புதன், செப்டம்பர் 18, 2019

பொதுத்தேர்வு வன்முறைகள்: சில பார்வைகள்


பொதுத்தேர்வு வன்முறைகள்: சில பார்வைகள்

மு.சிவகுருநாதன்

        இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்தையொட்டி 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இக்கல்வியாண்டிலிருந்தே (2019-2020) பொதுத்தேர்வுகள் நடத்தப்போவதாக தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு மத்திய அரசின் இந்தத் திருத்தத்தை பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டபோதும் நாங்கள் ஏற்கவில்லை என்று ஊடகங்களில் முழங்கினர். ஆனால் சில மாதங்களில் முடிவில் ஏன் மாற்றம் என்பதை யாரும் சொல்லப் போவதில்லை.  

      தமிழக அரசின் கல்வித்துறையில் இம்மாதிரியான பல அறிவிப்புகள் நேரடியாக இல்லாமல் சமூக வலைத்தள ஊடகங்கள் வழியே முதலில் கசிய விடப்படுகின்றன. உடனே “இல்லை, இல்லை” என்று அரசுத்தரப்பு மறுக்கிறது; அல்லது மறுப்பதைப் போல நடிக்கிறது. சில நாள்களில் அந்த அறிவிப்புகள் அரசிடமிருந்து நேரடியாக வெளிவருகிறது. 10 ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள் என்ற முடிவு இவ்வாறுதான் நடந்தது. +1, +2 பாடங்களை  ஐந்தாகக் குறைக்கும் முடிவும் இப்படித்தான் மறுக்கப்பட்டு பிறகு உண்மையாகியுள்ளது. முதலில் மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்று என்று சொல்லி, இப்போது பிற பாடங்களில் ஒன்று என்றாகியுள்ளது. 

     கல்வியை காவிமயப்படுத்துவது இந்துத்துவவாதிகள் பல்வேறு செயல்திட்டங்களுள் முதன்மையான ஒன்று. அதுவும் தமிழ்நாட்டில் காணப்படும் சிறப்புத்தன்மைகளை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் அமர்வது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தும் ஜெ.ஜெயலலிதா மறைவிற்குப் பின் அ.இ.அ.தி.மு.க. கட்சியையும் ஆட்சியையும் மறைமுகமாகக் கைப்பற்றி தங்களது திட்டங்களை மிகவும் வெளிப்படையாகச் செயல்படுத்தி வருகின்றனர். பிற துறைகளைக் காட்டிலும் கல்வித்துறையைக் கைப்பற்றுவதும், அதை இந்துமயப்படுத்துவதும் அவர்களது வெறுப்பரசியலுக்கும் எதிர்காலத்திற்கும் உதவுமென்பதால் இவ்வேலைகள் விரைவாக நடக்கின்றன.

    5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு தேவையா என்றால் தேவையில்லை என்று உடனேச் சொல்லிவிடமுடியும். இதன்மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் மற்றும் உடலியல் நெருக்கடிகள் ஏராளம். இதை அரசுகள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை? புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவில் 3 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று சொல்கிறது. இதையும் இவர்கள் அப்படியே நடைமுறைப் படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  

    பொதுத்தேர்வுகள் என்பது அரசு மற்றும் கல்வித்துறையின் செயல்பாடு ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெரும்பாலானோரின் ஆதரவுத்தளத்தைப் பெற்றுள்ளது. ஆசிரியர்களிடமிருந்து வரும் எதிர்ப்பு என்பது மிகக்குறைந்த அளவேயாகும். பெற்றோர்களும் பெரும்பாலும் எதிர்ப்பதில்லை. பாவம் குழந்தைகள்!

   கல்வியின் அடிப்படையாக இன்று தேர்வு மாறியிருக்கிறது. மக்களிடமிருந்து கடவுளை எப்படி அகற்றமுடியாதோ, அதைப்போல கல்வியிலிருந்து தேர்வை அகற்ற முடியாது  என்கிற நிலை உருவாகியுள்ளது. 

    பெரும்பாலான ஆசிரியர்கள் பொதுத்தேர்வுகளுக்கு ஆதரவான நிலையே எடுக்கின்றனர். கல்வித்துறையும் கல்வி அலுவலர்களும் 100% தேர்ச்சி அளிப்பவரே சிறந்த ஆசிரியர்கள் என்று சொல்கின்றனர். அந்த வேலையை மட்டும் ஒழுங்காக செய், என்ற மறைமுக நெருக்கடிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகின்றன. 

     தேர்வுகள் இல்லாமல் எந்த வகுப்பும் இல்லை; பொதுத்தேர்வுகள் வைப்பதுதான் சிக்கல். இன்று Pre KG, LKG, UKG தொடங்கி 1 முதல் 9 வகுப்புகள் முடிய அனைத்திற்கு தேர்வுகள் உண்டு. இவை வாய்மொழியாகவோ அல்லது எழுத்துத் தேர்வாக இருக்கும்.  1 முதல் 9 வகுப்புகள் முடிய ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு (CCE) முறையிலும் 10, +1, +2 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பதுதான் சென்ற கல்வியாண்டு (2018-2019) முடிய இருந்த நிலை. இவ்வாண்டு (2019-2020) ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை உண்டா, இல்லையா என்பதைக்கூட இதுவரையில் அரசு முறைப்படி தெரிவிக்கவில்லை. ஆனால் பாடநூல்கள் மட்டும் முழுமையாக வழங்கப்பட்டன. முதல் பருவத் தேர்வு வினாத்தாளில் 60 மதிப்பெண்களுக்குப் பதிலாக 100 என்று மாறியதன் மூலம் இத்தேர்வு காலாண்டுத்தேர்வாக மாறியுள்ளது. இனி பருவமுறை இல்லை என்பது புரிதல். இதே நிலைதானே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும்! யாரறிவார்?  

    10, +1, +2 ஆகிய வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி பல ஆணைகளை வெளியிட்டனர். ஒழிக்கப்பட்ட இரண்டாம் தாளுக்கும் மாதிரி வெளியிட்டவர்கள், ஒன்பதாம் வகுப்பு குறித்து வாய் திறக்காமைக்கு  காரணம் உண்டு. அவ்வகுப்பிற்குப் பொதுத்தேர்வு இல்லை என்பதே அது. 

   இங்கு கல்வி குழந்தைகள் மையமோ, ஆசிரியர்கள் மையமோ இல்லை; மாறாக பொதுத்தேர்வுகள் மையமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியில்  இது வரையில் பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்ற 10, +1, +2 ஆகிய வகுப்புகளை மட்டும் நன்றாக கவனித்தால் போதும் என்றும் பிற வகுப்புகளைக் கண்டு கொள்ள வேண்டாம் என்ற சூழலே இன்றைய கல்வியைச் சீரழிக்கிறது. 

     இந்த பொதுத்தேர்வுகள் பல நிலைகளில் செயல்படுகிறது. பொதுத்தேர்வுகள் உள்ள 8, 10, +2 வகுப்புகளுக்கு எளிமையான பாடமும்,  இல்லாத 7, 9, +1 ஆகிய வகுப்புகளுக்கு கடினப் பாடமும் என்பது அந்தக் காலத்திலிருந்து எழுதப்படாத விதி. பொதுத் தேர்வுகளில் முழுத்தேர்ச்சி தரக்கூடிய ஆசிரியர்களும் பள்ளிகளும் தரமானவையாக இங்கு அடையாளம் காணப்படுகின்றன. 

     40 ஆண்டுகளாக +1 பாடங்கள் பொதுத்தேர்வுகள் இன்மையால் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதால் +1 க்கும் பொதுத்தேர்வு முறை அமலானது. ‘நீட்’ தேர்வுகளில் +1 பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுவதால்தான் இம்முறையைக் கொண்டு வந்தனர். எப்படி ‘நீட்’டுக்கு தடை பெற்றுவிடுவோம் என்று மாணவர்களை ஏமாற்றியதைப்போல +1 பொதுத்தேர்வுகள் இருக்காது என்று 40 ஆண்டுகள் அனுபவத்தில் இருந்த காரணத்தால் +1 தேர்ச்சி விழுக்காடும் குறைந்தது.

    அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தோல்வியுற்ற மாணவர்களை பள்ளியைவிட்டு வெளியேற்றின. பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. + வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டு. ஆனால் மேற்படிப்புகளுக்கு இம்மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே ‘நீட்’டுக்காக மட்டுமே +1 பொதுத்தேர்வுகள் என்றானது. 

   பொதுத்தேர்வுகள் இல்லாத வகுப்புகளில் (எ.கா: 9) என்ன மாதிரியான முறை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை என்று அரசும் கல்வித்துறையும் நினைக்கும்போது ஆசிரியர்கள் மட்டும் அவ்வகுப்புகளில் எத்தகைய கற்றல் கற்பித்தல் பணிகளை மெற்கொள்வார்? இந்த வகுப்புகள் ஏதோ பெயருக்கு இயங்க, அல்லது பொதுத்தேர்வு பாடங்களைப் படிக்கவோ செய்கின்றன. 

    மேலும் புதிய திட்டங்கள், கற்பிக்கும் முறைகள் எதையும் பொதுத்தேர்வுகள் உள்ள வகுப்புகளுக்கு அரசு அறிமுகம் செய்வதில்லை. அந்த வகுப்புகள் சோதனை எலிகளைப் போன்றவை. 90 நிமிட பாடவேளைகள், 9, 12, 15 தலைப்புகளில் பாடக்குறிப்புகள், ஆசிரியர்கள் சொந்தமாக எதுவும் செய்திடக்கூடாது என்பதை வலியுறுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகள், பதிவேடுகள்  என்ற அதிகாரத்துவ மிரட்டல்கள் எதுவும் 10, +1, +2 ஆகிய வகுப்புகளுக்கு இல்லை என்பதிலிருந்து இதன் தாக்கத்தை உணரலாம். எனவே பாடநூல் ‘நோட்ஸ்களுக்கு’ இணையாக பாடக்குறிப்பு ‘நோட்ஸ்கள்’ விற்பனையில் உள்ளன. 

    எனவே பெற்றோர்களும் பொதுத்தேர்வுகள் வைப்பதுதான் சரி என்கிற நிலைக்கு வந்துவிடுகின்றனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் பாடநூல்கள் உண்டு. அவற்றைக் கொண்டு மாணவர்களுக்கு முறையாகக் கற்பிக்கவும், பெற வேண்டிய கற்றல் அடைவுகளை ஏதோ ஒரு வழியில் (பெரும்பாலும் எழுத்துத்தேர்வுகள்) சோதனை செய்வது என்ற நிலையும் சரிவர நடப்பதைக் கண்காணிக்காமல் பொதுத் தேர்வுகளை மட்டும் நம்புவது நியாயமானது அல்ல. தனியார், உதவிபெறும், ஏன் அரசுப்பள்ளிகளில் கூட ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடங்கள் சொல்லித்தரப் படுவதில்லை என்று உத்தரவாதமளிக்க முடியுமா? இனி இந்நிலை 4, 7 ஆகிய வகுப்புகளுக்குத் தொடர்வதைத் தவிர வேறு எந்தப் புரட்சியும் கல்வியில் நடந்திடப் போவதில்லை.

    ஒவ்வொரு வகுப்பிலும் அந்த வகுப்பிற்குரிய பாடங்களை மட்டும் கற்பதையும் கற்ப்பிக்கப்படுதலையும் உறுதி செய்ய இயலாத கல்வித்துறை பொதுத்தேர்வுகள் வைத்துக் குழந்தைகளை வதைப்பதில் பலனில்லை. இதனால் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுதேர்வு நடத்தமுடியுமா, என்ன?

     கல்வியுரிமை எனும் நூறாண்டுக் கனவை ‘மநு’தர்ம சூழ்ச்சியால் கலைத்துவிடக்கூடாது. 5, 8 வகுப்புகளில் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தேர்ச்சியின்மை அளிப்பதில்லை என்பதெல்லாம் அபத்தம். அந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்தானே செய்யும்! எளிய அடித்தட்டுக் குழந்தைகள் கல்வி பெறக்கூடாது என்ற இந்துத்துவ வேட்கைக்கு திராவிட இயக்கத்தின் கிளைகளுள் ஒன்று பலியாகலாமா? 

      தேர்வுகள் எளிமையாகவும் அனைவரும் பங்கேற்கும் வண்ணமும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு பள்ளித் தேர்வுகளும் பொதுத்தேர்வுகளும்  போட்டித்தேர்வுகளாக மாறும் வன்முறையும் அரங்கேறுகிறது. HOT (Higher Order Thinking) என்ற பெயரில் கடினமான போட்டித்தேர்வு வினாக்களைப் பள்ளித் தேர்வுகளிலும் கேட்கும் நடைமுறை மிகவும் அபாயகரமானது. மேலும் கற்றல் அடைவுகள், அடைவுச்சோதனைகள் என்ற பெயர்களில் இவற்றை மாணவர்களிடம் நுழைத்து உரிய திறன் அல்லது தகுதி பெறவில்லை என ஒதுக்கும் அநியாயமும் நடக்கிறது.
  
   தமிழக அரசு மாணவர்களுக்கு எண்ணற்ற விலையில்லாப் பொருள்களை வழங்கி வருகிறது. ஆனால் மாணவர்கள் விரும்பாத, அவர்கள் கேட்காத ஒன்றான தேர்வை நடத்துவதற்கு அனைத்து வகுப்பிற்கும் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பது ஆகப் பெரிய கொடுமை.  
     பொதுத்தேர்வுகள் என்றால் மாணவர்களைத் தொடரும் வன்முறைக்கு எல்லையில்லை. பொதுவாக குழந்தைகளைப் பார்க்கும் எவரும் அக்குழந்தையின் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளி ஆகியவற்றை வினவுவது வழக்கம். 10, +1, +2 என்று சொன்னால் உறவினர்கள் ‘பொதுத் தேர்வாச்சே’ என்பார்கள். உடனே அக்குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கத் தொடங்கிவிடுவர். இனி 5, 8 வகுப்புக் குழந்தைகளும் இக்கொடுமைகளுக்கு ஆட்படுவர். ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், குடும்பத்தார் தொந்தரவுகள் போதாதென்று இன்னும் பலரும் பொதுத்தேர்வுகளை மையமாகக் கொண்டு கிளம்பிவிடுகின்றனர்.

      காட்சியூடகங்கள், அச்சு ஊடகங்கள், கல்லூரிகளுக்கு ஆள் பிடிப்போர், சேவை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி, அரிமா சங்கங்கள் என வரிசையாக அணிவகுத்து நிற்கின்றனர். இவர்கள் எப்படிப் பொதுத்தேர்வுகளை எதிர்கொண்டார்களோ தெரியவில்லை. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வது என்று எதோ ஒப்புக்குக் கிளம்பி விடுகின்றனர். இதில் முன்னாள், இந்நாள் ஆட்சிப்பணி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என பலர் உள்ளனர். இவர்கள் பொதுத்தேர்வை ‘போர்’ ஆகக் கட்டமைத்து வெற்றிக்கூச்சல் போடுகின்றனர். இதையெல்லாம் தாண்டி மாணவர்கள் படித்து பொதுத்தேர்வில் தங்களை நிருபிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் தற்கொலை முடிவை நாடும் அவலமும் இதனுள் அடங்கியிருக்கிறது.

    அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை ‘நீட்’ தகர்த்துள்ளது. இன்னும் போட்டித் தேர்வுகள் மூலம் இந்திய ஆட்சிப்பணிக் கனவும் விதைக்கப்படுகிறது. அண்மையில் இரண்டு இ.ஆ.ப. அலுவலர்கள் பதவி விலகியுள்ளனர். ஆளும் வர்க்கத்திற்கு அடிமையாக மாறலாமே தவிர இதன் மூலம் மக்கள் பணி செய்திட இயலாது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. 

    பெரும்பாலான ஆசிரியர்கள் பொதுத்தேர்வுகளுக்கு ஆதரவாகவும் மாற்றுச் சிந்தனைகளின்றி மரபான கல்விமுறைகளை மூடநம்பிக்கையாய் ஏற்றுக்கொண்டுள்ளதாலும், தங்களுடைய ஊதியப் பிரச்சினைகளுக்கே ஒருங்கிணைந்துப் போராட துணியாத நிலையில் இந்த மோசடிகளுக்கெதிராக போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பெற்றோர்களும் அதிகம் திணிப்பதும், மனப்பாட மதிப்பெண்களும் கல்வி என்ற மனநிலையிலும் ஏதேனும் குறுக்கு வழியிலாவது வெல்லத் துடிக்கும் மனப்பாங்கு உடையவர்களாக மாறியிருப்பது இன்றைய கல்விமுறையின் விளைச்சலாகவே அவதானிக்க முடியும். மாணவர்கள் போராட இயலாதவர்கள் மட்டுமல்லாமல், அவர்களது குரலை யாரும் செவிமெடுப்பதில்லை என்பதே உண்மை. இன்று அவர்களுக்காக யார் குரல் கொடுப்பது? மிகவும் குறைவான எண்ணிக்கையிலான் ஆசிரியர்களும் குழந்தை நல ஆர்வலர்களும் என்ன செய்திட முடியும்? இக்குரல்கள் அதிகாரத்தின் மூடப்பட்ட செவிகளை எட்டப்போவதில்லை.   
    இன்றுள்ள நிலவரத்தை உற்றுநோக்கும்போது மாநில அரசிற்குள்ள இயல்பான உரிமைகளைக்கூட விட்டுக்கொடுத்து, மத்திய அரசு இடும் உத்தரவை அப்படியே அமல்படுத்துவது என்ற நிலை தொடர்கிறது. இந்நிலையில் புதிய தேசிய கல்விக்கொள்கையிலுள்ள ஒருசில அம்சங்கள் அமலானால்கூட தமிழகம் மிக மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கும். இந்நிலை நீடித்தால் நமது மாநிலத்தில் கல்விநிலை பீகாருக்கு அருகில் செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக