வியாழன், பிப்ரவரி 28, 2019

இந்நிலை என்றுதான் மாறுமோ?


இந்நிலை என்றுதான் மாறுமோ?

மு.சிவகுருநாதன்





“வரலாறு படைக்க வரலாறு படி…
புவியை ஆள… புவியியல் படி”,



                 என்ற முழக்கத்துடன் பத்தாம் வகுப்பு ‘மெல்லக் கற்போருக்கான அடைவு மேம்பாட்டுப் பயிற்சிக் கட்டகம் (SLAP – Slow Learners Achievement Programme – 2018-2019)  வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு இக்கட்டகத்தைத் தயாரித்துள்ளது. (‘சமக்ரா சிக்‌ஷா’ என்ற வாயில் நுழையாத ஒன்றைத்தான்  இவ்வாறு சொல்கிறார்கள்.) ஆனால் வரலாற்றைத் திரிப்பது, சமூக இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது பற்றி இவர்களுக்கு துளியும் கவலையில்லை.


        1920 களின் இறுதியிலேயே சாதிப் பெயரை நீக்குவதை ஒரு சமூக இயக்கமாக முன்னெடுத்த சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியாரை 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் சாதிப்பெயருடன் சேர்த்து எழுதி இழிவுபடுத்தியது; கொச்சைப்படுத்தியது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு  பாடநூலிருந்து சாதிப்பெயர் 2016 இல் நீக்கப்பட்டது. 




    2019 இல் தயாரிக்கும் இந்தக் கட்டகத்திலும் சாதிப்பெயர் (பக்.04) இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுவது ஏன்? பெரியார் மீது இவ்வளவு காழ்ப்பு ஏன்? சாதியை, சாதி வெறியை (இன்னும் பல வெறிகளையும்) தூக்கியெறிந்த ஒருவரின் மீது மீண்டும் மீண்டும் சாதியை இணைத்துக் கொச்சைப்படுத்துவது ஏன்? பாடநூலே திருந்தியபிறகு பயிற்சிக் கட்டகம் தயாரிப்போர் பழைய பதிப்பைப் பிடித்துக்கொண்டு தொங்குவது ஏன்? திருத்தப்பட்ட செய்திகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க இந்த கல்வித்துறையும் ஆசிரியர்களும் ஒன்றுமே செய்வதில்லையே, ஏன்? இது புதிய பாடநூற்களிலும் இந்நிலை தொடர்வது அவலம். 


     “மின்னியல் கழிவு என்றால் என்ன?” (பக்.12) என்ற வினாவும் இதில் இடம்பெற்றுள்ளது. இதுவும் பாடநூலில் ‘மின்னணுவியல்’ என்று திருத்தம் செய்யப்பட்ட ஒன்று. மின்னியல் கழிவுகள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்படுபவை; மாறாக மின்னணுவியல் கழிவுகள் மறுசுழற்சி செய்ய முடியாதவை. 


  தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராமல் கதவை மூடிக்கொள்வது கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு அழகல்ல; அறமுமல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக