிறு தானியங்களா என்கிற குழப்பத்தை உருவாக்க வேண்டுமா

     இதுகூடவா தெரியாது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம். புரியாதுதான். இங்கு பாடநூல்கள் தான் வேதப்புத்தகம். அதனைத் தாண்டிய வாசிப்பிற்கோ, பயன்பாட்டிற்கோ கல்வியில் இடமேயில்லை. பாடநூலுக்கு அடுத்தபடியாக இங்குநோட்ஸ்கள்தான் ஆகிரமிக்கின்றன. அவை பாடநூலைப் பிரதி செய்பவை. எனவேதான் பாடநூல்கள் கவனமுடன் தயாரிக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிக்கொண்டுள்ளோம்

   இப்பொருளியல் பாடத்தில் புள்ளி விவரங்கள் பத்தி, பத்தியாக அடுக்கப்படுகின்றன. (.கா. நிலப் பயன்பாட்டு வகைகள், நீர் ஆதாரங்கள், விளையும் பயிர்கள், பத்தாண்டு கால வேளாண் வளர்ச்சி, உற்பத்தித் திறன்) இவை படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் மிகுந்த அயர்ச்சியையும் சலிப்பையும் ஏற்படுத்துகின்றன. இவற்றைப் புள்ளியியல்  விளக்கப்படங்கள், பட்டியல்கள், அட்டவணை என்கிற வடிவங்களில் அளித்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது. அப்போது பக்கங்களும் மிச்சமாகும்; தெளிவும் கிடைக்கும். நீங்களே அவற்றை மாற்றிக் கொள்ளலாமே எதிர்க்கேள்வி கேட்க வேண்டாம். பாடநூல் எளிமை, தெளிவு, சுருக்கம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது நல்லது

    “காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மற்றும் கல்லணை கட்டப்பட்டுள்ளன”, (பக்.154) என்றுஉங்களுக்குத் தெரியுமா?’ பகுதியில் உள்ளது. பெரிய அணைகள் மட்டுமே பொதுப்புத்தியில் அணைகளாகத் தெரிகிறது. தமிழக நிலவியல் அமைப்பைக் கணக்கில் கொள்ளாமல் கர்நாடகம் போன்று தமிழகம் ஏன் அணைகளைக் கட்டவில்லை என்ற கேள்வியும் இங்கு தொடர்ந்து எழுப்பப்பட்டு  வருகிறது. சிறு அணைகள், தடுப்பணைகள் போன்றவற்றை நாம் ஏன் கணக்கில் எடுத்துகொள்வதில்ல்லை? மேலணை (முக்கொம்பு), கீழணை (அணைக்கரை) போன்றவற்றையும் தவிர்ப்பது நியாயமா என்று தெரியவில்லை

    வேளாண் தொழிலை விட்டு விலகும் மக்களின் புள்ளி விவரங்களை மட்டுமே பொருளாதாரப் பாடம் ஆகிவிடுமா? அதற்கான காரணிகளைச் சொல்ல, ஆய்வு செய்ய பொருளியலில் இடமில்லையா, என்ன? வெறும் எண்களையும் பண மதிப்பையும் அடுக்குவதுதான் பொருளாதாரப் பணியா என்றும் கேட்கத் தோன்றுகிறது.

   பொருளியல் இரண்டாம் பாடமாக 'இடம்பெயர்தல்' உள்ளது. இதுவும் வெறும் புள்ளிவிவரக் குவியலாக உள்ளது வருந்தத்தக்கது. கிராமம், வேளாண்மை  ஆகியவற்றை விட்டு வெளியேறும் பொருளியல் மற்றும் சமூகக்  காரணிகள் ஏன் பேசப்படவில்லை?
 
   இப்பாடத்தில் ஒரு வட்டவிளக்கப்படம் உள்ளது. ஒரு இந்திய நிலவரைபடம் கால் பக்கத்தில் இருக்கிறது. பொதுவாக நிலவரைபடங்களை முழுப்பக்க அளவில் இல்லாமல் கால், அரைப் பக்க அளவில் வெளியிடுவது அவற்றைச் சரிவர விளங்கிக்கொள்ளப் போதுமானதாக அமையாது.

   "2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு 7% கல்வியறிவு அற்றவர்கள் என்றும், 30% பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்தவர்கள் 10% என்றும், தொழில் பயிற்சி பெற்றவர்கள் 15% என்றும், பட்டப்படிப்பு படித்தவர்கள் 11% என்றும், தொழிற்கல்வி முடித்தவர்கள் 12% என்றும், முதுகலைப் பட்டதாரிகள் 11% உள்ளனர்  என்றும்  இவ்வாய்வு தெளிவுபடுத்துகிறது" (பக்.162)

    மேலே கண்ட பத்தியில் மொத்தக் கல்வித் தகுதி 96% வருகிறது. எஞ்சிய 4% பிற தகுதிகள் உடையவர்கள் அல்லது தகவல் அளிக்காதவர்கள்  என்று  என்றாவது சொல்லப்பட்டிருக்க வேண்டுமல்லவா!

      ஒரு நாட்டிற்குள் நடைபெறும் இடப்பெயர்வை  பாடம் பேசுகிறது. மெக்சிகோ இடப்பெயர்வு பாதை பற்றிச் சொல்லும்போது அகதிகள் பற்றியும் சொல்லியிருக்கலாம். அமெரிக்க அரசின் செயல்பாடுகளையும் இணைக்கலாம். இடப்பெயர்வின் சமூகப் பொருளியல் விளைவுகள் சரிவர ஆய்வுகள் செய்யப்படவில்லை.

    "ஏழ்மை என்பது தொடர் சிக்கலாகத்  திகழ்ந்து வருகிறது" (பக்.162) இது பெருமைப்படும் செய்தியாகி விட்டதோ!
 
    தொழில் பயிற்சி (தொழிற்பயிற்சி), தொழில் கல்வி (தொழிற்கல்வி)  என்று எப்போதும் பிரித்தெழுபவர்கள் ‘பலணாடு’ என்று எழுதுவதை என்னவென்பது?

     "தமிழ்நாடு இடம்பெயர்தலுக்கான ஒரு வரலாற்றை உடையது.
வியாபாரம், வணிகம், வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் பலணாடு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்", (பக்.161)

   இப்பத்தி ஆங்கில வழிப்பாடநூலில் கீழ்க்கண்டவாறு உள்ளது.

   "Tamil Nadu has a history of migration and people have moved for various reasons such as trade,  business, employment etc. to various counties". (page: 142)

    'பலணாடு நாடுகள்' என்னே அருமையான சொல்லாட்சி! பாராட்ட சொற்களே தமிழில் கிடைக்க வில்லையே! மொழியாக்கமே கற்றலுக்குப் பெருந்தடையாக இருப்பதைப் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். இப்பகுதியில் இன்னும் தெளிவான மொழியாக்க உதாரணங்களுக்காக (?!) இந்தப் பத்தி தரப்படுகிறது.
   
     "The growth processes have also created spatial inequalities, by leading to enclaves of growth. The migration patterns observed in a developing society such as ours correspond to these inequalities (economic, social, spatial etc.) created by the development processes". (page: 143)

    "வளர்ச்சிப் போக்கானது, வளர்ச்சி மண்டலங்களால் நிலம் சார்ந்த சமத்துவமின்மையை  உருவாக்கியுள்ளது. இந்திய போன்ற வளர்ச்சியடையும் பொருளாதார சமூகத்தில் காணப்படும் இடப்பெயர்வுகளை  வளர்ச்சிப் போக்குகளால் உருவாகியுள்ள பொருளாதார, சமூக மற்றும் இடம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் தீர்மானிக்கின்றன",  (பக். 163)

                                                (இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக