புதிய பாடநூல்களும் ஆசிரியர்களும்
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான
விமர்சனத் தொடர்: 43)
புதிய பாடநூற்கள் மாணவர்களிடம் எத்தகைய
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைவிட அவை ஆசிரியர்களிடம் எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறது
என்பதை அறிவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.
ஆசிரியர்களிடம் தேடல், வாசிப்பு அடியோடு
குறைந்து போய்விட்டது. இதற்காக யாரும் வருத்தமடைய வேண்டாம். உண்மை நிலை இதுதான்.
சரியான ஊதியமில்லாத சாமான்யர்களை வாசிக்கச் செலவளிப்பதைவிட ஆசிரியர்களின்
வாசிப்புச் செலவு முற்றிலும் குறைவு. அலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள்தான்
அறிவுப்புலம் என்ற மூடநம்பிக்கையும் உருவாகியிருக்கிறது.
புதிய பாடநூல்களுக்கு அளிக்கப்படும்
பயிற்சிக் கருத்தாளர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் நம்பியிருக்கின்றனர். அவர்கள் வழக்கம்போல
எங்களுக்கு எதுவும் சொல்லித் தரவில்லை, கருத்தாளர் பயிற்சிக்கு அழைத்தார்கள் என்று
சென்று வந்தோம் என வழக்கமான பல்லவியைப் பாடுவதே வாடிக்கையாகிவிட்டது. இப்போது
யாருக்கும் ஆழ்ந்து வாசிக்கவோ, சிந்திக்கவோ நேரமில்லை. யாராவது சுருக்கமாகத்
தட்டில் சாப்பாடு போல் எடுத்து வைக்கவேண்டும். எனவே நோட்ஸ்கள், கட்டகங்கள்,
பாடக்குறிப்புகள், விடைக்குறிப்புகள் என எவற்றையும் யாராவது தயாரித்து அளிக்க
வேண்டும். அவை சரியா, தவறா என்றுக்கூட யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை.
ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது,
என்கிற தடையைப் போல இங்கு நோட்ஸ்களுக்குத் தடை போட முடியுமா? முடிந்தால் பெரும்பாலான ஆசிரியர்களின் கை ஒடிந்துவிடும்! நோட்சையாவது
விட்டுத்தள்ளுங்கள்; ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தித் தொலைக்கட்டும்.
பாடக்குறிப்புகளுக்கு அண்மைக்காலமாக நோட்ஸ்கள் அதிகரித்திருப்பது எதனை
உணர்த்துகிறது? இது கல்வியின் பேரவலமல்லவா!
புதிய
பாடநூல்களை யாரும் முழுமையாக வாசித்துக்
கற்றல், கற்பித்தல் செயல்களில் இன்று ஈடுபட வேண்டிய அவசியமில்லை. பாட நோட்ஸ்கள்,
பாடக்குறிப்பு நோட்ஸ்கள், விடைக்குறிப்புகள் என தனித்தனியே வந்துவிடுவதால் ஆசிரியர்களும்
மாணவர்களும் பாடநூலைக்கூடப் படிக்க வேண்டியதில்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. இது
கல்விக்கு உகந்ததல்ல.
இதுதான் இன்றைய கள யதார்த்தம். சில
விதிவிலக்குகள் இருக்கலாம். ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு
விடைக் குறிப்புகளைக் கொண்டு இதனை நன்கு உணரலாம். இது ஒரு எடுத்துக்காட்டு
மட்டுமே. சமூக அறிவியல் பாடம் என்றில்லை; அனைத்துப் பாடங்களுக்கும் இதுதான் நிலை.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத்தேர்வு
வினாத்தாளுக்குரிய விடைகளாக சமூக வலைத்தளங்களில் கீழ்க்கண்ட விடைகள் பகிரப்பட்டன. இதைக்கொண்டு
தமிழகம் முழுதுமோ அல்லது மாவட்டத்திலோ பலர் திருத்தும் பணிகளை முடித்திருப்பர்.
பாடநூலில் பிழைகள் இருப்பது ஒருபுறம்; நாம் அதனைத் தொடர்ந்து சுட்டிவருகிறோம்.
இருக்கின்ற பாடநூலைச் சரியாக வாசித்தாலே விடைக்குறிப்பிலுள்ள பல பிழைகளைக் கடக்க
முடியும். என்ன செய்வது? உலகம் அவசரகதியில்
ஓடிக்கொண்டிருக்கிறது? நாம் காலத்திற்கொவ்வாத கருத்துகளைத் திரும்பத்
திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்?
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத்தேர்வு
ஒன்றின் விடைக்குறிப்புகள்:
சரியான விடையைத் தேர்வு செய்க.
1.A
2.D
3.C
4.B
5.A
6.B
7.A
8.D
9.C
10.C
11.D
12.A
13.D
14.D
29. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.ஹைரோகிளிப்பிக்
2.கீழடுக்கு
3.நேரடி
4.ஜனவரி, 25
5.புது டெல்லி
30. பொருத்துக
1.அச்சூலியன்
2.எகிப்திய அரசர்
3.மொகஞ்சதாரோ
4.கல்வெட்டு குறிப்பு
5.முதல் தீர்த்தங்கரர்
31. பொருத்துக.
1.சிமா
2.பனியாற்றின் செயல்பாடு
3.கடல் செயல்பாடு
4.மழை மறைவு பிரதேசம்
5.ஆஸ்திரேலியா
3. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ____________ ஆவர்.
அ) ஹோமோ ஹேபிலிஸ்
ஆ) ஹோமோ எரக்டஸ்
இ) ஹோமோ சேபியன்ஸ்
ஈ) நியாண்டர்தால் மனிதன் (பக்.14)
என்ற வினா வரலாறு முதல்பாடத்தில்
மூன்றாவது வினா. இதுவே வினாத்தாளில் முதல் வினாவாக இருக்கிறது. முதலில் இந்த
வினாவே மிக அபத்தமாக உள்ளது. குரங்கிலிருந்து மனிதன் என்பதைப்போல என்பதைப் போல
இதுவும் இருக்கிறது. இம்மாதிரி வினா கேட்பது பொருளற்றது.
முதலில் பாடநூல் சொல்பவற்றைக் கொஞ்சம் கவனிப்போம்.
“தொல்பழங்காலம்: ஆஸ்ட்ராலோபித்திஸைனிலிருந்து ஹோமோ
எரக்டஸ் வழியாக ஹோமோ சேப்பியனின் வளர்ச்சி” (பக்.03)
என்ற தலைப்பின் வழியாக பாடநூல் பல்வேறு கருத்துகளை உரைக்கிறது.
“மனிதர்களின் மூதாதையர்கள் ஹோமினின்
என்றழைக்கப் படுகின்றனர். இவர்களின் தோற்றம் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவினார்கள் என்ற கருத்து அறிஞர்களால் ஏற்கப்பட்டுள்ளது. இந்த ஹோமோனின்கள் இனம்
சுமார் 7 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது”, (பக்.03, 04)
“உடற்கூறு அடிப்படையில் மனித மூதாதையர்கள் பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள்.
ஹோமினிட்: நவீன மற்றும் அழிந்து போன அனைத்து
பெருங்குரங்கு இனங்களும் (கிரேட் ஏப்ஸ்) ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன. இது மனிதர்களையும் உள்ளடக்கிய வகையாகும்.
ஹோமினின் எனப்படும் விலங்கியல் பழங்குடி
இனம் மனித மூதாதையர்களின் உறவினர்களையும் அதன் தொடர்புடைய நவீன மனிதர்களையும் (ஹோமோ சேப்பியன்ஸ்) குறிக்கும். இதில் நியாண்டர்தால் இனம், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெபிலிஸ், ஆஸ்ட்ரலோபித்திசைன்கள்
ஆகியன அடங்கும். இப்பழங்குடி இனத்தில் மனித இனம் மட்டுமே இன்றளவும்
வாழ்கின்றது. இந்த இனம் நிமிர்ந்து இரண்டு
கால்களால் நடப்பதாகும். இந்த இனத்திற்கு பெரிய மூளை உண்டு. இவை கருவிகளைப்
பயன்படுத்தும். இவற்றில் சில ஆஸ்ட்ரலோபித்திசைன்கள்
தகவல் பரிமாறும் திறன்பெற்றவை. கொரில்லா எனப்படும் மனிதக் குரங்குகள்
இப்பழங்குடியில் அடங்காது.
ஆப்பிரிக்காவில் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த ஹோமோ ஹெபிலிஸ் என்ற இனம்தான் முதன்முதலில் கருவிகள் செய்த மனித மூதாதையர் இனமாகும். சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் என்ற இனம் உருவானது. இந்த இனம் கைக்கோடரிகளைச் செய்தது. சுமார் 2 மற்றும் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் இந்த இனம் ஆப்பிரிக்கா, ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது”. (பக். 04)
“உடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ் என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள்
(அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். இந்த நவீன மனிதர்கள்
சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது. சிம்பன்சி மற்றும்
பிக்மி சிம்பன்சி (பொனபோ) வகை இனங்கள் நமக்கு நெருக்கமான,
தற்போதும் உயிர்வாழும் உயிரினங்களாகும்.
தொல்பழங்காலப் பண்பாடுகள் மனித மூதாதையரின் புதைபடிவ எலும்புகள் ஹோமோ
எபிலிஸ், ஹோமோ எரக்டஸ், நியாண்டர்தாலென்சிஸ் என்று பல்வேறு இனங்களாகப்
பிரிக்கப்படும் அதே சமயத்தில், கற்கருவிகளின் பண்பாடுகள் அடிப்படையில்
தொடக்க கால கற்கருவிகள் சேர்க்கை, ஓல்டோவான் தொழில்நுட்பம், கீழ் (Lower),
இடை (Middle), மேல் (Upper) பழங்கற்கால (Palaeolithic) பண்பாடுகள் என்றும்
இடைக்கற்காலப் (Mesolithic) பண்பாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன”.
(பக்.04)
“தற்காலத்திற்கு சுமார் 3,98,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின்
கற்கருவித் தொழில்நுட்பத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தக்
காலகட்டத்தில் ஹோமோ எரக்டஸ் இனம் வாழ்ந்து வந்தது. உடற்கூறியல் ரீதியாக
நவீன மனிதர்கள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக்
கூறப்படுகிறது”.
“மனித மூதாதையர்கள் (ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள்) சுத்தியல் கற்களை
பயன்படுத்தின”,
“ ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ் ஆகிய மனித மூதாதையர்களின் பண்பாடு
கீழ்ப் பழங்காலப் பண்பாடு என்று குறிக்கப்படுகிறது”. (பக்.05)
“தற்காலத்திற்கு சுமார் 3,98,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின்
கற்கருவித் தொழில்நுட்பத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தக்
காலகட்டத்தில் ஹோமோ எரக்டஸ் இனம் வாழ்ந்து வந்தது. உடற்கூறியல் ரீதியாக
நவீன மனிதர்கள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக்
கூறப்படுகிறது”. (பக்.05)
தொல்பழங்காலத் தமிழகம் கீழ்ப்
பழங்கற்காலப் பண்பாடு ஹோமினின் என அழைக்கப்படும் மனித மூதாதை இனத்தால்
உருவாக்கப்பட்ட கற்காலக் கருவிகளிலேயே காலத்தால் முந்தைய பகுதியைச் சேர்ந்த
கற்கருவிகள் தமிழ்நாட்டில்தான் உருவாக்கப்பட்டன”.
“கொசஸ்தலையாறு உலகில் மனித மூதாதையர்கள் வசித்த மிக முக்கியமான
இடங்களில் ஒன்றாகும். இங்கு வாழ்ந்த மனித மூதாதையர்கள் ஹோமோ எரக்டஸ்
என்ற வகையைச் சேர்ந்தவர்கள்”. (பக்.08)
மனிதப் பரிணாமத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள நான் பரிந்துரைப்பது சு.கி.
ஜெயகரன் எழுதிய ‘மூதாதையரைத் தேடி…’ எனும் நூலாகும். (காலச்சுவடு வெளியீடு) இந்நூலில்
சொல்லப்பட்ட சில கருத்துகள்:
ஆஸ்ட்ரேலோபிதஸீன், ஹோமோ ஹெபிலைன், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெய்டெல்பெர்க்கென்ஸிஸ்
ஆகியன தற்கால மனித இனத்தில் முன்னோடிகளாகக்
கருதப்படுகின்றன.
இராமாபிதஸைன்களைவிட ஆஸ்ட்ரேலோபிதஸீன் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடையது.
ஹோமோ ஹெபிலைன் பரிணாம வளர்ச்சியில் மேம்படாத இனம். இதனுடன் ஒப்பிடும்போது நெருப்பைப்
பயன்படுத்தத் தெரிந்த ஹோமோ
எரக்டஸ் (நேராக நின்ற மனிதன்) பரிணாம வளர்ச்சியில் ஒருபட உயர்ந்தது. இவற்றைவிட
பரிணாமத்தில் சற்று உயர்ந்த, இறுதிச் சடங்குகள்
செய்த நியாண்டர்தாலினம் வாழ்விடப் போட்டியால்
அழிந்திருக்கலாம். மேலும் இனக்கலப்பால் தனது சாயலை இழந்திருக்கலாம்.
நியாண்டர்தால். டெனிஸோவன், ப்ளோரெஸியன்ஸிஸ்
ஆகிய இனங்கள் ஒன்றாக வாழ்ந்து, வேட்டையாடியவை; ஈமச்சடங்குகள் செய்தவை; நெருப்பின் பயனை
அறிந்தவை. இவைகள் ஹோமோ ஹெய்ட்டெல்பெர்க்கை விட முன்னேறியவை என்பதால் ஹோமோ செபியன்கள்
என்று மானிடவிலாளர்கள் அழைக்கின்றனர்.
தற்கால மனித இனத்தின் பெயர் ஹோமோ
செபியன்ஸ் செபியன்ஸ் (Homo sapiens sapiens).
மனிதப் பரிணாமம் மிகவும்
சிக்கலான ஒன்று. ஒன்றுடன் ஒன்றுடன் பின்னிப் பிணைந்தது. குரங்கிலிருந்து மனிதன்,
மனிதனின் நேரடி முன்னோர் என்றெல்லாம் சொல்வது சாத்தியமில்லை. இவற்றில் ஊடுபாவுமாக
நிறைய கலப்புகள் உண்டு. பண்புகள், பழக்கவழக்கம் அடிப்படையில் இவற்றை வலை அல்லது சங்கிலிகள்
போன்றே இணைத்துக் காட்ட முடியும்.
“8. கூற்று: தமிழகத்தின் ஆறுகள்,
குளங்கள் அருகே
இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக்
கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக்
காரணம்
சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால்
கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை”. (பக்.
14)
பாடநூலில் 14 வது வினாவாக இடம்பெற்ற
மேற்கண்ட வினா தேர்வில் ஐந்தாவதாக உள்ளது.
“பழங்கற்காலம் 20,00,000
ஆண்டுகள் முன்பு
முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 8,000
வரை
கைக்கோடரி, வெட்டுக்கத்தி.
வேட்டையாடுதல்- உணவுசேகரித்தல்
இடைக்கற்காலம் கி.மு. (பொ.ஆ.மு.)
8,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 1,300 வரை
நுண்கற்கருவிகள் உலோகம் பற்றி
இவர்களுக்குத் தெரியாது.
விலங்குகளையும், பறவைகளையும்
வேட்டையாடுதல்
புதியகற்காலம் கி.மு. (பொ.ஆ.மு.)
2,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.)
1,000 வரை
மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள் நுண்கற்கருவிகள்
விலங்குகளைப் பழக்குதல் பயிரிடுதல் குழுக்களின்
பெருக்கம் வேட்டையாடுவோர்- உணவு சேகரிப்போர், மேய்ச்சல் சமூகத்தினர் என
இருவிதமான குழுக்களும் ஒரேசமயத்தில் வாழ்ந்தன”. (பக்.10)
இடைக்கற்காலத்தையும் அதன் முன் பின் காலங்களையும் பாடநூல் அட்டவணை தெளிவாக
விளக்குகிறது. எனவே, “ஈ) கூற்றும் காரணமும் தவறானவை”. என்ற விடையே சரி. தமிழகம், நீர்ப்பாசன
மேலாண்மை என்றவுடன் ‘சரி’ எனும் முன்முடிவு செயல்படுகிறது. இடைக்கற்காலத்தில்
வேளாண்மை இல்லை; வேட்டையாடுதல், கிழங்குகள் சேகரித்தல் போன்ற நிலைதான்
சொல்லப்படுகிறது.
“இந்தியா -------------- மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்”.
(பக்.266)
இந்த வினாவிற்கு பாடநூல் ‘மறைமுக மக்களாட்சி’ என்கிறது. நேரடிக்கு மாற்றாக
இவ்வாறு சொல்வது சரியல்ல. ‘பிரதிநிதித்துவ மக்களாட்சி’ என்பதே பொருத்தமானது.
ஒன்பதாம் வகுப்புப் பாடநூல்
வெளியாகி ஓராண்டைக் கட்ந்துவிட்டது. அப்பாடநூலை ஆசிரியர்களே இவ்வாறு எதிர்கொண்டால்
மாணவர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பதைச் சொல்வதற்கில்லை. பாடநூலைவிட
விரைவாக நோட்ஸ்கள் அச்சாகி வருவதால் அதிலும் பிழைகள் மலிந்துள்ளன. அவற்றையே பலரும்
பயன்படுத்துகின்றனர்.
கடந்த இரண்டாண்டுகளில் எண்ணமுடியாத அளவிற்கு அரசாணைகளையும்
சுற்றறிக்கைகளையும் வெளியிட்ட தமிழக அரசும் கல்வித்துறையும் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவமுறையா,
அல்லது ஒரு பருவமுறையா என்பதைக்கூட 4 மாதங்களாகச் சொல்லவில்லை. புத்தகங்கள் ஒரே
தொகுப்பாக வந்தபோதே புரிந்துகொள்ள வேண்டும் போலும்! அடுத்த கல்வியாண்டில் +1, +2
வகுப்புகளுக்கான 5 பாடமுறைக்கும் அரசாணை வெளியாகிவிட்டபோதும், ஒன்பதாம்
வகுப்பிற்கும் ஒரு பருவம், 10 ஆம் வகுப்பிற்குரிய மாதிரி வினாத்தாள் வடிவத்தில்
கேள்விகள் இருக்கும் என்று சொல்லத் தடையேது?
10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வெளியிட்டபோதாவது
சொல்லியிருக்கலாமே! ஏன் சொல்லவில்லை? ஒரே காரணம் ஒன்பதாம் வகுப்பிற்கு
பொதுத்தேர்வுகள் கிடையாது என்பதே. பல பள்ளிகளில் 10 வகுப்புப் பாடமே 9 ஆம்
வகுப்பில் படிக்கின்றனர். அதை இடையூறு செய்யவேண்டாம் என்கிற நல்ல எண்ணமாக
இருக்கும்! இதைத் தடுக்கும் எண்ணம் கல்வித்துறைக்குக் கிடையாது. பல ஆண்டுகள்
கழித்து ஒன்பதாம் வகுப்புப் பாடங்களைப் படிக்காததால் போட்டித் தேர்வுகளை
எதிர்கொள்ள முடியவில்லை என்று இவ்வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வருவார்கள். இப்போதுள்ள
5, 8, 10, +1, +2 வகுப்புகளுடன் 3, 9 ஆகிய வகுப்புகளுக்கும் விரைவில் பொதுத்தேர்வை
எதிர்பார்க்கலாம்.
இன்னும் சொல்லப்போனால்
பொதுத்தேர்வுகளுக்கும் தேர்ச்சியின்மை வழங்குவதற்கும் 90% மேற்பட்ட ஆசிரியர்கள்
ஆதரவாகவே உள்ளனர். தேர்வு என்னும் ஒற்றைப்
பிடியில் தொங்கிக்கொண்டிருக்கும் கல்விக்கு இப்போது விடிவு இல்லை.
(இன்னும்
வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக